You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
பகுத்தறிவு - இந்து மதம் - பிறப்பு அடிப்படை
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
[“மண் மொழி” இதழ் 19-20இல் (செப்டம்பர் - டிசம்பர் 2007) இராசேந்திர சோழன் எழுதிய ‘பகுத்தறிவின் மூட நம்பிக்கை' கட்டுரை குறித்த விவாதம் - 2.]

பிற மதங்களில் இல்லாத பிறப்பு அடிப்படை ஏற்றத்தாழ்வு இந்து மதத்தில் மட்டுமே இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்துப் பார்க்கையில் அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் பிறப்பு அடிப்படைக்கும் இந்து மதத்துக்குமான அல்லது இன்னும் குறிப்பாகப் பிறப்பு அடிப்படையிலமைந்த சாதிக்கும் இந்து மதத்துக்குமான உறவு என்ன? வெறுமனே, மனு தர்மம் சொல்கிறது, கீதை சொல்கிறது என்றெல்லாம் சொல்லாது, புறவயமாக, யதார்த்தத்தில் இருந்து பரிசீலிப்போம். அந்த வகையில் தங்களின் முன்வைப்பிலேயே அதற்கான பல விஷயங்கள் உள்ளன.

இந்து மதத்தின் அடிப்படையாகத் தாங்கள் கூறி இருப்பது, பார்ப்பனியக் கோட்பாடு; அதாவது, பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி ஏற்றத்தாழ்வு. அப்படியானால், பின்வரும் விஷயங்கள் எதைக் காட்டுகின்றன?

1. ‘கிறித்தவத்துக்கு மதம் மாறினார்கள். ஆனால் என்ன ஆயிற்று? தாழ்த்தப்பட்ட கிறித்தவர், நாடார் கிறித்தவர் என சாதிக் கிறித்தவர்கள் உருவாயினர். இஸ்லாத்துக்குப் போய்ப் பார்த்தால் அங்கும் தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் என வகைப்பிரிவு உண்டானது. பௌத்தத்துக்குப் போயும் ஒரு மாறுதலும் இல்லை.' இது ஏன்? இந்து மதத்துடன் தொடர்புடையது எனில், மதம் மாறிய பின்னர், குறைந்தபட்சம், பெருமளவுக்குத் தளர்ந்திருக்க வேண்டிய சாதிக் கட்டுமானம் அங்கும் அப்படியே நீடிப்பது ஏன்?

2. ‘மதம் சார்ந்து -கடவுள் படத்தை செருப்பால் அடிப்பது உட்பட- எதுவானாலும் பெரும்பாலும் யாருக்கும் கோபம் வருவதில்லை. சாதி சார்ந்து ஏதாவது இழிவு என்றால் மட்டும் சுருக்கென்று கோபம் வருகிறது.' இது ஏன்? மதத்துக்கும் சாதிக்குமான உறவு பலகீனமானது என்பதை இது காட்டவில்லையா?

3. மதத்திற்கு அடிப்படையான கடவுள் நம்பிக்கையையே விட்டொழித்துவிட்ட ‘பகுத்தறிவாளர்கள்', முதலியார் பகுத்தறிவாளர், வன்னியர் பகுத்தறிவாளர், நாயுடு பகுத்தறிவாளர் எனப் பிரிந்திருப்பது சாதிக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதைக் காட்டுவதாக இல்லையா?

4. இந்து மதம்தான் சாதிக்குக் காரணமெனில் அதை விட்டு வெளியேறுவதில் தவறொன்றுமில்லை. உள்ளுக்குள்ளேயே இருந்துதான் அதை மாற்ற வேண்டும் என்பதல்ல. இந்து மதத்தை விட்டு வெளியேற முடியும்; அதாவது வழிபடும் கடவுளையும், வழிபாட்டு முறையையும் மாற்றிக்கொண்டுவிட்டால் இந்து மதத்தைவிட்டு வெளியேறியவராகிவிட முடியும். ஆனால் சாதியை விடுத்து இப்படி வெளியேறுவது சாத்தியமா? அல்லது எதைச் செய்தால் சாதியை விட்டு வெளியேறியதாகப் பொருள்?

