இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
சித்தம் கலங்கிய பொதிகைச் சித்தர்
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
(ஜூலை 2008 ‘உயிர் எழுத்து', பொதிகைச் சித்தரின் வினைக்கு எதிர்வினை.)

சித்தர்களுக்கு இடம், பொருள், ஏவலெல்லாம் கிடையாது. உணவு அறையில் அமர்ந்து கழிப்பதும், கழிப்பறையில் அமர்ந்து உண்பதும் அவர்களுக்கு ஒன்றுதான் என்பதற்கு உதாரணம் சமீபத்திய பொதிகைச் சித்தர். ஓர் ஆய்வுக் கட்டுரை என்ற வகையில், ‘மாடலிங்' எப்படித் தோன்றியது, அதற்கு முன்னுதாரணம் எது, என்பது குறித்தே முதன்மையாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ள, அதனிடையில் போகிறப்போக்கில் தேவதாசிகள் முறை எப்படித் தோன்றியது, எப்போது தோன்றியது என்றெல்லாம் சொல்லிச் செல்லும் ஒரு கட்டுரைதான் “மறையும் மறையவர்கள்” நூலில் உள்ள ‘மாடல் குல மாணிக்கங்கள்'. திரு. இராமச்சந்திரன், தேவதாசி முறை உயர்ந்தது, அது நீடிக்கவேண்டும், அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், அது தமிழ்ப் பண்பாடு என்றெல்லாம் கொடிபிடிக்கவும் இல்லை, வக்காலத்துப் போடவும் இல்லை. வரலாற்றை உள்ளபடியே எடுத்துச் சொல்லி இருக்கிறார். அவர் சொல்லி இருப்பதில் திரித்தலோ மறைத்தலோ இருந்தால் அது கண்டன விமர்சனத்திற்குரியது. அப்படி இருந்தால், அதைக் கண்டுபிடிக்க பொதிகைச் சித்தருக்குத்தான் பிபிலியோதெரபி தேவை. ஓர் ஆய்வுக் கட்டுரையில் இவர் விரும்புகிறபடி, அல்லது ஆ.சிவசுப்பிரமணியன் சொன்னபடி, ‘அது அடிமைத்தனம்' என்று எழுதியே ஆகவேண்டும் என்ற விதியெதுவும் இல்லை. பொதிகைச் சித்தர், தான் சொல்லுகிற ஆ.சியிடமே திரு. இராமச்சந்திரனின் கட்டுரையை எடுத்துச் சென்று, படித்து அதில் தேவதாசி முறை போற்றப்பட்டிருக்கிறது என்று ‘கட்டுடைக்க'ச் சொல்லலாம்; எனினும் ஆ.சி அதற்குத் துணியமாட்டார்; ஏனெனில் ‘மல்லாந்து படுத்து எச்சில் உமிவதை' சித்தங்கலங்கிய பொதிகைச் சித்தன் வேண்டுமானால் செய்யலாமேயன்றி ஆ.சி. செய்யமாட்டார்.

தேவதாசிகள், தேவர்களுக்கு தாசிகள். தேவர்கள் என்போர் அன்றைய அரசர்களேயன்றி பிராமணர்களல்ல. மூவேந்தர்களின் அந்தப்புரங்களில் காமக் கிழத்திகளின் கூட்டம் நிரம்பியிருந்தது. அந்தக் காமக் கிழத்திகளின் வாரிசுகள்தான் நாங்களே சேர, சோழ, பாண்டியர்களின் வாரிசுகள் என்று இன்றைக்கு ‘வரலாறு' எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பொதிகைச் சித்தர் படிக்க வேண்டியது, பிராமணர்/ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி. அல்லாத ‘தமிழ்ப் புலவர்கள்' - ஆரியப் புலவர்கள் அல்ல - எழுதியது “விறலி விடு தூது”; அவற்றைப் படித்த பின்னர் தேவதாசிகளைப் பற்றி அவர் என்ன கருதுவாறோ தெரியாது. இதுவும் பொதிகைச் சித்தருக்குத் தேவைப்படும் பிபிலியோதெரபியின் ஒரு பகுதிதான்.

சுமேரியப் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உள்ள நெருக்கமான உறவை வரலாற்றாளர்கள் பலரும் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர். சுமேரியக் கோயில்களில் தேவதாசிகள் இருந்தனர் என்பதும், அங்கே எந்தப் பிராமணர் இருந்தனர் என்பதும் பிபிலியோதெரபி எடுத்துக்கொண்டு பொதிகைச் சித்தர் நிரூபிக்கட்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது தொடர்பாக, திரு. எஸ். இராமச்சந்திரன் தனது நிலையைத் தெளிவாகச் சொல்கிறார், “அரச வம்சங்களின் அரசியல் உள்நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அல்லது வலுப்படுத்தப்பட்ட மத நிறுவனங்கள் இன்றைய ஜனநாயக அரசியலின் வீச்சுக்கு மட்டும் உட்படாமல் விலகிப்போவதென்பது இயலாத ஒன்றாகும்”; “அரசியல் அடித்தளத்தின் மீது பிரம்மாண்டமாக எழுந்துநிற்கும் மத நிறுவனங்கள் அனைத்துமே மாறுகின்ற அரசியல் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதென்பது தவிர்க்க முடியாதது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்”.

