You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
முத்தூற்றுக்கூற்றம் - கள ஆய்வு
எஸ். இராமச்சந்திரன்

சங்க இலக்கியமான புறநானூற்றில், மாங்குடி கிழார் பாடிய பாடலொன்றில் (புறம். 24) கடற்கரையோரத்திலிருந்த நல்லூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு மாவேள் எவ்வி என்ற வேளிர் குலச் சிற்றரசன் ஆட்சி செய்துவந்த செய்தி குறிப்பிடப்படுகிறது.

மாவேள் எவ்வியின் ஆட்சிப் பகுதிகளில் புனலம் புதவு, மிழலை, முத்தூறு ஆகிய ஊர்கள் அடங்கியிருந்ததாகவும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இப்பகுதிகளை வென்றதாகவும் மாங்குடி கிழார் குறிப்பிடுகிறார்.

வேளிர் என்போர் மூவேந்தர்களுக்குப் பெண் கொடுத்து மண உறவு கொள்ளும் மரபுடையோராதலால், மாவேள் எவ்வியும் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் மண உறவு கொண்டவனாக இருந்திருக்கக்கூடும். எவ்வியின் ஆட்சிக்குட்பட்ட மிழலை, முத்தூறு ஆகிய ஊர்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட மிழலைக்கூற்றம், முத்தூற்றுக்கூற்றம் ஆகிய நாட்டுப்பிரிவுகள் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்தமை கல்வெட்டுகளால் புலனாகிறது. இத்தகைய நாட்டுப் பிரிவுகள், வேளாண்மை விரிவாக்கத்துடன் தொடர்புடையவை.

காடுகள் அழிக்கப்படுதல், புதிய நீர்ப்பாசன முறைகளும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுதல் ஆகியன தமிழ்ச் சமூகம் வீரயுகத்திலிருந்து நிலப்பிரபுத்துவத்தை1 நோக்கி நடத்திய அணிவகுப்பின் தொடக்ககால நிகழ்ச்சி நிரல்களாகும். தமிழக வரலாற்றில் மிகவும் பழமையான நாட்டுப் பிரிவுகளுள் முத்தூற்றுக்கூற்றமும் ஒன்றாக இருந்ததென்பது புகழ்பெற்ற பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் மூலம் புலனாகிறது.2 கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில், முத்தூற்றுக்கூற்றத்து விளமர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது.

முத்தூறு என்ற ஊரினைத் தலைமையிடமாகக் கொண்ட கூற்றம் என்ற நாட்டுப்பிரிவு பற்றி முதன் முதலில் இக்கல்வெட்டில்தான் குறிப்பிடப்படுகிறது. எனினும், சங்க காலத்திலேயே இவ்வூரில் நெல் வயல்கள் நிரம்ப இருந்தன எனவும், வேளாண்மையுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் வேளிர்கள்3 இவ்வூரில் வசித்ததாகவும் மேற்குறிப்பிட்ட புறநானூறு தகவல் தருவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் நிலப்பிரபுத்துவத் தலைமையிடங்களுள் ஒன்றாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டதெனத் தெளிவாகிறது.

"வயலின் பாய்கின்ற நீரில் நீந்தும் மீனைப் பிடித்துத் தின்னும் நாரை, வைக்கோல் போரில் சென்று ஒடுங்கும் சிறப்பையுடையதும், பொன் அணிகலன்கள் பூண்ட யானைகளை உடைய பழமையான வேளிர்களால் உயர்வெய்தியதும், குவியல் குவியலாக நெல் விளைவதுமாகிய முத்தூறு" ("கழனிக்கயலார் நாரை போர்விற் சேக்கும் பொன்னணி யானைத்தொன் முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு") என்று மாங்குடி கிழார் அழகாக வருணிக்கிறார். முத்தூற்றுக்கூற்றம் போன்றே மிழலை என்ற ஊரினைத் தலைமையிடமாகக் கொண்ட மிழலைக்கூற்றமும் பழமையான நாட்டுப் பிரிவேயாகும்.4

