இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும்
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இல்லை; பிராமணர், சூத்திரர் என்ற இரண்டுதான் என்றொரு பச்சைப் பொய் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தின் எழுதப்பட்ட வரலாறு சங்க இலக்கியங்களுடன் தொடங்குகிறது. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் (புறம் 183) என்பதில் தொடங்கி நாற்பால் குறித்துப் பதிவுகளற்ற தமிழ் இலக்கியங்கள் அரிதே.

சங்க இலக்கியங்களின் இறுதியாகச் சொல்லப்படும் தொல்காப்பியம் நாற்பால் குறித்து விரிவான பதிவைச் செய்துள்ளது. அதையடுத்த காப்பிய காலத்திற்குரிய சிலப்பதிகாரம் (6:164, 14:183, 212,), மணிமேகலை (5:97,6:56), சீவக சிந்தாமணி போன்றவையும் நாற்பால் குறித்துப் பதிவுசெய்துள்ளன. பிறகு வந்த புறப்பொருள் வெண்பாமாலை (8:10)யும் நாற்பால் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. 9-10ஆம் நூற்றாண்டைய சேந்தன் திவாகரம் தொடங்கி நாற்பால் குறித்து விளக்கந் தராத நிகண்டுகளே இல்லை. இது பற்றி ‘தமிழகத்தில் நான்கு வர்ணம் ஒரு சிறப்புப் பார்வை' (காண்க: திண்ணை இணைய இதழ்) எனும் கட்டுரையில் ஆய்வாளர் பிரகஸ்பதி விரிவாக எழுதியுள்ளார்.

சம்ஸ்கிருத இலக்கியங்களைப் பொருத்தவரை, வேதங்களில், ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலமாக வருகின்ற புருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் அது இடைச் செருகல் என்பது அறிஞர்களின் கருத்து. அதையடுத்து வந்த பௌத்த நூல்களும், பின்னர் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் பலவும் நான்கு வர்ணம் பற்றி குறிப்பிடுகின்றன. கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குரிய கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் நான்கு வர்ணங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. இவற்றிலெல்லாம் நான்கு வர்ணம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மிகப் பரவலாக அறியப்பட்டிருப்பது மனு தர்ம சாஸ்திரமே. ஆனால், நடப்பிலுள்ள மனு தர்ம சாஸ்திரப் பிரதி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் முழுமையடைந்தது என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. உண்மையில், கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குரிய அர்த்த சாஸ்திரம், தனது முதனூல்களாக மூன்று தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பிடுகிறது. அதில் மனு தர்மமும் ஒன்று. கெடுவாய்ப்பாக, அந்த மனு தர்மப் பிரதி எதுவும் கிடைக்காததனால் அதற்கும் நடப்பிலுள்ள பிற்காலப் பிரதிக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை நாம் அறிய முடியவில்லை.

தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள நாற்பால் குறித்த பகுதிகள் பிற்கால இடைச் செருகல் என்போர் உண்டு. அல்லது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திலேயே பார்ப்பன ஆதிக்கம் தொடங்கிவிட்டது; தொல்காப்பியரே ஒரு வட இந்தியப் பார்ப்பனர், அவர் தங்களின் வர்ணத்தை இதில் புகுத்திவிட்டார் என்று சொல்லுவோரும் உண்டு. அது இடைச் செருகல் அல்ல; ஆனால் இந்த நாற்பாலும் வடக்கத்திய நான்கு வர்ணமும் வேறுபட்டவை என்று சொல்வோரும் உண்டு.

தொல்காப்பியர் காலத்திலேயே வர்ணம் புகுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம்; சங்க காலத்தில்தான் தமிழர் வரலாறு தொடங்குகிறது. இந்த இடத்தில் தொல்லியல் சான்றுகளை இணைத்துப் பார்ப்பது அவசியம். தமிழ் வரலாறு என்று சொல்லப்படும் மூவேந்தர் வரலாறு, ‘பெருங்கற் கல்லறை / இரும்பு யுக எச்சங்கள்' என்ற தொல்லியல் எச்சங்களுடன் தொடர்புடையது. அப்படியானால், தமிழ் வரலாற்றின் தொடக்கம் முதலே நான்கு வர்ணங்கள் இருந்துள்ளன. மேலும் அதைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே எனில் அவர்களும் தமிழ் வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே இருக்கின்றனர். எனவே, அவர்களை ‘புதிய வந்தேறிகளாக'ச் சொல்ல முடியாது. இதற்கு, “நீயே வடபால் முனிவன் தடவினுட் டோன்றி” (புறம் 201:8-12) என்ற இருங்கோவேளிரைப் பற்றிய புறநாநூற்றுப் பாடல் பிறிதோர் சான்று.

