You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
தமிழரைத் தேடி - 4
பிரகஸ்பதி (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
சங்க கால தமிழ்ச் சமூகம் கடைப்பிடித்த அறநெறிகள்:

(1) தமிழ்ச் சமூக அந்தணர்

தமிழிலக்கண நூல்கள் கூறும் அந்தணர்க்குரிய அறுதொழில்களாவன:

“ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்
ஈதல், ஏற்றல் என்றிவை ஆறும்
ஆதி காலத்து அந்தணர் அறுதொழில்” - (திவாகரம் - 2365)

வட இந்திய சாத்திரங்களும், அந்தணர்க்குரிய தொழில்களாக இவற்றையே குறிப்பிடுகின்றன. படை பயிற்றுவித்தல் அந்தணர்க்குரிய தொழிலாக எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனால், வடஇந்திய சமூகத்தில் எழுதப்பட்ட சாத்திரங்களுக்குப் புறம்பாக, அந்தணர்கள் படைத்தளபதிகளாகவும் போர்க் கலை ஆசான்களாகவும் இருந்துள்ளதைக் காணமுடிகிறது. புஷ்யமித்திரன் என்ற பிராமணன், படைத்தளபதியாக இருந்து பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சுங்க வம்சத்தைத் தோற்றுவித்தான். பிராமணரான துரோணர், முழுநேர போர்ப் பயிற்சி ஆசானாக இருந்து கொண்டு போரிலும் கலந்து கொண்டதை மகாபாரதம் சித்தரிக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் அந்தணர்கள் இவ்வாறு மரபு மீறி அனுமதிக்கப்படாத தொழில்களை மேற்கொள்ள வில்லை. போர்க் கலை ஆசான்களாக அரச குலத்தைச் சேர்ந்தவரே இருந்தனரேயன்றி, அந்தணர் ஒருபோதும் அத்தொழிலைச் செய்யவில்லை. இன்றும் கூட தமிழ்ச் சமூகப் பிராமணர்கள், வடஇந்தியப் பிராமணரைவிட ஆசாரங்களையும், சாத்திரங்களையும் சிறப்பாகக் கடைப்பிடித்து ஒழுகியதாக வடஇந்திய ஆய்வாளரே குறிப்பிடுகின்றனர்.

(2) தமிழ் வைசியரும், வேளாளரும்

“வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” - (தொல். பொருள்-623)

தமிழ் மரபு, வைசியனுக்கு எண்வகைத் தானியங்களைப் பயிரிட அனுமதி கொடுத்தாலும் அவர்களுக்கு வணிக வாழ்க்கையே சிறந்தது எனக் கூறுகின்றது. தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையான வைசியர், வணிகத்தையே மேற்கொண்டிருந்தனர். ஆனால், சத்திரியரும் கூட உழவுத் தொழில் மேற்கொண்டு வந்த வடஇந்தியாவில், வைசியர்கள் பெரும்பாலும் கால்நடை வளர்த்தலையும், விவசாயத்தையுமே மேற்கொண்டிருந்தனர். இதிலிருந்து தமிழ்ச் சமூக வைசிய வருணம் நன்கு வளர்ந்த நிலையில் இருந்ததை அறிய முடிகிறது.

திவாகரம் கூறும் வேளாளரின் அறுதொழில்களாவன:

“வேளாளர் அறுதொழில், உழவு, பசுக்காவல்
(தெள்ளிதின்) வாணிகம், குயிலுவம், காருகவினை,
இருபிறப்பாளருக்கு ஏவல் செயல்”

வட இந்தியாவில், ஆரம்பக் காலங்களில் உழவுத் தொழிலும் கால்நடை வளர்த்தலும் சூத்திரருக்கு அனுமதிக்கப்படவில்லை. பண்பாட்டு வளர்ச்சிப் போக்கில், குப்தர் காலத்தில், சூத்திரர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கியதாக ஆர்.எஸ். சர்மா கூறுகிறார். தொல்காப்பியத்தின் காலத்தை குப்தர் காலத்திற்குச் சற்றே முற்பட்டதாக நிச்சயித்துக் கூறலாம். தொல்காப்பியம், வேளாண் மாந்தருக்கு உழுதுண்ணும் வாழ்க்கை உண்டெனத் தெளிவாகவே கூறுகிறது. அடிமை மாந்தரை உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்துவது வளர்ந்த பொருளியல் வாழ்க்கையைக் கொண்ட நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் இயல்பான செயலாகும். சங்க காலத்தின் தொடக்கத்திலேயே தமிழ்ச் சமூகத்தில் வேளாளரை உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தியப் போக்கினைக் காணமுடிகிறது. சம காலத்தில் வட இந்தியச் சமூகம் வீரயுக அரசியல் அமைப்பிலிருந்து அதிகம் முன்னேறியிருக்க வில்லை. எனவே அங்கு, உழவுத் தொழில் பெரும்பாலும் வைசியராலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்வகையில் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தைவிட சமகாலத்திய வட இந்தியச் சமூகம் பண்பாட்டு வளர்ச்சியில் சற்றே பின் தங்கியிருந்தது எனலாம்.

