|
மேகம் சிறைவிடுத்து, மூவரைச் சிறைப்பிடித்து கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய நிகண்டு நூலான சேந்தன் திவாகரத்தில் (மக்கள் பெயர்த் தொகுதி, நூற்பா-33) “ஏரின் வாழ்நர்” என்பது வேளாளர்களுக்குரிய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் “ஏரின் வாழ்நர்” பல பாடல்களில் இடம்பெற்றுள்ளனர். முறையான பயிற்சி பெற்ற படை வீரர்கள் “வாளின் வாழ்நர்” எனச் சில பாடல்களில் (புறம். 24:28-29; 377:28) குறிப்பிடப்படுகின்றனர். வாளின் வாழ்நரைச் சத்ரிய வர்ணத்தவராக அல்லது சத்ரிய வர்ண உட்பிரிவினராக ஏற்கலாமெனில், ஏரின் வாழ்நரை வேளாள வர்ணத்தவராக ஏன் ஏற்கக்கூடாது என்ற கேள்வி எழுவது இயல்பு. பொருளீட்டல் என்பதே உணவுத் தேவையை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் பயிர் விளைவித்துக் குடிகளின் உணவுத் தேவையை நிறைவு செய்வதே முதன்மையான - அடிப்படையான - தொழிலாகச் சங்க காலத்தில் கருதப்பட்டது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. எவ்வகைத் தொழிலையும் ஏருழவுடன் ஒப்பிட்டு உருவகப்படுத்திக் கூறும் மரபு உண்டு. வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்துவோரை “கள்வேர் வாழ்க்கைக் கொடியோர்”, அதாவது, களவினையே ஏருழவாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் கொடியவர்கள் என பெரும்பாணாற்றுப்படை (வரி 40-41) உருவகப்படுத்துகிறது. “வாளேர் உழவன்” என்று அரசனையே குறிப்பிடுவதுண்டு (புறம்-368:12-13) போர்க்களத்தையே ஏர்க்களமாக உருவகப்படுத்திப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. வயலில் கதிரறுத்துக் கடாக்களை விட்டுப் போரடித்துப் பொலிதூற்றும் கருங்கை வினைஞர்கள், நெற்குவியலில் தமக்குரிய பங்கை முகந்து கொள்வர். அப்போது கருங்கை வினைஞர், நிலக்கிழார்களைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் முகவைப்பாட்டு என வழங்கப்பட்டதென சிலப்பதிகாரத்தால் (10:136-137) தெரியவருகிறது. போரில் வெற்றிபெற்ற அரசனைப் புகழ்ந்துபாடும் பாணர்கள், அரசனிடமிருந்து யானைகளைப் பரிசிலாகப் பெறுதல், “முகவை” என்றே புறநானூற்றில் உருவகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்களக் கிழானாகிய சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பின்வருமாறு பாடுகிறார்: விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்து படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி எருதுகளிறாக வாள்மடல் ஓச்சி அதரி திரித்த வாளுகு கடாவின் அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி வெந்திறல் வியன்களம் பொலிகென்றேத்தி இருப்பு முகஞ் செறித்த மருப்பின் வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும (புறம். 370:14-21) குரல் (கதிர், கழுத்து), கால் (உடலின் கால் பகுதி, நாற்றங்கால்), போர்பு (பொருதல், நெற்போர்), மடல் (பனையோலை போன்ற வாளின் வடிவம், பனங்கருக்கு) போன்று போர்க்களத்தோடு தொடர்புடைய ஒவ்வொன்றும் ஏர்க்களத்தோடு தொடர்புடையதாக உருவகப்படுத்திக் கூறப்படுவதோடு, களம் பாடுவோர் மலையளவு (யானை, நெல்மலை) முகந்து செல்வதற்கான வாய்ப்பும் உருவகப்படுத்தப்படுகிறது. இத்தகைய உருவகங்கள், ஏர்க்களக் கிழார்கள் சங்க காலத் தமிழகத்தில் உயரிய அந்தஸ்துடன் இருந்தமையைப் புலப்படுத்துகின்றன; போர்த் தொழிலையே உருவகப்படுத்துமளவுக்கு ஏர்த் தொழில் மிகவும் உயர்வாக மதிப்பிடப்பட்டதையும் உணர்த்துகின்றன. பாண்டி நாட்டு ஏரின் வாழ்நரின் பெரிய இல்லத்து மனையாட்டியர், ஒரு புறப்பாடலில் (33:4-7) இடம் பெறுகின்றனர். இவர்கள் இல்லற தர்மத்துக்குரிய, ஆடவனின் தலைமையிலமைந்த குடும்பம் என்ற அமைப்புக்குட்பட்டவர்கள். பிச்சையேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட ஏதிலர்களைப் புரப்பதில் அரசர்களுக்கிணையாக இத்தகைய ஏரின் வாழ்நர் கருதப்பட்டனர். உறையூர் ஏணிச் சேரி முடமோசியாரின் புறப்பாடல் ஒன்று (பா. 