அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format
தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 4)
எஸ். இராமச்சந்திரன்

திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேளாண்மை சிறப்பிக்கப்படுவதைக் கண்டோம். ”வேளாண்மை செய்து விருந்தோம்பல்” எனப் பழமொழி நானூறும் (பா 175), “பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது” என முதுமொழிக் காஞ்சியும் (துவ்வாப்பத்து), ”பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னா” என இன்னா நாற்பதும் (பா. 36) கூறுகின்றன. நட்பில்லாதவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்கள் உபசரித்து வழங்குகின்ற கறிச் சோற்றினை உண்பது இனியதன்று என்று பொருள்படும் வகையில், “நாள்வாய்ப் பெறினும் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்” என நாலடியார் (பா. 207) கூறுகிறது. இனியவை நாற்பது (பா. 3) வேளாண்மை என்பது உழவர்களிடம் இருப்பது சிறப்பு என்ற பொருளில் “ஏருடையான் வேளாண்மை தானினிது” எனக் கூறுகிறது. இவ்வாறெல்லாம் இருப்பினும், சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நாலடியார் மட்டுமே வேளாண் வேதம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து இரு பாடல்கள் உள்ளன:

ஆலின் அரசின் அசோகின் அணியிருளின்
மேலை மறையின் விரிந்த பொருள் - நாலடியாம்
வெள்ளாஅன் வேதத்தின் இன்னுரையைக் கண்டக்காற்
கொள்ளாரோ நல்லார் குறித்து


வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
எல்லாருங் கூடி எடுத்துரைத்த - சொல்லாய்ந்த
நாலடி நானூறும் நன்கினிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க தெளிந்து
1

இதற்கு என்ன காரணம் என ஆராய்வோம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்படும் இலக்கியங்கள், கி.பி. 4ஆம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்டவை. சங்க இலக்கியத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை (பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்) அடிப்படையாகக்கொண்டு இப்பதினெட்டு இலக்கியங்களும் - எண்ணிக்கையை நிறைவு செய்வதற்காகச் சில, புதியனவாக எழுதிச் சேர்க்கப்பட்டும் - கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.

தமிழ் எழுத்து வரிசையை நெடுங்கணக்கு எனக் குறிப்பிடுவதுபோல, எண்களின் கூட்டல், கழித்தல் முதலியவற்றின்மூலம் கிடைக்கின்ற இறுதி விடையைக் கீழ்க்கணக்கு எனக் குறிப்பிடுவதுண்டு. மனித வாழ்வின் பாவ புண்ணியங்களை ஈசன் கணக்கிடுகிறான் என்ற பொருளில் “எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” என அப்பர் பெருமான் (ஐந்தாம் திருமுறை, இன்னம்பர்ப்பதிகம், பா. 8) குறிப்பிடுகிறார். அந்த வகையில் வாழ்க்கைக்குரிய நீதி நெறிகளைக் கூறும் நூல்கள் என்ற பொருளில் கீழ்க்கணக்கு நூல்கள் என இவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இருப்பினும் இப்பதினெட்டு நூல்களுள் பதினொரு நூல்கள் மட்டுமே நீதி நூல்கள் ஆகும். கார் நாற்பது, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை ஆகியவை சங்க இலக்கியங்களை முன்மாதிரியாகக்கொண்டு அகத்திணை, புறத்திணை சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். பதினொரு நீதி நூல்களுள் நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகியன மட்டுமே சமணர்களால் எழுதப்பட்டவை. (திருக்குறளே இந்நீதி நூல்களுள் பழமையானது எனினும் முற்றிலும் சமண சமயச் சார்புடைய நூல் என்று கூறிவிட முடியாது.) நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக் காஞ்சி ஆகியவை சைவ, வைணவ மரபுகளையும் வைதிக ஸ்மிருதி மரபையும் சார்ந்தவை.