சாதி அமைப்பு கடந்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதை [தனிநபர் ஒருவர் சாதிக்கு எதிராக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கை இதுவே] நாம் சாதியை விட்டு வெளியேறியதாகப் பொருள் கொள்ளமுடியும் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின்னரும் இந்துவாக இருக்க முடிவதன் சாத்தியம் எதைக் காட்டுகிறது? இந்து மதத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதைத்தானே?

5. சாதியின் பெயரால் கொடுமைகள் இழைப்போர், தாம் இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக அதைச் செய்வதாகக் கருதுகின்றனரா அல்லது சமூக நிலையில் தமக்கு வாய்த்த ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவா? அப்படியாயின் இதில் இந்து மதம் எங்கிருந்து எப்படி செயல்படுகிறது?

6. இந்து மதம் என்ற கருத்துரு உருப்பெற்றது மிகவும் பிற்காலத்தில்தான்; ஆனால், சாதியோ பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற சமூக நிறுவனம் ஆகும். இந்து மதச் சட்டங்கள் என்று இன்றைக்குச் சொல்லப்படுபவை, சாதிகள் உருக்கொண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டவையே. இந்த இடத்தில், “நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதெல்லாம் சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே சாதி நிலவி வருகிறது. ஆனால் அவர், சாதி நல்லதெனக் கூறி அதற்குத் தத்துவமளித்து நிலைநிறுத்திய பணியைச் செய்திருக்கிறார். இன்றுள்ள நிலையில் காணப்படும் இந்து சமுதாயத்தை மனு உண்டாக்கவில்லை; உண்டாக்கவும் முடியாது. தன்காலப் பழக்கத்திலிருந்த சாதி வழக்கங்களை விதிகளாகத் தொகுத்தமைத்துச் சாதி தருமத்தைப் போதித்ததோடு மனுவின் பணி முடிந்தது” என்கிற அம்பேத்கரின் கூற்று கருதத்தக்கது.

7. சில சட்டங்கள், மத நூல்களில் எழுதப்பட்டு விட்டாலே அவை மதச் சட்டங்களாகிவிடுமா? உலகிலேயே அதிகமும் மீறப்பட்ட சட்டங்கள், மதச் சட்டங்களேயன்றி சமூகச் சட்டங்கள் அல்ல. அதனால், சாதி குறித்தச் சட்டங்கள் மத நூல்களில் இடம் பெற்றதை சற்று மாறுபட்ட முறையில் காணவேண்டும். உலகில் கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் புனித நூல்களில் கூட சமூகச் சட்டங்கள், அதாவது மனிதர்களின் அன்றாட வாழ்வைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் மதச் சட்டமாகச் சொல்வதில்லை. மாறாக இஸ்லாமிய, கிறித்தவ சமூகங்களின் சட்டமாகத் தான் சொல்கின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டுமே, மத நூல்களில் எழுதப்பட்டுள்ள சட்டங்கள், இன்றைக்கு வரையிலும் இந்து மதச் சட்டமாகச் சொல்லப்படுகிறது.*

இந்த சட்டங்கள் மத நூல்களில் ஏன் எழுதப்பட்டன? இந்த நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியே பிரிந்திருக்கவில்லை. அனைத்துமே மதத்தின் ஆளுகையின் கீழ் இருந்த நிலையில் சமூகச் சட்டங்கள் அனைத்தும் மத நூல்களில் எழுதப்பட்டன. அதே நேரத்தில் சமூகத்தில் பல துறைகளும் பிரிந்துவிட்ட நிலையில் மத நூல்களில் புதிதாகச் சில சட்டங்கள் எழுதப்பட்டு அது சமூகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அதை மதச் சட்டம் என்று சொல்வது பொருந்தும். ஆனால் அவ்வாறில்லாத நிலையில் அதை மதச் சட்டமாகச் சொல்வது ஏன்?

