What We Wrote...
ஆரியக்கூத்தும் வேளாள மாயையும்
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையம்)
“Scientific research progresses by way of accumulating evidence in order to test hypotheses; in the light of the tests they may be discarded or modified or regarded as sofar confirmed.” - A.K. Warder

“தமிழக அந்தணர் வரலாறு” என்ற நூலுக்கு “பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து” என்ற அ.மார்க்ஸ்-ன் விமர்சனம் (அநிச்ச - நவம்பர் 2005) ஆழமாகவும் விரிவாகவும் செய்யப்பட்டுள்ளது. நூல் விமர்சனம் என்ற முறையில் இது முற்றிலும் சரியானதே. எனினும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களின் எதிர்நிலையாக சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கின்ற கருத்துகளே உண்மை என்பது போன்ற கருத்தை ஏற்படுத்திவிடுகிற அபாயம் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தங்களை ஆரியருடன் சமப்படுத்திக் கொள்வதற்கு சான்றுகள் ஒன்றுமில்லை என்ற நிலையிலும் பார்ப்பனர்கள், அருவெறுக்கத்தக்க முறையில் வரலாற்றுக்கு முரணான விசயங்களை முன்னிறுத்தி தாங்களே ஆரியர்கள் என்றும் ஆரியர்களே பூர்வகுடிகள் என்றும் நிறுவுவதற்கு செய்துள்ள அவலமான முயற்சி கண்டிக்கத்தக்கதே. இம்முயற்சியைத் தகர்த்து நொறுக்குகின்ற அ.மா வின் விமர்சனம் ஆரியர்களுக்கு எதிராக திராவிடர்களே பூர்வகுடிகள் என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆரியப் பிரச்சனை மட்டுமின்றி, வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்த ரோமிலா தாப்பரின் மேற்கோள் வாய்ப்பாட்டை அ.மா. சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி ஆய்வுக்குள் புகுவோமாயின் முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டியது, உலகில் மனித சமூகம் பல இடங்களில் பரிணமித்திருக்க முடியாது என்பதும் அத்துடன் மனித சமூகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டளவில் ஆப்பிரிக்காவில் பரிணமித்து, பின்னர் அங்கிருந்தே உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்ற ஆதாரங்களின் அடிப்படையிலான உண்மையையும்தான். இரண்டாவதாக அகழ்வாய்வு முடிவுகள். சிந்துவெளிப் பண்பாட்டு மக்கள் உட்பட இந்தியாவிற்குள் நிகழ்ந்துள்ள குடியேற்றங்களைக் கவனத்தில் கொள்வது.

ரிக்வேத ஆரியர்களின் வருகைக்கு முற்பட்டது சிந்துவெளி நாகரீகம் என்பதாலேயே அவர்களே பூர்வகுடிகள் என்றாகிவிடாது. சிந்துவெளிக்கு முன்னரே இந்தியாவிற்குள் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. இதுவரையிலும் இந்தியாவிற்குள் நிகழ்ந்துள்ள குடியேற்றங்களின் வரிசையில் முதலில் வந்தவரை பூர்வகுடிகள் என்போமாயின் பின்னர் வந்த அனைவரும் வந்தேறிகள் என்றாகிவிடும். பூர்வகுடிகள் அல்லது வந்தேறிகள் என்ற கருத்து முற்றிலும் சார்பானது. ஆரியர்களைப் பொருத்தமட்டிலும் வந்தேறிகள் என்ற கருத்து முன்வைக்கப்படுமாயின் -அ.மா. அப்படிக் கூறவில்லை- அவர்களுக்கும் பின்னர் மிகவும் பிற்காலத்தில் வந்த -இங்கேயே மதம் மாறியவர்கள் அல்லாத- இஸ்லாமியர்கள் மற்றும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கிறித்தவர்கள் பற்றி -இவர்கள் இருவரும் தங்களை மண்ணின் மைந்தர்களாக கூறிக்கொள்ள விரும்புவதில்லை என்பது ஒருபுறமிருக்க- அப்படிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை என்பது இந்துத்துவவாதிகளைத் தூண்டுகிற விசயமாக இருக்கிறது.

சிந்துவெளி குறித்த கருத்துகள் சரியே என்ற போதிலும் அந்நாகரீகம் மிக உயர்ந்தது என்பதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் சிந்து சமவெளி நாகரீகம் எவ்வளவுதான் உயர்ந்திருந்த போதிலும் அதன் வீழ்ச்சிக்குக் காரணம் அது தனித்து ஒதுங்கி தேக்கநிலை அடைந்துவிட்டதுதானேயன்றி ஆரியப் படையெடுப்போ அல்லது மற்றவையோ அல்ல. இருப்பினும் ஆரியருக்கும் முன்னதாக கி.மு. 2200-2000 வாக்கில் இந்தப் பகுதிக்கு வந்த கண்ணனின் கரு நிற யது குலத்தவரின் (Chalcolithic Black & Red Ware) வரவு இதன் அழிவுக்குக் காரணமா என்கிற ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் சிந்துவெளிக்குப் பின்னர் இந்தியாவிற்குள் குடியேறிய ஆரியரும் மற்ற பலரும் சிந்துவெளி மக்களைவிட பண்பாட்டு ரீதியில் வளர்ந்த நிலையில் இருந்தனர். இதற்கொரு சான்றாக நாம், சிந்துவெளி அகழ்வாய்வுகளில் போர் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதைக் கொள்ளலாம்.

ஆரிய இனப் படையெடுப்பு குறித்த கருத்துகளை தெற்கே உருவான திராவிட இயக்கம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்காகப் பயன்படுத்திக்கொண்டது என அ.மா சரியாகவே கூறியுள்ள போதிலும், திராவிட இயக்கத்தின் அந்தக் கருத்துதான் இன்றைக்கு வரையிலும் தமிழ்ச் சமூகத்தில் முழு ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஆனால், அக்கருத்தைக் கடந்து பல்வேறு உண்மைகள் இன்றைக்கு வெளிப்பட்டுள்ளனவேயன்றி அவை பொதுக் கருத்தாகிடவில்லை. உதாரணமாக அறிவியல் ஆய்வுகளின்படி காலாவதியாகிவிட்ட குமரிக்கண்ட கருத்தாக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். இதற்கு அண்மையில் தினமணி நாளிதழில் வெளியான கட்டுரைகளும் அதற்கான வாசகர் கடிதங்களுமே சாட்சி.

