அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format
தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 3)
எஸ். இராமச்சந்திரன்

உலக அறவியும் உத்தம நீதியும்

"வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான், அவனைக் கேளாக (உறவாகக்) கொண்டு வாழ்தல் இனிது" என்று திரிகடுகம் (பா. 12) கூறுகிறது. விருந்தோம்பல் என்பது ஐவகை வேள்விகளுள் (பஞ்ச மகாயக்ஞம்) ஒன்று என்ற கருத்து திருக்குறளில் அழுத்தமாகப் பதிவுபெற்றுள்ளது. விருந்தோம்பல் அதிகாரத்திலேயே பா. 7,8 ஆகியவற்றில் இக்கருத்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின்
தினைத்துணை வேள்விப் பயன்

பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப் படாதார்


வேள்வி என்பது வைதிக சமயத்தில் உயர் வர்ணத்தார் மட்டுமே மேற்கொள்வதற்குரிய புனிதச் சடங்காகக் கருதப்பட்டுவந்தது. உழவுத் தொழிலை 'ஏர்க்கள வேள்வி' என்று உருவகமாகக் குறிப்பிடுவது மிகப் பழைய மரபே. அப்படியிருக்கையில், வேளாண்மை என்ற கருத்தோட்டத்தையும் வேளாள வருணத்தையும் வேள்வியுடன் தொடர்புபடுத்துவதுதானே பொருத்தமுடையது என்ற கேள்வி எழுவது இயல்பு. இக்கேள்விக்கு என்ன விடையென்று இப்போது ஆராய்வோம்.

’வேள்’ என்ற வினைச்சொல் ’விரும்பு’ என்ற பொருளுடையது. வேட்டல், வேட்கை, வேண்டுதல் முதலிய பல சொற்கள் இவ்வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவையே. வேள்வி என்பதைச் சமஸ்கிருதத்தில் ’இஷ்டி’ என்ற சொல்லால் (புத்திரகாமேஷ்டி என்பது போல) குறிப்பிடுவதுண்டு. இது இஷ்டம் (விருப்பம்) என்ற கருத்தின் அடிப்படையில் உருவான சொல்லே. எனவே வேளம், வேளாட்டி, வேளாண்மை என்பவையெல்லாம் தலைமக்கள் விரும்பிச் சேர்த்துக்கொண்ட பெண்டிரின் வாழ்விடத்தோடு தொடர்புடைய சொல்லாட்சிகளே எனக் கொள்வதில் சிக்கலில்லை. போர்களின்போது கைப்பற்றிச் சேர்க்கப்பட்ட உயர்குடிப் பெண்டிர் தவிரத் தாமே விரும்பிச் சேர்ந்தோர் பலரும் வேளத்தில் இருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை.

வேட்கை என்ற சொல் காமுறுதல் என்ற பொருளில் தொல்காப்பியத்தில் (களவியல் 9, பொருளியல் 17) பயன்படுத்தப்படுவது இது தொடர்பாகக் கவனிக்கத்தக்கது. ஆனால், வேளிர் குலத்தவனைக் குறிக்கும் ’வேள்’ என்ற பெயர்ச்சொல் இதனோடு தொடர்புடையதாகத் தெரியவில்லை. ’வெள்’ (வெளிச்சம்) என்ற சொல்லுடன் இது தொடர்புடையதாகக் கொண்டால் வெள்ளி என்ற உலோகத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதும், ராஜ் என்ற சொல்லுடன் உறவுடையதாகக் கருதப்படுவதுமான ‘ரஜத’ என்ற வடசொல்லுக்குச்1 சமமான தமிழ்ச் சொல்லாக இதனைக் கருதலாம்.

வேளிரை யது குலத்தார் அல்லது யாதவர்களுடன் தொடர்புறுத்துவது பொருத்தமே எனக் கொண்டால் கடலைக் குறிப்பிடுவதற்குக் கன்னட மொழியில் வழங்கிய ‘வேளா’ என்ற சொல்லிலிருந்து2 வேள் என்ற பெயர்ச்சொல் தோன்றியதாகக் கருதலாம். ‘யாதஸ்பதி’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குக் கடல் எனப் பொருள்.3 கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட மேலைச் சாளுக்கியரை ‘வேள் குலத்தார்’ என்றும், மேலைச் சாளுக்கிய நாட்டை ’வேள் புலம்’ என்றும் கி.பி. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.4 எனவே, வேளிர் குலத்தவர்க்குரிய ‘வேள்’ அரசு பதவியுடன் தொடர்புடையதே தவிர, வேட்கை என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதன்று.

