இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
|
வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துருக்களாகும். வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டு வர்ணக் கலப்பில், அதாவது அனுலோமம், பிரதிலோமம் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு சாதிகள் தோன்றியதாக நடப்பிலுள்ள மனு தர்மம் போன்ற தர்ம சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு நான்கு வர்ணங்களை நான்கு அடிப்படை சாதிகளாகவும் ஏனைய சாதிகள், அவற்றின் கலப்பில் தோன்றியனவாகவும் கருதிக்கொள்ளப்படுகிறது. தர்ம சாஸ்திரங்களில் உள்ள முரண்பாடுகள் எதையும் கணக்கில் கொள்ளாது, அவற்றில் சொல்லப்பட்டவை அனைத்தும் சமூகத்தில் உள்ளபடியே நிலவியவை போலக் கொண்டு, ஆராய்ச்சி நோக்கின்றி கிளிப்பிள்ளை போல சொல்லப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மனு ஸ்மிருதி, போதாயன தர்ம சூத்திரம், அர்த்த சாஸ்திரம், யாக்ஞவல்க்ய ஸ்மிருதி ஆகியன, நிஷாத என்ற ஒரு சாதியை, பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்குமான கலப்பில் தோன்றியதாகக் குறிப்பிடுகின்றன; கௌதம தர்ம சூத்திரத்துக்கான ஹரதத்தரின் விளக்கத்தின் படி இந்நிஷாதர்கள் பிராமண தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர்களாவர். அனுஸாசன பர்வமும் நாரத ஸ்மிருதியும் இந்நிஷாதர்களை, க்ஷத்ரிய ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்குமான கலப்பில் தோன்றியவர்களாகக் குறிப்பிடுகின்றன. உண்மையில் இந்நிஷாத சாதி, ஒரு தனி இனக்குழுவாகும். இவர்கள் ரிக்வேத காலத்திய அநாரியர்கள் என்றும் முண்டா மொழிக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்றும் ஆர்.பி. சந்தா சொல்கிறார். (The Indo-Aryan Races, part-I Rajashahi, 1916 pg.3-4). வேத சம்ஹிதைகளில் இந்த நிஷாதர்கள் பற்றி “நிஷாதேப்யஸ்ச தோ நமோ நமஹ” [தைத்ரிய சம்ஹிதை iv, 5.4.2; காதக சம்ஹிதை xvii, 13; மைத்ராயனி சமிஹிதை ii, 9.5; காஞ்ச சம்ஹிதை xvii, 4; வாஜசனேய சம்ஹிதை xvi, 27] என்று பெருமதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதக் குறிப்புகளைக் கொண்டு, சமூகத்திற்கு வெளியே இருந்த தனியொரு இனக்குழுவான நிஷாதர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளதை வரலாற்றாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும், வெவ்வேறு தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள நிஷாதர்கள் குறித்த முரண்பட்ட தோற்றுவாயைக் கொண்டு, “நிஷாதர்களின் தத்துவார்த்தத் தோற்ற மூலம் அவர்களை வர்ண முறைக்குள் கொண்டுவருவதற்கான ஒரு சட்டப் புனைவே” என்கிறார் வரலாற்றாளர் விவேகானந்த ஜா. இதை, பிராமணமயமாக்கம் என்ற கருத்தாடலுக்குள் நின்று, வெறுமனே வர்ண முறைக்குள் கொண்டு வந்ததாகப் பார்ப்பது சரியல்ல. மாறாக, அன்றைய சமூக அமைப்புக்குள் கொண்டு வந்ததன் ஒரு அடையாளமாகக் காண்பதே சரி. ஏனினில், வர்ண முறை என்பது சமூகத்திலிருந்து தனித்த ஒன்றல்ல. வளர்ந்துவரும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தேவைகள் பெருகிவந்த நிலையில், காடழித்து நாடாக்கும் போக்கில் உழைப்புச் சக்திக்கான தேவை தொடர்ந்து பெருகுகிறது. எனவே சமூக உற்பத்திச் செயல்பாட்டின் ஒரு அங்கமாக சமூகத்திற்கு வெளியே இருந்தவர்கள் சமூகத்தினுள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக விரிவாகக் காண்பதே பொருளுடையது.1 இந்நிஷாதர்களைப் போலவே அம்பஸ்த போன்ற வேறு பல இனக்குழுக்களும் சமூகத்தின் அங்கமாகியுள்ளன (Social Mobility in Ancient