அவற்றை மதச் சட்டமாகச் சொல்வதன் மூலம், சமூகத்தில் பல துறைகளும் தனிதனியே பிரிந்துவிட்ட இன்றைய நிலையிலும், மதமே சமூகத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் மதம் எந்த அளவுக்கு சமூகத்தைக் கட்டுப்படுத்தும்? அதிலும் குறிப்பாக, ஒரு தலைமை நிறுவனம், ஒற்றை புனித நூல் போன்றவை இல்லாத இந்து மதத்தில், அச்சட்டங்களை மதச் சட்டம் என்று சொல்வதில் இருக்கும் நியாயங்கள் என்ன? அது நியாயம் என்று சொல்லப்படுமானால், அடிப்படையான ஒரு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. அதாவது, சமூகம் மதத்தின் விளைபொருளா அல்லது மதம் சமூகத்தின் விளைபொருளா?

உலகிலேயே அதிகமும் மீறப்பட்டவை மதச் சட்டங்களே. கடவுளின் ஆணையையும் மீறுவதே மனிதர்களின் இயல்பு. ஆதாம் ஏவாள் கதையில் கூட விலக்கப்பட்ட கனியைப் புசித்தது கடவுளின் ஆணையை மீறியதே. இன்றைக்கு வரையிலும் அனைத்து மதத்தினருமே அன்றாடம் மதச் சட்டங்களை மீறி வருகின்றனர். உதாரணமாக, இந்து மதத்திலும் தமிழ் மரபிலும் தென்புலத்தார் கடன் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த அளவுக்கு தற்காலத்தில் இது கடைப்பிடிக்கப்படுகிறது? அதிலும் குறிப்பாக, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையுடன் நேரடித் தொடர்புடையதாகச் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்ற பிரச்சனையிலேயே மதச் சட்டம் மீறப்படுகிறது என்பதுதான். அது போலவே, ‘பிறர் பொருளை எவ்வகையிலும் அபகரிப்பது பாவம்' என்பதாக அனைத்து மதங்களுமே சொல்லி இருக்கின்றனவே தவிர, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மதத்தினரும் இதை ஏதோவகையில் மீறுகின்றனர். எனவே மதச் சட்டங்களை மீறுவது மனிதர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை; எப்பொழுதுமே மீறியே வந்திருக்கின்றனர். இவ்வாறாக மதச் சட்டங்களை மீறுவதை - இந்து என்று சொல்லப்படும் மதத்தில் - அவரவர் குடும்பத்தினர் தவிர வேறெவரும் கண்காணிப்பதில்லை. ஆனால் சாதி அமைப்பு குறித்த ஒழுங்குகள் மீறப்படும்போது ஒட்டுமொத்த சமூகமுமே அவர்களைக் கண்காணிக்கிறது. இது, மதத்தை விடவும் அடிப்படையானதாகச் சாதி விளங்குவதைக் காட்டவில்லையா?