அடுத்து, நாற்பால் குறித்த விவரங்கள் ஓர் இடைச் செருகல் என்பது. அதை இடைச் செருகல் என்று சொல்வோர், சில அத்தியாயங்களும், சில பொருள் தொடர்பான விஷயங்களும் திடும் திடுமென முடிந்து முந்தைய விஷயம் தொடர்ச்சியாகப் பேசப்படுவதாகச் சொல்கின்றனர். இத்தகைய காரணங் கற்பிப்போர், தொல்காப்பியம் கூறுகின்ற நூல் எழுதும் உத்திகளையும், அத்தகைய உத்திகள் தொல்காப்பியத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சரியாக உணர்ந்திடவில்லை. உதாரணமாகச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ள 'மாட்டு' எனும் உத்தி,

“அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்று பொருள் முடிப்ப தந்தனர் உணர்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்பது.


இதன்படி பார்ப்போமேயானால், தொடர்ச்சியின்மை என்பது ஒரு பொருட்டே இல்லை; அவற்றை ஒருங்குகூட்டிப் பொருள்கொள்வது மரபே.

கி.பி. 12, 13, 14ஆம் நூற்றாண்டுகளில் தொல்காப்பியத்திற்கு உரையெழுதியோர் தம் மனப்போக்கில் உரையெழுதி, அதில் நான்கு வர்ணங்களைப் புகுத்தியதாகவும் ஒரு விமர்சனம் உண்டு. ஓர் இலக்கியத்திற்கு அது எழுதப்பட்ட சில பல நூறாண்டுகள் கழித்து உரை வகுக்கையில் சமகால சமூக நிலவரங்களின் தாக்கம் ஏற்பட்டுவிடுவது இயல்பே. அவ்வகையில், உரையாசிரியர்களின் காலத்தில் சமூகத்தில் நான்கு வர்ணங்கள் தெளிவாகவே இருந்தமைக்கு அரசர்களின் மெய்க் கீர்த்தியே (‘மனு நெறி தழைப்ப' அரசாண்டதாக சோழ அரசர்கள் பலரின் மெய்க்கீர்த்திகளில் சொல்லப்பட்டுள்ளது) நல்ல சான்று. இதற்கும் அப்பால், இவ்வுரையாசிரியர்களுக்கும் முன்னதாகவே முதல் தமிழ் நிகண்டு (சேந்தன் திவாகரம், 8-9 ஆம் நூற்றாண்டு) இயற்றப்பட்டது. அது மிகத் தெளிவாக நான்கு வர்ணங்களின் தொழில்களையும் பட்டியலிட்டுள்ளது. அதையடுத்துப் புறப்பொருள் வெண்பாமாலையும் மிகத் தெளிவாகவே நான்கு வர்ணங்களின் தொழில்களைப் பட்டியலிட்டுள்ளது. மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்கள், கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் அனைத்தும் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன என்பது கவனத்திற்குரியது. இத்துடன், தொல்காப்பியம் குறிப்பிடும் உத்திகளில் சமூக நிலவரங்களில் இருந்து விஷயங்களை உணர்ந்து உரை வகுப்பதும் ஒன்று.

இதற்கு ஆதரவாக உள்ள தொல்காப்பியர் குறிப்பிடும் உத்தி, “வாராததனான் வந்தது உணர்தல்” என்பதாகும். ‘வந்தது கொண்டு வாராதது உணர்தல்' என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்; ஆனால், ‘வாராததில் இருந்து வந்ததை உணர்தல்' என்பது சற்றே கடினமானது. உண்மையில் இதன் பொருள், சமூக நிலவரங்களில் இருந்து அதை உய்த்துணர்தல் என்பதுதான்.