‘இன அடிப்படையிலான வரலாறு எழுதுதலில் அண்ணல் அம்பேத்கரின் குறுக்கீடுகள்’ என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றில் “அந்தணர் வரலாறு” என்பதில் அம்பேத்கரின் மேற்கோளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விழைந்துள்ளதற்கு அம்பேத்கரின் எதிர்க்கருத்துகளை சுட்டிக் காட்டுவது பொருத்தமே என்ற போதிலும் அவரது கருத்துகள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாமல் அவையே சரி என்பதைப் போல விளக்கப்பட்டுள்ளன.

வர்ணங்களே சாதிக்கு அடிப்படை அமைத்தது என்றும் வர்ண அடிப்படையை உருவாக்கியதில் பிராமணர்களுக்கே முக்கியப் பங்கு என்றும் பலரும் கருதிக் கொள்கின்றனர். அ.மா. கூட, “வருணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றின் உருவாக்கத்திலும் இறுக்கமான செயற்பாடுகளிலும் பார்ப்பனீயத்தின் மதம் சார்ந்த பங்கு மறுக்க முடியாத ஒன்று” என்றும் “பார்ப்பன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது வருணசாதி உருவாக்கத்திலும் நடைமுறையிலும் அவர்களின் பங்கை எதிர்ப்பதே” என்றும் சொல்கிறார். மேலும் அம்பேத்கரின் நூலைச் சுட்டிக்காட்டி, “சாதி முறையை உருவாக்கியது பார்ப்பனரே என்பது இங்கே தெளிவாக்கப்படுகிறது. பார்ப்பனரின் லட்சியமும் நோக்கமும் சாதிய முறையை உருவாக்குவதே என்பதைக் காட்டிவிட்டன. நெகிழ்ச்சியுடனிருந்த வேதகால நால்வருண முறை பார்ப்பனர்கள் செய்த மாற்றத்தினால் கொடுந்தீங்காக மாறியது குறித்தும் அம்பேத்கர் பேசுவார்” என்கிறார். இந்தியாவில் வர்ணத்தின் இயங்குதல்களையும், அது தோன்றியதற்கான களம், காலம், மற்றும் பின்னணி குறித்தும் சற்றே விரிவாகக் காண்போம்.

முதற்கண், அம்பேத்கரும் மற்ற பலரும் வர்ணத்தையும் சாதியையும் சமமாகப் பார்க்கின்றனர். இது அடிப்படையற்றது. வர்ணம், தொழில் அடிப்படையிலான பிரிவாகும். வர்ணத்தை -தனிநபர் மாற்றிக்கொள்ள முடியாது என்றாலும்- குழுவாக மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக, தொடக்கத்தில் சூரிய குல, சந்திர குல ஆட்சியாளர்களே க்ஷத்ரிய வர்ணத்தவராகக் கருதப்பட்டனர். ஆனால் பின்னாளில் பூமிபுத்திரர்களாகத் தம்மை கூறிக்கொண்ட கங்கை குலத்தவரும் அக்னி குலத்தவரும் பார்கவ குலத்தவரும் இன்னும் சில பிரிவினரும் இரண்டாந்தரமாகவே என்ற போதிலும் க்ஷத்ரிய வர்ணத்தில் சேர்ந்துவிட்டனர். அதுபோலவே பார்ப்பனர்களிலும் கூட சில கோத்திரங்களைச் சேர்ந்தோர் கீழ்நிலைப் பார்ப்பனர்களாகவேனும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உதாரணமாக வடஇந்தியாவில் ‘வைத்யா’ என்ற பட்டப் பெயருடன் வழங்கப்பட்டுவரும் பிரிவினரைச் சொல்லலாம். வரலாற்றுக் காலம் தொடங்கி பிரம்மக்ஷத்ரியர் என்ற ஒரு பிரிவினரையும் நாம் காண்கிறோம். அவர்களின் வாரிசுகளில், க்ஷத்ரியத் தொழிலை மேற்கொள்வோர் க்ஷத்ரியராகவும் பிராமணத் தொழிலை மேற்கொள்வோர் பிராமணர்களாகவும் அங்கீகரிக்கப்பட்டனர். வர்த்தகம் விரிவடைந்ததன் போக்கில் வைசியர் பிரிவிலும் பல்வேறு சாதிப் பிரிவினர் -தங்களின் தொழில் மாற்றத்தின் அடிப்படையில்- சேர்ந்துள்ளனர். இதற்கு உதாரணமாக நாம் பூவைசியரைச் சொல்லலாம். வேளாளர்களிலிருந்து காராளர்களாகி, தங்களின் நிலங்களில் வணிக நோக்கில் பயிரிட்டு விளைவித்த பொருட்களை விற்றவர்கள் பூவைசியர்களாயினர். இவ்வாறாக வர்ணம் என்பது செய்கின்ற தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பெரும்பிரிவுகளாக இருந்தமை தெரியவருகிறது. மேலும் க்ஷத்ரியப் பெண்ணான திரௌபதியை மணம் புரிவதற்காக நடைபெற்ற சுயம்வரத்தில் பாண்டிய மன்னன் கலந்து கொண்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. காளிதாசனின் காவியம், சாகுந்தலையை மணக்க நடைபெற்ற சுயம்வரத்தில் பாண்டிய மன்னன் கலந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறது. இவையும் இன்னும் பலவும் வர்ணம் தொழில் சார்ந்ததாக மட்டுமே இருந்ததைக் காட்டுகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொள்வோர் இன்றைய சமூக நிலையை வைத்து மட்டுமே பார்ப்பதினால் மேற்படி விசயங்களை கவனத்தில் கொள்ளத் தவறி வர்ணம் = சாதி என்கிற நிலைக்கு வந்துவிடுகின்றனர். வர்ணமே சாதியாயிற்றா என்பது குறித்து பின்னர் பார்ப்போம்.