375) ஏரின் வாழ்நரின் குடியைச் சேர்ந்தோரையும் பிற மன்னர்களையும் ஆய் அண்டிரனுடன் ஒப்பிட்டு, பாணர்களையும் புலவர்களையும் புரப்பதில் அவர்கள் ஆய் அண்டிரனோடு ஒப்பாக மாட்டார்கள் என்கிறது. இத்தகைய விவரிப்புகளின் மூலம் சங்க கால ஏரின் வாழ்நர், மருத நில மகிழ்நன் மரபினரே என்றும், சுதந்திரமான வைசிய வருணத்தவராகத்தான் கருதப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாம் முடிவு செய்யலாம். களப்பிரர் ஆட்சியின் விளைவாகவும் உடனிகழ்ச்சியாகவும் வைசிய வர்ணம் குறித்த சமூகச் சட்டங்கள் மாற்றமடைந்தமையால் ஏருழவு என்பது வேளாள வர்ணத்தவரின் முதன்மையான தொழிலாக மாறிப்போயிற்று. இருப்பினும், “ஏரின் வாழ்நர்” என்ற பெயரை வேளாளர்க்குரியதாகக் குறிப்பிடும் திவாகர நிகண்டு (மக்கள் பெயர்த் தொகுதி, நூற்பா-32), வைசியர்க்குரிய பெயர்களுள் ஒன்றாக “ஏர்த் தொழிலர்” என்பதையும் சுட்டுகிறது. சமூகத்தின் பலவிதத் தகவமைவுகளுக்கிடையிலும் மரபுகள் தொடர்ந்து நீடித்து வந்தமையை இது உணர்த்துகிறது. சங்க காலத் தமிழகத்திலிருந்த ஏரின் வாழ்நரான நிலக்கிழார்கள், (பின்னாளைய சேக்கிழார் போன்ற) வேளாளர் குலக் கிழார்களாக இருந்திருக்க இயலாது. வைசிய வர்ணத்தவராகவே கருதப் பட்டிருக்கவேண்டும். நற்றிணையில் இருபாடல்கள் இயற்றிய மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சேரகுத்தனார் (சேர குப்தா) ஓர் எடுத்துக்காட்டாவார். திருவிளையாடற் கதையொன்று சற்று பிற்காலத்த்தேயாயினும் சங்க கால மரபினைச் சரியான வகையில் பதிவுசெய்துள்ளது. இறையனார் என்ற சங்ககாலப் புலவர் இயற்றிய “கொங்கு தேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக வைத்துப் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில், தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடற் புராணக்கதை புனையப்பட்டது. செண்பகமாற பாண்டியன் தன் மனைவியுடன் இளவேனிற் பருவ இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது தென்றல் சுமந்துவந்த மலர்களின் மணத்தைவிட உயரிய புதுமையான நறுமணம் கமழ்வதறிந்து அது தன் மனைவியின் கூந்தலுக்குரிய நறுமணமே என உள்ளுணர்வால் உணர்ந்தான்; ஆனால், அது இயற்கை மணமா, செயற்கை மணமா என்ற ஐயம் ஏற்பட்டது; செண்பகமாறனின் ஐயத்தைத் தீர்ப்பதற்காக இறைவனால் கொங்குதேர் வாழ்க்கை என்ற இப்பாடல் இயற்றப்பட்ட தென்றும் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர், இப்பாடலின் கருத்தை ஏற்காமல் முரண்பட்டதாகவும்1 விரிந்து செல்லும் இக்கதை, இறைவனின் நெற்றிக்கண் ஆற்றலைப் பொறுக்க இயலாத நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து கரையேறுதல், “இறையனார் களவியல்” என்ற அகப்பொருள் இலக்கணத்தை (அகத்தியர் மூலம்) அறிந்து உரை செய்தல் எனத் தொடர்கிறது. இறையனார் களவியலுக்குப் பல புலவர்கள் உரை செய்த்தாகவும் அவற்றுள் நக்கீரனின் உரையே சிறந்த்து என உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மர் என்ற வைசியர்2 சான்றளித்த்தாகவும் சங்கத்தார் கலகந்தீர்ந்த திருவிளையாடற் புராணக் கதை முதலான பழங்கதைகள் குறிப்பிடுகின்றன. சங்க காலக் கல்வெட்டுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவை; பெரும்பாலும் சமண சமயம் சார்ந்தவை. அவற்றுள் வர்ணப் பிரிவுகள் குறித்தத் தெளிவான விவரங்கள் கொண்ட கல்வெட்டுகள் இல்லை. மதுரை மாவட்டம் சோழாந்தகத்திற்கு (சோழவந்தானுக்கு) அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டிலும் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு) கரூர் மாவட்டம் ஐயர் மலையில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டிலும் (கி.