(3) தமிழ் அரச குலத்தின் தனித்தன்மைகள்

மனு தர்மம் கூறும் அரசருக்குரிய கடமைகளாவன:

(1) பிரஜாபரிபாலனம் (2) வேள்விகள் புரிவது (3) வேத பாராயணம் செய்விப்பது (4) ஈகை (5) விஷய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது.

தமிழ் மரபில் அரசருக்குரிய அறுதொழில்களாவன:

“அரசர் அறுவகைச் செய்தொழில், ஓதல்,
விசையம் (போர் புரிதல்), வேட்டல், ஈதல், பார்புரத்தல்
படைக்கலம் கற்றல் ஆகும்.” - (திவாகரம் : 2366)

வட இந்தியச் சட்டங்களை விட, தமிழ் மரபுசார் சட்டங்கள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். ஏர் பிடித்து உழுதல் போன்ற உடலுழைப்பு தொடர்பான வேலைகளை அரச வருணத்தினர் மேற்கொள்ளக்கூடாது என்பது வட இந்திய தர்மமாகும். புத்தர் பிறந்த லிச்சாவிக் குடியை க்ஷத்திரியக் குடி என அழைக்கின்றனர். இருப்பினும், அக்குடியைச் சேர்ந்த புத்தரின் தந்தை ஏர்பிடித்து உழுததற்கானக் குறிப்புகள் உள்ளன. சூரிய குல க்ஷத்திரியனான ஜனகனும் கூட, ஏர் பிடித்து உழுத பொழுதுதான் சீதையைக் கண்டெடுத்தான். தர்ம நூல்களின்படி, இத்தகைய உடல் உழைப்பை வைசியரோ, சூத்திரரோ தான் செய்யமுடியும். இவ்வாறு வட இந்திய க்ஷத்திரிய வருணத்தவர் பல இடங்களில் தர்மசாத்திர விதிகளை மீறியுள்ளதைக் காண்கிறோம்.

ஆனால், தமிழ்ச் சமூகத்தில் வேந்தர் குடியினர் அரசருக்குரிய தொழிலை விடுத்து ஏர்பிடித்து உழுதல் போன்ற மரபு மீறிய செயல்களை ஒருபோதும் செய்ததாகத் தெரியவில்லை. தமிழ் மரபுப்படி புத்தனையும், ஜனகனையும் உயர்குடி வேளாளர் அல்லது பூவைசியர் பிரிவில் சேர்க்கலாம். வடஇந்தியாவில் கைகேய அரச வம்சத்தை க்ஷத்திரியர் குடியாகக் கூறுகின்றனர். சங்க காலத்திற்குப் பின் இக்குடியினர் தமிழகத்திற்குள் குடியேறிய பொழுது, இங்கு ஏயர் குடி என்று அழைக்கப்பட்டனர். இந்த ஏயர் குடியைச் சேர்ந்த கலிக்காம நாயனாரை தமிழ் மரபில் நாலாஞ்சாதியாகிய வேளாளரில் சேர்த்துவிட்டதைப் பெரியபுராணத்தின் மூலம் அறிய முடிகிறது. விவசாயத்தை மேற்கொண்டு வந்த வட இந்திய க்ஷத்திரிய வருணத்தைத் தயவு தாட்சண்யமின்றி நாலாஞ்சாதி ஆக்கிவிட்டது தமிழ் மரபின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

