இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
வரலாற்று நோக்கில் வர்மக்கலை
எஸ். இராமச்சந்திரன்

பதினெண் சித்தர்களால் குறிப்பாகப் பொதியில் முனிவர் அகத்தியரால் கற்பிக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் வர்மசிகிச்சை என்பது ஒரு பிரிவாகும். மனித உடலின் மேற்பரப்பிலுள்ள நரம்புமுனைகள் சிலவற்றை வர்ம ஸ்தானங்கள் எனச் சித்த மருத்துவர்கள் குறிப்பிடுவர். இந்நரம்பு முனைகளில் அடி விழுந்தால் உடலுள் ளுறுப்புகளுக்கு ஊறு நேருமென்றும் உயிருக்கே ஆபத்து விளையக் கூடுமென்றும் கருதப்படுகின்றன. இது குறித்த அறிவியலே வர்மக்கலை ஆகும். வர்மக்கலையைக் கற்றறிந்து அதனைப் பிரயோகிக்கும் நிபுணத்துவம் உடையோரை வர்மாணி ஆசான் என அழைப்பது வழக்கம். கேரள மாநிலத்திலும் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் வர்மாணி ஆசான் பரம்பரையைச் சேர்ந்தோர் பலர் உள்ளனர். வர்மக்கலை என்பது களரிப் பயிற்று எனப்படும் போர்முறைக் கல்விப் பயிற்சிப் புலத்தின் உயர் கல்விப் பிரிவைச் சேர்ந்ததாகும். ஆயினும், இதன் ஆக்கபூர்வமான பயன்பாடே - வர்ம சிகிச்சை என்ற மருத்துவச் செயல்பாடே - பரவலாக அறியப்பட்டுள்ளது. சீன நாட்டு அக்குபங்க்சர் சிகிச்சை முறை அண்மைக் காலமாக நம் நாட்டில் பிரபலமடைந்துள்ளதாலும், அச்சிகிச்சை முறையிலும் வர்மஸ்தானங்களுக்கு இணையான நரம்பு முனைகள் குறிப்பிடப்படுவதாலும் வர்ம சிகிச்சை குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அவ்வகையிலும் வர்மக்கலை என்பது மருத்துவ அறிவியலாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

வன்மம் > வர்மம்

வெளித்தோற்றத்தில் புலப்படாமல் மர்மமாக (இரகசியமாக) ஒளிந்திருக்கும் நரம்புமுனைகள் மர்ம ஸ்தானங்கள் என வழங்கப்பட்டுக் காலப்போக்கில் வர்மஸ்தானங்கள் என மருவியதாகக் கருதப்படுகிறது. இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. வர்மம் என்பது வன்மம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகவே இருக்க வேண்டும். வன்மை, வலிமை முதலிய சொற்களைப் போன்றே வன்மம் என்ற சொல்லுக்கும் ‘வல்' என்ற வேர்ச் சொல்லுடன் வலிமையான தொடர்பு உள்ளது. கம்ப ராமாயணம் யுத்த காண்டம் அதிகாயன் வதைப் படலத்தில், நீலன் என்ற வானரப் படைவீரன், உன்மத்தன் (அல்லது போர்மத்தன்) எனும் அரக்கர் படைவீரனைக் கொல்வது விவரிக்கப்படுகிறது. அந்நிகழ்வைக் குறிப்பிடும் பாடலையடுத்துப் பின்வரும் பாடல் இடம் பெற்றுள்ளது:

உன்மத்தன் வயிரமார்பின் உரும் ஒத்த கரம் சென்றுற்ற
வன்மத்தைக் கண்டும் வீழ்ந்த மதமத்த மலையைப் பார்த்தும்
சன்மத்தின் தன்மையானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக் கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான்

‘உன்மத்தனின் வஜ்ரம் போன்ற மார்பில் நீலனது கையானது இடி போன்ற வன்ம அடியைச் செலுத்தியதன் விளைவாக உன்மத்தனின் மலை போன்ற உடல் உயிரற்று வீழ்ந்ததைக் கண்கூடாகப் பார்த்தபின்னரும் அரக்கப் பிறவியின் தன்மைக்கேற்பவும் தர்ம நெறியை விட்டு விலகி வாழ்ந்த கர்ம வினையின் பயன் விளையப்போகிற நேரம் வந்துவிட்டதாலும் வயமத்தன் என்ற அரக்கர் படைவீரனும் நீலனுடன் போர் புரிய விரைந்து வந்தான்' என்பது இப்பாடலின் பொருளாகும். வன்மம் என்பது ‘ஆழமான பகையுணர்ச்சி' என்ற பொருளில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனவே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஆழமாகப் பாதிக்கக்கூடிய பகை நரம்புமுனைகள் வன்மத்தானங்கள் என்றும் அவற்றை நுட்பமாகத் தாக்கும் பயிற்சியே வன்ம அடி முறை என்றும் குறிப்பிடப்பட்டன எனத் தெரியவருகின்றது.