சங்க கால சமூகத்தில் ஐந்திணைகள் இருந்தமை சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியத்தின் வாயிலாகத் தெரிகிறது. நான்கு திணைகளுக்குப் பெயரும் இலக்கணமும் வகுத்துச் சொல்லும் தொல்காப்பியம் நடுவண் திணையாகிய பாலைக்குரிய பொழுதைச் சொல்லியதே தவிர நிலத்தைக் குறிப்பிடவே இல்லை. எனினும் அடுத்து வந்த புலவர்கள், அதைத் தெளிவாகவே உணர்ந்து சொல்லியுள்ளனர். ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமயிற் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும்' என்பது இளங்கோவடிகள் வகுக்கின்ற இலக்கணம். இது தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விவரங்களுக்குப் பொருந்தி உள்ளது. ‘வாராததனால் வந்தது உணர்தல்' என்ற உத்தியைப் பயன்படுத்தி இது தருவிக்கப்பட்டுள்ளது. இதே உத்தியைப் பயன்படுத்தி, எதார்த்த நிலவரங்களைக் கொண்டு நாற்பாலுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் எழுதியுள்ளனரேயன்றி அவர்கள் தம்மனப்போக்கில் செய்திடவில்லை. எனினும் நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல அவர்களின் சமகால சமூக நிலவரங்கள், உரைகளில் தாக்கம் செலுத்தியிருப்பதையும் நாம் கணக்கில் கொள்வது அவசியம். எவ்வாறிருப்பினும், நாற்பாலும் நான்கு வர்ணமும் ஒப்பிடத்தக்கனவே. எனவே முதற்கண் அர்த்த சாஸ்திரம் கூறும் நான்கு வர்ணங்களின் இலக்கணங்களைப் பார்ப்போம்.

அர்த்த சாஸ்திரம் கூறும் வருண தருமங்களாவன:-

அந்தணர்க்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் இவ்வாறுமாம்.

அரசர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், உயிர்களைக் காத்தல் என்னும் இவ்வைந்துமாம்.

வணிகர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம் இவ்வாறுமாம்.

சூத்திரர்க்கு இருபிறப்பாளர் மூவர்க்கும் பணிபுரிதல், உழவு, பசுக்காவல், வாணிகம், காருகன்மம் (நெசவுத் தொழில்), குசீலவகன்மம் (குயிலுவம் என்பது தமிழ் வழக்கு - ஆடல் பாடல் முதலியன: குசீலவர்கள் - கூத்தாடுவோர்) என்னும் இவையாம். (முதல் அதிகரணம், முதற் பிரகரணம், மூன்றாம் அத்தியாயம்)


தொல்காப்பியம் கூறுவன:

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்”
(பொருளதிகாரம், புறத்திணையியல் 20)

“ஈண்டு உரையாளர் எல்லோரும் அந்தணர்க்குக் கூறிய அறுதொழில்களில் வேறுபட்டிலர். பதிற்றுப்பத்து என்னும் நூலில் “ஓதல், வேட்டல், அவை பிறர்ச்செய்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு புரிந்தொழுகும் அந்தணர் என்று கூறப்பட்டிருத்தலும் காண்க” என்கிறார் மு.கதிரேசச் செட்டியார் ( கௌடலீயம், அர்த்த சாஸ்திர உரை, அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு 1979). இதில் தமிழ் நூலார்க்கும் வட நூலார்க்கும் எவ்வித மாறுபாடுமில்லை என்பதுடன் நாம் முற்றிலும் உடன்படுகிறோம். எனினும், அந்தணர் வேறு பிராமணர் வேறு என்று சொல்வோரும் உண்டு. அத்தகையோர், ‘அந்தணர் என்ப அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்' என்ற குறளைச் சுட்டுவர். நாம் “மறப்பினும் ஓத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” எனும் குறளைச் சுட்டினால், இவர்கள் அந்தணர் வேறு, பார்ப்பார் வேறு, பிராமணர் வேறு என்ற நிலையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. சோணாட்டுப் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன், வேத வேள்விகள் இயற்றியது பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. எனவே வேதவழியில் வந்தவர் அவர் என்பதுறுதி. இவர் குறித்து பார்ப்பார் என்ற குறிப்பு உள்ளது. பதிற்றுப்பத்து (24:6-8) சொல்லும் அந்தணர் அறுதொழில் குறித்த பாடலாலும், பரிபாடல் (11:78-79) குறிப்பிடும் விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என்ற குறிப்பாலும், பெரும்பாணாற்றுப்படை (315-16) ‘கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த வேள்வித் தூணத்து' என்பதில் அந்தணர் வேள்விகள் செய்துள்ளமை தெரிய வருவதாலும் பார்ப்பார், அந்தணர் என்பவை ஒத்த பொருள் கொண்ட சொற்களே என்று நாம் துணியலாம்.