(4) அரசனின் மூத்தமகன் வாரிசாகும் சட்டம்

பட்டத்து அரசியின் மூத்த மகனை வாரிசாக்க வேண்டும் என்பது வட இந்திய மற்றும் உலகின் பிற நிலப்பிரபுத்துவ அரசகுலங்கள் வகுத்து வைத்திருந்த சட்டமாகும். ஐரோப்பியச் சமூகத்தில், மகன் - தந்தை மற்றும் அண்ணன் - தம்பி ஆகியோருக்கிடையில் நடந்த வாரிசுரிமைப் போர்களும், அவற்றின் விளைவாக நடந்த அரண்மனைச் சதிகளும் கணக்கில் அடங்காது. வட இந்திய அரச வருணமும் இச்சட்டத்தை பல சந்தர்ப்பங்களில் மீறியுள்ளதைக் காணலாம். வட இந்தியா தொடர்பான சமூகங்களிலேயே சிறப்பு வாய்ந்த புராண கால ஆரியரில், குரு குலத்தவருக்குள் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரே, மகாபாரதப் போராகும். இராமாயணத்தில் கூட மரபு மீறிய வகையில் இளையவனான பரதனுக்கு முடிசூட்ட முயற்சி செய்கிறாள் கைகேயி. பிற்காலத்திலும் கூட வடஇந்திய அரச குலங்கள் பல வாரிசுரிமைப் பிரச்சனைகளைச் சந்தித்துள்ளன. இவ்வாறு கட்டுப்பாடற்று இருந்ததாலேயே வட இந்திய அரச வம்சங்களில் எதுவுமே, 300 ஆண்டுளுக்கும் மேல் நீடித்து ஆட்சி புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த மகன் வாரிசாகும் மரபைத் தமிழக வேந்தர் குடியினர் எந்த இடத்திலும் மீறியதில்லை. சங்க கால வேந்தர்கள், பல ஊரன்களின் தலைவராக விளங்கினர். மேலாண்மை வேந்தனும், ஊரனும் ஒரே குலத்தைச் (கோத்திரத்தை) சேர்ந்தோராவர். மூத்த வாரிசுகளே ஊரனாகவும், வேந்தனாகவும் பட்டமேற்றனர். ஊரின் தலைவனாகிய ஊரனின் மூத்த மகன், தந்தையின் மறைவிற்குப்பின் வாரிசானான். மேலாண்மை வேந்தனின் மூத்த மகன் வேந்தனின் வாரிசானான். இவ்வாறு மூத்த வாரிசுகள் பட்டமேற்கும் மரபைத் தமிழக வேந்தர் குடியின் வரலாற்றில் இளைய வாரிசுகள் எதிர்த்ததாகக் காணமுடியாது.

பொருளியல் தளத்தில் வளர்ச்சியடைந்த ஊரன்கள் வேந்தனுக்குரிய பட்டத்தைத் தரித்துக் கொள்ளும் மரபும் இருந்தது. உதாரணமாக, கொற்கையூரன், கொற்கைப் பாண்டியன் என்றும் தென்காசியூரன், தென்காசிப் பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டனர். இது போலவே ஒரே சமயத்தில் பல சோழர்களையும் பல சேரர்களையும் சங்க காலத்தில் காணமுடிகின்றது. இவ்வாறு, வேந்தருக்குரிய பட்டத்தை ஊரன்கள் தரிப்பதில் தெளிவான விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவை எழுதப்படாத மரபாகவே இருந்தன. ஊரன்களுக்கு இத்தகைய தனி ஆட்சிக்குரிய உரிமைகள் இருந்தாலும், ஒரு ஊரனாவது, தலைமையூரனாகிய வேந்தனின் பதவிக்குப் போட்டியாளனாக மாறியதாகத் தமிழக வேந்தர் குடியின் 1500 ஆண்டுகளுக்கும் அதிகமான நீண்ட நெடிய வரலாற்றில் காணமுடியவில்லை.

ஆனால், 300 ஆண்டுகள் கூட தொடர்ந்து ஆட்சி புரிந்திராத, உலகின் அனைத்து அரச வம்சங்களின் வரலாற்றிலும், மகன் தந்தையைச் சிறைப் பிடித்து ஆட்சியைப் பிடிப்பது, மகனை, தந்தை போட்டியாளராக நினைத்துக் கொன்றுவிடுவது, வாரிசுரிமைக்குரிய மூத்தவனை இளையவன் சூழச்சியால் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவது போன்ற கண்ணியமும் கட்டுப்பாடும் அற்ற செயல்கள் பலவற்றைக் காணலாம். தனது சொந்த மகனான இளவரசனை, அரசன் எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்று வடஇந்திய அறிஞர்களின் எச்சரிக்கை, தமிழர்களுக்கு மிகவும் வியப்பாகவே தோன்றும்.