இந்துக்களை சனாதன இந்துக்கள், ஜனநாயக இந்துக்கள் என இரண்டாக வகைப்படுத்திய நீங்கள், “பார்ப்பனீயத்தை நாம் எதிர்க்கிறோம் என்றால் அந்தப் பார்ப்பனீயத்தின் தோற்றகர்த்தாக்கள் மற்றும் அதைக் கடைப்பிடிப்பவர்களை எதிர்க்கிறோம் என்று பொருள்” என்கிறீர்கள். “மனித குலத்தை பிறப்பு அடிப்படையில் வருணங்களாகவும் சாதிகளாகவும் பிரித்துப் பார்ப்பன மேலாண்மையை நிறுவி” என்று சொன்னதன் மூலம் பார்ப்பனர்களே தோற்ற கர்த்தாக்கள் என்று சுட்டுகிறீர்கள். ‘வருணங்களாகவும் சாதிகளாகவும் பிரித்து' என்று கூறும்போது பிரிவினைக்கு முன்னர் அவர்கள் ஒரே கூட்டமாக இருந்ததாகச் சொல்கிறீர்கள். அதாவது சமூகப் பொருளாதார அவசியம் இன்றி, பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற்காகவே திட்டமிட்டு செயற்கையாகப் பிரிவினை செய்யப்பட்டதாகச் சொல்கிறீர்கள். அதுபோலவே, வர்ணத்திலிருந்தே சாதி வந்ததாகப் பொருள்படும் வகையில் விஷயம் முன்வைக்கப்பட்டுள்ளது. வர்ணத்திலிருந்துதான் சாதி வந்ததா? வர்ணத்துக்கான வரையறை என்ன, சாதிக்கான வரையறை என்ன? இந்தப் பிரிவினை நிகழ்ந்தது எந்த கால கட்டத்தில்? இதற்கான வரலாற்றுச் சான்றுகள் என்ன? பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையை நிறுவிக்கொண்டனர் எனில், அரசியல், சமூகப் பொருளாதார அவசியமின்றி, செயற்கையான ஒரு பிரிவினையை அரசனின் ஆதரவின்றி# பார்ப்பனர்களே நேரடியாகச் சமூகத்தில் திணிப்பது சாத்தியமா? இது பற்றி அம்பேத்கர் அவர்கள், “பிராமணர்களே சாதியைப் படைத்தனர் எனும் கோட்பாடு அர்த்தமற்றதே. மனுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாக சொல்வதற்கு எதுவுமில்லை. பிராமணர்கள் பல வகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள்தான் என்று நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதி முறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல” என்கிறார். அரசனுக்கே இரண்டாமிடம் கொடுப்பதாக, பார்ப்பனர்கள் முன்வைத்த ஒரு சட்டத்தை அரசர்கள் ஏற்றுக்கொள்வதற்கான நிர்ப்பந்தம் என்ன? அரசர்கள்தான் பல காலகட்டங்களில் பல மதங்களை ஆதரித்து வளர்த்தனர். அரசனுக்கு/ஆட்சியாளர்களுக்கு அது சாதகமாக இருந்ததால் ஏற்றுக் கொண்டனர் என்றே வைத்துக் கொண்டாலும், கீழ் நிலையில் இருந்த மக்கள் இதுபற்றி -அதாவது தாங்கள் இழிவுபடுத்தப்படுவது பற்றி - கேள்வி முறையின்றி ஏற்க வேண்டிய சமூக அவசியம் என்ன?

இரண்டாவதாக, ‘இந்து மதத்தை, அதன் சாதிக் கோட்பாட்டை கடைப்பிடிப்பவர்களை எதிர்க்கிறோம்' என்று சொல்கிறீர்கள். அப்படியானால் தன் சாதிக்குள்ளேயே மண உறவு வைத்துக்கொள்ளுகிற ஒவ்வொருவருமே சாதிக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர் ஆகிறார். அப்படியெனில் தன் சாதிக்குள்ளேயே மணவுறவு வைத்துக்கொள்ளும் 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சாதிக் கோட்பாட்டை ஏற்பவர்களாக இருக்கின்றனர் என்று பொருள். அப்படியானால் ‘ஜனநாயக இந்து' என்று யாரைச் சொல்கிறீர்?

‘மதங்களை முடிந்த மட்டிலும் ஜனநாயகப் படுத்துவதும் சமத்துவ நோக்குடையதாக்குவதுமே நமது நோக்கம்' என இலக்கை சரியாகவே முன்வைத்துள்ள நீங்கள், இத்தகைய போக்குக்கு அதிகமும் இடந்தரக்கூடியதாக இந்து மதம் மட்டுமே உள்ளது என்பதையும் தங்களின் முன்வைப்பிலிருந்தே காணமுடியும். உதாரணமாக, திருமணப் பதிவு குறித்த விஷயத்தில், உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மதத்தினரும் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்பதற்கு இஸ்லாமியர் எரிச்சல்படுவதைச் சுட்டியுள்ளீர்கள். இஸ்லாத்திலும், கிறித்தவத்திலும் இன்றைக்கு வரை அம்மதங்கள் தனி சமஸ்தானங்களே நடத்தி வருகின்றன. இந்து என்று சொல்லப்படுகின்ற மதத்தில் மட்டுமே அரசுக்குக் கட்டுப்பட்டு இயங்குவது என்பது நடைமுறையாக உள்ளது. இதனால்தான், ஆதிக்கச் சக்திகள் எவ்வளவுதான் கூப்பாடு போடுகின்ற போதிலும், தமிழகத்தில் தமிழில் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது போன்ற சட்டங்களைக் கொண்டுவர முடிகிறது. இதே இஸ்லாமிய நாடுகளில் அல்லது கிறித்தவ நாடுகளில் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதை நினைத்தாவது பார்க்க முடியுமா?