பொதுவாக இந்தியச் சமூகம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் மேற்கொள்கின்ற நிலை குறித்தும் மேற்படி மாற்றங்களை உறுதிசெய்கின்ற வகையிலும் வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர் கூறுவதாவது: “நிறுவனங்கள் குறித்த ஆய்வுகள் அதிக முக்கியத்துவத்தைப் பெறவில்லை. இதற்கு, அவை அதிக மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை என்ற நம்பிக்கை ஒரு பகுதியளவு காரணமாகும். இந்தக் கருத்து, இந்தியப் பண்பாடு பல நூற்றாண்டுகளாக நிலையாக, மாற்றமின்றி இருந்து வந்துள்ளது என்ற தத்துவத்தையும் கூட வளர்த்துவந்துள்ளது. இதற்கு இந்தியனின் மந்தத்தன்மையும் வாழ்க்கை குறித்த மங்கலான விதிவாதப் போக்கும் காரணமாகும். இருப்பினும் இது ஒரு மிகைப்படுத்தலே. சாதியக் கட்டமைப்பு, அல்லது விவசாய முறை அல்லது இந்தியர்களின் தீவிர வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றில் நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த மேம்போக்கான ஆய்வும் கூட ஒரு நிலைத்த சமூகப் பொருளாதார அமைப்பு பாணியை (socio-economic pattern)த் தவிர வேறெதையும் காட்டவில்லை. இந்தியாவில் சில குறிப்பிட்ட மட்டங்களில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக நீண்டுள்ள தொடர்ச்சியான பண்பாட்டு மரபு இருந்துள்ளமை உண்மைதான். ஆனால் இத்தொடர்ச்சியைத் தேக்கத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது”என்கிறார். வர்ண அமைப்பின் நெகிழ்வைக் காணுகிற இவ்விடத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இடையிலான வேறுபாடு குறித்து தெளிவுபடுத்துவது அவசியம். அதாவது வர்ண இலக்கணங்கள் வட இந்தியாவில் சற்றே நெகிழ்வாகவும் தென்னிந்தியாவில் கடுமையாகவும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதற்கு பல ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக, ஜனகர் க்ஷத்ரியராகக் கருதப்படுகின்ற போதிலும் அவர் ஏர் பிடித்து உழுததாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லிச்சாவி கூட்டத்தைச் சேர்ந்த புத்தரின் தந்தை க்ஷத்ரியராகக் கருதப்படுகின்ற போதிலும் ஏர் பிடித்து உழுததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் எந்த வேந்தரும் ஏர் பிடித்ததாகக் குறிப்பு இல்லை. தர்ம சாத்திரங்களின் படி க்ஷத்ரியர் ஏர் பிடித்து உழுவது இழுக்கானது. இது தமிழ்ச் சமூகத்தில் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சூத்திர அரசருக்குப் பட்டம் சூட்ட மறுத்து பார்ப்பனர்கள் வெளியேறியதாக நாம் தமிழகத்தில் மட்டுமே காண்கிறோம். வடஇந்தியாவில் இவ்வளவு கறாரான நிலை இருந்ததில்லை. இதைப் போலவே ஆரிய இனவியல் கூறுகளுக்கு சற்றும் தொடர்பற்ற தமிழகப் பிராமணர்கள் சடங்குகளையும் ஆசாரங்களையும் கடைப்பிடிப்பதில் கடுமையாக இருப்பதாக சுவீரா ஜெய்ஸ்வால் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

“வர்ண அமைப்பு முறையின் தத்துவார்த்தத் தோற்றத்தை புருஷ ஸþக்தத்துடன் சேர்த்துக் காணும் போக்கு வழக்கிலுள்ளது. இருப்பினும் இது ரிக் வேதத்தில் பின்னர் சேர்க்கப்பட்ட ஒன்று என்பது மிகவும் வெளிப்படையானது. பத்தாவது மண்டலமே பின்னால் சேர்க்கப்பட்டது என்பதாக நம்பப்படுவது மட்டுமின்றி, அந்தச் சுலோகம் ஒரு இடைச் செருகல் என்பதற்கு தன்னளவிலேயே ஆதாரமாக உள்ளது” என்கிறார் ரோமிலா தாப்பர். மேலும், “வர்ண கருத்துரு, எப்பொழுதுமே, பெரிதும் ஒரு தத்துவார்த்த மாதிரிதானே அன்றி ஒருபோதுமே சமூகத்தின் உண்மையான விளக்கமாக இருந்ததில்லை” என்கிறார் அவர். என் நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் அம்பேத்கர் கூட ரிக் வேதத்தின் புருஷ ஸுக்தத்தில் வரும் வர்ணப் பிரிவுகளை ஒரு இடைச்செருகலாகவே கருதுகிறார்.

