|
இந்த வரலாற்று ஆய்வுக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பது அதிர்ச்சியூட்டிக் கவனத்தை ஈர்ப்பதற்காக அன்று. இராஜ ராஜ சோழன் சீனாவுக்கு அனுப்பிய தூதுக் குழுவினர் வசம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் அக்கடிதத்தில் இத்தகைய ஒரு குறிப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி வரலாற்று ஆய்வாளர்களிடையே உலவுகிறது. அது குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. Institute of Southeast Asian studies, Singapore என்ற நிறுவனத்தால் 2009ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டில் அந்நூலின் இந்தியப் பதிப்பு வெளியாயிற்று. 2019ஆம் ஆண்டில் அந்நூலின் மறுஅச்சாக்கம் வெளியிடப்பட்டது. ஹெர்மன் குல்கே, கே.கேசவபனி, விஜய் சகுஜா ஆகிய அறிஞர்களால் தொகுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதி அது. Nagapattinam to Suvarnadwipa Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia என்ற தலைப்பில் அமைந்த அத்தொகுப்பு நூல் புதுடெல்லியில் உள்ள Manohar Publishers & Distributors–க்காக அஜெய் குமார் ஜெயின் என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பின்னிணைப்பாக (Appendix-II) Chinese Texts Describing or Referring to the Chola Kingdom as Zhu-nian என்ற தலைப்பின் கீழ், நொபொரு கராஷிமா, தான்சென் சென் ஆகியோரால் சீன மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சீன ஆவணங்களின் வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 332ஆம் எண்ணிடப்பட்ட நீட்டோலையில் எழுதப்பட்ட சீன மொழி ஆவணம் ஆகும். இதன் தலைப்பு ஆங்கிலத்தில் Examination of the Barbarians in the Four Quarters என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கி.பி.1014ஆம் ஆண்டில் அதாவது இராஜ ராஜ சோழனின் இறுதி ஆட்சியாண்டில், சீன நாட்டுடன் வணிக உறவினை ஏற்படுத்திக் கொள்வதற்காகச் சோழ நாட்டிலிருந்து ஒரு தூதுக் குழு புறப்பட்டுச் சென்றது. அந்தத் தூதுக்குழுவிடம் இராஜ ராஜ சோழன் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பியதாகவும், அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் மேற்கோளாக காட்டப்படுவதாகவும் குறிப்பிடுகிற ஓர் ஆவணம் கி.பி.1345ஆம் ஆண்டில் சீன மொழியில் பதிவு செய்யப்பட்டது. அந்த ஆவணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே மேற்குறித்த நூலின் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. சீன வரலாற்றில் சோங்கு (Song) அரச வம்சம் என்பது கி.பி. 960ஆம் ஆண்டிலிருந்து 1279ஆம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி புரிந்தது. யுவான் வம்சத்தைச் சேர்ந்த குப்ளை கானால் சோங்கு வம்சம் வீழ்த்தப்பட்டது. இந்த யுவான் வம்சத்தில் 1345ஆம் ஆண்டில் ஆட்சி புரிந்த தோகான் தெமூர் என்ற அரசனின் ஆணைப்படி தோக்தோகா (துவோதுவோ) என்ற நிர்வாகியால் சோங்கு அரச வம்ச வரலாறு ‘சோங்ஷி’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. அப்போது தான் இராஜ ராஜ சோழனின் கடிதத்தில் இருந்த வாசகங்கள் என்ற பெயரில் பின்வரும் வாசகங்கள் (மூலத்தில் சீன மொழிக்குரிய சித்திர எழுத்துகளில்) எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. Your subject, I, Luo-Cha-luo-zha, wish to say that a merchant boarding a small ship came to our country, from whom we have learned that now the Song dynasty is ruling the Empire and Your Majesty succeeded the two emperors who founded the dynasty. You venerated both Heaven and Earth performing appropriate rituals in two places. Your virtue was heard even by Heaven, who gave grace