மேற்படி வினாக்களனைத்தையும், தாங்களே கூறியுள்ளதுபோல, பிரச்சனையை திசைதிருப்பாது, ‘கேள்வியின் தகுதியின் அடிப்படையில், நியாய அடிப்படையில்' பரிசீலிப்பது இவ்விஷயங்களை மேலும் புரிந்துகொள்ளவும், சாதியை ஒழிப்பதற்கு உரிய திட்டமிடவும் பயன்படும்.

பிற்சேர்க்கையாக: வர்ணமும் சாதியும்

வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துருக்களாகும். வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, வர்ணக் கலப்பில் தோன்றிய, அதாவது அனுலோமம், பிரதிலோமம் என்பதன் அடிப்படையில் பல்வேறு சாதிகள் தோன்றியதாக நடப்பிலுள்ள மனு தர்மம் போன்ற தர்மசாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது அடிப்படையற்றது. அதே நேரத்தில், அனுலோமம் - உயர் வர்ண ஆணும் தாழ்ந்த வர்ணப் பெண்ணும் மணம் புரிவது - மற்றும் பிரதிலோமம் - உயர் வர்ணப் பெண்ணும் தாழ்ந்த வர்ண ஆணும் மணம் புரிவது - என்கிற கருத்தாக்கங்களே வர்ணக் கலப்புகள் அதிகமும் நிகழ்ந்ததற்கான சான்றுகளாகவும் உள்ளன. தர்க்க ரீதியில், வர்ணங்கள் பிறப்பு அடிப்படையைக் கொண்டவை அல்ல என்பதையும், பிற வர்ணத்தவருடன் கலக்க தடை ஏதும் இருக்கவில்லை என்பதையுமே இது காட்டுவதாகக் கொள்ளலாம். இவ்வாறிருக்க, வர்ணம் பிறப்பு அடிப்படையைக் கொண்டதென்றும் அதிலிருந்தே பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகள் தோன்றின என்று சொல்வதும் தர்க்க முரணில்லையா? இன்னும் சொல்லப்போனால், பிறப்பு அடிப்படையிலான சாதிகளை தொழில் அடிப்படையயைக் கொண்ட வர்ணமாகத் தொகுத்ததன் மூலம், எண்ணிக்கையில் மிகப் பலவாக இருந்த சாதிகளை நான்கு பிரிவுகளுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் வர்ண அமைப்பை நாம் கருதலாம்.

சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. இதைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைக் காண்போம். தமிழ்ச் சமூகத்தில் வேளாளர்கள், நான்காம் வர்ணத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொல்காப்பிய இலக்கணம் தெளிவாக்குகிறது. அதே நேரத்தில், தொல்காப்பிய காலத்தையடுத்து, வேளாளர்களில் ஒரு பிரிவினர் காராளராக ஏற்றம் பெற்று, நிலத்தில் இருந்து உற்பத்தி செய்த விளை பொருள்களை விற்கின்ற வணிகர்களாக ஆயினர். அவர்கள் ‘வேளாண் செட்டிகள்' (அ) ‘பூ வைசியர்' என்பதாக வர்ண அடிப்படையில் மூன்றாம் வர்ணத்தவராக வகைப்படுத்தப்பட்டு விட்டதை பிறகு வந்த நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்றால் இது சாத்தியமா? அதுபோலவே சங்க காலத்தில் பறையர்கள், அந்தண வர்ணத்தவராக இருந்தமை பல்வேறு குறிப்புகளால் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் சமூக இயக்கப்போக்கில், பின்னாளில் அவர்கள் தங்களின் சமூக நிலைமையை இழந்து விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டு நான்காம் வர்ணத்தவர் ஆனமை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரியவருகிறது. வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்குமாயின் இது எவ்வாறு சாத்தியம்? அதுபோலவே சமூகத்திற்குப் புறத்தே வேடர்களாக, ஆயர்களாக இருந்தவர்கள், யாருக்கும் அடிமைப்படாதிருந்து, ஒரு பகுதியில் தங்களின் ஆட்சியதிகாரத்தை நிறுவியதும் நேரடியாக க்ஷத்ரிய (அரச) வர்ணத்துக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். முல்லை நில ஆயர்களான, பள்ளி குலத்தவர்கள் இவ்வாறாகவே அக்னி குல க்ஷத்ரியர்களாக, அரச வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் கூட, இத்தகைய பல உதாரணங்களை நாம் காணமுடியும். வட இந்தியாவில் ‘வைத்யா' என்கிற பட்டப் பெயர் கொண்டவர்கள், தமிழகத்தில் உள்ள மருத்துவ குலத்தவரை ஒத்தவராவர். ஆனால், அவர்கள் பிராமணர்களாகக் கருதப்படுகின்றனர். இதுவும்கூட வர்ணத்தின் நெகிழ்வுத் தன்மையையும், அது தொழில் அடிப்படையைக் கொண்ட பிரிவினை என்பதையும் காட்டுகிறதே தவிர பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்டவில்லை. வர்ணக் கலப்பில் பிறந்தவர்களின் வாரிசுகள், அவர்கள் மேற்கொண்ட தொழிலையொட்டி வெவ்வேறு வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டதற்கான சான்றுகளும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