சமண சமயம் சார்ந்த நீதி நூல்களுள்ளும் பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியனவற்றில் அரச குலச் சார்பு தென்படுவதையும் போர்க்குடிகள் சிறப்பிக்கப்படுவதையும் நம்மால் உணரமுடியும். பழமொழி நூலிலுள்ள நானூறு பாக்களும் முன்றுறை அரையனார் என்பவரால் இயற்றப்பட்டவை. இவரது பெயரே இவர் அரச குலத்தவராக இருக்க வேண்டுமென உணர்த்துகிறது. இந்நூலில் (பா. 21), “குல விச்சை கல்லாமல் பாகம்படும்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகக் கரிகாலன் நரை முடித்து முறை செய்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. "முறைமைக்கு மூப்பிளமை இல்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் கதை சுட்டிக் காட்டப்படுகிறது. (பா. 93.) சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரான காரியாசான்,

மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன்
பஞ்சந்தீர் மழைக்கைக் காரியாசான்


- என அந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் புகழப்படுவதைப் பார்க்கையில் அவர் போர்க்குடியினர் என்றும், பெருங் கொடையாளி என்றும் தெரியவருகின்றன. ”பணிப்பெண் சமைத்ததை உண்ணக்கூடாது” (தொழீஇ அட உண்ணார் - என்ற கருத்து இந்நூலின் பா. 36இலும், “பத்தினி, சேவகன் (போர்வீரன்), எவ்விதத் தன்னல நோக்கத்திற்காகவும் வழக்குரைக்கத் தவறாத சான்றான் ஆகியோரது சிறப்பு, அவர்கள் இறந்தபின்னர் மக்களால் உணரப்படும்” என்ற கருத்து பா. 101இலும், வீரர்களின் பெருமை பல பாக்களிலும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

ஏலாதி, மாக்காயனின் மற்றொரு மாணாக்கரான கணி மேதாவியார் என்பவரால் இயற்றப்பட்டது. அரசன் தவிர்க்க வேண்டியவையாகப் போகம், வீண் செலவு, மிருக வேட்டை, கள், சூது, கடுஞ்சொல் பேசுதல், கடுங்கோபத்துடன் தண்டனை வழங்குதல், அடக்கமின்மை ஆகியவற்றை இந்நூலின் 18ஆம் பாடல் பட்டியலிடுகிறது. ஈகையின் பயனாக (மறுபிறப்பில்) அரசாட்சி கிட்டும் என்றும் (பா. 47), சுற்றத்தாரைப் பாதுகாப்பவன் வாளேந்தும் அரசனாகப் பிறப்பான் என்றும் (பா. 48), தவசியர்க்கு உணவளிப்பவன் குபேரனாக வாழ்வான் என்றும். (பா. 49), ஊனமுற்றோர்க்கும் ஆதரவற்றோர்க்கும் உணவளிப்போர் பல்யானை மன்னராய் வாழ்வர் என்றும் படைத் தலைவராய் வாழ்வர் என்றும் (பா. 52, 53) இந்நூல் குறிப்பிடுவதிலிருந்து அரச குலத்தாரையும், பெருஞ்செல்வரையும் போற்றும் கணி மேதாவியாரின் மனநிலை வெளிப்படுகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சைவ சமய பக்தி இயக்கத்தின் எழுச்சியால் பாண்டிய நாட்டில் சமண சமயம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள எண் பெருங்குன்றங்களிலும் மீண்டும் சமணம் உயிர்த்தெழுந்தது. அத்தகைய நிலையில்தான் நானூறு பாடல்கள் கொண்ட நாலடியார் தோன்றிற்று. எண் பெருங்குன்றத்துச் சமண இருடியர்தாம் இப்பாடல்களை இயற்றினர் எனக் கருதப்படுகிறது. இந்நூலுள் இரு பாடல்களில் (பா. 200, 296) பாண்டியரின் கீழ்ச் சிற்றரசர்களாகப் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதிகளை ஆண்ட பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். பா. 296இல், செல்வர்களிடம் சென்று பிச்சை ஏற்காமல் தன்மானத்துடனும் சுயமுயற்சியுடனும் வாழ்வோர்க்கு முன்மாதிரியாகப் பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். சிங்கம்புணரிப் பகுதியிலுள்ள மேலைச் சிவபுரி, மிதிலைப்பட்டியை உள்ளடக்கிய பூங்குன்ற நாட்டுத் தலைவனான பூங்குன்ற நாடன் பெயர் பா. 128, 212 ஆகியவற்றில் முன்னிலை விளித்தொடராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.2 நாலடியாரை இயற்றிய சமண முனிவர்கள் இவ்விருவரின் அரசியல் ஆதரவுடன் செயல்பட்டனர் என எண்ணுவதற்கு இடமுண்டு.