to you accordingly. I expected to meet the occasion and was favoured to hear the auspicious words. I wish to extend my sincerity in serving Your Majesty like the sun and to express my great joy in beholding Your Majesty in audience. I humbly hear that Your Majesty’s rule extends without limit and people serve you submissively wherever they live. I humbly contemplate your achievement which surpasses that of all rulers in the past, your rule being righteous. The merit of your administration covers Heaven and Earth, and the force of your power gives discipline to the universe. Your divine power has never killed, your civility has enlightened, your high virtue has been extended to your subjects, and you worshipped Heaven with submissive mind. Your goodness protected even the feeble reed and your trust extended to the fish in the deep water. Therefore, Heaven appreciated your splendid achievements and as predicted in the letter from Heaven, you have accomplished what was never done in the past and are keeping the base for the established rule of the Empire. I presume to consider that as your subject I am a small being like a mosquito and a humble creature like a papier-mache dog, having been living for generations in a barbarous town. My country is far from Chinese civilization, having not been enlightened and having sent no tribute to your court. Now I quietly listen to the song praising the virtue of Your Majesty, which is sung even in the frontiers. Regrettably I am too advanced in age to proceed to your court personally to offer tribute. In addition I live in a remote country separated by the vast sea and there are many obstacles on the way rather difficult to overcome. Therefore, I am now observing from after the gate of Your Majesty’s palace with the strength of my sincerity. To present the products of my country is like ants and crickets being attracted by mutton, and to pay tribute and serve Your Majesty is like sun-flower and giant hyssop being drawn towards the sun. With respect I send a mission of 52 persons to your court to offer the products of our country as tribute, consisting of a robe and a cap both decorated with pearls, 21,100 liang of pearls, sixty elephant tusks, and sixty jin of frankincense. ஆங்கிலத்தில் அமைந்த மேற்குறித்த வாசகங்கள் நொபொரு கராஷிமா அவர்களால் சித்திர எழுத்துகளில் அமைந்த சீன மொழி வாசகங்களின் மொழிபெயர்ப்பு ஆகும். கி.பி.1345ஆம் ஆண்டில் சீன அரசின் ஆவணப்பதிவு அதிகாரி எழுதிவைத்த குறிப்புகள் இவை என்பதை மறந்துவிட வேண்டாம். சோங்கு வம்ச அரசை வீழ்த்தி யுவான் வம்சத்து ஆட்சியை நிறுவியவர் குப்ளை கான் என்று கண்டோம். கி.பி.1271இல் ஆட்சிக்கு வந்த குப்ளை கான் 8 ஆண்டுகளுக்குள் முழு சீன நாட்டுக்கும் அதிபதி ஆனார். இவரது முழுப் பெயர் குப்ளை செக்சென் கான் என்பதாகும். கி.பி. 1281ஆம் ஆண்டில் குவான் சௌ (Quanzhou) என்ற சீன நாட்டுத் துறைமுக நகரில் இம்மன்னனின் ஆணைப்படி தவச்சக்கரவர்த்தி சம்பந்தப் பெருமாள் என்ற தமிழரால் இம்மன்னனின் அரசப்பட்டமான ‘கான்’ என்ற பெயரில் திருக்கானீச்சுரம் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டது. (இச்செய்தியைக் குறிப்பிடுகிற தமிழ்க்கல்வெட்டு பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டதாகும்.) இராஜராஜ சோழனின் காலத்தில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழ் வணிகர்களின் ஊடாட்டம் சீனாவில் இருந்துள்ளது என்பதற்கும் தமிழர் குடியிருப்பு ஒன்று அங்கு இருந்துள்ளது என்பதற்கும் இக்கோயில் குறித்த செய்தி சான்றாக அமைகிறது. யுவான் வம்சத்து மன்னன் உக்காந்துகான் எனப்பட்ட தோகான் தெமூர் ஆட்சிக்காலத்தில் தான் கி.