மேலும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான அவரது முன்வைப்பு இதோ: “சமய நிறுவனங்கள் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அல்லது கட்டளையில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ அதேயளவுக்கு, அத்தகைய கட்டளையைப் பிறப்பிப்பவர்கள் தங்களுடைய நாயகத்தை நிலைநாட்ட விரும்பும் ஜனங்களின் சரியான பிரதிநிதிகள்தாமா என்பதையும், அத்தகைய கட்டளையில் நடைமுறைச் சாத்தியம் உள்ள அம்சங்கள் எவையெவை, நடைமுறைச் சாத்தியம் இல்லாத அம்சங்களை என்ன செய்வது போன்ற பிரச்சனைகளைப் பரிசீலிக்கின்ற தார்மீக உரிமை, உயர் தகுதி [-சொல்லின் நேர்ப் பொருளில் அல்லாது, துறைசார் அறிவுகொண்ட என்று பின்வரும் வாக்கியம் தெளிவாக்கும் -ப்ரவாஹன் -] பெற்ற ஒரு குழுவினருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலும் நியாயம் உள்ளது. . . . தமிழ் உணர்வும் சமயப்பற்றும் கொண்ட மடாலயத் தலைவர்களும், அடியார்களின் பிரதிநிதிகளும், ஆன்மீக ஈடுபாடும் சமயத் துறைப் பயிற்சியும் கொண்ட நிறுவனங்களின் தலைவர்களும் அடங்கிய உயர்மட்டக் குழுவினருக்கு இந்த அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்படலாம்” என்று பொறுப்பான ஆலோசனையையும் முன்வைத்திருக்கிறாரே தவிர, சித்தங்கலங்கிய பொதிகைச் சித்தருக்குத் தோன்றியதைப் போல குறுகிய எண்ணத்துடன் செய்யவில்லை. கழிவறையில் அமர்ந்து உணவு உண்பது போல சித்தருக்கு எதையும் எப்படியும் செய்யலாம். ஆனால் சமூகத்திற்கு சில ஒழுங்குகள் தேவைப்படுகிறது; என்ன செய்ய?

சொற்பொருள் ஆய்வு என்பது பெரிய விஷயம். அதுபற்றி பொதிகைச் சித்தருக்குத் தேவைப்படுவது வாழ்நாள் பிபிலியோதெரபி. கற்பு என்ற சொல் பிறந்தது எப்படி, அதன் பொருள் மாறி வந்தது எப்படி என்றெல்லாம் தெரியாமல், ‘ஓருறுப்புச் சிந்தனையாளராக' இருக்கின்றவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதன் பாலியல் பொருள்தான் என்பதற்கும் பொதிகைச் சித்தரே எடுத்துக்காட்டு. ஆ.சி. சொல்லிவிட்டால் எல்லாம் வேதம், உண்மையைத் தவிர அதில் வேறொன்றுமில்லை. மற்றவர்கள் சொன்னால் அவற்றில் பொய்யைத் தவிர வேறில்லை; சதி நோக்கம் தவிர வேறில்லை என்பது பொதிகைச் சித்தரின் கோட்பாடு. ஆ.சி. சொன்னது போலவே, சீர்காழி திருமுலைப்பால் விழாவில் ஞானசம்மந்தர் சமணப் பெண்களை என்ன செய்யச் சொன்னர் என்று கேட்டு, (உடல் மொழி பாவனையில்) ஓருறுப்புச் சிந்தனையாளரின் வேலையை எவர் செய்திருந்தாலும் அது ஓர் அபத்தம் என்பதுதான் இராமச்சந்திரனின் கட்டுரையின் பொருள். அதில் பார்ப்பனர்களுக்கு விதிவிலக்கு. வேளாளர்களுக்கு விதி என்றெல்லாம் கிடையாது. அப்படிச் செய்திருந்தால் அதைச் செய்து வந்தவர்கள் யார்? பிராமணர்களா அல்லது வேறேதும் சாதியாரா? கடந்த 200 ஆண்டுகளாக தமிழக அரசில் செல்வாக்கு செலுத்தி வந்திருப்பவர்கள் யார்? அவர்கள் ஏன் இதைக் கண்டுகொள்ளவில்லை?

திருமந்திரச் சொல்படி ‘பித்தேறும் மூடர் பிராமணர்' என்றே கொள்வோம். மூடர்கள் சொன்னதற்காக, ‘அறிவுஜீவி'களான மற்றவர்கள் ஏன் செய்தார்கள்? கம்ப ராமாயணத்தில், அண்ணாதுரைக்குக் கம்பரசம் என்ற 41 பாடல்கள் மட்டுமே தெரிந்ததைப் போல, ஓருறுப்புச் சிந்தனையாளரான சித்தங்கலங்கிய பொதிகைச் சித்தருக்கு ‘சௌந்தர்ய லஹரி', பாடல் பெற்ற ஸ்தலங்கள், பலான ‘உயிர்மை' முலைக் கட்டுரை போன்றவற்றில் இருந்த ‘பலான, பலான மேட்டர்' மட்டுமே தெரிந்தது வியப்புக்குரியதல்ல.

எனவே, முதலில் பிபிலியோதெரபி தேவைப்படுவது பொதிகைச் சித்தருக்குத்தான். அதற்குப் பிறகும் இராமச்சந்திரனின் கட்டுரைகளில் ‘பலானது' மட்டுமே அவருக்குத் தெரிகிறதென்றால் அதற்குப் பெயர்தான் ”வேளாள சாதி வெறி.”

பி.கு.: சித்தர் சொன்னது போலவே இதன் நகல் ஒன்று ‘வார்த்தை' இதழுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. விஜயபாரதத்துடன் எனக்கு உடன்பாடு இன்மையால் வார்த்தைக்கு மட்டும் அனுப்பப்படுகிறது.

pravaahan@sishri.org


SISHRI Home