மு. முதல் நூற்றாண்டு) வைசிய வர்ணத்தைக் குறிக்கக் கூடும் எனக் கருதத்தக்க குறிப்புகள் உள்ளன. மேட்டுப்பட்டிக் கல்வெட்டில் மதுரை நகரினைச் சேர்ந்த குடித்தந்தை எனக் கருதப்பட்ட, “விஸூவன்” என்பவர் இடம்பெற்றுள்ளார். ஐயர் மலைக் கல்வெட்டில் பனைதுறை என்ற ஊரைச் சேர்ந்த “வேஸன்” இடம் பெற்றுள்ளார்.3 வைஸ்யன் என்பது பிராகிருத வழக்கில் விஸ், வெஸ்ஸ என்ற வடிவங்களில் பயன்படுத்தப்படுவதால், இவை வைஸ்ய வர்ணத்தவன் எனப் பொருள்படக்கூடும். இவை சமண சமயம் சார்ந்த ஆவணங்களாகும். இக்கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ள சமணப்பள்ளிகள் (கற்படுக்கைகள்) அரச ஆதரவுடன் உருவாக்கப்பட்டவை என்பதில் ஐயமில்லை. எனவே, அரசமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட, சட்டபூர்வமான சமூக அமைப்புகள் குறித்த விவரங்களே இக்கல்வெட்டுகளில் இடம்பெற இயலும் என்பதால், சமண சமயத்தைப் பின்பற்றிய வைசிய வர்ணத்தவரைக் குறிப்பதாகப் பொருள் கொள்வது பொருத்தமே. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் அம்மன்கோயில்பட்டி பெருமாள் கோயில் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள, கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் பிராமிக் கல்வெட்டில், பரம்பன்கோகூர் அல்லது பரம்பன் கோவூர் என்ற ஊரின் கிழார் வம்சத்தவரான வியக்கன் கோபன் கணதேவன், சுனை தோண்டுவித்தச் செய்தி பதிவு பெற்றுள்ளது.4 எவ்வித சமயச் சார்போ, அரச ஆதரவோ இல்லாமல் ஓர் உள்ளூர்த் தலைமகன், ஊர் மக்களின் பயன்பாட்டிற்காக, கம்மியர் முதலிய பணி மக்களின் உதவியுடன் சுனை தோண்டுவிப்பது, அந்நிகழ்வைக் கல்வெட்டுச் செய்தியாகப் பொறித்து வைப்பது ஆகியன, மாறிவிட்ட அரசியல்-சமூகவியல் சூழலை உணர்த்துகின்றன. இக்கல்வெட்டின் சமகால இலக்கியமாகக் கருதத்தக்க திருக்குறளில் (பொருட்பால், உழவு அதிகாரம், பா. 9) செல்லான் கிழான் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடிவிடும் - என்ற குறட்பாவில், நிலமகளின் கணவனாக உருவகப்படுத்தப்படும் நிலக்கிழான் இடம்பெறுகிறான். இக்கிழார்கள், களப்பிரர் ஆட்சியின் உடனிகழ்ச்சியாக உருவான வைசியர்-வேளாளர் கூட்டுறவில் உதித்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களின் எல்லையிலமைந்துள்ள பூலாங்குறிச்சி - வேள்கூர்ப்பட்டிக் (வேகுப்பட்டி) கல்வெட்டில் (II வரி. 11-12) அம்பருகிழான் குமாரம் போந்தை நல்லங்கிழான் எயினங்குமான், ஆறு கிழான் கீரங்காரி ஆகியோர் உலவியப் பெருந்திணை எனப்பட்ட நில வருவாய் நிர்வாக உயரதிகாரிகளாக்க் குறிப்பிடப்படுகின்றனர்.5 இக்கல்வெட்டு, கூற்றுவ நாயனார் எனக் கருதப்படும் கோச்சேந்தங்கூற்றனின் 192வது ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டாகும். (களப்பிரர் ஆட்சி தொடங்கி 192 ஆண்டுகள் கழிந்தமையே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது போலும்.) ஒரு சமூகத்தின் உள்முரண்பாடுகளால் அச்சமூகத்தின் வரலாற்றில் பெருந்திருப்பங்கள் நேரும்போது, அச்சமூகம் அத்திருப்பங்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வது இயல்பு. களப்பிரர் ஆட்சியால் நேர்ந்த அத்தகையத் திருப்பங்கள், தொன்மக் கதைகளில் பதிவு பெற்றுள்ளனவா என ஆராய்ந்தால் ஓர் அரிய செய்தி தெரியவருகிறது. களப்பிரர் ஆட்சிக் கால இலக்கியமாக்க் கருதத்தக்க மணிமேகலையில் (3:29; 7:102) காராளர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லின் நேர்ப்பொருள் மேகத்தை அல்லது மழையை ஆள்பவர் என்பதே. காராளர் என்பது வேளாளர்களைக் குறிக்கும் பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டாலும், அயன் வெள்ளாளர் அதாவது அசலான