India with special reference to Elite Groups, auth: Romila Thapar, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma... People's Publishing House New Delhi, 4th edition Dec.1993). அவற்றையும் கூட தர்ம சாஸ்திரங்கள் கலப்பு சாதிகளாகக் குறித்துள்ளன. வேதங்களில் பெருமதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ள நிஷாதர்களை தர்ம சாஸ்திரங்கள், வர்ணக் கலப்பில் தோன்றிய சாதியாகக் குறிப்பிடுகின்றன. மேலும், இந்நிஷாதர்களின் இன்றைய நிலை தீண்டத்தகாதவர்கள் என்பதாகும்.2 தர்ம சாஸ்திரங்கள் வேத காலத்திற்குப் பிற்பட்டவையாகும். நிஷாதர்களின் இன்றைய நிலை, வேத காலத்திற்கும் தர்ம சாஸ்திரங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கும் இடையில் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் குறிப்பதாகக் கொள்வதே அறிவுக்குகந்தது.3 அதிலும் குறிப்பாக குப்தர்கள் காலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக் கருத இடமுண்டு. மேலும் குறிப்பிட்ட ஒரு சாதிக்கு, வெவ்வேறு தர்ம சாஸ்திரங்கள் முரண்பட்ட கலப்புகளைக் குறிப்பிடுவதில் இருந்து சாதிகள் அனைத்தும் வர்ணக் கலப்பில் தோன்றியவையல்ல என்று தெரிகிறது. அதே நேரத்தில் மனு ஸ்மிருதி குறிப்பிடுகின்ற அனுலோமம் - உயர் வர்ண ஆணும் தாழ்ந்த வர்ணப் பெண்ணும் மணம் புரிவது - மற்றும் பிரதிலோமம் - உயர் வர்ணப் பெண்ணும் தாழ்ந்த வர்ண ஆணும் மணம் புரிவது - ஆகிய கருத்தாக்கங்களே வர்ணக் கலப்புகள் அதிகமும் நிகழ்ந்ததற்கான சான்றாகவும் உள்ளன. இது, தர்க்க ரீதியில், வர்ணங்கள் பிறப்பு அடிப்படையைக் கொண்டவை அல்ல என்பதையும், பிற வர்ணத்தவருடன் கலக்க தடை ஏதும் இருக்கவில்லை என்பதையுமே காட்டுகிறது. விஷயம் இவ்வாறிருக்க, வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதென்றும் அதிலிருந்தே பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகள் தோன்றின என்று சொல்வதும் தர்க்க முரணில்லையா? இன்னும் சொல்லப்போனால், பிறப்பு அடிப்படையில் அமைந்த சாதிகளை தொழில்/பண்பாட்டு அடிப்படையில் வர்ணமாகத் தொகுத்ததன் மூலம் எண்ணிக்கையில் மிகப் பலவாக இருந்த சாதிகளை நான்கே பிரிவுகளுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் வர்ண அமைப்பை நாம் கருதலாம். இவ்வாறாக மனு தர்மம் வர்ணக் கலப்பை அங்கீகரித்துள்ள அதே நேரத்தில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்ட பகவத் கீதை, போரினால் வர்ணக் கலப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை செய்வதையும் நாம் காண்கிறோம். இது, நடப்பிலுள்ள மனு தர்மத்தின் காலமான கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் நிகழ்ந்த சமூக மாற்றங்களின் விளைவாக ஏற்பட்ட சாஸ்திர/சமூக மாறுதலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மனு தர்மம் குறிப்பிடுகின்றவை அனைத்தும் சமூகத்தில் அப்படியே இருந்ததாக நாம் கொள்வதற்கில்லை. உதாரணமாக, கம்மாளர்களை தாழ்ந்தவர்களாகவே மனு தர்மம் சொல்கிறது. எனினும், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சாலங்காயன அரசர்களின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய சம்ஸ்கிருதச் செப்பேடுகளில் விஸ்வகர்மாக்களான கம்மாளர்கள், கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றும் பிராமணர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கூட மிகப் பிற்காலம் வரையிலும் கம்மாளர்கள் தங்களின் பிராமணத் தகுதிநிலை குறித்து வழக்காடியதை ‘சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்ற