எனவே, நாலடியாரை முற்றிலும் வேளாளர்களுக்குச் சார்பான நூல் என்று சொல்ல இயலாது. மட்டுமின்றி, உலகியற்கை என்பது முற்றிலும் கீழ்மேலாய் மாறிவிடக் கூடியது என்ற கருத்து,

உடைப் பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருத்துக்
கடைக்கால் தலைக் கண்னதாகிக் குடைக் கால்போர்
கீழ் மேலாய் நிற்கும் உலகு


- என உவமித்துக் கூறப்படுகிறது. புடைப் பெண்டிர் மக்கள் என்பது வைப்பாட்டியரின் பிள்ளைகள் எனப் பொருள் கூறப்படுகிறது. ஒருவன் முதுமை அடைந்துவிட்டால் வீட்டிலிருக்கும் பணிப்பெண்கூட “வெளியில் நில்; போ” என்று கட்டளையிடும் நிலை வந்துவிடும் என்ற கருத்து,

மூப்பு மேல் வாராமை முன்னே அற வினை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப்படும்


- என்ற பாடல் (326) வடிவிற் கூறப்படுகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள தொழுத்தை என்ற சொல்லுக்கு, ‘வெள்ளாட்டி’ என்றே பொருள் கூறப்படுகிறது.3

இவ்வாறெல்லாம் இருந்தாலும், நாலடியாரை ’வேளாண் வேதம்’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன?

புலால் மறுப்பும் சாதி உயர்வும்

புலால் மறுப்பு என்பது சமண சமயத்துக்கே உரிய அறமாகும். வைதிக பிராம்மணர்கள் உட்பட அனைத்து வர்ணத்தவரும் புலால் உண்ணும் வழக்கம் உடையோராகவே இருந்தனர் என்பதற்கும், சமண சமயத்தின் தாக்கத்தால்தான் ஊனுண்ணாமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர் என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் உண்டு. பௌத்தமும் ஆசீவகமும் புலால் மறுப்பைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தவில்லை. அதனால்தான் பௌத்தம் - குறிப்பாக சௌத்ராந்திக பௌத்தம் - மீனவர்கள் போன்ற கடலோடிச் சாதியினரிடையே செல்வாக்குடன் நீடித்து நிற்க இயன்றது.4 ஆனால் சமணம், அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு உரிமையுடையனவே என்பதால் புலால் மறுப்பையும் கொல்லாமையையும் அடிப்படையான வாழ்வியல் அறமாக வலியுறுத்திற்று. சிலப்பதிகாரம் (10:11-18) பௌத்த விகாரையைக் குறிப்பிடும்போது,

பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம்


- என்றும், சமண அருகத்தானத்தைக் குறிப்பிடும்போது,

புலவூண் துறந்த பொய்யா விரதத்து
அவல நீத்தறிந்தடங்கிய கொள்கை
மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத்தானம்


- என்றும் கூறுகிறது. போதிதருமம் என்பது புத்த சமயத்துக்கு அடிப்படையென்பதும், கொல்லாமை என்பது சமண சமயத்துக்கு அடிப்படையென்பதும் தெளிவாகின்றன. திருக்குறளில் சமண சமயக் கோட்பாடு இடம்பெற்றுள்ளது என்பதற்கு வலிமையான சான்றாகக் கொல்லாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறட்பாவினைச் சுட்டுவதுண்டு.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுளெல்லாம் தலை


இவ்வுலகம் பலவகைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாதலால் அவ்வவற்றின் வாழ்விடத்தையோ வாழ்க்கை முறையையோ பாதிக்காத வகையில் உணவு உற்பத்தி செய்து அவ்வுணவையும் பிற உயிர்களுடன் பகுத்துண்டு வாழ்வதே மிகவுயர்ந்த அறம் என வள்ளுவர் அறிவிக்கிறார்.