வேளாண்மை என்ற பண்புநலன் விருந்தோம்பல என்ற செயல்பாட்டுக்கு மிகவும் உகந்ததாக அமைந்ததால் வைதிக வேள்விக்கு மாற்றாக ஐவகை வேள்விகளை ஏற்ற சமணம், பௌத்தம் முதலிய அவைதிக மதங்கள் வேளாண்மைக்கு முதன்மையளித்தன. யாகத்துக்கு மாற்றாகக் கொடை அல்லது தானம் என்பதை அவைதிக மதங்கள் முன்வைத்தன. நூறு வேள்விகள் செய்பவன் இந்திர பதவியடைகிறான் என்ற வைதிகக் கருத்தோட்டத்துக்கு மாற்றாகப் பெருங்கொடையாளி இந்திர பதவியடைகிறான் எனச் சமணமும் பௌத்தமும் சித்திரித்தன.

தர்மங்களுள் உயர்ந்தது தானதர்மம் என்ற கருத்தின் அடிப்படையிலும் தானத்தில் உயர்ந்தது அன்னதானம் - பசிப்பிணி தீர்த்தல் - என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் அமுதசுரபி கொண்டு உயிர்களின் பசிப்பிணி தீர்த்த ஆபுத்திரனின் அருஞ்செயலால் இந்திரனின் பாண்டு கம்பளம் நடுங்கிற்று என்றும், தனது பதவிக்குப் போட்டி உருவாகிவிட்டதை உணர்ந்த இந்திரன் பெரும் மழை பெய்வித்து உலகைச் செழிப்பாக்கிப் பசிப்பிணி என்பதே இல்லாமற் செய்தானென்றும் புத்த சமயக் காப்பியமான மணிமேகலை (14:21-57) குறிப்பிடுகிறது.

பௌத்தம் விருந்தோம்பல் என்ற வேள்வியை இல்லற தர்மமாக மட்டும் கொள்ளாமல், மடைப்பள்ளியுடன் கூடிய மடாலயங்களின் மூலம் உலகத்தவரின் பசிப்பிணியைத் தீர்க்கிற துறவற தர்மமாகவும் மாற்றிற்று.6 இத்தர்மத்தை நிறைவேற்றுவதற்கு ஓர் உயர் வர்ணத்து ஆணினைத் தேர்வு செய்யாமல், துறவு மேற்கொள்வதற்குத் தகுதிபடைத்த சுதந்திர வர்ணத்தவரான முதல் மூன்று வர்ணத்தவர் போலன்றி, பொருள் கொடுத்து விலைக்கு வாங்கப்படத் தக்கவள், அதாவது அடிமைப் பெண் என்று அரச வர்ணத்தவரால் ஏளனம் செய்யப்படும்7 ஓர் அரங்கக் கூத்தியைத்8 தேர்வு செய்தது. அவள், புகார் நகரின் சுடுகாட்டையடுத்திருந்த ‘உலக அறவி’ என்ற அம்பலத்தில்தான் தனது அன்னதானத்தைச் செய்யத்தொடங்கித் தொடர்ந்து செய்துவந்தாள்.9 இந்த அம்பலம், எந்த வேறுபாடுமின்றி அனைவரும் புகுவதற்கு வசதியாகத் திறந்தேயிருக்கும் வாயிலைக் கொண்டது.10

புகார் நகரைக் கடல் கொண்டபின்னர் வஞ்சி நகருக்குச் சென்ற மணிமேகலை, காஞ்சியில் கடும் பஞ்சம் நிலவுவதாகக் கேள்விப்பட்டு அமுதசுரபியுடன் காஞ்சிக்குச் செல்கிறாள். துணையிளங்கிள்ளி என்ற சோழ அரசன் காஞ்சியில் கட்டுவித்த புத்த சைதன்யத்தைத் தொழுது அவன் உருவாக்கிய ’தருமத வனம்’ என்ற சோலையை அடைந்து, அந்தச் சோலையில் தனது அன்னதானத்தைத் தொடங்கி அதனை அறச்சாலையாக்குகிறாள்.11