வேளாளர் எனத் தம்மைக் குறிப்பிட்டுக்கொள்ளும் கார்காத்த வேளாளர்களைக் குறிப்பதற்குச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்த கதையாவது: மேகங்களை உக்கிரபாண்டியன் சிறை செய்தபோது அம்மேகங்களை மீட்பதற்காக இந்திரன் பாண்டியனுடன் போரிட்டுத் தோற்றுவிடுகிறான். அப்போது இந்திரன் சார்பாக பாண்டியனிடம் பிணையாக நிற்பதற்கு ‘நான் முன்வருகிறேன்’ என முன்வந்த பாண்டி நாட்டு நாமுன்னூர் வேளாளன் ஒருவன் கார்காத்தான் எனப் பெயர் பெற்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. நாம் முன்னர் குறிப்பிட்ட, கி.பி. 1637ஆம் ஆண்டுக்குரிய அரித்துவாரமங்கலம் செப்பேடு, (முதல் பக்கம், வரி 29) “மேகம் தளை விடுத்தும் புணை கொடுத்தும்” என இத்தொன்மக் கதையைக் குறிப்பிட்டுப் பெருமிதமடைகிறது. வேளாளர்களின் வரலாற்றாய்வில் இக்கதை முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், காராளர் என்ற சொல்லோடு தொடர்புடைய “காராண்மை” என்பதே பயிரிடுபவனுக்கு விளைச்சலில் உரிய அதிகாரபூர்வமான பங்கினைக் குறிக்கும். இதனைப் பற்றி முன்னரே விவாதித்துள்ளோம். தண்டலை (தோட்டப்பயிர்) விவசாயத்தைக் கற்பித்த காமாட்சியன்னை தவம் செய்தது, மழை பெய்து நீர்வளம் பெருகுவதன் பொருட்டே என்பது, “தழுவக் குழைந்தார்” கதை மூலம் உறுதியாகிறது. கம்பை நதி என்பது பருவ மழை சார்ந்த நதியோ அல்லது ஜீவ நதியோ அன்று. பெருமழையால் பெருக்கெடுத்தோடும் ஓடையே. பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்ற தொண்டை மண்டலத் தண்டலைகள் எனப்படுவன, எல்லாக் காலத்திலும் தொடர்ந்து பலன் தரும், நட்டு வளர்க்கப்பட்ட பல மரங்கள் நிறைந்தவையாகும்.6 இவற்றை, பூக்கின்ற தாவரங்கள் நிறைந்த வெப்ப மண்டலக் குறுங்காடுகள் எனலாம். Tropical dry forest என தாவரவியலாளர்கள் இவற்றை வகைப்படுத்துவர். இவை மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கும் என்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் சரியான விகிதத்தில் பராமரிக்கப்படுவதற்கும் காற்றில் ஈரப்பதம் நீடிப்பதற்கும் உதவுவன. இத்தண்டலைகள் இந்திய நாட்டின் கீழைக் கடற்கரைப் பகுதிக்கு உரியவை என்றும் முற்காலத்தில் தொண்டை மண்டலத்தில் இவை நிறைந்த எண்ணிக்கையில் இருந்தன என்றும் சூழல் மாற்றங்களாலும், தானியப் பயிர் விளைப்பின் பெருக்கத்தாலும், நாகரிக வளர்ச்சியின் விளைவாகவும் பல தண்டலைகள் அழிந்துபோயின என்றும், எஞ்சியிருப்பவற்றுள் ஒன்றே, சென்னை கிண்டியிலுள்ள தேசியத் தாவரவியல் பூங்கா என்றும் தாவரவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.7 தண்டலைகளின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் வகையில் விவசாயப் பணிகள் மேற்கொண்டோரே தண்டலை உழவர்கள் எனலாம். காராளர் எனப்பட்டோர் நீர்வளத்தை ஆள்வோர் என அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக நீர்ப் பூவான குவளை மலர் காராளர்க் குரியதாக்கப்பட்டது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உழுதொழிலாளர்களை கருங்கை வினைஞர்களாக்கி, உழவின் செயல்பாட்டு அம்சங்களைத் தீர்மானிக்கிற முதன்மை விவசாயிகளாக்க் காராளர் உருவாயினர். இக் காலகட்டத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம் (10:132-135) கருங்கை வினைஞர்கள் ஏர்மங்கலம் பாடுவதைப் பின்வருமாறு வருணிக்கிறது: கொழுங்கொடி யறுகையும் குவளையும் கலந்து விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப்பனர் போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும் ஏர்க் கலப்பைக்குரியோர் காராளர் ஆவார்; ஏர்க் கலப்பையில் அறுகம்புல்லும் குவளை மலரும் சூட்டி வழிபடுவோர் கருங்கை வினைஞராவர். குவளை மாலை சித்திரமேழிப் பெருக்காளர்க் குரியதென்பதற்குப் பிற்கால ஆதாரங்கள் உள்ளன.8 