இவை ஒருபுறமிருக்க தமிழின் தொல் இலக்கணமான தொல்காப்பியம் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நால் வர்ணங்களையும் அவற்றின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்துள்ளது. அதையடுத்து வந்த சிலப்பதிகாரம் ஊர்காண் காதை, “பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்” என்கிறது. இதன் பொருள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நூல்கள் பகுத்துக் கூறியதற்கேற்ப நான்கு வெவ்வேறு வகுப்பினரும் தனித்தனியே உறைகின்ற தெருக்கள் என்பதாகும். அரங்கேற்றுக் காதை, நான்கு வருணங்களுக்குரிய பூதங்களையும் அவற்றின் குணாதிசயங்களையும் விவரிக்கிறது. அடியார்க்கு நல்லார் உரையில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. அதன் கடவுள் வாழ்த்தைக்கூட வைசியர், அந்தணர், க்ஷத்ரியர், வேளாளர்க்குரியதாக நாம் கூறமுடியும். சீவக சிந்தாமணி, பதுமையார் இலம்பகத்தில் பதுமையைக் கடித்த பாம்பு குறித்து விளக்குகையில் பாம்புகளும் கூட நான்கு வகையாகக் கூறப்பட்டுள்ளது. பால் மணம் வீசுகிற பாம்பு அந்தண சாதிப் பாம்பென்றும், நந்தியாவட்டை மணம் வீசினால் க்ஷத்ரிய சாதிப் பாம்பென்றும், தாழம்பூ மணம் வீசினால் வைசிய சாதிப் பாம்பென்றும், அரிதார மணம் வீசினால் சூத்திர சாதிப் பாம்பென்றும் விளக்கம் உள்ளது. வேளாளர்கள் சமூக நிலையில் உயர்ந்து விட்ட காலத்தில் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் எழுதிய இலக்கண விளக்கம், செய்யுள் யாப்பு இலக்கணத்தில் “வாழ்த்தியல் வகையே நாற்பாற்கும் உரித்தே” என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி, வெண்பாவை பிராமணருக்கும், ஆசிரியப்பாவை க்ஷத்ரியருக்கும், கலிப்பாவை வைசியர்க்கும், வஞ்சிப்பாவை சூத்திரருக்கும் உரியதாகக் குறித்திருக்கிறார். சங்க இலக்கியங்களின் அடிப்படையில் இது கூறப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களைக் கூட இந்த இந்த வர்ணத்துக்கு இந்த இந்த எழுத்து என நான்கு வர்ணத்தவருக்கும் உரிய எழுத்துக்கள் எனப் பிரித்துள்ளனர். மேலும் சங்க காலத்தில் இவை முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதைச் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். இவையெல்லாம், வர்ண அமைப்பு தமிழ்ச் சமூகத்திற்கே உரியதாக இருக்கவேண்டும் என்பதையல்லவா குறித்துக் காட்டுகின்றன. (இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன சாதி/வர்ணம் போன்ற மரபாக வரும் விசயங்கள் எழுதிவைக்கப்படாமலேயே தமிழ்ச் சமூகத்தில் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதற்கும் வடஇந்தியாவில் தர்ம சாஸ்திரங்கள் என்று எழுதிவைக்கப்பட்ட பின்னரும் உறுதியாகக் கடைப்பிடிக்காத நிலைமை இருப்பதற்குமான காரணங்களையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவரும்.)

மேற்காசியாவில் தோன்றிய ஜெண்ட் அவெஸ்தவிலும் குறிப்பிடப்பட்டுள்ள வர்ண அமைப்பின் தோற்றம் குறித்து அறிவதற்கு விஞ்ஞான பூர்வ முறையில் அகழ்வாய்வு மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில் ஒரு முயற்சியை மேற்கொள்வோம். அது இந்தியாவில்தான் தோன்றியதா, அதற்கான தேவையும் பின்புலமும் இருந்ததா, வீரயுகப் பண்பாட்டில் இருந்த ரிக் வேத ஆரியருக்கு அத்தகைய அமைப்பு முறை தேவைப்பட்டதா போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடை காண்பதற்கு வாய்ப்பாக இந்தியாவிற்குள் நிகழ்ந்த குடியேற்றங்கள் குறித்தும் அவற்றின் பின்னணி குறித்தும் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

(1) பழங்கற் காலத்தின் இடைப் பகுதி (Middle Paeleolithic)ப் பண்பாட்டு மக்கள். நீக்ராய்டு இனக் கூறுகள் கொண்ட இவர்கள் கி.மு. 60000 இல் குடியேறினர்.

(2) பழங்கற் காலத்தின் பிற் பகுதி (Late Paeleolithic)ப் பண்பாட்டு மக்கள். வெட்டாய்ட்/ஆஸ்ட்ரிக் கூறுகள் கொண்ட இவர்கள் கி.மு. 20000 இல் குடியேறினர். முண்டா மொழிக்குரியோரான இவர்கள் மேற்காசியாவிலிருந்தே குடிப்பெயர்ந்துள்ளனர்.

(3) நுண் கற் கருவி (Microlithic)ப் பண்பாட்டு மக்கள். கி.மு. 4000 வாக்கில் வெட்டாய்ட் இனக் கூறுகள் கொண்ட இவர்கள் குடியேறினர்.

(4) புதிய கற்கால (Neolithic)ப் பண்பாட்டு மக்கள். கி.மு. 7000 வாக்கில் பலுசிஸ்தானின் மெஹர்கரில் குடியேறியிருந்த இவர்களே கி.மு. 2800 வாக்கில் சிந்துவெளி நாகரீகத்தைத் தோற்றுவித்தனர். நகர-கிராம சமூகங்களின் ஒப்பந்த அரசாக பலாத்காரமின்றி பண்ட பரிமாற்ற வாயிலாக இச்சமூகம் நிலை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய அரசியல் பண்பு கி.மு. 6000 இலேயே மேற்காசியாவில் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிந்துவெளியில் கிடைத்துள்ள செம்பு உலோகம் மற்றும் இதர ஆதாரங்களிலிருந்து இவர்களின் மேற்காசியத் தொடர்பை நாம் அறிகிறோம்.

(5) செம்புக் கருவிக் குவியல் பண்பாடு (Copper-hoard culture) என்ற ஒரு பண்பாடும் சிந்து வெளி நாகரீகத்துக்கு சமகாலத்தில் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் நிலவிற்று. இருப்பினும் இது சிந்துவெளி நாகரீகத்தைப் போல நகர-கிராம சமூகமாக இல்லாமல் வெறும் கிராம சமூகங்களாகவே இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