புத்த சமயம் தோற்றுவித்த இம்மரபு, காஞ்சியில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பௌத்தம் அழிந்த பின்னரும்12 சைவ தர்மமாகத் தொடர்ந்தது என்பது, “கிராமக் கோயிலாகிய காமாட்சி கோட்டத்து அறச்சாலை இருக்கையில், சிவனே நீர் ஏன் பிச்சை எடுத்துக்கொண்டு அலைகிறீர்?” என்ற சுந்தரர் தேவார13 வினாவால் தெரியவருகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழாரோ, மணிமேகலையின் பிட்சுணிக் கோலத்துடன் இல்லற தர்மமான விருந்தோம்பல் மரபைத் திறம்பட இணைத்து, கணவனுடன் இணைவதற்காகத் தவம்புரியும் தவக்கோலக் காமாட்சியைப் படைத்து அவளையே அறம் வளர்த்த அம்மனாகவும், பெருந்தொண்டை நாட்டு முறைமையைப் பேணியவளாகவும்14 சித்திரிக்கிறார். (அல்லது சைவக் காமாட்சியின் சித்திரத்தை முழுமைப்படுத்துகிறார்.) மனையறம் பெருக்கும் கருணையினால், காமக் கோட்டத்தில் முப்பத்திரண்டு வகைப்பட்ட அறங்களையும் அன்னை புரந்தருள்கிறாள் என்று குறிப்பிடுவதோடு நில்லாமல்,

வீழவு மலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக் குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும் வேணி
மழவிள வெண்டிங்கள் புனை கம்பர் செம்பொன்
மலை வில்லிக் களித்த வளருணவின் மூலம்
தொழவுலகு பெறுமவள் தானருளப் பெற்றுத்
தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவு தொழிலாற் பெருக்கி உயிர்களெல்லாம்
ஓங்க வருந்தரும வினைக் குளரால் என்றும்


என்று அவ்வறங்களை வேளாளர்களோடும், உழவோடும் தொடர்புறுத்தி உறுதிப்படுத்திவிடுகிறார். காமாட்சியன்னை வேளாளர்கள் வசம் இரு நாழி நெல் வழங்கிப் பயிர் செய்து உணவளித்து அனைவரையும் வாழ்விக்க வழிகாட்டியதாகப் பிற்காலப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. உழவுத் தொழிலால் விளையும் பயிர்வளம், வற்றாத அமுதசுரபி என்ற பௌத்த உருவகத்துடன் இவ்வாறு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

பௌத்தம் சத்திரிய வர்ணத்தவரைப் புறக்கணிக்கவில்லை. அரசரை முதல் வர்ணத்தவராகவும், அந்தணரை இரண்டாம் வர்ணத்தவராகவுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்” என்ற மோசிகீரனாரின் (புறம். 186) அறிவிப்பு, பௌத்தம் அங்கீகரித்திருந்த வர்ண வரிசையே சங்க காலத் தமிழகத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டுமென உணர்த்துகிறது.

கொடை - தானம் என்பதை அரச வர்ணத்தவர்க்குரிய உயர்ந்த பண்புநலனாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈதல் என்பதை அரசர் ஐந்தொழில்களுள் ஒன்றாக இலக்கண உரையாசிரியர்களும் தவறாது குறிப்பிடுகின்றனர். பௌத்தம் இத்தகைய அடிப்படை வாழ்வியல் கூறுகளைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை என்றாலும், பௌத்த பிட்சுக்களின் ‘சங்கம்’ என்ற அமைப்பு வலிமை வாய்ந்த ஓர் அரசியல் சக்தியாக உருப்பெற்று வந்ததன் விளைவாகத் தவிர்க்கவியலாத வகையில் சில ஜனநாயக இயக்கப்போக்குகள் தோன்றின. அவற்றின் விளைவே, நாம் மேலே விவரித்த வேளாண் வர்ணத்தவரின் எழுச்சியும், அரசகுலப் பண்புநலன் இடப்பெயர்ச்சியும் ஆகும்.