சமண சமயத்தின் இக்கோட்பாடு, வருணாசிரம அமைப்பின்மீதும் தனது தாக்கத்தைச் செலுத்திற்று. வைசிய வருணத்தில் சேர்க்கப்பட்டிருந்த பரதவர்களும், அசுர குலச் சத்திரியரான மாவலி வாணர் வம்சத்து மறக்குல அகம்படியர் முதலானோரும் வைதிக சமயத்திலும் பௌத்த சமயத்திலும் தமது வருண அந்தஸ்தினைத் தக்க வைத்துக்கொள்ள இயன்றது. ஆனால் சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:

வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே


இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5

இப்பின்னணியில் பார்க்கும்போது, சங்க கால ஆகோள் - வெட்சிப்போர் - மரபினர், சமண சமய நிறுவனத்தால் புலைத் தொழிலராகக் கருதப்பட்டதிலும், அதற்கு மாறுபட்ட, மாடுகளை வீட்டு விலங்குகளாகப் பராமரித்து உழவில் ஈடுபடுத்திய வேளாளர் - சூத்திர வர்ணத்தவராயினும் - உயர்வாகக் கருதப்பட்டதிலும் வியப்பில்லை.

இந்த இடத்தில், நாலடியாரில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு மிகுந்த முதன்மை பெறுகிறது. எந்தப் பெருமுத்தரையர் நாலடியாரின் போற்றுதலைப் பெற்றாரோ, அதே பெருமுத்தரையரால் மனமுவந்து அளிக்கப்பட்டு அவர்களின் ஈகைக் குணத்துக்கும் விருந்தோம்பல் பண்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த புலால் சோறு ஒரு பாடலில் (பா. 200) பழிக்கப்படுகிறது.

பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும்
கருனைச் சோறார்வர் கயவர் - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிர்தாய் விடும்


சொந்த முயற்சியால் கிட்டுகிற பருக்கை (புற்கை) நீரை அருந்துபவர்கள் அமிழ்தத்தை நுகர்கிற தேவர்களுக்குச் சமமானவர்கள் என்றும், பெருமுத்தரையர் மனமுவந்து அளித்தாலும்கூட அவர்களால் அளிக்கப்படுகிற கருனைச் சோற்றை உண்பவர்கள் கயவர்களே என்றும் இப்பாடல் கூறுகிறது.6

எவ்வுயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்பதே ‘அஹிம்சை’ எனப்படும். அஹிம்சையே சமணத்தின் அடிப்படைக் கோட்பாடு. கர்மவினை பற்றி வலியுறுத்துகிற நாலடியார் பாடல் ஒன்று (பா. 122),

இரும்பார்க்கும் காலராய் ஏதிலர்க் காளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டு வைப்பார்


- என அறிவிக்கிறது. வண்டுகள் ரீங்கரிக்கும் காட்டில் பறந்து திரியும் காடை, கௌதாரி போன்ற பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறுபிறவியில் பிறரின் அடிமைகளாய்க் காலில் விலங்கிடப்பட்டுக் கரும்புக் கொல்லையில் இருக்க நேரிடும் என்பது இப்பாடலின் பொருள்.7 இப்பாடல், ஜைன சமயத்தின் அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்துகிற அதே வேளையில், நிலப்பிரபுத்துவ8 சமூகத்தில் உருவாகி வந்த பண்ணையடிமை முறையை - கர்மவினையைக் காரணமாகக் காட்டி - நியாயப்படுத்துகிறது என்பதையும் நாம் உணரலாம்.