வன்ம அடிமுறை = அங்கவெட்டு

வன்மத்தானங்களைத் தாக்கும் அடிமுறை, பழங்காலத் தமிழகத்தில் ‘அங்கவெட்டு' எனப்பட்டது. இது ‘அங்கை வெட்டு' என்பதன் திரிபாகும். விரிந்த உள்ளங்கையை அகங்கை அல்லது அங்கை எனக் குறிப்பிடுவது வழக்கம். எந்த ஆயுதமும் ஏந்தாமல் வெறும் அங்கையைப் பயன்படுத்தி எதிரியை வெட்டி வீழ்த்துகிற போர் முறையா தலால் இது அங்கைவெட்டு எனப்பட்டது. மொத்தம் நூற்றெட்டு அங்கவெட்டு முறைகள் இருந்தன எனக் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி எனப்பட்ட வேம்பத்தூராரால் இயற்றப்பட்ட திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் அங்கம் வெட்டிய படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (‘‘அங்க நூற்றெட்டும் வென்றான்'' - பா. 16) படுவர்மம் பன்னிரண்டு, தொடு வர்மம் தொண்ணூற்றாறு - ஆக மொத்தம் நூற்றெட்டு வர்மஸ்தானங்கள் மனித உடலில் உள்ளன என்பது சித்த மருத்துவக் கோட்பாடு. இந்நூற்றெட்டு வன்மத்தானங்களை அங்கையால் தாக்கி எதிரியை வீழ்த்தும் தொழில் நுட்பமே ‘அங்க வெட்டு' எனப்பட்டது.

அங்கக்காரர்கள்

கி.பி. 12 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான பல தமிழ்க் கல்வெட்டுகளில் ‘அங்கக்காரர்', ‘அங்கக் களரி' என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன.1 (கி.பி. 14ஆம் நூற்றாண்டைய வரலாற்று நிகழ்வு தொடர்பான) கி.பி. 15 - 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஐவர் ராசாக்கள் கதை' என்ற வில்லுப்பாட்டு இலக்கியத்தில் ‘அங்கஞ் சிரமிகள்' என்று அழைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.2 அங்கம், சிரமம் என்ற இரு வகைப் போர் முறைகளிலும் தேர்ந்தவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டனர். அங்கைப் போர்முறை அங்கம் என்று வழங்கப்பட்டதெனில் வாள்வீச்சு, கோல் சுழற்றுதல் ஆகியவையே சிரமம், சிரம்பம், சிலம்பம் என்றெல் லாம் வழங்கப்பட்டன. சங்க இலக்கியமான பரிபாடலில் (18:28-29) இடம்பெறும் "காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்'' என்ற வரிக்குக் கி.பி. 13ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த உரையாசிரியர் பரிமேலழகர் “காமவேள் சிரமச்சாலை” என உரை கூறியுள்ளார்.3 படைக்கலப் பயிற்சி நடைபெறும் இடத்தைச் சிரமச்சாலை எனக் குறிப்பிடுவது கி.பி. 12 -13ஆம் நூற்றாண்டுகளில் வழக்கமாக இருந்துள்ளது என இக்குறிப்பால் தெரியவருகிறது. சிரமப் போர்முறை அதாவது ஆயுதப் போர்முறை தொடர்ந்து பரவலாகப் பின்பற்றப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் வந்ததால் சிரமம் என்ற சொல் கவாத்து (drill) என்ற பொருளில் அண்மைக்காலம் வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. சிலம்பம் என்ற சொல்லும் கோல் சுழற்றுதல் என்ற பொருளில் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால் அங்கப் போர்முறை அதிநுட்பமானது என்பதால் பெளத்த சங்கங்கள் போன்ற தீவிரமான கட்டுப்பாடு மிக்க நிறுவனங்களால் மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது. சிங்கள பெளத்தர்களிடையே அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற சில குடும்பத்தவரிடம் மட்டும் அங்கப்போர் மரபுகள் சில பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன எனக் கே.கே. பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். ‘தேவ அங்கம்' எனப்பட்ட பட்டுத்துணி விரிப்புகளில் அங்கப் போர்க் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டன என்றும், அத்தகைய ஓவியத் துணிகள் சில இலங்கையில் பாது காக்கப்பட்டு வருகின்றன என்றும் கே.கே. பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.4