(6) செம்புப் பயன்பாட்டு கருப்பு-சிகப்பு மட்பாண்ட (Chalcolithic Black & Red Ware)ப் பண்பாடு. இப்பண்பாட்டைக் கொண்டிருந்த மக்களே கண்ணனின் யது குலத்தவர் ஆவர். ளஇவர்களே வேளிர் என அறிஞர் செம்பகலட்சுமி நிறுவியுள்ளார்ன கி.மு. 2650 வாக்கில் மேற்காசியாவில் தோன்றிய இப்பண்பாடு கி.மு. 2450 இல் கடல் வழியே குஜராத் மாநிலம் துவாரகையில் தோன்றி 2200-2000 வாக்கில் வட இந்தியாவில் பரவியிருந்தது. இன ரீதியில் திராவிடர்களை ஒத்திருந்த இவர்களை ஆரியரின் இலக்கியமாகக் கூறப்படும் மகாபாரதத்தில் கண்ணனின் பங்கையும் ரிக்வேதங்களில் யது குறிப்பிடப்படுவதையும் கொண்டு இந்தோ-ஐரோப்பியருடன் தொடர்புபடுத்திக் காணும் மரபு மறுஆய்வுக்குரியது. பொதுவாக, கோயில் வழிபாட்டுச் சடங்குமுறையே இவர்களிடம் இருந்தது. இவர்கள் இந்தியாவிற்குள் குடியேறிய பொழுது செம்பு உலோகப் பயன்பாட்டுடன் மேய்ச்சல் வாழ்க்கையில் வீரயுகப் பண்பாட்டு மட்டத்தில் இருந்தனர். இவர்களுடன் அடையாளம் காணப்படுகின்ற கருப்பு-சிகப்பு மட்பாண்டங்கள் (B&RW) தமிழகத்தில் இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படை (Megalithic)ப் பண்பாட்டு மக்களின் தொல் எச்சங்களுடன் சேர்ந்து கிடைப்பது குறிப்பிடத் தகுந்தது. இம்மக்களின் தலைவனான கண்ணனை நெடுமுடியண்ணல் என்றும் அவர்களின் வழிவந்த அரசரே தமிழ் வேந்தர்கள் என்றும் கூறுகிற கபிலரின் புறநானூற்றுக் குறிப்பும் நச்சினார்க்கினியர் உரையும் கருத்தில் கொள்ளத்தக்கவை.

(7) புதிய கற்கால செம்புப் பயன்பாட்டு (Neolithic-Chalcolithic)ப் பண்பாடு. கி.மு. 4000 இல் பலுசிஸ்தானில் தோன்றி சிந்து வழியே கி.மு. 2200 இல் குஜராத் வரை பரவியிருந்தது. யது குலத்தவரின் சார்புக் குடிகளாக (அவர்களுடன் மணவுறவின்றி) இருந்த இவர்களே கி.மு. 1800 வாக்கில் கர்னாடகம் வழியே தமிழகம் வந்தடைந்தனர். தமிழகத்திற்கு வந்தபோது இவர்கள் சார்புக் குடிகளாக இல்லாமல் சுதந்திரக் குடிகளாகியிருந்தனர். இவர்களே சங்க இலக்கியம் குறிப்பிடுகின்ற சீறூர் மன்னர் மரபினர் ஆவர். (இவர்கள் வேளிர் அல்ல) இதுபோலவே வடஇந்தியாவிலும் இவர்கள் காலப்போக்கில் சுதந்திரக் குடியாகி வெள்ளை நிறம் பூசப்பட்ட கருப்பு-சிகப்பு மட்பாண்டப் பண்பாட்டினராக வளர்ச்சி பெற்று வடக்கிலும் கிழக்கிலும் பரவினர். இவர்களே நாக அரசுகளைத் தோற்றுவித்தனர் எனலாம்.

(8) ரிக் வேத ஆரியர். ஈரான் மற்றும் ஆப்கான் வழியே கி.மு. 1500-1300 வாக்கில் இந்தியாவிற்குள் பரவிய இவர்கள் மேற்காசியத் தொடர்புடைய ஆரியர்களில் ஒரு பிரிவினராவர். இவர்களின் மேற்காசியத் தொடர்பினாலேயே இந்திரன், மித்ரன், வருணன் போன்ற மேற்காசியாவில் தோன்றிய கடவுள்கள் ரிக் வேதத்தில் பதிவாகியுள்ளனர். இவர்களின் தொல் எச்சமாக இந்தியாவில் மட்டுமின்றி மேற்காசியாவிலும் கிரேக்கத்திலும் கூட எதையும் அடையாளம் காணமுடியவில்லை. ஏற்கெனவே இப்பகுதிகளில் நிலவிய வேறோர் பண்பாட்டில் இவர்கள் கலந்திருக்க வேண்டும். இந்த இடங்கள் அனைத்திலும் இவர்களின் வரவுக்கான தடயமாக இந்தோ-ஐரோப்பிய மொழியே உள்ளது. இந்தியாவில் சிந்துவெளிக்குப் பின்னர் நிலவிய காவி நிற மட்பாண்ட (Ochre Coloured Pottery)ப் பண்பாட்டினருடன் இவர்கள் இணைந்திருக்கலாம் என்ற அறிஞர்களின் கருத்து சரியாக இருக்கலாம். இம்மக்கள் ஐரோப்பாவிலிருந்த போதே விலங்குகளைப் பலி கொடுத்து தீயிலிடுகின்ற வேள்விச் சடங்குகளைச் செய்து வந்துள்ளனர். கண்ணனின் யது குலத்துடன் இவர்கள் பகைமை கொண்டிருந்தது ரிக் வேதத்திலிருந்து தெரியவருகிறது. யது குலத்தினரின் தொல் எச்சங்களில் யாக-யக்ஞங்கள் செய்ததற்கான தடயங்கள் இன்மையைக் கொண்டு இவர்களுக்கும் ரிக் வேத மக்களுக்குமான முரண் யாக-யக்ஞங்கள் செய்வது தொடர்பானதாக இருக்கலாம் என தா.த. கோசாம்பி கருதுகிறார்.