பௌத்தம் கர்மவினையை ஏற்றுக்கொண்டாலும், இழிசினராகக் கருதப்பட்ட புலைச் சாதியினரைக்கூட பிக்ஷுக்களாக அனுமதித்துச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டது.9 அந்த வகையில் உருவான தவசி (தபஸ்வின்) வர்க்கம், வர்ணாசிரம வரிசையில் பிராம்மணர்களின் இடத்தை எட்டிப் பிடித்தது. சடங்காசார நெறிமுறைகளை வகுத்து நடை முறைப்படுத்தும் அதிகாரம் பௌத்த சங்கத்தின் கையில் இருந்தது. பௌத்த சமயத்தைப் பின்பற்றிய குடும்பங்களில் நடைபெறும் திருமணம் முதலிய நிகழ்வுகளில் வைதிக பிராம்மணர்களின் பங்கேற்பு இருந்ததில்லை. ஆனால், சமண சமயத்தின் சிராவக நோன்பைப் பின்பற்றிய உதயணன் - வாசவதத்தை திருமணம் ’பார்ப்பன முதுமகன்’ ஒருவனால்தான் நடத்திவைக்கப்பட்டது என்பதையும் கோவலன் - கண்ணகி திருமணம் “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” நடைபெற்றது என்பதையும் முறையே பெருங்கதை (2:3:30-37) மற்றும் சிலப்பதிகாரம் (1:51-53) ஆகியவற்றால் அறியலாம்.

பௌத்தத்தின் நிலைப்பாடு வைதிக பிராம்மணர்களின் நலன்களுக்கு எந்த அளவு எதிரானதாக அமைந்ததோ அதே அளவுக்கு வளர்சியுற்றுக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தின் நலன்களுக்கும் எதிராக அமைந்தது. பௌத்தம் அரசியல் ரீதியான எதிர்ப்புகளால் வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தபின்னர் மீண்டெழ இயலாமல் போனது இதனால்தான் எனத் தோன்றுகிறது.

சமணம் ஒரு முறை வீழ்ந்தபின்னர் மீண்டும் உயிர்த்தெழ முடிந்ததற்கு, அது மேற்கொண்ட நிலப்பிரபுத்துவ ஆதரவு நிலைப்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் எழுதப்பட்ட ‘சாவுண்டராய சரித்திரம்’ என்ற சமண சமய நூல், விஸ்வகர்மாக்கள் போன்ற கைவினைஞர்கள் ஜைனத் துறவியாவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வரையறை செய்துள்ளதென வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர்.10 சமண சமயத்தின் தோற்றுவாய்க் கட்டத்தில் வேளாப் பார்ப்பனரான கண்மாளர் சமூகத்தவர் சமணப் பள்ளிகள் அமைத்தல், நிர்வகித்தல் போன்ற முன்னோடியான பணிகளைப்புரிந்த ஆசாரியர்களாக இருந்துள்ளனர். அவ்வாறிருக்க, இடைக்காலத்தில் இத்தகைய ஒரு நிலை உருவாகக் காரணம், நிலப்பிரபுத்துவம் சார்ந்த அடிப்படைப் பண்ணையடிமை வர்க்கமும், தச்சர் - கொல்லர் முதலிய கைவினைஞர் வர்க்கமும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டால் அவர்களின் பணிக்கு கிராக்கி (பணியருமை) கூடிவிடும் என்பதாகத்தானே இருக்க முடியும்?

நாலடியார் இயற்றப்பட்ட காலகட்டத்தில் தமிழக வேளாளர்கள் நிலப்பிரபுக்களாக உருவாகிவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், நிலப்பிரபுத்துவ அடுக்கில் கீழ்மட்டப் பண்ணையடிமைகளுக்கு மேலாக அரசுக்கு இறை செலுத்துகின்ற வாரக் குடிகளாக வேளாளர்களே இருந்தார்கள் என உறுதியாகக் கூறலாம். இத்தகைய ஒரு நிலையில் சூத்திர வர்ண அந்தஸ்தை ஏற்றுக்கொண்டாலும், புலால் உண்ணாமை என்ற விரதத்தைக் கடைப்பிடிப்பதற்கு இயன்றது என்பதால் வேளாளர்களின் சாதி அந்தஸ்து - சமண சமய நிறுவனத்தில் - உயர்வாகக் கருதப்பட்டிருப்பின் அது நியாயமானதே.