தமிழ்க் கல்வெட்டுகளைப் பொருத்தவரை, கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குரிய வணிகக் குழுவினர் (ஐந்நூற்றுவர்) கல்வெட்டுகளிலிருந்து வணிகக் குழுவினரின் பாதுகாப்புப் படைவீரர்களுள் அங்கக்காரர்களும் இருந்தனர் என்ற செய்தி தெரிய வருகிறது.5 கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலிருந்து ‘வலங்கை உய்யக் கொண்ட வாள்வீரர்'6 எனப்பட்ட சான்றோர் (நாடார்) குலப்பிரிவினருள்ளும், ‘வெட்டுமாவலி அகம் படியர்7 எனப்பட்ட அகம்படிய மறவர் குலப்பிரிவினருள்ளும் சிலர் ‘அங்கக்காரன்' என்ற பட்டத்தைப் புனைந்திருந்தனர். என்ற விவரம் தெரியவருகிறது.8 எனவே கி.பி. 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் அங்கக்காரர்கள் மேற்குறித்த சமூகத்தவராகவே இருந்திருக்க வேண்டும்.

இலங்கையைப் போல் தமிழகத்தில் புத்த சமயம் குறிப்பாகப் பெளத்த பிக்குகளின் சங்கம் ஓர் அரசியல் சக்தியாக இருந்ததில்லை. புத்த சமயத்தின் தலைமையிடமாக இருந்த காஞ்சிபுரத்திலேயே கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புத்த சமய ஆதிக்கம் தகர்ந்து விட்டது. கடற்கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்கள் சிலவற்றில், குறிப்பாக நாகப்பட்டினத்திலும் இராமேஸ்வரத்திலும் இலங்கையுடன் நீடித்துவந்த அரசியல்-வணிக உறவுகளின் காரணமாகப் புத்த சமயத் தொடர்பு ஓரளவு நீடித்து வந்தது. அங்கும்கூடப் புத்த சமயம் சமூகவியல் களத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கவில்லை. எனவே கி.பி. 11-12ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த அங்கக்காரர்கள், பெளத்த சங்கங்களின் ஆதிக்கத்தில் வாழ்ந்தவர்களல்லர்; தமிழ்ச் சமூக அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டவர்கள். இவர்களிடையே பெளத்த மரபுகள் சிலவற்றின் எச்சங்கள் இருந்தன என உய்த்துணர முடிகிறதே தவிர இவர்களின் நடைமுறை வாழ்வு, சைவ அல்லது வைணவ சமய நிறுவனங்களுடன்தான் தொடர்புடையதாக இருந்து வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் வென்றான் என்ற ஊருக்கருகில் சோழபுரம் என்ற ஊரிலுள்ள அணைந்தான் கோயில் என வழங்கும் சுடலைமாட சுவாமி கோயிலின் வாயிலில் கற்பலகையொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அக்கற்பலகையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மல்லன் குடியான உத்தம சோழபுரத்து நகரத்தார் (வணிகர்கள்) வசம், அவ்வூரின் பரிக்ரகத்தைச் (போர் அவை Military Academy) சேர்ந்த தேவேந்திர வல்லவன் அங்கக்காரர்களில், கொற்றன் குடியனான கலங்காத கண்டப் பேரையன் என்பவர் நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி, இறந்து போன தமது மகன் குறுமன் இரட்டை என்பவனின் நினைவாகச் சிலையேற்றி, அச்சிலையின் வழிபாட்டுக்கு இறையிலியாக (அரசுக்குரிய வரியைச் செலுத்தாமல் அனுபவிக்கும் நிலமாக) அந்நிலத்தை வழங்கியுள்ளார். என்ற செய்தி அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் அரசர் பெயர், ஆட்சியாண்டு முதலிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லையாயினும், சடையவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1250 - 1284) பட்டப் பெயரான "தேவேந்திர வல்லபன்' என்பதைத் தங்களுடைய குழுவின் பட்டப் பெயராகச் சூட்டிக்கொண்ட அங்கக்காரர்கள் தொடர்பான கல்வெட்டாதலால் அது சடையவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென முடிவு செய்யலாம். அரசரின் ஆணையோ அனுமதியோ இன்றி ஒருவர் தம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சமாதிக் கோயில் எழுப்பி, அதற்கு இறையிலியாக நிலமும் வழங்குகிறார் எனில் அவர் சார்ந்திருந்த குழு புத்த சங்கம் போன்ற வலிமை வாய்ந்த சுயாட்சிக் குழுவாக இருந்தாலன்றி அது சாத்தியமாகாது. மேற்குறித்த அங்கக்காரர், இறந்து போன தமது மகனுக்காகச் ‘சிலை' எனப்படும் கல் நாட்டியுள்ளார். அக்கல்லே, அணைந்தான் எனத் தற்போது வழங்கும் சுடலைமாட சுவாமியாக இருக்க வேண்டும். "என் மகன் குறுமன் இரட்டை இ(ஜென்ம) மொழிய இவனுக்கு ஸமாப்தியாக இவனை நோக்கி சிலையேத்தினமையில்'' என மேற்குறித்த அங்கக்காரர் நேர்க்கூற்றாகக் கூறுவது கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாசகத்தில் இடம்பெற்றுள்ள சொல் வழக்குகள் சைவம் - வைணவம் போன்ற பெருநெறி சார்ந்தவை என்று எவ்வாறு கருத இயலாதோ அது போன்றே பேய் வழிபாடு போன்ற சிறு தெய்வநெறி சார்ந்தவையென்றும் கருத இயலாது. ஹீனயான பெளத்த மரபுகளைச் சுவீகரித்து நீடித்து வந்த தென்புலத் தெய்வ வழிபாட்டு மரபாக இது இருக்கலாம்.10 தற்போது இக்கோயில் சான்றோர் சமூகத்தவர்க்குரியதாக உள்ளது.