அரசர் ஐந்தொழில் என்பதில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர் ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடியோம்பல் ஆகியனவற்றைக் குறிப்பிடுகிறார்; நச்சினார்க்கினியர் ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என்று குறிப்பிடுகிறார். இவ்விருவரது வகைப்பாட்டில் நச்சினார்க்கினியர் காத்தல், தண்டஞ்செய்தல் என்று ஒரே விஷயத்தின் இறு கூறுகளை தனித்தனித் தொழில்களாகப் பட்டியலிடுவது பொருத்தமுடையதல்ல. இவ்விரண்டுமே இளம்பூரணர் குறிப்பிடும் ‘குடியோம்பல்' என்பதுள் அடங்கும். எனவே இளம்பூரணர் சொல்வதே சரி என்று கொண்டால் அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுவதும் இளம்பூரணர் சொல்வதும் ஒன்றியிருக்கிறது. அர்த்த சாஸ்திரத்துக்கு விளக்கமெழுதிய கதிரேசச் செட்டியாரும் இதில் உடன்படுகிறார். எவ்வாறெனின், “இனி ‘ஐவகை மரபின் அரசர் பக்கம்' என்பதற்கு நச்சினார்க்கினியர் “ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என்னும் ஐவகை என்பர்”. இளம்பூரணர் “ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்கல், குடியோம்பல் என்னும் ஐவகை என்பர்”. இவற்றுள் இளம்பூரணர் கொள்கை இந்நூற் (அர்த்த சாஸ்திரம்) கருத்தோடு ஒத்திருத்தல் காண்க” என்கிறார்.

அடுத்ததாக வணிகர், வேளாளர் என்ற இவ்விரு பிரிவுகளின் ஆறு தொழில்கள் கூறப்பட்டுள்ளன. இதுபற்றி விளக்கங் கூறும் கதிரேசச் செட்டியார்: “இறு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்பது வணிகரும் வேளாளரும் ஒத்த அறுவகைத் தொழில்களையுடையவர் என்பதைக் குறிக்கும். அங்ஙனமாகவும், நச்சினார்க்கினியர் “ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல், வாணிகம் என்னும் இவ்வறு தொழிலும் வணிகர்க்கு உரியன என்றும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகைத் தொழிலும் வேளாண் மாந்தர்க்குரியன என்றும் வேறுபடுத்துக் கூறுவாராயினர். தொல்காப்பிய மூலத்தில் வேறுபாடு தோன்றா வகை கூறப்பட்டிருக்க இங்ஙனம் இவர் கூறியது வடநூல் நான்காம் வருணத்தவராகிய சூத்திரர்க்கு வகுத்த அறுதொழில்களையே தமிழ் நிலத்து வேளாளர்க்கும் உரியனவாகக் கருதினமையாம். தமிழ் நிலத்து வேளாளர் வடநூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஆகார் என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாம். இதனை நன்குணர்ந்த பேராசிரியர் ஓதல், வேட்டல், ஈதல் இம்மூன்றும் நால்வகை வருணத்தார்க்கும் ஒத்த சிறப்பின எனவும், வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் உழவும் நிரைகாத்தலும் வாணிகமும் ஒத்த சிறப்பின எனவும் கூறி இம் மூன்றனுள் வாணிகம் வணிகர்க்குப் பெருவரவிற்றெனவும், உழவு வேளாண் மாந்தர்க்குப் பெருவரவிற்றெனவும் கூறி வேறுபாடும் காட்டினார் (தொல்-பொருள்-மரபி 8- ஆம் சூத்திரவுரை). இஃதே தமிழ் நிலத்தார்க்குப் பொருந்தியதாகும். இக்கௌடலீய நூலிற் கூறப்பட்ட சூத்திரர், ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குசீலவகன்மம் ஆகிய இவ்விழி தொழில்களையுடையோர் என்று கூறப்பட்டிருத்தலால் தமிழ்நிலத்து வேளாண் மாந்தரொடு இச்சூத்திரரை ஒத்தவராகக் கருதுதல் தவறுடைத்தென்பது விளக்கமாம்” என்கிறார் ( கௌடலீயம் (அ) பொருணூல் பக். 27-28 பணிதமணி மு. கதிரேச செட்டியார் விளக்கம்).