(9) வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட (Painted Grey Ware)ப் பண்பாடு. கி.மு. 800 வாக்கில் இந்தியாவுக்குள் பரவியுள்ள இதன் தொல் எச்சங்கள் கி.மு. 850 இல் தொடங்கி மகாபாரதம் தொடர்பான 30க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரும்பு உலோகத்தைப் பயன்படுத்திய இவர்களை புராணகால ஆரியர் என வரலாற்றறிஞர் குறிப்பிடுவர். மேற்காசியாவில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்குப் பழகிய இவர்கள் மருத நில விவசாய விரிவாக்கத்தில் ஈடுபட்டனர். இவர்களை ரிக் வேத ஆரியரின் தொடர்ச்சியாக, அவர்களின் பண்பாட்டு வளர்ச்சிப் போக்கில் தோன்றிய க்ஷத்ரிய குலங்களாகக் கருதுகிற சில வரலாற்றாய்வாளர்களின் கருத்தை மறுக்கின்ற வகையில், இந்த வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட (PGW)ப் பண்பாடு இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்த வேறெந்த பண்பாட்டினுடைய தொடர்ச்சியாகவும் இல்லை என்கிறார் ரோமிலா தாப்பர். இது பற்றி அவர் கூறுவதாவது: “இந்தோ-ஆரிய மொழி பேசியவர்களைப் போன்ற புதிய ஒரு குழுவினரின் வருகையையும் குடியேற்றத்தையும் வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் குறிக்கின்றன. காவி நிற மட்பாண்டங்களுக்கும் வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதுடன், இதில் பிந்தையது தொழில்நுட்ப ரீதியிலும் இதர வகையிலும் முன்னேறியதாக உள்ளது”. இப்பண்பாடு ஈரானில் தோன்றி ஸ்வாத் பள்ளத்தாக்கு வழியே இந்தியாவிற்குப் பரவியிருக்க வேண்டும் என ஈரானில் கிடைக்கின்ற தொல் எச்சங்களைக் கொண்டு அவர் முடிவு செய்கிறார்.

இவர்களுக்கும் ரிக் வேத ஆரியருக்குமான உறவையும், பண்பாட்டு வளர்ச்சி நிலையிலான வேறுபாட்டையும் காட்டுகின்ற ஒரு இலக்கியக் குறிப்பையும் ரோமிலா தாப்பர் சுட்டிக்காட்டுகிறார். சதபதப் பிராமணத்தில் வருகின்ற அக்குறிப்பு, புரு (குரு) குலத்தில் வந்த பரதன் என்ற மன்னன், அதே குலத்தைச் சேர்ந்த தொல்குடி மன்னனாகிய ராக்ஷஸ புருவைத் தோற்கடித்ததாகக் கூறுகிறது. பண்பாட்டு மட்டத்தில் வளர்ச்சியடையாதிருந்த புரு குலத்தவரை பண்பாட்டில் நன்கு வளர்ந்துவிட்ட அதே வம்சத்தைச் சேர்ந்த பரதன் வெற்றி கொண்டதாக அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

ரிக் வேத ஆரியர் ஈரானிலிருந்து கி.மு. 1500-1300 வாக்கில் இந்தியா வந்தபொழுது, இந்தியாவுக்கு வராமல் ஈரானிலேயே தங்கிவிட்ட ஒரு பிரிவினரே இப்புராண கால ஆரியர்கள். இவர்கள் அங்கிருந்த ஏலமைட் அரசின் வளர்ந்த பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி வளர்ச்சி அடைந்துவிட்டிருந்தனர். இதன் ஒரு முக்கியமான கூறாக, விலங்குகளைப் பலி கொடுத்து தீயிலிடுகின்ற இவர்களின் வழக்கம் சற்றே மாற்றமடைந்து பெயரளவுக்கு தானியங்களை வேள்வித் தீயிலிடுவதாக ஆகியது. இவ்வாறு வளர்ச்சியடைந்திருந்த இவர்கள் இந்தியா வந்தபோது இங்கிருந்த ரிக் வேத ஆரியர் வளர்ச்சியடையாமல் தங்களின் பழைய பண்பாட்டிலேயே இருந்ததையே சதபதப் பிராமணத்தில் வரும் குறிப்பு காட்டுகிறது. ரிக் வேத ஆரியருடன் மோதல் போக்கைக் கொண்டிருந்த யது குலத்தவர் இந்தப் புராண கால ஆரியருடன் மணவுறவு கொண்டு நட்புடன் இருந்தமை கவனத்திற்குரியது.

(10) இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்ட (Megalithic-Black & Red Ware)ப் பண்பாடு. கடல் வழியே கி.மு. 1000 வாக்கில் குஜராத் வந்த இப்பண்பாடு கர்நாடகம் வழியே கி.மு. 800 வாக்கில் தமிழகம் வந்தடைந்து. இரும்பு உலோகத்தைப் பயன்படுத்திய இப்போர்க்குடிகள் தமிழகத்தில் மருத நில விவசாயத்தைத் தோற்றுவித்தனர். சங்க இலக்கியம் காட்டுகின்ற நிலப்பிரபுத்துவ வாழ்வியலுக்கு இம்மக்களே அடிப்படை. இந்த இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படைப் பண்பாடு (Megalithic Culture), சவுதி அரேபியா, பாரசீக வளைகுடா, ஆப்பிரிக்காவின் நுபியா போன்ற இடங்களில் கிடைத்துள்ள கி.மு. 1000 க்கும் முந்தைய இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படைப் பண்பாடுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. “தென்னிந்திய இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படைப் பண்பாடு மத்தியத் தரைக்கடல் இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படைப் பண்பாட்டுக்கு நெருக்கமாக உள்ளது. இது மேற்காசியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குள் வந்திருக்கலாம். இந்த முற்பட்ட தொடர்பே இரு பிரதேசங்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவாக சமீப காலங்கள் வரையிலும் நீடித்துள்ளது” என்கிறார் ரோமிலா தாப்பர். கிறிஸ்டோப் வான் ப்யூரர் ஹைமன்டார்*ப், என்ற சமூக மானுடவியலாளர், தென்னகத்தில் உள்ள இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படைப் பண்பாடு, மத்திய தரைக்கடல் பகுதியிலும், காக்கசஸ் மலைகள் மற்றும் ஈரான் பகுதியிலும் உள்ள இதே பண்பாட்டுடன் ஒத்திருப்பதைக் கவனித்துள்ளார். மேலும் இந்த இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படைப் பண்பாட்டு மக்களின் பரவலுடன் திராவிட மொழிகள் பேசுவோர் பரவியுள்ள இடமும் ஒத்துப்போகிறது எனக் கூறுகிறார். எனவே, அறிஞர்கள் கருத்துப்படி சவுதியில் தோன்றிய இப்பண்பாடு ஆப்பிரிக்காவுக்கும் இந்தியா/தமிழகத்துக்கும் குடியேறியிருக்கவேண்டும். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்கிற சொல் வழக்கு தோன்றும் அளவுக்கு சுமேரிய ஊருக்(Uruk) பண்பாட்டு மரபைப் பின்பற்றி கோயில்களை நிர்மாணித்து வழிபாட்டுச் சடங்குகளுக்கே முக்கியத்துவம் தந்த இவர்கள், பண்பட்ட ஆரியக் குடிகளான புராண கால ஆரியக் குடிகளைப் போலவே பெயரளவு தானியங்களை தீயிலிட்டு வேள்வி செய்யும் பழக்கத்தையும் ஏலமைட் பகுதியிலேயே ஏற்றிருந்தனர்.