சற்றொப்ப இதற்குச் சமகாலத்தில் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்துள்ள அங்கமங்கலம் என்ற ஊரிலும் அங்கக்காரர்கள் மிகுந்த அதிகாரத்துடன் வாழ்ந்துள்ளனர். அவ்வூரிலுள்ள நரசிம்மேஸ்வரர் கோயில் எனப்படும் சிவன் கோயில் கல்வெட்டுகளில், சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலம் (கி.பி. 1216 - 1239) தொடங்கி, "அங்கைமங்கலமான வீரபாண்டியன் மடிகை (மளிகை) மாநகரத்து நரசிங்க ஈஸ்வரம்'' என அக்கோயில் குறிப்பிடப்படுகிறது.11 அங்கைப் போர்வீரர்களுக்கு இறையிலி மானியமாக வழங்கப்பட்டிருந்த அங்கைமங்கலத்தின் இறைவன், சிவபிரானாக - சிவலிங்க வடிவினனாக - இருந்தபோதிலும் நரசிங்க ஈஸ்வரன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளான் எனில், எவ்வித ஆயுதமுமின்றி இரணியனைக் கொன்ற நரசிம்மருக்கு இணையான அங்கைப் போர் வீரர்களை இவ்வகையில் அரசர் கெளரவித்துள்ளார் என்று நாம் பொருள்கொள்வது தவறாகாது. இவ்வூரிலும் தற்போது சான்றோர் சமூகத்தவரே பெரும்பான்மையோராக உள்ளனர். இவ்வூரையடுத்துப் ‘பணிக்க நாடான் குடியிருப்பு' என்ற ஊர் உள்ளது. பணிக்கன் என்பது போர்க்கலை கற்பிக்கும் ஆசானைக் குறிக்கும் பட்டமாகும். இப்பகுதியிலுள்ள ஆறுமுகனேரியைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர்கள் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ”தட்சிண மாற நாடுசீமை ஆயிரம் நாடாக்கள்” என்ற பெயரில் வணிகப் பேட்டைகள் அமைத்தல் போன்ற சுயச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தங்கள் நலன்களைக் காத்துக் கொண்டனர் என்பதற்குச் செப்பேட்டு ஆதாரம் உள்ளது.12 கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அங்கமங்கலம், மளிகைப் பொருள்களைச் சேமித்து மொத்த விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மடிகை மாநகர'மாக இருந்துவந்த வரலாற்றை நாம் கவனத்தில் கொண்டால், இவர்களின் பாரம்பரியப் பின்னணியை உணர இயலும்.