கதிரேசச் செட்டியார் மட்டும்தான் இவ்வாறு திரித்து விளக்கம் சொல்வதாக நினைக்க வேண்டாம். வேளாள அறிஞர்கள்/அவர்களைப் பின்பற்றுவோர் அனைவருமே ஏதோவொரு வகையில் இந்தத் திரித்தலைச் செய்திருக்கின்றனர். மறைமலையடிகளின் வழித்தோன்றலான புலியூர்க் கேசிகன், புறபொருள் வெண்பாமாலை, “மேல்மூவரும் மனம்புகல/வாய்மையான் வழியொழுகின்று” என்ற வேளாண் வாகை சூத்திரத்துக்கு உரையெழுதுகையில்,

“‘மேற்சொல்லிய அரசரும் பார்ப்பனரும் வணிகரும் ஆகிய மூன்று சாரரும் நெஞ்சத்தால் விரும்பும்படியாக, வாய்மையிலே வழிபட்டு நடந்துவருவது, வேளாண் வாகையாகும்' என்று எழுதிவிட்டு, ‘வேளாளரைப் பற்றிய, மூவர் ஏவல் கொள்ளலாகிய கருத்து ஏற்புடையதாகாமை தெளிவாம். அக்காலத்தைய சமூக நியதியும் இங்ஙனம் இருந்ததென்று கொள்வதற்கில்லை என்பதும் நினைக்க'” என்று எழுதுகிறார்.

அந்தணர் அறுதொழில் மற்றும் அரசர் ஐந்தொழில் குறித்து இளம்பூரணரைக் குறிப்பிட்ட கதிரேசச் செட்டியார், வணிகர், வேளாளர் தொடர்பாக, தனது திரித்தலுக்கு வாய்ப்பாக இளம்பூரணர் உரையைத் தவிர்த்துச் செல்வது கருதத்தக்கது. முதற்கண், “இறு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்பதற்கு வணிகரும் வேளாளரும் ‘ஒத்த' அறுவகைத் தொழில்களையுடையவர்” என்கிறார். ‘ஒத்த' என்ற சொல்லை இவர் தன் விருப்பத்திலிருந்து சேர்த்திருக்கிறார்; மேலும், தொல்காப்பிய மூலத்தில் ‘வேறுபாடு தோன்றாவகை' கூறப்பட்டிருக்க என்கிறார். தொல்காப்பியத்தில் இருவருக்கும் அறுதொழில் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி அவை ஒத்த தொழில்கள் என்றோ, மாறுபட்டவை என்றோ ஒன்றையும் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மரபியற் சூத்திரம் (9:79), வணிகர்க்கு எண் வகை உணவை உண்டாக்குகின்ற தொழிலைக் கூறுகிற அதே நேரத்தில், வேளாண் மாந்தர்க்கு உழவைத் தவிர வேறு தொழில் இல்லை (9:81) என்கிறது. எனவே இவற்றைக் கூட்டிப் பொருள் கொள்வதே சரி. தற்காலத்திலும் பொதுவாக நாம், நிலவுடைமையாளரையும் பிறர் நிலத்தில் விவசாயக் கூலி வேலை செய்பவரையும் விவசாயி என்றே சொல்கிறோம். ஆனால் வணிகர் நிலம் வைத்திருந்த விவசாயி என்பதால்தான் ‘உணவை உண்டாக்குகின்ற' என்றும் வேளாளர் நிலம் அற்ற விவசாயி என்பதால்தான் ‘உழவு தவிர வேறு தொழிலில்லை' என்றும் சொல்கிறார். உண்மை இங்ஙனமிருக்க, கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சிந்தனைப் போக்கைப் பின்பற்றியுள்ள கதிரேசச் செட்டியர், ‘ஒத்த தொழில்' என்றும் ‘வேறுபாடு தோன்றாவகையில்' என்றும் கூறப்பட்டிருப்பதாகச் சொல்வதில் வியப்பில்லை. மேலும் அவர் சைவ மடத்தின் உபகாரத்தில் இருந்தவர் என்பதும் கருதத்தக்கது. எனவே, தம் விருப்பத்திற்குப் பொருள்படுத்தும் பொருட்டு கதிரேசச் செட்டியார் விடுத்துவிட்ட இளம்பூரணரின் விளக்கத்தைப் பார்ப்போம்.