வேளாளர் சாதிக் குழுக்களுள் உயர் பிரிவுகளாகக் கருதப்படும் தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர், தென்பாண்டி நாட்டு வேளாளர் முதலிய பிரிவுகளைச் சேர்ந்தோர் சைவ வேளாளர்கள் என்றும் அவர்களது ஊன் கலப்பற்ற உணவு சைவ உணவு என்றும் குறிப்பிடப்படுவது கவனத்துக்குரியது.11 இவர்களுள் குறிப்பிடத்தக்க விழுக்காட்டு எண்ணிக்கையினர் முற்காலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றியவர்கள் என்பதில் ஐயமில்லை. வேளாளர்களின் சமூகத் தலைமை அங்கீகரிக்கப்பட்டிருந்த இலங்கை - யாழ்ப்பாணத் - தமிழரிடையே ஊன் கலப்பற்ற காய்கறி உணவு ‘ஆரத உணவு’ (அர்ஹத் = சமணர்) என்றே வழங்கப்பட்டு வந்தது என்ற உண்மை, அறிஞர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் உட்படச் சமண சமயச் சார்புடைய நீதிநூல்களில் உழவு சிறப்பிக்கப்படுகிறது. வேளாண்மை என்ற சொல் விவசாயம் என்ற பொருளைப் பெறுவதற்கும், வேளாளர் என்ற சொல் பெருமைக்குரியதாகக் கருதப்படுவதற்கும் சமண சமயம் முதன்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும். சைவ சமய பக்தி இயக்கம் தோன்றியபோது உழு தொழில்புரிந்த வேளாளர் பலர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியிருக்க வேண்டும். அப்பர் பெருமானை இதற்கோர் உதாரணமாகக் கொள்ளலாம். சமணமும் பௌத்தமும் தழைத்திருந்த காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகிலுள்ள ஆக்கூரில் வள்ளல் தன்மைமிக்க வேளாளர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் சைவ சமயச் சார்பாளர்களாக இருந்தனர் என்றும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடலால் (இரண்டாம் திருமுறை, ஆக்கூர்த் தான்தோன்றி மாடப் பதிகம், பா. 3) தெரிய வருகின்றன.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் சிவனடியார்களான நாயன்மார்களைப் பட்டியலிடுகின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகை, பிராம்மண (வைதிகப் பிராம்மணரும் சிவாச்சாரியாரும்) நாயன்மார்களின் எண்ணிக்கைக்குச் சற்றொப்பச் சமமான எண்ணிக்கையில் (13 பேர்) வேளாள நாயன்மார்களைப் பட்டியலிட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. இவர்கள் அனைவருமே ஊனுண்ணாமையைப் பின்பற்றியவர்கள்தாம் என்று உறுதிபடக் கூறிவிட இயலாது. ஆனால், உணவு உற்பத்திக்கு உழவையே முதன்மையான ஆதாரத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதிலும் உழவின்மூலம் கிட்டுகிற தானியங்களையும் காய்கனி கிழங்குகள் முதலானவற்றையுமே தூய்மையான உயரிய உணவாகக் கருதினர் என்பதிலும் ஐயமில்லை. (இவர்களுள் சிலர் கூலிச் சேவகர்களாக - போர்க் காலங்களில் கூலி பெற்றுக்கொண்டு போரிடுவோராக - இருந்தனர் என்பது உண்மையே.)

தமிழகத்தின் முதன்மையான சமயங்களாகச் சைவமும் வைணவமும் எழுச்சியுற்று வேரூன்றிவிட்ட பின்னரும் ஜைன சமயம் சில பகுதிகளில் உயிர்ப்புடன் இருந்ததெனில் அது வேளாளர் குலக் குழுவினரிடையில்தான். இந்நிலை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டளவில் உறுதிப்பட்டுவிட்டது எனத் தோன்றுகிறது. சற்றுப் பிற்பட்ட - கி.பி. 1637ஆம் ஆண்டுக்குரிய - ஆவணமாயினும் அரதைப் பெரும்பாழி - அரித்வாரமங்கலம் - செப்பேட்டினை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். வேளாளர் குலப் பிரிவுகளைப் பட்டியலிடும் இச்செப்பேடு, ஜைன வேளாளர்களைக் குறிப்பிடுகிறது.12 இன்றளவும் தமிழகத்தில் ஜைன சமயத்தைப் பின்பற்றும் வேளாளர்கள் இருந்து வருகின்றனர். ஆயினும், தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர் முதலிய உயர் பிரிவுச் சைவ, வைணவ வேளாளர்களுடன் மண உறவு கொள்தல் போன்றவற்றால் இவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.13