அரச வர்ணத்தவரின் குறிப்பிடத்தக்க பண்புநலன்களுள் நீதி என்பதும் ஒன்றெனச் சங்க கால இலக்கியங்களாலும் பிற ஆவணங்களாலும் தெரியவருகிறது. செங்கோன்மை என்ற தொடரே நீதி தவறாத செம்மையான ஆட்சி என்றுதான் பொருள்படும். நீண்ட காலமாகத் தமக்குள் பகைகொண்டு வழக்கிட்டுக் கொண்டிருப்பவர்கள், அரசவைக்குள் புகுந்தால் அந்தக் கணத்திலேயே அவ்வழக்கு தீர்த்துவைக்கப்படும் எனப் பொருநராற்றுப்படை கூறுகிறது.17

பசுவிற்கு நீதி வழங்குவதற்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் பற்றிச் சிலப்பதிகாரம் (20:53; 29:17) குறிப்பிடுகிறது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் (21:12-18) ஏலாரன் என்ற சோழ அரச குலத்தவன் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட காலத்தில் அவனது ஒரே மகன் திஸ்ஸவாபிக் குளத்துக்குத் தேரில் சென்றபோது அறியாமல் கன்று ஒன்றின்மீது தேரை ஓட்டிக் கொன்றுவிட்டான் என்றும், ஏலாரன் அவனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று தாய்ப் பசுவுக்கு நீதி வழங்கினான் என்றும் குறிப்பிடுகிறது.

நீதி என்பது அரச தர்மத்தின் முதன்மையான கூறாகக் கருதப்பட்டது என்பதைச் சிலப்பதிகாரம் வழக்குரை காதையாலும் அறியலாம். காஞ்சி நகரில் புத்த பிட்சுக்களின் சங்கம் நீதித் துறையிலும் ஆதிக்கம் செலுத்திற்று என்பதையும், அதனால் அரசர்களின் அதிகாரத்திற்கு அது சவாலாக விளங்கிற்று என்பதையும் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் இயற்றிய மத்த விலாசப் பிரகசனத்தால் அறியலாம்.18 இந்நிலை, தொண்டை மண்டலத்தில் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. தொண்டை மண்டலத்தின் மிகப் பழமையான வேளாளர் சபை, பழையனூர் திருவாலங்காட்டில் இருந்தது.

கணவனால் வஞ்சித்துக் கொல்லப்பட்ட நீலி என்பவள் பேயாக அலைந்து கொண்டிருந்தாள். அவளது கணவன், மறுபிறப்பில் தரிசனச் செட்டி என்ற பெயரில் வாழ்கிறான் என்பதை அறிந்து அவனைப் பழி தீர்ப்பதற்காகப் பின்தொடர்ந்து செல்கிறாள். இரவு நேரத்தில் பழையனூர்ச் சத்திரத்தில் அவன் தங்க நேர்கிறது. நீலி, தரிசனச் செட்டியின் மனைவி என்று கூறிக்கொண்டு, அவன் தன்னைக் கைவிட்டுச் செல்ல முயல்வதாகப் பழையனூர் வேளாளர்களிடம் முறையிடுகிறாள். தரிசனச் செட்டி, அவள் தன் மனைவியல்லள் என்றும் தன்னைக் கொல்லத் துடிக்கும் பேய் என்றும் கூறி அவளைத் தன்னுடன் தங்க அனுமதிக வேண்டாமென்று வேளாளர்களிடம் மன்றாடுகிறான்.

நீலியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கிய வேளாளர்கள், இரவு நேரமென்பதால் மறுநாள் காலையில் இந்த வழக்கை விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து, தரிசனச் செட்டியின் பாதுகாப்பிற்குத் தாங்கள் பிணை ஏற்பதாக வாக்களித்து நீலி அவனுடன் தங்குவதற்கு அனுமதிக்கின்றனர். அன்றிரவில் நீலி தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்கிறாள். மறுநாள் காலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேளாளர்கள் எழுபது பேரும், “சொன்ன சொல் காக்கத் தவறியவர்கள்” என்று தங்கள் மேல் - நீலியின் வஞ்சனை காரணமாக - சுமத்தப்படக்கூடிய பழியைக் கழுவுவதற்காகத் தீக்குளித்து உயிர் துறக்கின்றனர். இந்நிகழ்வு, கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தரால்,