இவ்விரு கூற்றங்களும் இன்றைய புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடங்கியிருந்தன. மிழலைக்கூற்றத்துடன் அதலைக்கூற்றம் என்ற நாட்டுப் பிரிவும் சேர்ந்து கானாடு என்ற நாட்டுப் பிரிவு பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி வட்டமும் திருமெய்யம் வட்டத்தின் கிழக்குப் பகுதியும் சேர்ந்ததே கானாடு என்றும் கருதப்படுகின்றன.5

முத்தூற்றுக்கூற்றம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வட்டமும் சிவகங்கை மாவட்டத்தின் திருவாடானை வட்டமும் சேர்ந்த பகுதி என்பது கல்வெட்டாய்வாளர்களின் கருத்தாகும்.6 புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள (ஆவுடையார் கோயிலுக்கருகிலுள்ள) திருப்புனவாசல், கி.பி. 11-12ஆம் நூற்றாண்டுகளில் முத்தூற்றுக்கூற்றத்திலடங்கிய ஓர் ஊராக இருந்தது என்பது அவ்வூர்க் கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்ட கல்வெட்டுகளால் புலனாகின்றது. புறநானூற்றில் குறிப்பிடப்படும் புனலம்புதவு, திருப்புனவாசலாக இருக்கலாம்.7 இவ்வூருக்கு அருகில், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையாக இருந்ததெனக் கருதப்படும் வெள்ளாறு ஓடுகிறது. அரசங்கரை என்ற இடத்தில் வெள்ளாறு ஐந்து கிளைகளாகப் பிரிந்து சற்றுத் தொலைவில் கடலில் கலக்கிறது. (இவ்வாற்றைப் பாம்பாறு என்றும் கூறுவதுண்டு. ஆனால் பாம்பாறு அறந்தாங்கியருகே வெள்ளாற்றில் கலந்து விடுகிறது. எனவே, வெள்ளாறு என்று குறிப்பிடுவதே பொருத்தமாகும். இதன் பின்னர் வெள்ளாற்றின் ஒரு கிளை மணமேல்குடி அருகிலும், பிற ஐந்து கிளைகள் அரசங்கரையிலும் கடலில் கலக்கின்றன.) புதவு என்ற சொல்லுக்குக் கதவு, வாயில் எனப் பொருளுண்டு. புனலம்புதவு என்பது ஆறு கடலில் புகும் வாயில் எனப் பொருள்படக்கூடும்.

முத்தூற்றுக்கூற்றம் என்பது எப்பகுதியிலிருந்து என்று அறிஞர்கள் வரையறை செய்திருப்பினும், முத்தூற்றுக்கூற்றத்தின் தலைமையிடமாகத் திகழ்ந்த 'முத்தூறு' எங்குள்ளது எனக் கண்டறியும் முயற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இம்முயற்சியில் ஈடுபட, புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரைச் சேர்ந்த தமிழாசிரியர் கரு. இராசேந்திரன் அவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சந்திரபோஸ் அவர்களும், நானும் (கட்டுரை ஆசிரியர்) முடிவு செய்தோம். முத்தூற்றுக்கூற்றத்தில் அடங்கிய ஓர் ஊராகக் கல்வெட்டுகள் கூறும் திருப்புன வாசலிலிருந்து இம்முயற்சியைத் தொடங்கினோம். 1993ஆம் ஆண்டில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

திருப்புனவாசலுக்கு அருகில், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் வரலாற்றில் இடம்பெற்ற ஓரியூர் உள்ளது. ஓரியூருக்குச் சிறிது தொலைவில் முத்துக்குடா என்ற கடற்கரையோரச் சிற்றூர் உள்ளது. இவ்வூரே முத்தூறாக இருக்கலாமோ என்ற ஐயத்தில் இவ்வூரும் சுற்றுப்புறங்களும் ஆய்வு செய்யப்பட்டன. முத்துக்குடாவில், கி.பி 11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கருதத்தக்க பானை ஓடுகளும், வீடுகளுக்குக் கூரைவேயப் பயன்பட்ட சொருகு ஓடுகளும் (Flat tiles) சிதறிக்கிடக்கும் மேடுகள் சில கண்டறியப்பட்டன. ஆனால், சங்க காலத்தைச் சேர்ந்த தடயங்கள் எவையும் காணப்படவில்லை.