தமிழகத்தில் சமண சமயம் என்பது வேளாளர் சமூகத்தின் ஒரு பிரிவினரால் மட்டுமே முதன்மையாகப் பின்பற்றப்படுவது என்ற நிலைமை தோன்றிவிட்ட காலகட்டத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சமண சமய நீதி நூல்களுள் ஓரளவுக்கு வேளாளர் சார்புடைய நீதிநூலான நாலடியாரை வேளாண் வேதம் என உரிமை கொண்டாடுவதற்குச் சமண வேளாளர்கள் தலைப்பட்டிருக்க வேண்டும். திருக்குறள் சமண சமய நூல் என்று சமண சமயத்தவர் உரிமை கொண்டாடுவதுண்டு. ஆனால், திருவள்ளுவர் சைவ அடியார் எனச் சைவ சமயத்தவர் உரிமைகோரும் முயற்சி 13-14ஆம் நூற்றாண்டில் உருவாகிவிட்டது.14

எனவேதான் சமண சமய நீதிநூல்கள் எனத் தெளிவாக அடையாளங் காட்டத்தக்க நீதிநூல்களுள் அரச குலத்தவர் - போர்க்குடியினரின் புகழைப் பாடாமல், வேளாளர்களின் இயல்புகளுள் ஒன்றாகச் சமண சமயத்தவரால் எழுதப்பட்ட திவாகர நிகண்டு குறிப்பிடுகிற ‘கசிவகத்துண்மை’ (இரக்க சுபாவம்) என்ற பண்பினை முதன்மைப்படுத்துகிற நாலடியாரைத் தேர்ந்து ‘வேளாண் வேதம்’ எனக் குறிப்பிடுகிற வழக்கம் உருவாயிற்று என முடிவு செய்யலாம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

1. பக். 7-8, நாலடியார் மூலமும் பதிப்பிக்கப்படாத பழையவுரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 608001, 2007.

2. கி.பி. 1167ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாண்டியர் உள்நாட்டுப் போரில், குலசேகர பாண்டியனின் அணியில் பூங்குன்ற நாடாழ்வான், கேரளசிங்க முத்தரையன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் எனச் சூளவம்சத்தில் (76:140-141; 240; 277 மற்றும் 77:58, 92) குறிப்பிடப்படுகிறது. இவர்கள் நாலடியாரில் குறிப்பிடப்படும் பூங்குன்ற நாடன், பெருமுத்தரையர் ஆகியோரின் வம்சத்தவராக இருக்கலாம்.

3. பக்.396, நாலடியார் மூலமும் பதிப்பிக்கப்படாத பழையவுரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 608001, 2007.

4. p. 5, Buddhism as expounded in Manimekalai, S.N. Kandaswamy, Annamalai University, 1978.

5. இப்பாடலுக்கு உரையெழுதியுள்ள நச்சினார்க்கினியர், வேட்டைச் சாதியினரைக் ‘கரும்புறத்தார்’ எனக் குறிப்பிடுகிறார். (பக். 1351, சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1969.) கவி காளமேகத்தின் தனிப்பாடல் ஒன்று, (”சொக்கன் மதுரையிலே” எனத் தொடங்கும் பாடல்) “கரும்புறத்தார்க்கெல்லாம் அரசான மாவலிவாணா” என முடிகிறது. இவை பிற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த ஆதாரங்கள்தாம் எனினும், பௌத்தக் காப்பியமான மணிமேகலையில் (19:51-56) மாவலி வம்சத்தவளான சீர்த்தி, சோழ அரச மாதேவியாகக் குறிப்பிடப்படுவதையும், வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தம், பெரியாழ்வார் திருமொழி (1:9:6) மாவலியைக் ‘கத்திரியர்’ (க்ஷத்திரியர்) எனக் குறிப்பிடுவதையும் இவற்றுடன் நாம் ஒப்பிடலாம்.