சற்றேறக்குறைய 150-200 ஆண்டுகள் இடைவெளியில் மேற்காசியாவிலிருந்து கடல் வழியே குஜராத் வந்து அங்கிருந்து கர்நாடகம் வழியே கி.மு. 800 வாக்கில் தமிழகத்தை வந்தடைந்த பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்ட (Megalithic-B&RW)ப் பண்பாட்டு மக்களுக்கும் ஸ்வாத் பள்ளத்தாக்கு வழியே கி.மு. 850 வாக்கில் வட இந்தியா வந்தடைந்த வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட (PGW)ப் பண்பாட்டு மக்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளைக் காண்போம்.

1) இரும்புப் பயன்பாடு உடைய போர்க்குடிகள்

2) நிலப்பிரபுத்துவ அரசமைப்புக்குப் பழகியவர்கள்

3) கண்ணனின் யது குலத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்

4) மருத நில விவசாயத்தையும் வணிகத்தையும் பிரதான தொழில்களாகக் கொண்டவர்கள்

5) மத்திய ஆசியாவின் பூர்வ குடிகளின் வலுவான நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த ஏலமைட் அரசின் தென் பகுதியில் இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்ட(Megalithic-B&RW)ப் பண்பாட்டினரும், வடக்குப் பகுதியில் புராண கால ஆரியர் எனப்படும் வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட(PGW)ப் பண்பாட்டினரும் அமைந்திருந்தனர்.

6) பண்பாட்டு அளவில் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்த இவ்விரு போர்க்குடிகளிடமும் நிகழ்ந்த சமயம் சார்ந்த பண்பாட்டுப் பரிமாற்றமாக நாம் ஒன்றைத் தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. விலங்குகளை பெருமளவில் பலியிட்டு வேள்வித் தீயில் இடுகின்ற ஆரியரின் பண்பாடு, பெயரளவுக்கு தானியங்களை வேள்வித் தீயில் இடுகின்ற புதிய மரபாக புராண கால ஆரியரிடம் மாற்றம் பெற்றுள்ளது. மேலும் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படாத விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்களை இவர்கள் ஏலமைட் பகுதியின் தொடர்பிலேயே பெற்றுள்ளனர். அதுபோலவே கோயில் வழிபாட்டில் மட்டும் முக்கியத்துவம் செலுத்தி வந்த ஏலமைட் சார்ந்த இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்ட (ஙங்ஞ்ஹப்ண்ற்ட்ண்ஸ்ரீ-ஆ&தர)ப் பண்பாட்டினர் பெரிய கோயில்களை நிர்மாணித்திருக்கின்ற போதிலும் பெயரளவுக்கு தானியங்களைத் தீயிலிடுகிற புராண கால ஆரியரின் வேள்விகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவையும் இன்னும் பலவும் ஆரியர்களும் கருப்பு நிற மேற்காசியப் பூர்வ குடிகளும் மேற்காசியாவிலேயே கலந்து விட்டதைக் காட்டுகின்றன. இந்தியப் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே இனவியல் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. அந்தந்தப் பிரதேசம் சார்ந்த இதர சாதி மக்களின் இனவியலுடனேயே அதிக உடன்பாடுகள் கொண்டுள்ளனர் என்கிற எட்கர் தர்ஸ்டனின் குறிப்பு கவனத்திற்குரியது.

7) அசுரர் எனக் கருதப்படும் வெள்ளை நிற செமிட்டிக் அசிரியரின் எழுச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கி.மு. 1000 வாக்கில் குடிப் பெயர்ந்தனர். ளமேற்கு ஆசியாவில் தற்போது இருக்கின்ற மக்கள் அந்தப் பகுதியின் வெப்பமான தட்பவெப்ப நிலைக்கே உரிய கரு நிறத்தில் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

இவ்வாறாக இவர்கள் குடிப் பெயர்ந்ததற்கான சூழலை ஆய்வு செய்வது நம்முடைய தீர்க்கப்படாதப் பல பிரச்சனைகளுக்கு திறவு கோலாக அமையும். எனவே அது பற்றி பார்ப்போம். கி.மு. 1000 வாக்கில் இவர்கள் குடிப்பெயர்வதற்கு சற்றே முந்தைய காலகட்டத்தில் அசிரியா (Assiriya), அக்காடியன் (Accadian), பாபிலோனியா (Babylonia), பொனீசியா (Phonecia) ஆகிய செமிட்டிக் மொழி பேசிய மக்களின் அரசுகளும் ஹிட்டைட் (Hittite), காசைட் (Kassite), மிட்டானி (Mittani), பிரிஜியா (Phirigiya) போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய மக்களின் அரசுகளும் மொழியியல் அறிஞர்கள் தொல்-திராவிட மொழியில் சேர்க்கலாம் எனக் கருதும் ஏலமைட் மொழி பேசிய கருப்பு நிற/கருப்பு நிற தலைமுடி கொண்ட மேற்காசியப் பூர்வ குடிகளின் ஏலமைட் (Elamite) அரசும் அக்கம் பக்கமாக நிலவிவந்தன.