பரத்வாஜரின் கருத்தின்படி இளவரசன் என்பவன் தன்னை உருவாக்கியவர்களையே விழுங்கிவிடும் நண்டு போன்றவன். எனவே, அவனது பிறப்புத் தொட்டே அரசன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். அவனால் துன்பம் நேருமென்று அறியும் நிலையில் அவனைக் கொல்வதும் கூட தவறாகாது என்கிறார் அவர்.

இளவரசனை வளர்ப்பது ஒரு விரியன் பாம்பைப் போற்றி வளர்ப்பதற்கு ஒப்பாகும் என்று பராசரருடைய சீடர்களின் கருத்து. இளவரசன் தனது தந்தையைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர நினைப்பான். எனவே அவனை எல்லைப் புறத்துக்கு அனுப்பிவிடுவது சிறந்தது என்பார்கள் அவர்கள்.

இளவரசனின் இராஜ விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். உதாரணமாக, இரகசிய ஒற்றர்கள் மூலம் இளவரசனுக்கு வேட்டையாடுதலிலும், சூதாட்டத்திலும், மது மற்றும் மாதுவின் மேல் ஆசையைத் தூண்டுவதுடன் இராஜ்யத்தைப் பறித்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்க வேண்டும். இத்தகைய சோதனைகளில் இளவரசன் வெற்றி பெற வேண்டும் என்று சில ஆசிரியர்கள் கூறுவர்.

வட இந்திய அரசர் குல வரலாற்றில், இளவரசர்கள் தங்களின் சொந்த தந்தையைச் சூழ்ச்சி செய்து ஆட்சிக் கட்டிலில் இருந்து மாற்றிய நிகழ்வுகள் அடிக்கடி நடந்துள்ளதாலேயே மேற்கூறியவாறு அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய மரபு மீறிய செயல்களைத் தமிழ் வேந்தர் குடியின் வரலாற்றில் காணமுடியாது. கோப்பெருஞ்சோழனின் மகன்கள், தந்தைக்கு எதிராகப் போர் தொடுத்து வந்த நிகழ்ச்சியை விதிவிலக்காகக் கூறலாம். இதிலும் கூட, கோப்பெருஞ்சோழன் புலவர்களின் அறிவுரையை ஏற்று, மரபு மீறி மகன்களுடன் போரிடுவதைத் தவிர்த்து வடக்கிருந்து உயிர் நீத்தது வரலாறு. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ, தந்தைக்குப்பின் அரியணை ஏறுவான் என சோதிடர் கூறினர். இவ்வாறு நிகழ்வது மரபு மீறிய செயலாகும் என்று கருதிய இளங்கோ, துறவறம் பூண்டார் என்பது தமிழ் வரலாற்றுக் கதை. இந்நிகழ்ச்சி கதையாகவே சொல்லப்பட்டாலும், கதைகளில் கூட மரபை மீறுவதற்குத் தமிழ்ச் சமூகத்தினருக்கு ஒப்பவில்லை என்பதையே காட்டுகின்றது.

இத்தகைய கட்டுக்கோப்பான போர்க் குடியாக வேந்தர்குடியினர் விளங்கியதால்தான், உலகின் எந்த ஒரு அரச வம்சமும் சாதித்தில்லாதவாறு, பாண்டியன் 2000 ஆண்டுகளும், சோழர் 1700 ஆண்டுகளும், சேரர் 1200 ஆண்டுகளும் தொடர்ச்சியாக அரசாள முடிந்தது (களப்பிறர் காலம் தவிர்த்து) இவ்வளவு நீண்ட நெடிய கால கட்டத்தில் எந்த ஒரு வேந்தனின் சார்பாகவும் ஒரேயொரு பெண் அரசி கூட முடி சூட்டிக் கொண்டதில்லை என்பதும் தமிழ் வேந்தர்குடியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவற்றின் மூலம் அரசனுக்குப்பின் மூத்த மகனே அரசனாகும் வாரிசாவான் என்ற மரபைத் தமிழ்ச் சமூகம் மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்ததை அறிய முடிகிறது.