ஓரியூருக்கு அருகில், எஸ். பி. பட்டினம் எனச் சுருக்கி வழங்கப்படும் சுந்தர பாண்டியன் பட்டினம் உள்ளது. இவ்வூரில் மிகவும் இடிபாடான நிலையில் வழிபாடு இன்றி ஒரு கோயில் காணப்பட்டது. காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் எனக் குறிப்பிடப்படும் இக்கோயில், சிவகங்கை ஜமீன்தார் மேற்பார்வையிலுள்ளது. இக்கோயிலில் சிதைந்த நிலையில் சில கல்வெட்டுகள் காணப்பட்டன. கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் காணப்படும் இக்கல்வெட்டுகள் பாண்டியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. இக்கல்வெட்டுக்களின் மூலம் இவ்வூரும், ஊரிலுள்ள சிவன், திருமால் கோயில்களும் ”முத்தூற்றுக் கூற்றத்து சுத்த வல்லியான சுந்தர பாண்டிய புரத்து தசரத ராம ஈஸ்வரமுடைய நாயனார் கோயில்” என்றும், ”தசரதராம விண்ணகராழ்வார் கோயில்” என்றும் வழங்கப்பட்டன எனப் படித்தறிய முடிந்தது.8 சுத்தவல்லி என்பது 'சித்த மெளலி' என்ற தொடரின் திரிபாகும். சித்தர் என அழைக்கப்பட்ட ஜைன தீர்த்தங்கரர் அல்லது கெளதம புத்தரின் உருவத்தை முடிமேல் தாங்கியவர்களை இத்தொடர் குறிக்கும். கி.பி. 11-12ஆம் நூற்றாண்டுகளில், தமிழகக் கடற்கரைப் பட்டினங்களுக்கும் இலங்கைக்குமிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிகத் தொடர்புகளின் காரணமாக புத்த சமயம் இப்பகுதிகளில் பரவியிருந்ததென்பது வரலாற்று உண்மையாகும். கி.பி. 1063 முதல் 1070 வரை சோழ நாட்டை ஆட்சிசெய்த வீர ராஜேந்திரன், சோழ அரசனாக முடிசூடுமுன்னர் “ஸ்ரீசங்கபோதி சோழலங்கேஸ்வரன்” என்ற பெயரில் இலங்கையை நிர்வகித்துள்ளான். கி.பி. 1070இல் முடிசூடிய முதற்குலோத்துங்க சோழனின் மகள் சித்தமல்லியாழ்வார் அனுராதபுரத்திலிருந்து அரசாண்ட சிங்கள அரசன் முதல் விஜயபாகுவுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். எனவே, இவ்வூர் அவளுடைய பெயரில் உருவாக்கப்பட்ட ஊராக இருக்கலாம். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் சோழ நாட்டைக் கைப்பற்றிய பின்னர் இவ்வூர் சுந்தரபாண்டியபுரம் என்ற பெயரையும் பெற்றிருக்கலாம்.

முத்தூற்றுக்கூற்றமும் இக்கூற்றத்தை அடுத்திருந்த மிழலைக்கூற்றமும் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் சேர (கேரள) நாட்டுடனும் இலங்கையுடனும் தொடர்புடையனவாக இருந்தன என்பது இக்கல்வெட்டுகளில் காணப்படும் வேறு குறிப்புகளாலும் தெளிவாகிறது.