--------------முனை நட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே


என்ற தேவாரப் பாடல் (முதல் திருமுறை, திருவாலங்காட்டுப் பதிகம், பா. 1) வரிகளில் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் (மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 113),

நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுத் தொண்டர் நவை வந்
துற்றபோது தம் உயிரையும் வணிகனுக் கொரு கால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கி அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையின் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு


என்று இந்நிகழ்வைச் சுட்டுகிறது. "தாம் அளித்த வாக்குறுதியையும் தம் உயிரையும் துலாக்கோலின் இரு தட்டுகளில் வைத்து, உயிரைக் காட்டிலும் வாக்குறுதிக்கு அதிக வலிமையிருந்தமையால் உயிரை இழந்தவர்கள்; அதன் மூலம் நீதி என்ற துலாக்கோலின் நடுநிலையைக் காத்தவர்கள் இப்பழையனூர்த் தொண்டர் குலத்தார் " (தொண்டையர்?) என்பது இதன் பொருள். வேளாளர் மெய்க்கீர்த்தியில் “நீலி பழிகழுவினோர்” என்று குறிப்பிடப்படுவோர் பழையனூர் வேளாளர்களே.

இத்தகைய ராஜநீதியை, “அடைக்கலம் அடைந்தவர்களைத் தம் உயிரைக் கொடுத்தாகிலும் காத்தல்” என்பதாகக் கொண்டு, சத்திரியர்களுக்குரிய அடிப்படைத் தன்மையான அபயதானம் என தர்ம சாஸ்திரங்கள் வகைப்படுத்துகின்றன. இதுவும் சத்திரியர்க்குரிய தானம் எனத்தக்க பண்புநலன்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. புறநானூறு (பா. 43) பருந்திடமிருந்து தப்பித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவுக்காகத் தானே துலாக்கோல் தட்டில் ஏறியமர்ந்த செம்பியனது அருஞ்செயலை ‘வரையா ஈகை’ என்றே குறிப்பிடுகிறது.19 இந்நிகழ்வு, சிபி ஜாதகம் என்ற பெயரில், புத்த ஜாதகக் கதைகளில், கௌதம புத்தரின் முற்பிறப்பு நிகழ்வாகக் குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய சத்திரிய வர்ணப் பண்புநலனை வேளாளர்களின் பண்புநலனாகச் சித்திரிக்கும் அளவிற்குச் சமுதாய மாற்றம் நிகழ்ந்ததென்றால், அத்தகைய ஒரு முன்னோடியான மாற்றம், தொண்டை மண்டலத்தில் வ்லிமையாக வேரூன்றியிருந்த பௌத்த சங்கத்தின் அரசியல் செல்வாக்கால்தான் சாத்தியமாகியிருக்க முடியும். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை மையமாகக்கொண்டு உருவாகி வளர்ந்த ‘சித்திர மேழிப் பெரிய நாடு’ எனப்பட்ட வேளாளர் கூட்டமைப்பு, தனது மெய்க்கீர்த்தியில் “உத்தம நீதி உயர் பெருங்கீர்த்தி மேழிப் பெரிய நாட்டார்” எனத் தனது பெருமையைப் பறைசாற்றுகிறது.20 இது, மேற்குறித்த வரலாற்றின் அடிப்படையில் தோன்றிய பெருமித உணர்வே.

பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் தொகுதியுள் அடங்கிய நீதி நூல்களை ‘வேளாண் வேதம்’ எனக் குறிப்பிடுவதன் வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை இனி ஆராய்வோம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

1. p. 462, A Student's Sanskrit English Dictionary, V.S. Apte, Motilal Banarsidas Publishers, 1968. ' ரஜத' என்ற சொல் பொன்னையும் குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு.

2. இச்சொல் ‘வேலா’ என வட மொழியிலும், ‘வேலை’ எனத் தமிழிலும் வழங்கிற்று. கன்னட மொழி வழக்கு பற்றி அறிவதற்குப் பார்க்க: பக். 6-8, ஆவணம், இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை.
pp. 72-87, Ancient and Medieval Commericial Activities in the Indian Ocean: Testimony of Inscriptions and Ceramic Sherds, Editor: Noboru Karashima, Taisho University, Japan, 2002.