6. கருனை என்ற சொல் கருநெய் என்பதன் திரிபாகலாம். உதிரமும் நிணமும் கலந்த பொரிக்கறி எனப் பொருள்படும் “கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு” என நற்றிணை (367:3) குறிப்பிடுகிறது.

7. ‘கரும்பார் கழனி’ என்பதற்குக் ’கடுமையான பாறை நிலம்’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், “சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்னா” (அடிமைகளின்றிக் கரும்புத் தோட்டத்தைக் காக்க இயலாது) என்று இன்னாநாற்பது (பா. 5) குறிப்பிடுகிற கருத்தின்படி, கரும்புக் கொல்லைகள் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டன எனப் புரிந்துகொள்ள முடிகிறது. “அரும் பெறல் மரபின் கரும்பு” என்பது சங்க இலக்கிய வரி.

8. இக்கட்டுரையில் நிலப்பிரபுத்துவம் எனக் குறிப்பிடப்படும் சமூக அமைப்புக்கும், மேலைநாடுகளில் Feudalism எனக் குறிப்பிடப்படும் சமூக அமைப்புக்கும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.

9. பக். 199, பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு, டி.டி. கோசாம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989.

10. p. 251, Pursuing death: Philosophy and practice of the voluntary termination of life, S. Settar, Indian Institute of Art History, University of Karnatak, Dharwad, 1990.

11. ‘சைவாள் உணவு விடுதி’ என்பது பிரபல ‘பிராமணாள் உணவு விடுதி’க்குச் சமமாகப் பெயர் பெற்றிருந்தது அண்மைக் கால வரலாறு. ‘சைவம்’ என்பது இங்கு சைவ சமய நிறுவனத்தையோ, தத்துவத்தையோ குறிக்காமல் சைவப் பிள்ளைமார்களின் உணவு முறையையே உணர்த்திற்று.

12. செயின காணியாளர் துளுவ முதலான பெருநாட்டு வேளாளர்

காரைக்காட்டு வெள்ளாழர் செயின வெள்ளாழர்

- அரித்வாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில் செப்பேடு, பக்கம் 2, வரிகள் 2-3; 7-8. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. கு. தாமோதரன் அவர்கள் கண்டறிந்து வாசித்தது. இச்செப்பேட்டு வாசகங்கள் தொல்லியல் துறையால் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை.

13. முதற் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1070 - 1120) மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நீடுரில் வாழ்ந்த சைவ வேளாளர் குலத்தவனான கண்டன் மாதவனின் முன்னோர் ஒருவர், தொண்டை மண்டலக் குன்ற நாட்டுக் குளத்தூரைச் சேர்ந்தவராவார். அவரே சமண முனிவராகிய அமித சாகரரைக் கொண்டு யாப்பருங்கலக் காரிகை இயற்றியவர். (Epigraphia Indica, Vol. XXVIII, no. 8.) அவரோ, அவருடைய முன்னோர்களோ தொண்டை மண்டல ஜைன வேளாளர்களாக இருந்து அரசியல் சமூக மாற்றங்களுக்கிசைந்தும், மண உறவுகளாலும் சைவ சமயத்துக்கு மாறியிருக்க வேண்டும்.

14. சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளூர் கோயிலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சைவ சமயம் என அடையாளம் காட்டத்தக்க குறியீடுகளுடன்கூடிய திருவள்ளுவர் சிற்பம் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இன்றும் அக்கோயில் அமைந்துள்ள பகுதியில் சைவ சமயத்தைப் பின்பற்றும், வள்ளுவர் குலத்தவர் வாழ்கின்றனர்.

(நன்றி: தமிழினி, ஜூன் 2010.)SISHRI Home