வேதம், தர்ம சாஸ்திரங்கள், பகவத் கீதை போன்ற இந்து மத நூல்கள் என்று சொல்லப்படுவனவற்றில் அடிப்படையாக ‘வர்ணம்'தான் சொல்லப்பட்டுள்ளதே - இதில் பிற்காலத்தில் சில திரிப்புகள்/இடைச்செருகல்கள் பார்ப்பனர்களால் செய்யப்பட்டிருக்கின்றன - தவிர சாதியல்ல. அப்படியானால், வர்ணத்திலிருந்து சாதி தோன்றியதாக முன்வைக்கும் போதுதான் சாதி, நேரடியாக மதத்திற்கு உரியதாகிறது. மேலும், இன்றைய நிலையில் சாதிதான் நிலவிக்கொண்டிருக்கிறது; வர்ணம் என்பது எந்த வடிவிலும் நிலவிக் கொண்டிருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? வர்ணத்தில் இருந்து சாதி தோன்றியது என்றா அல்லது வர்ணத்துக்கும் முற்பட்டது சாதி என்றா? வர்ணம் என்கிற சமூக நிறுவனம், சமூகத்தில் எழுந்த ஒரு தேவையையொட்டி இயல்பாகப் பரிணமித்ததாகும். அந்தத் தேவை ஒழிந்துபோன காலத்தில் அந்த நிறுவனமும் ஒழிந்துபோனது. ‘கில்டு' எனப்பட்ட தொழில் குழுக்களும் இப்படித்தான் தோன்றியழிந்தன என்பது கருதத்தக்கது. இவ்வாறாக சமூகத் தேவையையொட்டி உருவாகி, மத நூல்களிலும் இடம்பெற்ற வர்ணம் ஒழிந்துபோய், பின்னரும் சாதி நீடிப்பது, வர்ணத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதையே காட்டுகிறது. வர்ண அமைப்பு தோன்றியிராத பல சமூகங்களிலும் - குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் - சாதியமைப்பு உள்ளது. இதுவும் கூட வர்ணத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதையே காட்டுகிறது.

அடிக்குறிப்புகள்

* இவ்வாறு சொல்லப்படுவதன் காரணம், வெள்ளைக்காரக் கிறித்தவர்கள் இங்கே வந்தபோது அவர்கள் தங்களின் மத மாற்ற செயலுக்கு உகந்தவகையில், ‘சாதி என்பது இந்து மதச் சட்டத்தில் சொல்லி இருப்பது, இந்து மதத்துடன் தொடர்புடையது; இந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டால் சாதி இழிவு நீங்கிவிடும்' என்று பிரச்சாரம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு வரையிலும் அவை இந்து மதச் சட்டமாகச் சொல்லப்பட்டு வருவதும் நீடிக்கிறது.

# ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்' என்று குறள் சொல்லுவது என்ன பொருளில்

(நன்றி: மண்மொழி, வெளியீடு 23, 2008 ஜூலை-ஆகஸ்டு, மண்மொழி வெளியீட்டகம், காந்தி நகர், மயிலம் - 604304, விழுப்புரம் மாவட்டம், தொலைபேசி: +91-4147-241256)

pravaahan@sishri.org
(c) Author. To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form.