சங்க கால அரசர்கள், பாடினியர்க்கும் விறலியர்க்கும் பொற்றாமரைப்பூச் சூட்டியமை போன்றே பொற்குவளை மலரையும் சூட்டிப் பெருமைப்படுத்தினர் என்பதற்கு புறநானூற்றில் சான்று உண்டு.9 இது, பாணர்கள் அரசர்களாலும் பிற தலைமக்களாலும் வேளத்துப் பிள்ளைகளாக - காராளர்களாக - அங்கீகரிக்கப்பட்டமையை உணர்த்தும். மட்டுமின்றி, குறிஞ்சி நிலத்திற்குரிய சுனைப்பூவாகிய குவளை, குறிஞ்சி நிலத் தலைமகனாகிய நாடனால், பூத்தரு புணர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டமையைக் குறுந்தொகையால் (பா. 346) அறியலாம். அரச குல ஆதரவுடன் வேளம் என்ற நிறுவனத்தின் மூலம் தண்டலை உழவர்களால் உருவானவர்களின் வாழ்விடமே நாடு எனப்பட்டது. நாடு என்பது நில வருவாய் நிர்வாக அமைப்பாக உருவெடுத்தபோது இவர்களே முதன்மையான நாட்டார் ஆயினர். இவர்களின் ஆதிக்கம், கி.பி. 4-5ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டு அரசியல் ஆதரவுடன் வேரூன்றியதன் விளைவாக, சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுவதைப் போல குவளை மலரை ஏர்க்கலப்பைக்குச் சூட்டி ஏர்மங்கலம் பாடும் வழக்கம் தோன்றிற்று. இந்நிலைமையினை, புதிதாக ஏர் பூட்டுபவர்கள், கொன்றை மாலையணிந்து ஏர் பூட்டினர் எனக் குறிப்பிடும் பதிற்றுப்பத்துச் (43:16) செய்தியுடன் ஒப்பிட்டுக் காண்பது பொருத்தமாகும். கொன்றை மாலை, காளையை அடக்கி வீட்டு விலங்காக ஆக்கித் தொடக்க நிலை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்திய, சிவபிரானின் முன்னிலை வடிவமாகிய கூற்றுத் தெய்வத்துக்குரியது என்பது கவனத்திற்குரியதாகும். குவளை மலர் பார்வதி தேவிக்குரியது என்ற பொருளில், பார்வதி தேவிக்குத் தன் உடலின் ஒரு கூற்றினை வழங்கிய சிவபெருமானைக் “குவளைக் கண்ணிக் கூறன்” என வருணிப்பதுண்டு. பெரும்பாணாற்றுப்படையில் தண்டலை உழவர்கள் வாழ்விடமே “நாடு” எனக்க் குறிப்பிடப்பட்டது எனக் கண்டோம். நாடு என்ற சொல், மரம் நட்டு வளர்த்து, குறிப்பிட்ட மரங்களின் தொகுதியை அடையாளமாகக் கொண்டு வாழும் மக்களின் வாழ்விடம் என்ற பொருளில் தோன்றியிருக்கலாம். அவ்வாறாயின், தாய்வழிச் சமூகப் பண்பாட்டு நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட தோட்டப்பயிர் விவசாயமே “நாடு” என்ற கருத்தோட்டத்திற்கு அடிப்படை எனலாம்.10 புறநானூற்றில் ஒரு பாடலில் (பா. 187) “காடு” என்பதற்கு எதிரானதாக “நாடு” குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே ஆயினும் வேறோர் பாடலில் (புறம் 49) குறிஞ்சித் திணை சார்ந்த மலை வளமும் தண்டலை வளமும் கொண்ட வாழ்விடமே “நாடு” எனப் பொருள்படும் குறிப்பு உள்ளது.11 மலைகளில் பல்வேறு வகை மரங்கள் இருக்குமாதலால், விளைச்சலுக்குரியதல்லாத காலத்திலும் பலன் தரும் மரங்கள் நிறாஇந்து, இடையறாத விளைச்சல் உடையது மலை என புறம் (116:13-14) குறிப்பிடுகிறது. இக்குறிப்பினைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடும் - நாம் மேலே குறிப்பிட்டுள்ள தொண்டை மண்டலத் தண்டலைகளின் இடையறா விளைச்சல் பற்றிய விவரத்துடன் ஒப்பிடலாம். தண்டலை உழவர்களாகவும் அரச குலத்தவரின் வேளத்துப் பிள்ளைகளாகவும் இருந்த காராளர்கள், வாயிலோர் பதவிகளில் அமர்ந்ததன் மூலம் பன்னாட்டுத் தகவல் தொடர்பும், ஆட்சி நிர்வாக அனுபவமும், நீர் ஆதாரங்களைப் பராமரிக்கும் அறிவியல் தொழில்நுட்ப அறிவும் பெற்று உயர் தகுதியடைந்தனர். மழை சார்ந்து விளைவிப்பதில் ஈடுபட்டு வந்திருந்த மள்ளர், பறையர் போன்ற பூர்வகுடி விவசாயிகளைவிடத் தொழில்நுட்பத் திறமை பெற்று முன்னேற்றமடைந்தனர். களப்பிரர் ஆட்சி உருவாவதற்கே இவர்களின் வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப அறிவும் நிர்வாக அறிவும் முதன்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நாட்டார் என்ற