வழக்கின் மூலம் அறிகிறோம். இவர்கள் சிலப்பதிகாரம் குறிப்பிடும் வேளாப் பார்ப்பாராக இருக்கலாம். இவை, மனு தர்மம் சமூக யதார்த்தத்தைச் சரியாகச் சொல்லவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனால் தொல்காப்பியம் குறிப்பிடும் சமூக நிலைமைகள்/விவரணைகள் சமூகத்தின் நடப்புக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கிறது. இத்தகைய பல விவரங்களைக் கணக்கில் கொண்ட வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், “வர்ணக் கருத்துரு, பெரிதும் எபோதுமே ஒரு தத்துவார்த்த மாதிரியாக மட்டுமே இருந்ததேயன்றி சமூகத்தின் உண்மை நிலவரத்தைக் குறிக்கின்ற விவரணையாக இருந்ததில்லை” (Social Mobility in Ancient India, auth: Romila Thapar, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma... People's Publishing House New Delhi, 4th edition Dec.1993) என்கிறார். சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை/பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. இதைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைக் காண்போம். தமிழ்ச் சமூகத்தில் வேளாளர்கள், நான்காம் வர்ணத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொல்காப்பிய இலக்கணம் தெளிவாக்குகிறது. அதே நேரத்தில் தொல்காப்பியக் காலத்தையடுத்து வேளாளர்களில் ஒரு பிரிவினர் காராளராக ஏற்றம் பெற்று, நிலத்தில் இருந்து உற்பத்தி செய்த விளை பொருள்களை விற்கின்ற வணிகர்களாக ஆயினர். அவர்கள் ‘வேளாண் செட்டிகள்' (அ) ‘பூ வைசியர்' என்பதாக வர்ண அடிப்படையில் மூன்றாம் வர்ணத்தவராக வகைப்படுத்தப்பட்டு விட்டதை பிறகு வந்த நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்றால் இது சாத்தியமா? அதுபோலவே சங்க காலத்தில் பறையர்கள், அந்தண வர்ணத்தவராக இருந்தமை பல்வேறு குறிப்புகளால் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் சமூக இயக்கப்போக்கில், பின்நாளில் அவர்கள் தங்களின் சமூக நிலைமையை இழந்து விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டு நான்காம் வர்ணத்தவர் ஆனமை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரியவருகிறது. வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாயின் இது எவ்வாறு சாத்தியம்? அதுபோலவே சமூகத்திற்குப் புறத்தே வேடர்களாக, ஆயர்களாக இருந்தவர்கள், யாருக்கும் அடிமைப்படாதிருந்து, ஒரு பகுதியில் தங்களின் ஆட்சியதிகாரத்தை நிறுவியதும் நேரடியாக க்ஷத்ரிய (அரச) வர்ணத்துக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். முல்லை நில ஆயர்களான, பள்ளி குலத்தவர்கள் இவ்வாறாகவே அக்னி குல க்ஷத்ரியர்களாக, அரச வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் கூட, இத்தகைய பல உதாரணங்களை நாம் காணமுடியும். தற்போது ராஜ் கோண்டுகள், ராஜ் பார்கள் மற்றும் ச்யவனவம்ச செரோக்கள்4 எனப்படும் தனித்தனி இனக்குழுக்கள் குப்தர்கள் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தத்தம் பகுதிகளில் ஆட்சியை நிறுவின. இவர்கள் யாருக்கும் அடிமைப்படாது, சுதந்திரமான இனக்குழுக்களாக இருந்து ஆட்சியதிகாரத்தை நிறுவியதனால் க்ஷத்ரியத் தகுதிநிலை கிடைத்தது. (A study in the state formation among Tribal Communities, auth: K. Suresh Singh, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma... People's Publishing House New Delhi, 4th edition Dec.1993) வட இந்தியாவில் ‘வைத்யா' என்கிற பட்டப் பெயர் கொண்டவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவ குலத்தவரை ஒத்தவராவர். ஆனால், அங்கு அவர்கள் பிராமணர்களாகக் கருதப்படுகின்றனர். இதுவும்கூட வர்ணத்தின் நெகிழ்வுத் தன்மையையும் அது தொழில்/பண்பாட்டை அடிப்படையைக் கொண்ட பிரிவினை என்பதையும் காட்டுகிறதே தவிர பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்டவில்லை. வர்ணக் கலப்பில் பிறந்தவர்களின் வாரிசுகள், அவர்கள் மேற்கொண்ட தொழிலையொட்டி வெவ்வேறு வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டதற்கான சான்றுகளும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. பிரம்மக்ஷத்ரியர்களின் வாரிசுகள் அவர்கள் மேற்கொண்ட தொழிலையொட்டி பிராமண வர்ணத்திலோ அல்லது க்ஷத்ரிய வர்ணத்திலோ வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தின் கொங்கு மண்டல வேளாளர்கள் மத்தியில் கோது பிரித்தல் என்பதாக ஒரு வழக்கம் உண்டு. இந்தக் கோது என்பது கோத்திரம் அல்லது கூட்டத்தை ஒக்கும். அதாவது, ஒருவர் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து சச்சரவு எழுமாயின், அச்சமூகத்தவர் கூடி, சிக்கலுக்கு ஆளானவரை ஏதோவொரு கூட்டத்தில் அடையாளப்படுத்துவர். அது முதல் அவர் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவர். இதைப் போலவே வர்ணம் பிரித்தல் என்கிற ஒரு நடைமுறையும் கூட மிகப் பிற்காலம் வரை தமிழகத்தில் வழக்கில் இருந்துள்ளமை கல்வெட்டுச் சான்று மூலம் தெரியவருகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்களின் மன்னார்குடிக் கல்வெட்டில் ‘வரணம் செய்தல்' (ARE 113 of 1928) பற்றிய குறிப்பு உள்ளது. இவ்வாறாக வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாயின் ‘வர்ணம் செய்தல்' என்கிற வினா எழ வாய்ப்பில்லை என்பதும் இந்த இடத்தில் கருதத்தக்கது. வேதம், தர்ம சாஸ்திரங்கள், பகவத் கீதை போன்ற இந்து மத நூல்கள் என்று சொல்லப்படுவனவற்றில் அடிப்படையாக ‘வர்ணம்'தான் சொல்லப்பட்டுள்ளதே - இதில் பிற்காலத்தில் சில திரிப்புகள்/இடைச்செருகல்கள் பார்ப்பனர்களால் செய்யப்பட்டிருக்கின்றன - தவிர சாதியல்ல. அப்படியானால், வர்ணத்திலிருந்து சாதி தோன்றியதாக முன்வைக்கும் போதுதான் சாதி நேரடியாக மதத்திற்கு உரியதாகிறது. மேலும், இன்றைய நிலையில் சாதிதான் உள்ளது; வர்ணம் என்பது எந்த வடிவிலும் நிலவிக் கொண்டிருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? வர்ணத்தில் இருந்து சாதி தோன்றியது என்றா அல்லது வர்ணத்துக்கும் முற்பட்டது சாதி என்றா? வர்ணம் என்ற சமூக நிறுவனம் சமூகத்தில் எழுந்த ஒரு தேவையையொட்டி ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும். இத்தகைய ஒரு சமூக நிறுவனம் இந்தியாவிற்குள் தோன்றியதல்ல; மத்திய ஆசியப் பகுதியில் தோன்றியது. இதன் எச்சமாகவே, ஜொராஷ்ட்ரிய மதப் புனித நூலான ஜெண்ட் அவெஸ்தவில் மூன்று வர்ணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர், “இந்தோ இரானியப் பகுதிக்கு உரியதான சில சடங்குகள், இந்தோ ஐரோப்பிய மொழி பேசக்கூடிய மற்ற இடங்களில் இல்லை” என்கிறார். (The Theory of Aryan Race and India: History and Politics; Social Scientist Vol.24, Nos.1-3, January March 1996 pp-3-29) சடங்குகளுக்கு மட்டுமின்றி வர்ண அமைப்புக்கும் இது பொருந்தக் கூடியதுதான். வேதங்களின் மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், பிற இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகள் வழக்கில் இருந்த/இருக்கின்ற எந்த இடங்களிலும் வர்ண அமைப்பு இல்லை. இதைக் கொண்டு நாம் பார்க்கையில், வர்ண