3. p. 457, A Student's Sanskrit English Dictionary. கலித்தொகையில் (105:4/5) “படுகடல் பயந்த ஆர்கலி உவகையர்” எனக் குறிப்பிடப்படுவது, இப்பொருளோடு தொடர்புடையதாகலாம்.

4. South Indian Inscriptions, Vol. V, no. 633; Vol. III, no. 160.

5. காமன், முருகன் முதலிய தெய்வங்களின் பெயர்களோடு ‘வேள்’ என்ற பட்டம் சேர்க்கப்படுவது, இரு வகைப் பொருள் விளக்கங்களுக்கும் ஒத்து அமைந்துள்ளதாயினும், வேட்கையை ஏற்படுத்துகின்ற தன்மையோடு மிகவும் பொருந்துகிறது.

6. ‘மடைப்பள்ளி’என்ற தொடரின் நேர்ப்பொருள், “உண்டுறை விடுதியுடன் கூடிய அறச்சாலை அல்லது கல்விச்சாலை” என்பதே. இவ்வகையில் பௌத்த பிக்ஷுக்களால் நிர்வகிக்கப்பட்ட காஞ்சிக் கடிகையே முன்னோடியான மடைப்பள்ளி அல்லது மடாலயம் எனத் தெரிகிறது.

7. வருணக் காப்பிலள் பொருள் விலையாட்டியென்
றிகழ்ந்தனனாகீ நயந்தோன்
- மணிமேகலை 5:87-88
வருணக் காப்பு இல்லாதவள் என்பது, நான்காம் வருணத்திலேயே மிகவும் கீழ்ப்பட்ட பிரிவினள் என்று பொருள்படக்கூடும். வருண அமைப்புக்கு அப்பாற்பட்டவள் என்று பொருள்கொள்வது பொருந்தாதெனத் தோன்றுகிறது.

8. மணிமேகலை 24:22. கூத்தியர், வேசி (வேஷமிடுபவள்) போன்ற சொற்கள் நடனக் கலைக்கும் பரத்தையர் வர்க்கத்துக்குமிடையே நிலவிவந்த தொடர்பினை உணர்த்தும்.

9. மணிமேகலை 17:86-98.

10. பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் உலக அறவி - மணிமேகலை 7:92-93.

11. மணிமேகலை 28:151-238.

12. கி.பி. 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரமேஸ்வர வர்ம பல்லவன் முன்னிலையில் சமணர்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் வாதம் நிகழ்ந்ததென்றும், அவ்வாதத்தில் தோற்ற பௌத்தர்கள், ஒட்டுமொத்தமாக இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர் என்றும் தெரியவருகிறது.

13. காமக்கோட்டம் உண்டாக நீர்போய் ஊரிடு பிச்சை ஏற்பதென்ன ஓணகாந்தன் தளியுளீரே - ஏழாம் திருமுறை, கச்சி ஓணகாந்தன் தளிப்பதிகம்.

14. பெரிய புராணம், மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 115.

15. பெரிய புராணம், மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 118.

16. பெரிய புராணம், மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 212.

17. முதியோர் அவை புகு பொழுதில் தம்பகை முரண் செலவும் - பொருநர். 187-8.

18. ’தேவசோமா’என்ற காபாலினி வாய்மொழியாக இக்கருத்து சொல்லப்படுகிறது. பார்க்க: பக். 155, ‘மகேந்திரவர்மன்’, மயிலை சீனி. வேங்கடசாமி, பதிப்பு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1973.

19. கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித்தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதியஞ்சிக் சீரை புக்க
வரையா ஈகை உரவோன்


கலித்தொகையில் (140:17-22) “பாம்பும் சான்றவர் அவைப்படில் உய்யும்” எனக் குறிப்பிடப்படுகிறது. இதுவும் ‘அபயதானம்’ என்ற பண்பு நலனையே உணர்த்து.

20. South Indian Inscriptions, Vol VII, no. 129; Vol VIII, no. 291.

(நன்றி: தமிழினி, மே 2010.)SISHRI Home