(5) அறப்போர் முறை

அறப்போர் முறையில் சிறந்தவர்களாக புராணகால ஆரியரைக் கூறுவர். மகாபாரதப் போரின் மரபுப்படி சூரியன் மறைந்தவுடன் போரை நிறுத்திவிட வேண்டும். அறப்போர் முறையில் அனைத்து அரச வம்சங்களும் இம்மரபைக் கடைப்பிடித்தன. மிகச் சிறப்பான தருமப்படி செயல்பட வேண்டுமானால், போர் நிகழப்போகும் நேரத்தையும் இடத்தையும் முன்னரே அறிவிக்க வேண்டும் என அர்த்த சாஸ்திரம் கூறுகின்றது. இத்தகையப் போரை நேரடிப் போர் எனக் கூறும் சாணக்கியன், நேரடிப் போர் பயனளிக்காத நிலையில் மறைமுகத் தாக்குதலே சிறந்தது எனவும் கூறுகின்றான்.

பாலைவனங்கள், குறுகிய பாதைகள், புதர்கள், மலைகள், சேறு, பள்ளத்தாக்கு, சமமற்ற நிலப்பரப்புகள், படகுகள், பனி மற்றும் இரவு நேரங்கள் ஆகியவை மறைந்திருந்து தாக்குவதற்கு சரியான சந்தர்ப்பங்கள் என அர்த்த சாஸ்திரம் கூறுகின்றது. எதிரியின் நாற்படைகளையும், தன்னுடையதாக்கிக் கொண்டு, இரவில் எதிரியை அவமானம் செய்ய வேண்டும் என்று மனு தர்மமும் கூறுகிறது. இவ்வாறு மறைந்திருந்து இரவில் தாக்கும் முறையை அறப்போர் முறையில் சேர்க்க முடியாது. இது மறப்போர் முறை அல்லது அசுரப்போர் முறையாகும்.

சங்கால தமிழ் வேந்தர் குடியினர் எந்த நேரத்திலும் அறப்போர் முறைக்குப் புறம்பாகப் போரிட்டதில்லை. தமிழரின் அறப்போர் தன்மையை சில சங்க இலக்கிய குறிப்புகள் மூலம்அறியலாம்.

“பரவை வேல் தானைப் பகலஞ்சு வேனா
இரவே எறியென்றாய் என்னை - விரைவிரைந்து
வேந்தே நீ ஆயினாய் அன்றிப் புகுவதோ
போந் தென்னைச் சொல்லிய நா” - (தகடூர் யாத்திரை - பா - 14)

இப்பாடலில், பகற்பொழுதில் கடல்போன்று விரிந்த வேற்படை வீரர்களைத் தாக்குவதற்கு அஞ்சுவேன் என்றெண்ணி, இரவில் தாக்குமாறு கட்டளையிட்டாய். இவ்வாறு கூறிய நீ, எனது வேந்தனாய் இருப்பதால் உன்னை ஒன்றும் செய்யாமல் விடுகின்றேன். இல்லாவிடில் அவ்வாறு சொன்ன நாக்கு மீண்டும் வாய்க்குள் போயிருக்காது (அறுத்து எறிந்திருப்பேன்) என்று போர் வீரன் சினந்து கூறுகின்றான். அறப்போர் முறைக்குப் புறம்பாக ஆணையிட்ட வேந்தனைப் பார்த்து சீறும் வீரனின் உக்கிரத்திலிருந்தே தமிழகப் போர்க் குடியினர், அறப்போர் முறைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் விளங்கும்.

சங்க கால தமிழ்ச் சமூகத்திலும் சமகால வட இந்தியாவிலும், காலாள்படை, குதிரைப்படை, யானைப்படை மற்றும் தேர்ப்படை என நான்கு வகைப் படைகள் உண்டு. இதில் கீழ்நிலைப் படைவீரர்கள் மேல்நிலையில் உள்ள படைவீரர்களைத் தாக்கக் கூடாது என்பதும், மேல்நிலைப் படைவீரர்கள் கீழ்நிலையில் உள்ள படைவீரர்களைத் தாக்கலாம் என்பதும் அறப்போர் முறையில் மரபாகக் கடைப்பிடிக்கப்படும் விதியாகும். உதாரணமாக, காலாள் படைவீரன், எதிரியின் காலாட்படை வீரர்களையே தாக்கிப் போரிடலாம். குதிரைப்படை வீரன், எதிரியின் குதிரைப்படை வீரனுடன் போரிட்டுக் கொண்டே, காலாட்படை வீரர்களையும் தாக்கலாம். எனினும் சங்ககால அறப்போர் குடிகளான சான்றோர் கீழ்நிலையிலுள்ள போர் வீரர்களைத் தாக்குவதை இழிவாகக் கருதுவர்.