"மலை மண்டலத்துக் காந்தளூரான எறி விர பட்டினத்து ராமன் திருவிக்ரமனான தேவேந்திர வல்லபப் பதினெண் பூமிச் சமயச் சக்கரவர்த்திகள்" என்பவர் இக்கோயலின் நிர்வாகத்துடன் தொடர்புடையவராக இருந்தார் என்பது ஒரு குறிப்பாகும். தற்போது இச்சுற்று வட்டாரத்திலுள்ள பூவனூர் எனும் ஊர், அப்போது ”மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றுப் பூவனூரான தென்னவன் காமணிச் சதுர்வேதி மங்கலம்” என வழங்கப்பட்டதென்பது மற்றொரு குறிப்பாகும். காமணி என்பது கிராமணி என்ற சொல்லின் சிங்களத் திரிபாகும். 'தென்னவன் காமணி' என்பது பாண்டியர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையே நிலவிய மண உறவுகளால் வழக்கிற்கு வந்த ஒரு பட்டமாக இருக்கலாம். இத்தொடர் பாண்டிய மன்னனையோ, அரச குலத்தவன் ஒருவனையோ குறித்திருக்கக்கூடும்9. சிங்கள புத்த மதத் தொடர்பு எஸ்.பி. பட்டினத்தில் இருந்துள்ளது என்பதற்கு அடையாளமாக இக்கோயிலினுள், நின்ற நிலையில் காணப்படும் அழகிய புத்தர் சிற்பம் ஒன்று உள்ளது. இச்சிற்பம் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்கது. இவ்வூரில் புத்தமதம் முற்றிலும் அழிந்த பின்னர், இச்சிற்பம் இக்கோயிலினுள் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முத்தூற்றுக்கூற்றத் தலைநகரினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் முனைப்புடன் ஈடுபடத் தீர்மானித்து, இப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் விசாரிக்கத் தொடங்கியதில், கடற்கரைப் பகுதியிலிருந்து விலகி, உள்நாட்டில் மித்திராவயல் என்ற ஊர் இருப்பது பற்றிய செய்தி கிடைத்தது. முத்தூறார்வயல் என்ற பெயர்தான் மித்திராவயல் எனத் திரிபடைந்ததோ என்ற ஐயம் ஏற்பட்டதால், இவ்வூருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மித்திராவயலில், கி.பி. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மருது சகோதரர்கள் வெட்டுவித்த ஊருணி ஒன்றுள்ளது. இந்த ஊருணியின் கரையில் உள்ள மேடான பகுதிகளில் கருப்பு - சிவப்புப் பானை ஓடுகள் (black and red ware pottery pieces) சிதறிக் கிடக்கின்றன. எனவே, இவ்வூர் சங்க காலக் குடியிருப்பே எனத் தெளிவாயிற்று. இவ்வூருக்கு அருகில், கருவேலங்காடு எனப்படும் காட்டுப் பகுதியில், கண்மாய்க் கரையில், இடிபாடான சிவன் கோயில் ஒன்று காட்சியளிக்கிறது. இக்கோயிலின் நந்திமண்டபத் (ரிஷபக் கொட்டில்) தூண்களில் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன்) பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டினைப் படித்துப் பார்த்ததில் இக்கோயில், "பெரும்பூர் நாட்டு அண்டக்குடி ஆதி நாதீஸ்வரமுடைய நாயனார் கோயில்" என வழங்கப்பட்டதாக அறிய முடிந்தது. எனவே மித்திராவயல் எனத் தற்போது வழங்கப்படும் இவ்வூர் அக்காலத்தில் முத்தூற்றுக்கூற்றத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படவில்லை எனத் தெரியவந்தது.10

மித்திராவயலிலிருந்து சற்றொப்ப 10 கி.மீ. தொலைவில் 'தேர்போகிநாடு' என்ற ஊர் உள்ளது என்றும், அவ்வூருக்குப் பேருந்தில் சென்று, அங்கிருந்து சில கண்மாய்களின் கரை வழியே நடந்து சென்றால் சிறுவாச்சி என வழங்கப்படும் ஊரினை அடையலாம் என்றும், சிறு வாச்சியினை 'முத்துநாடு சிறுவாச்சி' என்று குறிப்பிடுவதுண்டெனவும் மித்திராவயலைச் சேர்ந்த சில பெரியவர்கள் தெரிவித்தனர். மேலும், அவ்வூர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.