பி. 1345ஆம் ஆண்டில் சோங்ஷி என்ற தலைப்பில் அமைந்த சோங்கு வம்ச வரலாறு தொகுக்கப்பட்டது. அந்தக் காலகட்டம், தமிழகத்தில் நிலவிய சோழர் ஆட்சி குறித்த நினைவுகளே மக்கள் மனதில் இருந்து அகன்று கொண்டிருந்த காலகட்டமாகும். கி.பி. 1278ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜேந்திர சோழன் வாரிசின்றி இறந்து போன பின்னர் சோழ வம்ச ஆட்சியின் புகழ் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போயிற்று. 1281ஆம் ஆண்டில், சீன நாட்டுக் குவான் சௌ நகரில் வாழ்ந்த தமிழ் வணிகர்களுக்கும் சோழ அரசுடன் உணர்வு பூர்வமான இணக்கம் நீடித்திருக்க வாய்ப்பில்லை. எனவே கி.பி.1345ஆம் ஆண்டில் சோங்கு வம்ச வரலாறு தொகுக்கப்படும் போது மறைந்து விட்ட சோழ வம்சத்தைப் பற்றிய நினைவுகள் பெருமைபடத்தக்க தொனியில் பதிவு செய்யப்படாமல் இழிவுத் தொனியுடன் புனையப்பட்டு இணைக்கப்பட்டன. என நாம் புரிந்துகொள்ளலாம். சோழர் வரலாற்று ஆய்வின் தந்தை எனக் குறிப்பிடத்தக்க கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் 1935ஆம் ஆண்டில் The Colas என்ற தலைப்பில் பிற்காலச் சோழர் வரலாற்று ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலின் 10ஆவது அத்தியாயம் Rajendra (A.D. 1012-1044) என்ற தலைப்பில் அமைந்தது. இந்த அத்தியாயத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சௌ ஜூ குவா என்ற சீனர் எழுதிய ‘சூ ஃபான் சி’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரலாற்று விவரங்களை நீலகண்ட சாஸ்திரி அவர்கள் பதிவு செய்துள்ளார். மேற்குறித்த சூ ஃபான் சி என்ற நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்நூலின் ஆசிரியர் பற்றிய வரலாறும் 1911ஆம் ஆண்டில் Chau Ju-kua: His Work On The Chinese And Arab Trade In The Twelfth And Thirteenth Centuries, Entitled Chu-fan-chï என்ற தலைப்பில் W.W.Rockhill, F.Hirth என்பவர்களால் எழுதி வெளியிடப்பட்டன. அந்த ஆங்கில நூலில் உள்ள விவரங்களின் அடிப்படையில், இராஜ ராஜ சோழன் சீன நாட்டிற்கு ஒரு தூதுக்குழுவினை அனுப்பிய நிகழ்வின் பின்னணியாக இருந்த வரலாற்றுச் சூழல் பற்றி அறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார் : At the end of the tenth century A.D., the Chinese government awoke to the value of the foreign trade which was just then reviving after a long interruption owing to the troubles which broke out in china in the later part of ninth century and the object of increasing this trade a mission was sent abroad by the Emperor with credentials under the imperial seal and provisions of gold and piece goods to induce “the foreign traders of the south sea and those who went to foreign lands beyond the sea to trade” to come to china. மிகுந்த நிதானத்துடனும் ஆய்வு மனப்பான்மையுடனும் நீலகண்ட சாஸ்திரி அக்காலகட்ட வரலாற்றினை எழுதியுள்ளார். 10ஆம் நூற்றாண்டில் சீன நாடு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. கி.பி. 907 முதல் 960 வரை ஐந்து அரச வம்சங்களைச் சேர்ந்த பத்து அரசர்கள் அடுத்தடுத்து சீனாவை ஆண்டார்கள். சீனாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. கி.பி. 