அங்கப்போர் மரபின் எச்சங்கள்

கேரளத்தைப் பொருத்தவரை பெருமாக் கோதை மன்னர்கள் காலத்தில் (கி.பி. .8ஆம் நூற்றாண்டு) அங்கவெட்டுக் கலையில் தேர்ந்தவர்களான ஈழவர் சமூகத்தவர் இருந்துள்ளனர். ஈழவர் சமூகத்தின் "ஆரோமல் சேவகர் பண்டு அங்கம் வெட்டிய கதைகள்” நாட்டுப்புறப் பாடல்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்து வள்ளுவக் கோனாத்திரி (பின்னாளில் கோழிக்கோடு சாமி திருப்பாதம் அல்லது சாமூதிரிபாத்) வேணாட்டரசர் போன்ற சிற்றரசர்களின் ஆதரவில் அங்கவெட்டுக் கலை உயிர்த்திருந்தது. கேளரத்தின் சமூக அரசியல் களங்களில் நீடித்து வந்த ஜனநாயகப்போக்கு (மருமக்கள் தாயம் அறிமுகப்படுத்தப்பட்டதால் அரசர்களின் பலதார மணமும் அரச வாரிசுகளின் பதவிச் சண்டையும் பெருமளவில் தவிர்க்கப்பட்டமை, அரசர் தம்மை அதிபுருஷனாகச் சித்திரித்துக் கொள்ளாமை போன்றவை) இதற்கான உந்துசக்தியாக இருந்திருக்கலாம். ”வெட்டு மாவலி அகம்படியர்'' எனக் குறிப்பிடத்தக்க நாயர் சமூகத்தவரும்13 ஈழவர் சமூகத்தவரும் அங்கவெட்டுக் கலையைப் பயின்று பாதுகாத்து வந்தனர். தென்பாண்டி நாட்டில் தென்காசிப் பாண்டிய அரசகுலத் தொடர்புடைய சான்றோர் குலப் பணிக்கர்கள் அங்கப் போர்க் கலையைப் பயிற்றுவித்து வந்தனர். கி.பி. 16-17ஆம் நூற்றாண்டுகள் வரை அங்கவெட்டுக் கலை உயிர்ப்புடன் இருந்தது என ‘உடையார் கதை' என்ற வில்லுப்பாட்டு இலக்கியத்தால் தெரியவருகிறது.14 அங்கக் களரி பயிற்றுவிக்கப்படும் இடம் ‘இலங்கம் மடு' அல்லது ‘இலங்கப் புரை' என வழங்கப்பட்டதென உடையார் கதை குறிப்பிடுகிறது. ‘ரங்கம்' என்ற சொல் லங்கம் என்றும் உச்சரிக்கப்படும். இச்சொல்லுக்குரிய பல பொருள்களுள் ‘போர்ப்பயிற்சிக் களம்' என்பதும் ஒன்றெனச் சூடாமணி நிகண்டால் தெரியவருகிறது. எனவே ‘இலங்கம்' என்ற வழக்கிலிருந்தே இலங்கம்மடு, இலங்கப்புரை ஆகிய தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகனேரி முதலிய ஊர்களில் இலங்கத் தெரு, இலங்கத்தம்மன் கோயில் போன்ற இடங்கள் உள்ளன. இவையெல்லாம் சான்றோர் சமூகத்தவரோடு தொடர்புடைய இடங்களாகும்.