தேர்போகிநாட்டை அடைந்து, தொடர்ந்து சில கண்மாய்களைத் தாண்டிச் சென்றபோது, கள்ளிக்குடி என்ற சிற்றூரில், இடிபாடான நிலையில் முட்புதர்களுக்கு இடையே ஒரு கற்கோயில் காணப்பட்டது. இக்கோயிற் சுவரில் கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் "முத்தூற்று நாட்டுக் கள்ளிக்குடி" என்ற தொடரினைப் படித்தவுடனே முத்தூற்றுக்கூற்றத்துத் தலைநகர் அண்மையில்தான் உள்ளது என்பது உறுதியாயிற்று. முத்தூற்றுநாடு என்பதே முத்துநாடு எனத் தற்போது வழங்கப்படுகிறது என்ற உண்மை தெளிவாயிற்று.

முத்துநாடு சிறுவாச்சி ஊரையடைந்து, ஊரிலுள்ள காளி கோயிலை அணுகி, அக்கோயிலின் குருக்கள் திரு. முத்துசாமி அவர்களைப் பற்றி விசாரித்தறியப்பட்டது.

திரு. முத்துசாமி அவர்களுடன் தொடர்புகொண்டு, அவருடைய உதவியுடன் கோயில் உட்பட ஊரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பார்வையிடப்பட்டன. கோயிலிலுள்ள காளியின் பெயர் முத்து நாயகி அம்மன் எனத் தற்போது வழங்கப்படுகிறது. கோயிலின் மூலத்தானத்திலுள்ள காளியின் சிற்பம் கி.பி. 10- 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதற்குரியது. கோயிற் சுவரில் காணப்படும் பாண்டியர் காலக் கல்வெட்டு. கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில், 'முத்தூற்..' என்ற குறிப்பினைத் தொடர்ந்து வரும் நான்கு வரிகள் பிற்காலத்தில் அழிந்து சிதைந்துள்ளன.11

முத்துநாடு சிறுவாச்சியில் முத்துத் திடல், முத்துக் கண்மாய் முதலான இடங்கள் உள்ளன. முத்துநாட்டில் 42 சிற்றூர்கள் அடங்கியிருந்ததாகவும், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த வருவாய்த்துறை ஆவணங்களில் முத்துக் கண்மாய் என்பது முத்தூற்றுக் கண்மாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் முத்துசாமிக் குருக்கள் தெரிவித்தார். மேலும் தமது தந்தையார் பெயர் முத்தானைக் குருக்கள் என்றும், தமது குடும்பத்தில் முத்து என்ற பெயர் தவறாமல் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார். அவரது உதவியுடன் முத்துத் திடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஏராளமான அளவில் கருப்பு சிவப்புப் பானை ஓடுகளும், பிற சங்க காலப் பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன.

இப்பகுதி வறட்சியான பகுதியே ஆயினும் கண்மாய்ப் பாசனத்தால் வளமாக நெல் விளைகிறது. சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இப்பகுதியைச் சேர்ந்த 'சித்தடியான்' என்ற நெல் வகை மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்டது.12 முத்துநாடு சிறுவாச்சியை அடுத்து நெப்பிவயல் என்று வழங்கப்படும் ஊர் ஒன்று உள்ளது. 'நெற்பொலி வயல்' என்பதே இதன் சரியான பெயர் போலும். 'குப்பை நெல்லின் முத்தூறு' எனப் புறநானூறு வருணிப்பது, உண்மைக்குப் புறம்பான வருணனையில்லை.