960இல் சோங்கு வம்சம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தான் சிதறிக்கிடந்த சீனப் பிரதேசங்களை ஒன்றுபடுத்தும் முயற்சி தொடங்கிற்று. கி.பி. 979-80 ஆண்டளவில் தாம் ஒன்றுபட்ட சீன நாடு உருவாயிற்று என்ற சீன வரலாற்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் சீன நாட்டின் பொருளாதார நிலை ஒழுங்கு படத்தொடங்கிற்று. இதன் விளைவாகவே உலகில் உள்ள பல வெளிநாட்டு அரசுகளுக்குச் சீனாவில் இருந்து தூதுக்குழுக்கள் பரிசுப்பொருள்களுடன் அனுப்பப்பட்டு வணிக உறவினை மீட்டமைக்கின்ற முயற்சி தொடங்கிற்று. ஸ்ரீவிஜய அரசன் சூளாமணி வர்மன் சோழப் பேரரசன் இராஜ ராஜனுடன் நட்பு கொண்டாடினார் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. இவர் சீன நாட்டுடனும் வணிக உறவு கொண்டிருந்தார். சரியாகச் சொல்வதானால் சூளாமணி வர்மன் மூலமாகவே சீன நாட்டின் சோங்கு வம்ச அரசன் ஜென்ஜோங்கு (Zhenzong) சோழ நாட்டுடன் வணிக உறவு கொண்டிருந்திருக்க வேண்டும். சீன அரசன் ஜென்ஜோங்கு கி.பி. 997ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1022ஆம் ஆண்டு வரை சீனாவை ஆண்டார். அவருடைய ஆட்சிக் காலம் சுபமாகத் தொடங்கினாலும் கி.பி. 1005ஆம் ஆண்டில் லியோ வம்ச அரசுடன் நேர்ந்த போரில் தோற்றதன் விளைவாக அவ்வம்சத்திற்குக் கட்டுப்பட்டு ஆள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தம் சன்யுவான் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் படி ஆண்டு தோறும் ஒரு லட்சம் அவுன்சு வெள்ளியும், இரண்டு லட்சம் போல்ட் (ஒரு போல்ட் என்பது 1200செ.மீ. நீளமும், 56செ.மீ. அகலும் கொண்ட அளவு) பட்டு நூலும் கப்பமாக ஜென்ஜோங்கு லியோ வம்ச அரசுக்கு வழங்க வேண்டும். இந்தப் பின்னணியில் வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால், மாமன்னன் இராஜ ராஜன் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள வாசகங்கள் உண்மையான ஆவணக் குறிப்பாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது புரியும். தனது நாட்டின் சிதைந்திருந்த பொருளாதார நிலையை மீட்டெடுப்பதற்காகத் தவித்துக்கொண்டிருந்த ஒர் அரசு வணிக மேம்பாட்டிற்காக வெளிநாட்டிக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்புகிறது; அதனை ஏற்று அந்த வெளிநாட்டு மன்னன் வணிக உறவுகளுக்காக தன் நாட்டின் சார்பில் ஒரு தூதுக்குழுவை அனுப்புகிறான் என்றால் இது ஒரு பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையிலான வணிக உறவாகவே இதனைக் கருத முடியும். அப்படி இருக்கையில் இந்நிகழ்வு நடந்து 330ஆண்டுகள் கழிந்த பின்னர், சோழ அரசின் வரலாறே ஏடுகளில் இடம்பெற்ற பழங்கதையாக மாறிவிட்ட பிறகு சீன அரசின் நிர்வாகி ஒருவர் தமது நாட்டு அரச வம்சங்களை உயர்த்தியும், வெகு தொலைவில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்த மறைந்துவிட்ட அரச வம்சத்தின் முன்னோர் ஒருவரைப் பற்றி இழிவான தொனியிலும் எழுதியிருப்பதை உண்மையான ஆவணமாகச் சொல்லுக்கு சொல் ஏற்றுக்கொள்ளுவது இயலாதது மட்டுமன்று ஆய்வு நெறிமுறைகளுக்கே முரணானதும் ஆகும். எங்கோ உள்ள சீனன் ஒருவனிடம் தாள் பணிந்து தம்முடைய நாட்டின் மக்களையே இழிவுபடுத்துகிற வகையில் தமது தலைநகரம் காட்டுமிராண்டிகள் வாழ்கிற ஓர் ஊர் என்று இராஜ ராஜ சோழன் எழுதியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. சீனர்கள் உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் என்றும் நாகரிகத்தின் உச்சியில் அரியணையிட்டு அமர்ந்திருப்பவர்கள் என்றும் பிறர் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றும் சித்திரிக்க முனையும் சீனப் பொய்மைக்கு, வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு எடுத்துக்காட்டாகவே மேற்குறித்த சீன ஆவணத்தை கருத இயலும். (முகநூலில் எழுதியது - ஜூலை 6, 2020) sr@sishri.org |