‘அங்கம்' என்பது நீதி நிர்வாக நடைமுறையுடன் தொடர்புடைய மரபுவழிச் செயல்பாடாகவும் இருந்துள்ளதென கே.கே. பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்.15 அதாவது சத்திரியர்கள் இருவரிடையே சொத்து குறித்த தீராத வழக்கு இருக்குமானால் ஒற்றைக்கு ஒற்றை அங்கப்போர் மூலம் அவ்வழக்கு தீர்க்கப்படும். அதுவே இறுதித் தீர்வு அல்லது தீர்ப்பு ஆகும். தமிழகத்தில் இத்தகைய நீதி முறை ‘சான்றவர் சிரமநீதி' என வழங்கப்பட்டதெனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தால் (35:4) தெரியவருகிறது. சிரமம் என்பது ஆயுதப்போர் முறையைக் குறிக்குமாதலால் அங்கப்போரைவிட வாட்போரே இதில் முதன்மையாக இடம்பெற்றது. சற்றொப்பக் கி.பி. 4ஆம் நூற்றாண்டளவில் ஈழ குலச் சான்றார் ஏனாதி நாதர்க்கும் அதிசூரனுக்கும் (சான்றார் பட்டத்துக்காகவும் அது சார்ந்த போர்க்கலை ஆசான் பதவிக்காகவும்) இத்தகைய ஒற்றைக்கு ஒற்றை வாட்போர் முறையே, வழக்கின் இறுதித் தீர்வாக மேற்கொள்ளப்பட்டது எனச் சேக்கிழாரின் பெரிய புராணத்தால் (இலை மலிந்த சருக்கம், பா. 88) தெரிய வருகிறது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க அரசன் விசுவநாதனிடம் ஒற்றைக்கு ஒற்றை வாட்போரில் தோற்ற கயத்தாற்றுப் பாண்டிய அரசர், பாண்டிய நாட்டின்பால் தமக்கிருந்த அதிகாரத்தை இழந்தார் எனப் பழமரபுக் கதைகள் தெரிவிக்கின்றன.16

வர்ம சிகிச்சையின் வரலாறு

தமிழ்க் கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக் கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் (அந்தப்புரக் காவலர்) மரபினரும் சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும். கி.பி. 1247ஆம் ஆண்டைச் சேர்ந்த நெல்லை மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் கல்வெட்டில்17 பரசுராமன் என்ற பெயருடைய அங்க வைஜ்யருக்குரியதாக அவ்வூரிலிருந்த ஜீவித நிலத்தைத் (பணிக்கான ஊதியமாக வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்வதற்குரிய விளைநிலத்தை) திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் புதிதாக எழுப்பப்பட்ட ஆளுடைய பிள்ளையார் (திருஞான சம்பந்தர்) சந்நிதிக்குரிய தேவதான நிலமாகப் பாண்டிய மன்னர் மாற்றி வழங்கினார் என்ற செய்தி குறிப்பிடப் படுகிறது. இவ்வாறு நிலவுரிமையை மாற்றி வழங்கியதன்மூலம் அங்கவைஜ்யரின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது என நாம் புரிந்து கொள்ளலாம். இதற்குச் சமகாலத்தில் அங்கக்காரர்களாக இருந்த சான்றோர் குலப் போர்வீரர்களுக்குக் குறிப்பிடத்தக்க சுயாட்சியதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், நாம் முன்னர்க் குறிப்பிட்ட கல்வெட்டு ஆதாரங்களின் வழி அனுமானிக்க முடிகிறது. ஓரிரு கல்வெட்டு ஆதாரங்களை மட்டும் அடிப்படையாக வைத்து வரலாற்றின் இயக்கப் போக்கினைக் கணிப்பது சரியாகாது எனினும் பின்வரும் கருதுகோள்களை முன்மொழியலாம் எனக் கருதுகிறேன்:

1) கேரள மாநிலத்தைப் போலன்றி, தென்பாண்டி நாட்டில் வர்ம சிகிச்சை முறையின் பிரிவான எலும்பு முறிவு மூட்டுப் பிறழ்வு ஆகியவற்றைக் குணப்படுத்தும் பாரம்பரியச் சிகிச்சை முறையில் சான்றோர் குலத்தவர் மட்டுமே நிபுணத்துவம் உடையோராக உள்ளனர். அங்கப் போர் முறை மட்டுமின்றி, அங்க வைத்தியமும் பாண்டிய அரச குல ஆசான்களாக இருந்த சான்றோர் குலப் பிரிவினர்க்கு மட்டுமே பரிச்சயமான அறிவியலாக இருந்து வந்ததால்தான் பாண்டிய அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் போர்க்கலைப் பயிற்சியைப் புறக்கணித்தோ அல்லது அதில் குறைவாகக் கவனம் செலுத்தியோ, அங்க வைத்தியத்தில் சிறப்பாகக் கவனம் செலுத்தத் தொடங்கிக் காலப்போக்கில் அதனையே தங்கள் பரம்பரைத் தொழிலாக அவர்கள் ஏற்றனர் போலும். தமிழகத்தின் வட பகுதியில், எலும்பு முறிவு போன்றவற்றுக்குரிய நுட்பமான பாரம்பரியச் சிகிச்சை முறைகளில் தேர்ந்தவர்களாகத் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட சத்திரிய ராஜூக்களே உள்ளனர் என்ற உண்மையும், வர்ம சிகிச்சை என்பது போர்க்கலைப் பயிற்சியின் ஓர் அங்கமாகவே கற்கப்பட்டு வந்துள்ளது என்பதற்குச் சான்றாக உள்ளது.