இளம்பூரணரின் கொள்கைப் படி வணிகர்க்குரிய ஆறு பக்கமாவன: ஓதல், வேட்டல், ஈதல், உழல், வாணிகம், நிரையோம்பல் ஆகியன. இது அர்த்த சாஸ்திரம் குறிப்பிடும் வைசியர் பிரிவினரின் தொழில்களுடன் முற்றிலும் பொருந்துவதைக் காண்க.

இளம்பூரணர் குறிப்பிடும் வேளாண் மாந்தர்க்குரிய ஆறு பக்கமாவன: உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி ஆகியன.

“இக்கௌடலீய நூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல் குசீலவகன்மம் ஆகிய இவ்விழி தொழில்களையுடையோர் என்று கூறப்பட்டிருத்தலால் தமிழ் நிலத்து வேளாண் மாந்தரொடு இச்சூத்திரரை ஒத்தவராகக் கருதுதல் தவறு” என்கிறார் கதிரேசச் செட்டியார். ‘உழவொழிந்த தொழில்' என்று இளம்பூரணர் குறிப்பிடுவதில் காருகமும் குயிலுவமும் (குசீலவகன்மம்) உள்ளடங்கிவிடும். தவிரவும் இளம்பூரணர் சொல்லியிருக்கும் ‘வழிபாடு' என்பதுதான் “ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல்” என்பதாக அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வழிபாடு என்பதுதான் ‘மேல்மூவர்க்கும் ஏவல்' என்பதை புலியூர்க் கேசிகனும் தெளிவுபடுத்தி உரையெழுதியுள்ளார். இவ்வாறிருக்க ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குயிலுவம் ஆகியன தமிழ் மரபில் கூறப்படவில்லை என்று கதிரேசச் செட்டியார் தம் விருப்பத்திலிருந்தும், தமது சமகால சமூக நிலைமைகளிலிருந்தும் முடிவு செய்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களின் காலத்துக்கும் முற்பட்ட சேந்தன் திவாகரமும் இதர நிகண்டுகளும், புறப்பொருள் வெண்பாமாலையும் ‘மேல் மூவர்க்கும் ஏவல் செய்தல்' அல்லது ‘ஆணைவழி நிற்றல்' என்பதை வேளாளரின் கடமையாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றை அடியொற்றியே உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.