“காலாளாய்க் காலாள் எறியான், களிற்றெழுத்தின்
மேலாள் எறியான் மிக நாணக் - காளை
கருத்தினதே என்ற களிறெறியான் அம்ம
தருக்கினானே சான்றோர் மகன்” -(தகடூர் யாத்திரை - பாடல் 18)

இப்பாடலில் பெருமிதம் மிக்க சான்றோன் மகன் காலாட்படை வீரனை வெட்டி வீழ்த்தமாட்டான், களிற்றையும் எறியமாட்டான், களிற்றின் மேன் அமர்ந்தவனுடனும் போரிட மாட்டாள், தேரில் இருந்து போர்புரியும் தகுதியுடைய தலைவனை மட்டுமே தனக்குச் சமமான எதிரியாகக் கருதி எதிர் நோக்கியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது. சான்றோர் தேரில் வந்து போர் புரியக்கூடிய அரசர்குலப் போர் வீரராவர்.

“தேர் தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல் கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே” - (புறம் 63-பரி 56)

போர்களத்திற்கு, தேரில் வந்த சான்றோரெல்லாம் மாய்ந்தனர் என இப்பாடல் கூறுகின்றது. எனவே சான்றோர்கள் தேரில் சென்று போரிடக்கூடிய உயர்குடிப் போர் வீரர் எனப் புலனாகிறது. சங்க காலத்தில் சான்றோர் என்ற சொல் அரசகுலப் போர்வீரரைக் குறித்து நின்றது என்கிறார் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. இவற்றிலிருந்து தகடூர் யாத்திரை காட்டும் செருக்குமிக்கச் சான்றோர் மகனை அரசகுலப் போர்வீரன் என்று அறியலாம்.

போர்க் காலத்தில், பார்ப்பார் பசு, பெண், வயோதிகர் போன்றோர் தாக்குதலிலிருந்து விலக்கப்படுவது அறப்போர்முறையில் அமைந்த மரபாகும். இதனைத் தமிழ்ச் சமூகம் சிறப்பாகக் கடைப்பிடித்ததைக் கீழ்க்கண்ட பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியிடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறா அ தீரும்
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்” -(புறம்: 9 - வரி 1-6)

பசுவும் பசுவின் இயல்பை ஒத்த பார்ப்பனரும், பெண்டிரும், நோயுற்றவரும், இறந்து தென்திசை வாழும் முன்னோர்க்குச் செய்யும் சடங்குகளைச் செய்வதற்குப் புதல்வர்களைப் பெறாதவரும் கேட்பீராக; யாம் எம் அம்புகளை விரைவு பட செலுத்திப் போரிட உள்ளோம். நீவிர் யாவரும் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள், என அறநெறியைக் கூறும் மன உறுதியை உடையவன் எம் வேந்தன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என போர் வீரன் பாடுவதாக இப்பாடல் உள்ளது. கீழ்க்கண்ட சீவகசிந்தாமணி பாடல் வரிகளும் இம்மரபை வலியுறுத்துவதாக உள்ளது.

“நன்பால் பசுவே, துறந்தார், பெண்டிர், பாலர்
பார்ப்பார், என்பாரை ஒம்பேன் எனின்” - (சீவக சிந்தாமணி-4.4.3)

மேலே கூறப்பட்டவர்களை ஓம்புவது, போர்க் காலத்திற்கும் பொருந்தும்.

(6) வேட்டையும், அரச வருணமும்

பண்பட்ட அரச நீதியானது அரசன் தனது ஆட்சிக்குட்பட்ட அனைத்து மக்களினங்கள் மற்றும் பிராணிகளின் உயிருக்கும், உடமைக்கும் தொழில் உரிமைக்கும் பாதுகாவலனாவான். விலங்குகளையோ, பறவைகளையோ குடிகாவல் செய்கின்ற அரச வருணத்தினர் வேட்டையாடுவது அறமன்று. வட இந்தியாவில் க்ஷத்திரியர் எனக் கூறிக்கொள்ளும் அரசகுடியினர் காட்டுக்கு வேட்டையாடச் சென்றதாகப் பல குறிப்புகள் உள்ளன. அதே வேளையில், தமிழ் வேந்தர் குடியினர் வேட்டைக்குச் சென்றதாகக் குறிப்பு எதுவுமில்லை. மாறாக வேந்தர் குடியினர், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்ததை, சில வரலாற்றுக் கதைகள் மூலம் அறியலாம்.