2) திருவிதாங்கோடு சமஸ்தானத்தைப் பொருத்தவரை சான்றோர் குலப் பிரிவினரான கள்ளச் சான்றார்கள் கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு அரசர்க்குக் களரிப் பயிற்சி கற்பிக்கும் ஆசான்களாக இருந்துள்ளனர். அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் (கி.பி. 1729 - 57) படைத்தலைவராக இருந்த பிராந்தன் சாணான் எனப்பட்ட அனந்தபத்மநாபன்18 திருவாட்டாறு நரசிங்க மடத்துக்கே தலைமை வகித்தவர் எனக் கருதப்படுகிறது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்த அளவில் வர்மாணி ஆசான்களுள் பெரும்பாலோர் சான்றோர் குலத்தவராக இருப்பதில் வியப்பில்லை.

3) தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் கள்ளர் - மறவர் சமூகத்தவருடனான தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக (போர்க்காலங்களில் மட்டும் போரில் ஈடுபடும் குடியானவர்கள்) நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.

எவ்வாறிருப்பினும் மனித உடலின் வன்மத்தானங்களைத் தாக்கும் போர்க்கலையும் வன்மத்தானங்களில் உரிய அளவில் அழுத்தம் அளித்து நோய்களையும் ஊறுகளையும் குணப்படுத்தும் சிகிச்சை முறையும், ‘அங்கை வெட்டு'க் கலையின் அங்கங்களாகவே தோன்றி வளர்ந்துவந்துள்ளன என்பதும் தமிழ் மொழி வழங்கிய பகுதிகளில்தான் இப்போர்க்கலை உருவாகியிருக்க வேண்டும் என்பதும் ஐயத்துக்கிடமற்ற உண்மைகளாகும்.

அடிக்குறிப்புகள்

1. ‘"எதிரிலிசோழனங்(க)காற சேனாபதி சுந்தரபாண்டிய மாராயன்'' கி.பி. 1223ஆம் ஆண்டுக் கல்வெட்டு (தொடர் எண் 96/2004 - கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி 1, பதிப்பு: தொல்லியல் துறை, சென்னை-8, 2006) ‘அங்கக்களரி புலித்தண்டை' கி.பி. 1477ஆம் ஆண்டுக் கல்வெட்டு. (Inscriptions of Pudukkottai State No. 715.)

2. ஐவர் ராசாக்கள் கதை, வரிகள் 1341, 1498, பதிப்பாசிரியர்: நா. வானமாமலை, மதுரைப் பல்கலைக்கழகம், 1974.

3. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் - பக். 184, பதிப்பு: உ.வே.சா. நூலகம், சென்னை - 90, 1980.

4. p.170, South India and SriLanka, K.K. Pillai, University of Madras, 1975. சிலப்பதிகாரத்தில் (14:108) இடம்பெற்றுள்ள, "வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும் துகிலும்'' என்ற வரியிலுள்ள "துகில்'' என்பதன் வகைகளுள் ‘தேவாங்கு' என்ற வகையினை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (பக். 378, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் - உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1976.) இது வேலைப்பாடமைந்த துகில்வகை எனப் பிங்கல நிகண்டால் அறியலாம். அங்கப் போர்க் காட்சிகள் வரையப்பட்ட பட்டுத் துணியே தேவாங்கு எனப்பட்டது என்றும், இத்தகைய நெசவு வேலை செய்தோர் தேவாங்கர் என அழைக்கப்பட்டனர் என்றும் நாம் ஊகிக்கலாம்.

5. கி.பி. 1076ஆம் ஆண்டுக்குரிய சமுத்திராபட்டி வீரதாவளம் கல்வெட்டு, வரி 15, பார்க்க: பக். 7, ஆவணம், இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், ஏப்ரல் 1992.