“தமிழ் நிலத்து வேளாளர் வடநூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஆகார் என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாம்” என்கிறார் கதிரேசச் செட்டியார். தமிழ் நூல்களிற் கண்ட முடிவாக எதைக் கொண்டு கூறுகிறார் என்பது தெரியவில்லை. சங்க இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடலில் (20:62-64), ‘தம் எருதுகளை உழுதற் றொழில் செய்யாமல் ஓடவிடும் முறைமைவேளாளர்க்கு இன்றாதலால்' என்று தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. தம் எருதை ஏரில் மட்டுமே பூட்டும் உரிமை பெற்றிருந்தவர்களே (பிறவற்றுக்குப் பயன்படுத்தும் உரிமையில்லை) வேளாளர்கள் என்று கருதும்போது அவர்கள் கடமையுள், மேலோர் மூவர்க்கும் பணி செய்தல் ஒன்றாக இருந்திருக்கும் என்ற கருத்தே வலுப்பெறுகிறதேயன்றி அத்தகைய இழிதொழில் தமிழ் மரபில் இல்லை என்பது தமிழ் நூற்களிற் கண்ட முடிபாக இல்லை. இதைத்தான் புறப்பொருள் வெண்பாமாலை (8:10) தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்து, குசீலவகன்மம் (குயிலுவம்) என்று அர்த்த சாஸ்திரம் சொல்லியிருப்பது வேளாளர்களின் தொழில்களில் ஒன்று. இன்றைக்கு வரையிலும் இசை வேளாளர் என்று ஒரு பிரிவிருப்பதே இதற்குச் சான்று. மேலும் அர்த்த சாஸ்திரமும் தமிழ் நிகண்டுகளும் குறிப்பிடுகின்ற காருகத் தொழிலில் கைக்கோளர்கள் இன்றைக்கு வரையிலும் ஈடுபட்டு வருவது ஒப்புநோக்கத்தக்கது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு இலக்கணமாகக் கூறப்படும் ஐரோப்பியச் சமூகத்தில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோர் விவசாயத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை அனைவரும் அறிந்ததே. ஐரோப்பியச் சமூகத்திற்கும் முற்பட்ட தமிழ் மரபிலும் அதைப்போலவே இருந்துள்ளது.‘போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததை சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன' என்கிற பேரா. ஆ.சிவசுப்பிரமணியன். மேலும், ‘இன்றையத் தமிழகமும், கேரளத்தின் பெரும் பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதனை நினைவில் கொண்டால் பிறர்நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும் என்பதனை உணரலாம். எனவே போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியரும் அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெளிவு' என்கிறார். (தமிழகத்தில் அடிமைமுறை, பக்.22-27) அத்தகையோரே தமிழ் மரபில் கொண்டி மகளிர் என்றும் புடைப் பெண்டிர் என்றும் கூறப்பட்டுள்ளனர். இவர்கள் உழுதொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதற்கு நாலடியார் (122:1-2) பாடல் சான்று பகர்கின்றது. இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிடுவது அவசியம். தொல்காப்பியர், வேளாண் மாந்தர்க்கு உழவே தொழில் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, உழுதுண்போர் எல்லாம் வேளாண் மாந்தர் என்று சொல்லியிருக்கவில்லை. ஏனெனில், வைசியப் பிரிவில் வருபவரும் உழுதொழிலில் ஈடுபடலாம் என்ற கருத்தை முன்வைத்தே அவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். இது வட இந்திய தர்ம சாஸ்திரங்கள் கூறுவதுடன் ஒப்பு நோக்கத்தக்கது. மேலும், ‘உழுதுண்போர் எல்லாம் வேளாண் மாந்தர்' என்று சொல்லி இருந்தால் வேளாண்மை என்ற சொல்லின் பொருள், ‘உழவு' என்று கொள்ளவேண்டி இருக்கும். ஆனால் தொல்காப்பியர் காலத்திலோ அல்லது அதையடுத்து வந்த காலங்களிலோ வேளாண்மை என்ற சொல்லுக்கு உழவு என்று பொருள் இல்லை. வேளாண்மை எனும் சொல், ‘உபகாரம் மற்றும் மெய்யுபசாரம்' என்ற பொருளிலேயே பயன்பட்டுள்ளது. எனவேதான் உழவை உயர்த்திச் சொல்லும் திருவள்ளுவரும் கூட உழவையும் வேளாண்மையையும் வேறுபடுத்தியே சொல்லி இருக்கிறார். அதாவது வேளாண்மை என்பதை ‘உபகாரம்' எனும் பொருளிலும் உழவு என்பதை ‘பயிர்த்தொழில்' எனும் பொருளிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

தொல்காப்பியம் கூறும் “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்” என்ற இலக்கணப்படி வேளாண் மாந்தர்கள் அன்பின் ஐந்திணைக்குப் புறம்பான கைக்கிளை மற்றும் பெருந்திணைக்குரியவர்களாவர். மேலை உலகில் அடிமைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்கள் இல்லை; அவர்களின் மண உறவு நெடுங்காலம் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தது. தமிழ் மரபிலும் அவ்வாறே இருந்துள்ளது. இதைத்தான் கைக்கிளை மற்றும் பெருந்திணையாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அத்துடன் நேரடியாகவே “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்று வேளாண் மாந்தராகிய நான்காம் வர்ணத்தவருக்கு கரணம் அமைந்ததைச் சொல்வதையும் நாம் ஒப்பிட்டுக் காணலாம். பகை நாட்டிலிருந்து பிடித்துவரப்பட்ட மகளிரை வேளத்தில் ஏற்றுவது என்பதாக ஒரு மரபும் இருந்தமை பிற்கால சான்றுகளால் உறுதிப்படுகிறது. அவ்வாறான மகளிரை சீதன வெள்ளாட்டிகளாக கொடுத்தமை குறித்து ‘குரு பரம்பரை வைபவம்' எனும் வைணவ இலக்கியம் குறிப்பிடுகிறது. வெள்ளாட்டிகள் (வேளாளர்/வெள்ளாளரின் பெண் பால்) என்போர் வேலைக்காரிகளாக இருந்த மரபு மிகப் பிற்காலம் வரையிலும் இருந்துள்ளது. இத்தகையோரும் அவர்தம் வாரிசுகளும் குசீலவகன்மம் மற்றும் மேலோர் மூவரின் ஆணைவழி நிற்றல் என்ற கடமைகளை நிறைவேற்றும் நிலையிலேயே இருந்திருப்பர் என்பது வெளிப்படை.