இரைக்காக, பருந்தினால் துரத்தப்பட்டப் புறா ஒன்று, சோழன் சிபி சக்ரவர்த்தியிடம் அடைக்கலம் புகுகின்றது. புறாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தனது இரை தேடும் உரிமையைப் பறிப்பதாக அமையும் என பருந்து வாதாடுகின்றது. பருந்தின் கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்த சிபி, அதற்கு இரையாகத் தனது தசையைப் புறாவின் எடைக்கு நிகராக அறுத்துக் கொடுக்கின்றான் என்பது கதை. இக்கதை அடைக்கலமான ஜீவராசிகளுக்குக் கூட அரசன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதுடன், அவற்றின் இரைதேடும் உரிமைகளில் அரசன் தலையிடக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றது.

மேலும் ஒரு வரலாற்றுக் கதையில், மனுநீதிச் சோழனின் மகன் தேர்ச் சக்கரத்தை ஏற்றி, கன்றுக் குட்டி ஒன்றினை கொன்று விடுகின்றான். கன்றினை இழந்த பசு, சோழனிடம் நீதிகேட்டு முறையிடுகின்றது. மகனின் செயலை தவறு என அங்கீகரித்த சோழன் தன் தேர் சக்கரத்தை ஏற்றி மகனை கொன்று தண்டனை அளிக்கிறான். இவ்வரலாற்றுக் கதையும், அரசனின் குடிகாவல், ஜீவராசிகளுக்கும் உண்டு என்பதை உணர்த்துவதாக உள்ளது.

சங்க காலத்தில் அரசகுலத்தவர் பங்கு பெறும் அவை, சான்றோர் அவை எனப்பட்டது. முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் பொழுது சான்றோர் அவை கூடும். பழமொழி நானூறு 188-ம் பாடல் “தெற்ற நவைப் படுத்தன்மைத் தாயினும் சான்றோர் அவைபடின் சாகாது பாம்பு” எனக் கூறுகின்றது. அதாவது கொடிய விஷத் தன்மையுடைய பாம்பும் சான்றோர் அவைக்குள் புகுந்து விட்டால், அது அடிபட்டுச் சாகாதென்பது இதன் பொருளாகும். கலித்தொகை 140 ஆம் பாடல்,

“பாம்பும் அவைபடின் உய்யுமாம்”

எனக் கூறுவதும் இப்பொருளையே கொண்டுள்ளது. ஜீவராசிகளிலேயே பார்த்தவுடன் அடிக்கத் தூண்டுவது பாம்புதான். அப்பாம்பு கூட அவை புகுந்தால் சான்றோர் (அரச குலத்தவர்) அதனை அடித்துக் கொல்ல அனுமதிக்க மாட்டார்கள். மாறாக அது ஏதாவது வழக்கு கொண்டு வந்திருக்கலாம் என்றெண்ணி விட்டுவிடுவர்.

“மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர்” (மணிமேகலை - 7: 10-12)

என்ற மணிமேகலையின் வரி தமிழர் அறநெறியைத் தெளிவாக உணர்த்துகிறது.

அனைத்து ஜீவராசிகளுக்கும் அரசன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வட இந்திய புராணங்கள் மரபாகக் கூறுகின்ற போதிலும் அவ்வரச வருணத்தினர் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியைப் புராணக் கதைகளிலும், வரலாற்று காலத்திலும் அடிக்கடியும் காணமுடிகின்றது. பத்ம புராணம் இஷ்வாகு மன்னன் தன் மனைவியுடன் வேட்டைக்குச் சென்றதைக் குறிப்பிடுகின்றது. பகீரதனின் வழித் தோன்றலான லௌதாசன் என்ற அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றதை விஷ்ணுபுராணம் கூறுகின்றது. நடைமுறையில் வேட்டைக்கு செல்லாத உலகின் ஒரே அரச குடியாக தமிழக வேந்தர் குடியே திகழ்ந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. போதிக்கும் நீதிகளைக் கடைப்பிடிப்பதில் தமிழக வேந்தர் குடிக்கு நிகரான வேறொரு அரசர் குடியை அடையாளம் காட்டமுடியாது என்பதே உண்மை.

brahaspathy@sishri.org
(c) Author. To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form.