6. பக். 148-9, ‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்', சீ. இராமச்சந்திரன், பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, 2004.

7. பக்.238-40, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் - கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991.

8. “மக்கள் நாயனான பராக்ரம பாண்டிய மாவலி வாணாத ராயன் கட்டின பாவனங்(க) காறன் சந்தி” - கி.பி. 1258க்குரிய திருக்கோளக்குடிக் கல்வெட்டு (Annual Report on Epigraphy - 58/1916- Directorate of Epigraphy, A.S.I- Mysore. மேற்கண்ட ஆய்வறிக்கையில் இக்கல்வெட்டைப் பற்றிய ஆங்கிலக் குறிப்பு மட்டுமே உள்ளது.)

9. பக். 10, வரலாறு - இதழ் 3, இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி - 17, ஆகஸ்ட் 1994.

10. சிலை என இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுவது, மக்கள் வழக்கில் ‘கல்லெடுப்பு' எனப்படும் மரணச் சடங்குடன் தொடர்புடையதாகும். சுடலைமாடசாமி போன்ற மாட வழிபாட்டு மரபின் வேர்களை மதுரைக்குரிய பழம் பெயரான ‘நான்மாடக் கூட'லில் காணலாம். சுடலைமாடம் என்பதே நெய்தல் தலைவனான வருணன் வழிபாட்டுடனும், பிணத்தை வைக்கிற மேடை எனப் பொருள்படும் ‘சிதா' (சிதை) என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றிய பெளத்த ‘சைத்ய' மரபுடனும் தொடர்புடையதாகும். மதுரைக்காஞ்சியில் (வரி. 447) இடம்பெற்றுள்ள ‘கடவுட் பள்ளி' பெளத்தப் பள்ளி என்றே உரையாசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர் என்பது இந்த இடத்தில் தொடர்புபடுத்திச் சிந்தித்தற்குரியது. (பார்க்க: பக். 390, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா நூலகப் பதிப்பு, சென்னை - 90, 1974.)

11. Annual Report on Epigraphy, B.356 to B 373 /1950.

12. p. 242, Thoothukudi District Gazetteer, Vol.I, Editor: R. Sinnakkani, Published by Department of Archives and Historical Research, Chennai - 8, 2007.

13. ‘"படை வெட்டும் மகாபலி வம்சத்தவரான அகம்படிய மறவர்'' எனப் பொருள்படும். "நாயன்மாராய உள் அகம்படிக்கார்'' என்ற குறிப்பு மலையாள இலக்கியங்களில் இடம்பெறுகிறது. (நாயகர் என்பதன் மரூஉவான நாயர் என்பது சாதிப்பட்டமே; சாதியின் பெயரன்று.)

14. ‘உடையார் கதை' பதிப்பு : தி. நடராசன், சோதிமணி, மதுரை.

15. South India and SriLanka, K.K. Pillai, University of Madras, 1975.

16. பழங்குடித் தன்மை கொண்ட இத்தகைய நீதி நிர்வாக முறை, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில்கூடப் பின்பற்றப்பட்டுள்ளது. வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள மாநில ஆளுநராக இருந்த காலகட்டத்தில், அவருக்கும் வேறோர் அதிகாரிக்குமிடையே வழக்கு ஏற்பட்டபோது, நேரடிச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் அதில் வென்றதால் அவரே நீதிவான் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. (பார்க்க: "நெய்க்குடத்தில் கைவிடுதல்” மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் - பாகம் 1, பதிப்பு: மே.து. ராசுகுமார், ப. சரவணன். மக்கள் வெளியீடு, சென்னை – 2001.)

17. A.R.E. 595/1916.

18. குழித்துறை (குமரி மாவட்டம்) முன்சீப் நீதிமன்றத்தில் O.S. 408/1961 என்ற எண்ணிடப்பட்ட வழக்குத் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டு, உண்மையான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கி.பி. 1748ஆம் ஆண்டுக்குரிய செப்பேடு, குமரிக் கவிஞர் கே.பி. வரதராசன் (தச்சன்விளை) வசம் உள்ளது. நேரில் பார்வையிடப்பட்டது.

(தமிழினி, மே 2008 இதழில் வெளிவந்த கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.)

sr@sishri.org


SISHRI Home