முத்தூறு என்ற சொல், முத்துப் போன்ற நீர் ஊறும் இடம் எனப் பொருள்படக்கூடும். நாற்று என்ற சொல் நாறு எனப் பெரியபுராணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.13 மூட்டை என்ற சொல் மூடை என வழங்குகிறது. அது போல முத்தூற்று என்பதே முத்தூறு எனத் திரிந்துள்ளது. இப்பகுதியிலுள்ள கண்மாய்கள், இரண்டாயிரம் ஆண்டுக் காலப் பழமையுடையனவாக இருக்கக்கூடும். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இவ்வூரிலிருந்து வணிகரும் வேளாளரும் கேரள மாநிலம் திருவல்லவாழ்ப் (திருவல்லாய்ப்) பகுதியில் குடியேறினர் எனத் தோன்றுகிறது. திருவல்லாய்ச் சாசனங்களில் முத்தூற்று மூலை, முத்தூறு போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. 14 இன்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் குடும்பப் பெயர் (Surname) முத்தூற்று என்றே உள்ளது.15 இத்தகைய குடிப்பெயர்வு பற்றியும் விரிவாக, ஆழமாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுக் காலமாக ஓர் ஊர், வரலாற்றில் எவ்வாறெல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை அத்தகைய ஆய்வு தெளிவாக விளக்கும்.16

அடிக்குறிப்புகள்

1. இந்தக் கட்டுரையில் நிலப்பிரபுத்துவம் எனக் குறிப்பிடப்படும் சமூக அமைப்புக்கும், மேலைநாடுகளில் Feudalism எனக் குறிப்பிடப்படும் சமூக அமைப்புக்கும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.

2. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், எ. சுப்பராயலு, எம். ஆர். ராகவவாரியர், 'ஆவணம்' - இதழ் 1, அக்டோபர் 1991, தொல்லியல் ஆய்வுக் கழக வெளியீடு, தஞ்சை.

3. வேளிர்க்கும் வேளாளர்க்கும் அடிப்படையில் தொடர்பு ஏதுமில்லை. ஆயினும், வேளிர்கள் தமிழகத்தின் தொடக்ககால அரசமைப்பாளர்களாதலால் அவர்களே விவசாய முயற்சிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். பார்க்க: The Velir: Were they the Velalas?, S.D. Nellai Nedumaran & S. Ramachandran.

4. pp. 116-120, Historical Sketches of Ancient Deccan, Vol I, K.V. Subrahmanya Aiyer; Annual Report on Epigraphy, 1899, para. 50; p. 197, South Indian Inscriptions, Vol. III.

5. p. 58, General history of Pudukkottai State, S. Radha Krishna Iyar. 1916.

6. சிலப்பதிகாரம், காடுகாண் காதையில் வரும் “குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிக்கு விசேடவுரையில் பாண்டியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகச் சோழ நாட்டின் எல்லைப் பகுதியில் முத்தூற்றுக்கூற்றம் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக். 300, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லார் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1978.) அண்மையில் வெளிவந்துள்ள 'பாண்டி நாட்டில் வாணாதிராயர்' என்ற நூலில் (பக். 45) இதன் நூலாசிரியர் திரு. வெ. வேதாசலம், முத்தூற்றுக்கூற்றத்தின் இருப்பிடத்தை வரையறுத்துக் கூறியுள்ளார். (பதிப்பு: தொல்லியல் தொழில்நுட்பப் பணியாளர் பண்பாட்டுக் கழகம். மதுரை.)

7. திருப்புனவாசல் கோயில் தொடர்பான தேவாரப் பாடல்களும், அக்கோயிற் கல்வெட்டுகளும் ஊரின் பெயரைத் திருப்புன வாயில் என்றே குறிப்பிடுகின்றன. (Annual Report on Epigraphy. 412, 413, 414 / 1902.) திருப்புனல் வாயில் எனக் குறிப்பிடவில்லை. புனம் என்ற சொல் புன்செய் நிலத்தைக் குறிக்கும். தேவார காலத்திலேயே (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) வெள்ளாறும் கடற்கரையும் இவ்வூரை விட்டுச் சற்று விலகிச் சென்றிருக்கலாம். இது மேலும் ஆய்வுக்குரியது.

8. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் சூரிய குலச் சோழர்கள் இலங்கையை வென்றதன் அடையாளமாக ஊர்களுக்கும் கோயில்களுக்கும் இராமனின் பெயரைச் சூட்டும் வழக்கத்தைப் பரவலாக்கினர். இவ்விரு கோயில்களின் பெயர்களும் அவ்வழக்கத்தின் தொடர்ச்சியை உணர்த்துகின்றன.

9. 'தென்னவன் சிகாமணி' என்ற தொடரில் 'சி' எழுத்து கல்வெட்டு பொறிக்கும்போது விடுபட்டிருக்கவும்கூடும். ஆனால், மிழலைக்கூற்றத்துக் கருவூர்ப் பொன்பற்றி புத்தமித்திரனார் (வீரசோழிய ஆசிரியர்) போன்றோர் அப்பகுதியின் பெளத்த சமயத் தொடர்புக்குச் சான்றாகத் திகழ்கின்றனர். எனவே காமணி என்றே கொள்ளலாம்.

10. கி.பி. 18ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியில் குறுநிலத் தலைவராக இருந்த செம்பொன்மாரிக் காங்கேயன் வம்சத்தவர்க்கு மித்ரா என்ற பட்டம் இருந்ததாகத் தெரிகிறது. அப்பட்டத்தின் அடிப்படையில் இவ்வூர்ப் பெயர் உருவாகியிருக்கலாம்.

11. இக்கோயிலின் வாயில் திருநிலைக்காலில் கி.பி. 11-12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ஊர்ப் பெயர் பற்றிய குறிப்பு இல்லை. கல்வெட்டு வாசகம் திரு. அ. சந்திரபோஸ் அவர்களால் ‘ஆவணம்' இதழ் 6, (சூலை, 1995) பக். 42இல் வெளியிடப்பட்டுள்ளது.

12. சித்தடியான் (சிற்றடியான்) என்ற பெயர் கவனத்தை ஈர்க்கிறது. இது சற்றொப்ப ஓர் அங்குல நீளமுள்ள நெல் எனக் கூறப்படுகிறது. பூம்புகாரில் மாதவி அரங்கேறிய நாடக மேடையை அமைப்பதற்கான அடிப்படையான அளவுகோலாக இந்நெல்லே பயன்படுத்தப்பட்டதென்று இப்பகுதியில் செவிவழிச் செய்தி வழங்கி வருகிறது. இப்பகுதி பூம்புகாரிலிருந்து குடிபெயர்ந்தவர்களாகக் கூறிக்கொள்ளும் செட்டிமார்களின் - நாட்டுக்கோட்டை நகரத்தாரின் - பகுதியாதலால் இது நம்பத்தகுந்த செய்தியே.

13. பா. 12, பெரியபுராணம், திருநாட்டுச் சிறப்பு. (திருமலைச் சருக்கம்)

14. p. 163, Travancore Archaeological Series, T.A. Gopinatha Rao, Vol. II. (தமிழ்ச்சாசனம்)

15. நேரில் விசாரித்தறியப்பட்டது.

16. திருப்புனவாசல் தவிர, இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில்கள் 1993ஆம் ஆண்டுவரை வரலாற்று வெளிச்சத்துக்கு வாராதவை.

[“ஆய்வு வட்டக் கட்டுரைகள் - I” தொகுப்பில், (தொகுப்பாசிரியர்: வெ. கிருஷ்ணமூர்த்தி, ஆய்வு வட்டம், சென்னை - 26) 1995ஆம் ஆண்டு வெளியான கட்டுரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.]

sr@sishri.org


SISHRI Home