தகுதியைக் காராளர்கள் முழுமையாக அடைந்தனர் எனலாம். களப்பிரர் ஆட்சி முடிந்து மீண்டும் பாண்டியரின் ஆட்சி ஏற்பட்டபோது, காராளர்கள் (வேளாளர்கள்) அரச குலத்தவரின் சார்புக் குடிகளாகியிருக்க வேண்டும். ஆயினும், அவர்கள் நில வருவாய் நிர்வாகத்தில் ஓர் அங்கமாகத் தொடர்ந்தனர் என்பதையும், பூர்வகுடி மள்ளர்கள், வேளாளர்களுக்குக் கட்டுப்பட்ட கருங்கை வினைஞர்களாக நீடித்தனர் என்பதையுமே, மேகம் தளை விடுத்தும், பிணையாக இருந்தும் - நீர்ப்பாசனப் பணிகளும் விவசாயப் பணிகளும் தொய்வின்றித் தொடர்வதற்கு அரச குலத்தவரின் உறுதியளித்தும் - தமது செயல்பாட்டைத் தொடர்ந்ததாக வேளாளர்கள் தங்கள் ஆவணங்களில் கூறிக்கொள்வது உணர்த்துகிறது. இந்த இடத்தில் முதன்மையான ஒரு கேள்வி எழுகிறது. காமாட்சியின் திருத்தலப் புராணத்தில் இத் தொன்மக் கதை இடம்பெறாமல், மீனாட்சியின் திருத்தலப் புராணத்தில் இடம்பெறக் காரணம் என்ன? தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் எழுச்சி பெறத் தொடங்கிய காராளர்கள், பின்னர் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் முழுமையான ஆதிக்கம் பெற்றனர். பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அவர்கள் அரச குலத்தவர்களிடம் பிணை நிற்கும் தேவை ஏற்படவில்லை. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடத்து அச்சுதக் களப்பாளரின் மகனான மெய்கண்டார் என்ற வேளாண் பெருமகன், சைவ சமயத் தத்துவமான சைவ சித்தாந்தத்தை உருவாக்கிய சந்தானக் குரவராக உருவெடுத்த நிகழ்வு, தொண்டை நாட்டிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் வேளாளர் எழுச்சி சீராகத் தொடர்ந்ததை உணர்த்தும். கி.பி. 17ஆம் நூற்றாண்டில் திருப்போரூரை அடுத்த தையூர் விசமூர்க் காட்டுப் பகுதியில் உத்தண்ட களப்பாளன் என்ற தொண்டை மண்டல வேளாளர் சிற்றரசராக ஆட்சி புரிந்துள்ளார். இவர் மீது “உத்தண்ட களப்பாளன் கோவை” என்ற இலக்கியம் இயற்றப்பட்டது.12 பாண்டிய நாட்டிலோ, பாண்டியர்கள் களப்பிரரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், களப்பிரர்கள், அரச குலத்தவரின் சார்புக் குடிகளாக்கப்பட்டனர். களப்பிரர்கள், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அல்லது நான்காம் நூற்றாண்டில் மூவேந்தர் ஆட்சியை அகற்றினர் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ள செய்தியாகும். அச்சுத விக்ராந்தன் என்ற களப்பிர அரசன் மூவேந்தரையும் தில்லை நகரில் சிறையில் அடைத்து வைத்திருந்தான் என்றும், அப்போது தங்களை விடுவிக்கக் கோரி மூவேந்தர்களும் வெண்பாக்கள் இயற்றிப் பாடினர் என்றும் பழங்கதைகள் கூறும். கி.பி. 16-17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாவலர் சரிதை என்றா நூலிலும் தனிப்பாடல் திரட்டு நூலிலும் இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சேரன் பாடிய வெண்பா: திணை விதைத்தார் முற்றம் திணையுணங்கும் செந்நெல் தனை விதைத்தார் முற்றமது தானாம் - கனைசீர் முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த்தானை அரசுணங்கும் அச்சுதன் தன் முற்றத்து. சோழன் பாடிய வெண்பா: அரசர் குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரசரவதரித்த அந்நாள் - முரசதிரக் கொட்டிவிடும் ஓசையினும் கோவேந்தர் காற்றளையை வெட்டி விடும் ஓசைமிகும். பாண்டியன் பாடிய வெண்பா: குறையுளார் எங்கிரார் கூர்வேலி ராமன் நிறையறு திங்களிருந்தார் - முறைமையால் ஆலிக்குந்தானை அலங்குதார் அச்சுத முன் வாலிக் கிளையான் வரை சேரனும் சோழனும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு இறைஞ்சி வேண்டியதால் - சோழன், களப்பிரனை “அரசர் குல திலகன்” என்றே பாடிவிட்டதால் - மனம் மகிழ்ந்த அச்சுதக் களப்பாளன் அவ்விருவரையும் உடனே