அமைப்பு இந்தோ-இரானியப் பகுதியில் தோன்றியது என்பதே பொருத்தம். இதன் விளைவாகவே ஜெண்ட் அவெஸ்தவில் நாம் வர்ணங்களைப் பார்க்கிறோம்; இந்த வகையில் பார்க்கும்போது வர்ணம், ‘ஆரியர்களின்/வேதத்திற்கு உரியவர்களின்' கண்டுபிடிப்பு அல்ல என்பது தெரிகிறது. இதை உறுதி செய்கின்ற விதத்தில் வர்ணங்களின் சம்ஸ்கிருதப் பெயர்களுக்கான (அதாவது, பிராமண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர என்ற பெயர்களுக்கான) வேர்ச் சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எதிலும் இல்லை. எனவே இந்த வர்ண அமைப்பு, இந்தோ-ஐரோப்பியர் தவிர்த்த இந்தோ-இரானியப் பகுதியில் இருந்தவர்களின் படைப்பாக அல்லது ஏற்பாடாக இருக்கவேண்டும். இந்தோ-ஆரியர் தவிர திராவிட மொழிக் குடும்ப மொழிகளுக்கு முந்து-மொழியாகக் கருதப்படும் முன் ஏலமைட் மொழிக்குடும்பம் இருந்த இடமும் இதே இந்தோ-இரானியப் பகுதிதான். தமிழர்களுக்கும் சுமேரியர்களுக்குமான பண்பாட்டு ஒற்றுமைகள் பலவும் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களால் அடையாளங் காணப்பட்டுள்ளன. திராவிட மொழிக் குடும்பத்தில் முதன்மையான மொழியாகக் கருதப்படும் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் நாற்பால் (பால் என்பதற்கு பகுப்பு என்று பொருள்) குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களை அடியொற்றி, சமூக நிலவரங்களுக்கு நெருக்கமாக வகுக்கப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நாற்பால் குறித்த விரிவான விவரணைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பதிவு என்ற வகையில் தொல்காப்பியம், வேதங்களுக்கு மிகப் பிற்பட்டதாக இருப்பினும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற மரபு மிகப்பழமை வாய்ந்தது. இந்த வர்ண அமைப்புக்கான தேவை ஒழிந்த நிலையில் அந்த நிறுவனமும் ஒழிந்துபோனது. ‘கில்டு' எனப்பட்ட தொழில் குழுக்களும் இப்படித்தான் தோன்றியழிந்தன என்பது கருதத்தக்கது. இவ்வாறாக சமூகத் தேவையையொட்டி உருவாகி, மத நூல்களிலும் இடம்பெற்ற வர்ணம் ஒழிந்துபோய், பின்னரும் சாதி நீடிப்பது, வர்ணத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதையே காட்டுகிறது. வர்ண அமைப்பு தோன்றியிராத பல சமூகங்களிலும் - குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் - சாதியமைப்பு உள்ளது. இதுவும் கூட வர்ணத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதையே காட்டுகிறது. அடிக்குறிப்புகள் [1] தமிழகத்தில் பாலை நிலக் குடிகளான கள்ளர், எயினர் போன்றவர்கள் சமூகத்தின் அங்கமாக்கப்பட்டுள்ளதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தொடக்கத்தில் தூசிப் படைகளாக, வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்ட பாலை நிலக் குடிகள் தன்னுறு தொழில், வேந்துறு தொழில் என்பதாக ஆநிரை கவர்ந்துள்ளனர். தூசிப் படைகளாக வேந்துறு தொழிலில் ஈடுபடுங்கால், இவர்களால் கவர்ந்து வரப்பட்ட ஆநிரைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக, சேர்வைக்காரர்களாக (சேர்வை என்பது குதிரையைக் குறிக்கின்ற சேவல் என்ற சொல்லில் இருந்து வந்தது. சேவல் என்ற சொல்லின் அடியாகவே ஆங்கிலத்தில் cavalry, chevalier போன்ற சொற்கள் தோன்றின.) (குதிரையைப் பராமரிப்பவர்கள்) படைப் பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். [இன்றைக்கும் சேர்வை என்று ஒரு பிரிவு முக்குலத்தோரில் உண்டு] பிறகு அரண்மனையில் படிவேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு இவர்களுக்கு ஒரு தகுதி நிலை வழங்கப்பட்டது. இதைக் குறிக்கின்ற வகையிலேயே “கள்ளர் மறவர் கனத்ததோரகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே” என்ற சொல்வழக்கு தோன்றியது. பாலை நிலப் புறக்குடிகள் சமூகத்தினுள்ளே அங்கமாக்கப்பட்டது இவ்வாறே. [2] “பாணினியின் கணாபத்யம் ஒரு நிஷாத கோத்திரம் பற்றிக் குறிப்பிடுவதை நாம் காண்கிறோம். தரப்படுத்தப்பட்ட கோத்திரங்கள் பட்டியல் எதிலும் இது காணப்படவில்லை. இது ஒரு பிராமண கோத்திரம்தானா என்று ரா.