இவை ஒருபுறமிருக்க, மனு தர்மம் கூறுகின்ற நால் வர்ணத்தவரின் தொழில்கள் மற்றும் கடமைகளை தொல்காப்பியம் கூறுவதுடன் ஒப்பிட்டுக் காண்போம்.

மனு தர்மம், முதல் அத்தியாயம் 88வது சுலோகம், “அந்தணாளர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல்வரிடத்து ஏற்றும் வாழத்தக்கவர்” என்கிறது. இது இளம்பூரணர் சொல்கின்ற அறு தொழில்களுடனும், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து குறிப்பிடுவதுடனும் முற்றிலும் ஒத்து இருக்கின்றது.

அரசருக்குரிய கடமைகளைச் சொல்லும் 89 ஆவது சுலோகம், பிரஜா பரிபாலனம், ஈகை, வேள்விகள் புரிவது, வேத பாராயணம் செய்விப்பது, விஷய சுகங்களில் மனதை அலைய விடாது உறுதியாக நிற்பது என்கிறது. இவற்றில் முதல் நான்கு இளம்பூரணர் சொல்லும் குடியோம்பல், ஈதல், வேட்டல், ஓதல் ஆகியன முறையே பொருந்தியுள்ளது. படை வழங்கல் குறித்து தனியே ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக, அரசனின் உறுதித் தன்மையை வலியுறுத்துகிறது. எனினும் அரச நீதி குறித்து சொல்லக்கூடிய 7வது அத்தியாயத்தில் இவையனைத்தும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

வைசியருக்கான கடமைகளாக மனு தர்மம், முதல் அத்தியாயம், 90 ஆவது சுலோகம், ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், வணிகம், வட்டித் தொழில், பயிர்த் தொழில் ஆகியனவற்றைச் சொல்கிறது. இவை, இளம்பூரணர் சொல்கின்ற நிரையோம்பல், ஈதல், வாணிகம், உழல், ஆகியன பொருந்தி வருகின்ற அதே நேரத்தில் ஓதல், வேட்டல் ஆகிய இரண்டும் மூவர்ணத்தவருக்குமாக தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. வட்டித் தொழில் என்பதை வாணிகம் என்பதுள் பொருத்திப் பார்ப்பதே சரி.

மேலும், சங்க இலக்கியங்களில் மேலோர் மூவர்க்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாளர் குறித்த குறிப்புகள் மிகக் குறைவே. இவ்வாறாக பல்வேறு தரவுகளை ஒப்புநோக்கையில் தமிழ் மரபில் கூறப்பட்டுள்ள நாற்பாலும் வட மரபில் சொல்லப்பட்டுள்ள நான்கு வர்ணமும் ஒன்றே என்ற முடிவுக்கு நாம் வரமுடிகிறது; எனினும் வட மரபுக்கும் தென் மரபுக்கும் இடையில் நடைமுறையில் முற்றிலும் வேறுபாடே இல்லை என்று நாம் கூறிடவில்லை. ஆனால், இவ்வேறுபாடுகளைக் கொண்டு மனுதர்மம் இங்கே புகுத்தப்பட்டதாகச் சொல்வது அபத்தமாக முடியும் என்பதுதான். மாறாக, இவ்விரு மரபுகளும் ஒரு பொது இடத்தில் இருந்து கிளைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை நாம் முந்தைய கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தோம். எனவே, அத்தகைய வேறுபாடுகள் தோன்றியதன் வரலாற்றுப் பின்னணி ஆழ்ந்த ஆய்வுக்குரியது.

(நன்றி: மண்மொழி, நவம்பர்-டிசம்பர் 2008)

pravaahan@sishri.org


SISHRI Home