விடுதலை செய்தான் என்றும், பாண்டியன் சிறைப்பட்டிருந்த நிலையிலும் பெருமிதம் குறையாமல் தன்னை இராமனுடன் ஒப்பிட்டுக் கொண்டதால் அவனுக்கு அச்சுத விக்ராந்தன் கூடுதல் விலங்கிட்டான் என்றும், பாண்டியன் மிகவும் பணிந்து வேறொரு வெண்பாப் பாடினான் என்றும், அதன் பின்னரே விடுதலை பெற்றான் என்றும் அக்கதை குறிப்பிடுகிறது. பாண்டியன் பாடிய மற்றோர் வெண்பா: குடகர் குணகடலென்றார்த்தார் குடகர்க் கிடகர் வடகடலென்றார்த்தார் - வடகடலர் தென்கடலென்றார்த்தார் தில்லையச்சுதானந்தன் முன்கடை நின்றார்க்கும் முரசு இப்பாடல்கள் கி.பி. 16-17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். மூவேந்தர்களுள் பாண்டியன் மட்டுமே மேகத்தைச் சிறைசெய்து, சிறை விடுவிப்பதற்குக் காராளர்களைப் பிணையேற்குமாறு செய்தவன் என்பதாலும் இவ்வாறு கூடுதலாக இழிவுபடுத்தும் வகையில் பாண்டியன் இருமுறை களப்பிரரிடம் வேண்டிக்கேட்டு விடுதலை பெற்றதாக வேளாளர்கள் எழுதியிருக்கக் கூடும். அரித்துவாரமங்கலம் வேளாளர் செப்பேடு (முதல் பக்கம் வரி.28), அச்சுதக் களப்பாளன் மூவேந்தரைச் சிறைசெய்த நிகழ்வினைத் தமது குலப் பெருமையாகக் குறிப்பிடுகிறது. “சேர சோழ பாண்டிய மூவரைச் சிறைவைத்தும் நாவிசைத்த தமிழ் கொண்டும்” என்பது செப்பேட்டு வாசகமாகும். களப்பிரரின் அருஞ்செயலைத் தமது குலத்தவரின் பெருமைக்குரிய தொன்மமாகக் குறிப்பிட்டுக் கொள்வது தமிழ்ச் சமூக வரலாற்றாய்வுக்கு மிகவும் பயன்படும் செய்தியாகும். தம்மைப் பாடவைத்தும் ஆடவைத்தும் வேளத்துப் பிள்ளைகளாக்கியும் மகிழ்ந்த அரச குலத்தவர்களை வேளாளர்கள் சிறைப் பிடித்துத் தங்களைப் புகழ்ந்து பாடுமாறு செய்து, அச்செயல்களை ஆவணங்களிலும் பதிவு செய்தனர் என்பது வரலாற்றில் புதுமையான நிகழ்வன்று என்றாலும் தமிழ்ச் சமூக வரலாற்றாய்வுக் கண்ணோட்டத்தில் சற்றே வியப்படைய வைக்கும் ஒரு நிகழ்வுதான். “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற பழமொழிக்கிணங்கவும், வரலாறென்பது தலைகீழாகத் திரும்பக் கூடியது (history repeats itself) என்ற பொன்மொழிக்கிசையவும் இந்நிகழ்வு நடந்தேறியது என்றாலும், இது குறித்த தரவுகளைச் சமூக வரலாற்றாய்வுக் கண்ணோட்டத்தில் பரிசீலித்தால்தான் இதன் பன்முகப் பரிமாணத்தை உணர இயலும். அடிக்குறிப்புகள்: 1. சமணர்களை நிகந்தர் எனக் குறிப்பிடுவதுண்டு. இது நிர்க்ரந்தர் (கட்டுகளிலிருந்து விடுபட்டவர்) என்ற சொல்லின் திரிபாகச் சில அறிஞர்களாலும், நிர்கந்தர் (வாசனைகளிலிருந்து விடுபட்டவர்) என்ற சொல்லின் திரிபாகச் சில அறிஞர்களாலும் கருதப்படுகிறது. நக்கீரர் நிகந்தராக இருந்து வைதிக வழிபாட்டு மரபுக்கு மாறியவர் என்பதைக் குறிக்கும் வித்ததில் இக்கதை புனையப்பட்டிருக்கலாம். 2. உருத்திரசன்மர் என்பது ருத்திரசர்மா என்ற பெயரின் தமிழ்த் திரிபெனச் சிலரால் தவறாகக் கருதப்படுகிறது. “ருத்திரஜன்மன்” என்பதே உருத்திர சன்மன் என வழங்கிற்று. “ஜடிலத்தவனிட்ட விசிட்ட குலத்தொரு செட்டியிடத்தினுதித்ருள் வித்தக ருத்ர ஜன்மன் பெயர் செப்பியிடப் பரிவாலே” என அருணகிரிநாதன் தமது பழனிபதித் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். இப்பெயர், “சிவன் மகன்” என்ற பொருளில் முருகனுக்குரியதாக வழங்கும். முருகனே உருத்திரசன்மனாகப் பிறந்தான் என திருவிளையாடற்புராணம் விவரிக்கும். 3. pp. 355, 387, Early Tamil Epigraphy, Iravatam Mahadevan, CreA, Chennai, 2003. “மதிர அந்தை விஸுவன்” என்றும் “பனைதுறை வேஸன் அதட் அனம்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. 