ச. சர்மா ஐயுறுகிறார். கோசாம்பியைப் பொருத்தவரை பூர்வ குடிகளின் புரோகிதர்களில் இருந்து சிலர், பிராமணர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டோ அல்லது அப்பூர்வகுடிகளுக்கு பிராமணர்களில் இருந்து சிலர் புரோகிதர்களாகவோ இருந்திருந்தாலேயன்றி நிஷாத கோத்திரம் என்பது சாத்தியமேயில்லை. . . ஒரே இனக்குழு பல வர்ணங்களாகவும் சாதிகளாகவும் பிரிக்கப்பட்டன என்பதற்கான முற்பட்ட ஒரு எடுத்துக்காட்டாக இது இருக்கலாம்” (From Tribe to Untouchable: The case of Nisadas, auth: Vivekanand Jha, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma... People's Publishing House New Delhi, 4th edition Dec.1993). [அறிஞர் கோசாம்பியும், சம்ஸ்கிருதமயமாக்கம் /பிராமணமயமாக்கம் பேசக்கூடிய எம்.என்.சீனிவாசன் போன்றவர்களும் கூட ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கின்றனர். அதாவது ஒரே இனக்குழு பல வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டன என்பதுதான். இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தால் அது தொழில் அல்லது வேறு பண்பாட்டு அடையாளங்களாக இருந்திருக்கலாமே தவிர பிறப்பு அல்ல என்பது தெளிவு. ஏனெனில் ஒரு இனக்குழு என்பது பல புறமணக் குலங்களை உள்ளடக்கியது. அதனால் பிறப்பை அடிப்படையாகக் கொண்டால் அவர்கள் ஒரே வர்ணமாகத்தான் வகைப்படுத்தப்பட முடியும்.] [3] வேதங்களின் காலத்திற்கும் தர்ம சாஸ்திரங்களின் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் ஜைனமும் பௌத்தமும் செழித்து வளர்ந்தன என்பதும் அம்மதங்கள் வர்ண முறையை நிராகரிக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. [4] அவர்களில் செரோக்கள் என்பவர்கள் சேரர்களின் கிளைக்குடியாகச் சொல்லிக் கொள்கின்றனர். இவர்கள் தற்போதைய பீகார் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் தங்கள் அரசுகளை நிறுவியிருந்தனர். இந்த இடத்தில் வேறொன்றையும் குறிப்பிடுவது அவசியம். பிராமணர்கள் தங்கள் விருப்பத்திற்குத் தக க்ஷத்ரியத் தகுதி நிலை வழங்கியதாக, அதாவது தம் மனம் போன போக்கில் அல்லது தமக்குக் கொடுக்கப்படும் நிலப்பரப்பு போன்ற, கொடைகளின் அடிப்படையில் எவருக்கு வேண்டுமானாலும் எந்தத் தகுதிநிலையையும் வழங்கியதாக, ஆதாரமற்ற ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது. அதாவது பிராமணர்களே நான்கு வர்ணத்தைக் கொண்டுவந்தவர்கள் என்பதான நிலையிலிருந்து இப்படிக் கூறப்படுகிறது. உண்மையில், சோழர்களின் ராஜ குருக்களாக இருந்த அந்தணர்களான தீக்ஷிதர்கள், சோழரைத் தவிர மற்றவர்களுக்கு முடிசூட்டமாட்டோம் என்று சொல்லி கேரள தேசத்திற்குத் சென்றுவிட்டனர் என்று சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் அவர்கள் குறித்து பெருமையாகக் கூறுகின்றார். உண்மையில் மூவேந்தர்களும் ஒடுங்கிவிட்ட நிலையில், களப்பிரருக்கு முடிசூட்டி, தமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற வாய்ப்பு இருந்தும் அதை அவர்கள் மறுத்தது ஏன்? pravaahan@sishri.org |