4. p.439, ibid. “பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் கோபன் கணதேவன் தொட சுனை” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. கோவூர் என்பதே கோகூர் என எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. “வேள்வூர்” (வேள்வு ஊர் = வேள்வி நிகழ்ந்த ஊர்) என்பது பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் “வேள் கூட” எனப் பொறிக்கப்பட்டுள்ளது ஒப்பிடத்தக்கது. கோகூர் என்ற பெயரில் வகர உடம்படுமெய்க்குப் பதிலாக்க் ககர உடம்படு மெய் இடம் பெற்றிருப்பது கன்னட மொழித் தாக்கத்தினால் ஆகலாம். கிழார் மகன் என்பது சேர மகன் (சேரமான்), அதிய மகன் என்பது (அதியமான்) என்பவைபோலக் கிழார் வம்சத்தவன் என்றே பொருள்படும். 5. பக். 69, ஆவணம் இதழ் - 1, தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழக வெளியீடு, அக்டோபர் 1991. இக்கல்வெட்டில், “வேள் மருகண் மகன் கடலகப் பெரும்படைத் தலைவன் எங்குமான் வேள்கூர்ப் பச்செறிச்சில் மலை மேற் செய்வித்த தேவகுலம்” (பாசுபத சைவக் கோயில் அல்லது பள்ளிப்படைக் கோயில்) குறிப்பிடப்படுகிறது. இக்கோயில், இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள பாறைக்கு அருகிலுள்ள சிறு குன்றின் மேல் யக்ஞேஸ்வர்ர் (வேள்வு ஊர்ச் சிவன்) கோயில் என்ற பெயரில் இன்றும் உள்ளது. கட்டட அமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும் இக்கோயில், கி.பி. 5ஆம் நூற்றாண்டுக் கோயிலே என்பதில் ஐயமில்லை. 6. வீயாணர் வளங்கெழு பாக்கத்துப் பன்மர நீளிடை (பெரும்பாண். 366-67) 7. “தண்டலம்” என்ற ஊர்ப் பெயர்ப் பின்னொட்டு தொண்டை மண்டலத்தில் பரவலாக உள்ளது. இப்பகுதியில் பிரபலமாகவுள்ள கருமாரியம்மன் வழிபாட்டில் தண்டலையுழவர்களின் பூர்விக வழிபாட்டு மரபின் எச்சங்களைக் காண இயலும். 8. “குவளையந்தாருடன் களபப் புயத்தோர்” - ஆறு நாட்டு வேளாளர்கள் தாமிரப் பட்டய நகல். குமாரிலீலா. “கல்வெட்டு” தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை காலாண்டிதழ், இதழ் - 16, நள வருடம், தை மாதம் 1977. “பூங்குவளை மாலை புனை புயத்தான்” - தளவாய் முதலியாரவர் பேரில் அமுத ரஸ மஞ்சரி, கண்ணி 102, - மேலகரம் திரிகூட ராசப்ப கவிராயர் இல்லத்திலிருந்து திரு. அறிவுமதியால் சேகரிக்கப்பட்ட சுவடி, பதிப்பு: “கல்வெட்டு”, இதழ் 11, நள, ஐப்பசி 1976. 9. பணி நீர்ப் பூவாமணி மிடை குவளை வால்நார்த் தொடுத்த கண்ணி - - - பெற்றனர் - புறம் 153:7 (ஆதனோரிடைய வன்பரணர் பாடியது.) 10. “நள்” என்ற வேர்ச்சொல் உறவுகொள், பொருந்திவாழ் என்ற பொருள்கள் உடையது. ஒத்த இயல்புடைய மனிதக் குழுக்கள் உறவுகொண்டு வாழும் இடம் அல்லது அமைப்பு (மாநாடு என்றா வழக்கு காண்க) என்ற பொருளில் “நாடு” என்ற வழக்கு உருவாகியிருக்க வாய்ப்புண்டு. ஆயினும் nature, nation, nativity போன்ற (இலத்தீன் மூலமுடைய) சொற்கள் நன்செய், புன்செய் முதலான “செய்”கள் போல் செயற்கையாகவன்றி, இயற்கையோடு இணைந்து உருவாக்கப்பட்ட “நாடு” என்ற வாழ்விடத்தைக் குறிப்பது சிந்தனையைத் தூண்டுகிறது. எனவே தோட்டப் பயிர் விவசாயம் தொடர்பான “மரம் நடவு” நாடு என்ற கருத்தோட்டத்திற்கு அடிப்படையாக் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. 11. சேரமான் கோக் கோதை மார்பனைப் பொய்கையார் பாடிய இப்பாடலில், “நாடன் என்கோ, ஊரன் என்கோ பாடிமிழ்ப் பனிக் கடற் சேர்ப்பன் என்கோ” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. “குறிஞ்சி நிலம் உடைமையால் நாடன் என்று சொல்வதா, மருத நிலம் உடைமையால் ஊரன் என்று சொல்வதா, நெய்தல் நிலம் உடைமையால் சேர்ப்பன் என்று சொல்வதா” என்று உரையாசிரியர் பொருள் கூறுகிறார். (ப.120 புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே. சா. நூலகப் பதிப்பு, 1971.) 12. சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தாரால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (நன்றி: தமிழினி, செப்டம்பர் 2010.) |