மேற்காசியச் சமூகம் நெடிய பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியைக் கொண்டது. வளமான பிறை வடிவ நிலப்பரப்பான (Fertile Crescent) இப்பகுதியில் கி .மு. 11000 இல் நடூ*பியன் (Natufian) எனப்படும் உலகின் முதல் மேய்ச்சல் வாழ்க்கை தோன்றியது. இதன் வளர்ச்சிப் போக்கில் கி.மு. 8000 இல் புதிய கற்கால மேய்ச்சல் வாழ்க்கையைத் தோற்றுவித்தது. பின்னர் கி.மு. 7000 -6000 இல் சாட்டல் யுயுக் (துருக்கி), அலிகோஷ் (ஈரான்), ஜெரிக்கோ (பாலஸ்தீன்) போன்ற புதிய கற்கால நகர சமூகங்களைத் தோற்றுவித்தது. இதன் பின்னர் கி.மு. 6500 - 6000 இல் குறிஞ்சி நில ஹசுனா (Hassuna) பண்பாட்டையும் முல்லை நில ஹலா*பியன் (Halafian) பண்பாட்டையும் ஏலமைட் பகுதியில் தோற்றுவித்தது. இப்புதிய கற்கால மட்டத்திலேயே கி.மு. 6000 - 5500 இல் சமாரன் (Samaran) எனப்படும் மருத நில விவசாயப் பண்பாட்டைத் தோற்றுவித்தது. இதன் விரிவாக்கமாகவே சுமேரியப் பகுதியில் (தென் மெசபடோமியா) கி.மு. 5500 - 4300 வாக்கில் உபெய்து (Ubaid)ப் பண்பாடு தோன்றியது. மேற்படி பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சிக்கு உரிய மக்கள் அனைவரும் கருப்பர்களே என்பதைத் தொல்பொருள் தடயங்கள் காட்டுகின்றன. ளஇந்த வளர்ச்சிப் போக்கிற்கும் சங்க இலக்கியங்கள் காட்டுகிற திணைப் பாகுபாட்டுக்கும் தொடர்புண்டு. “முதற் கற்பு முல்லையே” என்று சங்க இலக்கியமும் தொடர்ந்து வந்த தமிழ் இலக்கியங்களும் கற்பை முல்லைத் திணையுடன் தொடர்புபடுத்திக் குறிப்பிடுவதை சமூகவியல் அறிஞர் திரு. S.D. நெல்லை நெடுமாறன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். ஏலமைட் அரசுப் பகுதியில்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் என்ற திணை சார்ந்த பண்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியுள்ளது. தமிழகத்திலோ ஐந்திணைகளும் ஒரே நேரத்தில் தோன்றியுள்ளதையே காண்கிறோம். இவ்வாறு மேற்காசியாவில் திணைகள் ஒன்றையடுத்து மற்றதாகத் தோன்றியபோது முல்லைத் திணையில்தான் தனியுடைமை முதன்முதலில் தோற்றம் கொண்டது. இது பெண்ணின் கற்பு நெறியை அவசியமாக்கியது. இதைத்தான் ‘முதற்கற்பு முல்லையே’ என்று சங்க இலக்கியமும் தொடர்ந்து வந்த தமிழ் இலக்கிய மரபும் குறிப்பிடுகிறது என நாம் கருத இடமுண்டு.

இக்காலகட்டதிற்குப் பின்னர் இப்பகுதிக்குள் ஐரோப்பாவிலிருந்து வெள்ளை நிற மத்தியத் தரைக் கடல் இனத்தவரின் (இவர்கள் கரு நிற தலைமுடி கொண்டவர்கள்) குடியேற்றத்திற்குப் பின் பண்பாடு மேலும் ஒருகட்ட வளர்ச்சியைப் பெற்று கி.மு. 4300 - 3200 வாக்கில் ஊருக் (Uruk) பண்பாடு தோன்றியது. இதையே பண்டைய சுமேரியப் பண்பாடு எனக் கூறுவர்.

கி.மு. 3200 இல் சுமேரிய ஆறுகளில் ஏற்பட்ட பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் ளஇப்பெருவெள்ள அழிவுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகின்ற மனு கதை உலகின் பல புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதுன மேற்காசியச் சமூகம் நிலை குலைந்து இருந்தது. இச்சூழலில் செமிட்டிக் இனத்தினர் குடியேறத் தொடங்கினர். இப்புதிய வெள்ளை இனத்தினருக்கும் பழைய பண்பட்ட கருப்பர்/கருப்புத் தலையினருக்கும் தொடக்கத்தில் மோதலும் பின்னர் இணக்கமும் ஏற்பட்டு ஊர் வம்சா வழி அரசுகளின் காலம் (Ur dynastic period) (கி.மு. 3000 - 2340) தோன்றியது. இந்த ஊர் வம்சா வழி காலகட்டம் வரை அப்பகுதியில் பேசப்பட்டு வந்த மொழிகள் திராவிடம் மற்றும் *பின்னோ-உக்ரியன் (சித்தியன்) மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

கி.மு. 3000 இலிருந்தே மேற்காசியாவின் பாலஸ்தீனம் வழியே கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறி அங்கிருந்த அரசுளிடம் அடங்கியிருக்கின்ற சார்புக் குடிகளாக இருந்த செமிட்டிக்குகள் கி.மு. 2340 இல் ஜார்கோன் என்பவனின் தலைமையில் அக்காடியன் என்ற முதல் செமிட்டிக் அரசைத் தோற்றுவித்தனர். ஒரு பணிப்பெண்ணின் மகனான ஜார்கோன் கிஷ் நகர அரசனின் அரண்மைனைப் பணியாளாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசனே முதன் முதலில் நிலமானிய முறையைத் தோற்றுவித்தான். ஜார்கோன் தொடங்கி வைத்த செமிட்டிக் எழுச்சி கி.மு. 2000 வாக்கில் சுமேரியாவின் மையப் பகுதியில் செமிட்டிக் மொழி பேசிய பாபிலோனிய அரசாக மாற்றம் பெற்றது. ளகி.மு.1872 இல் இயற்றப்பட்ட ஹமுராபி சட்டங்கள், “White should rule over the black-headed” என்கிறது. வர்ணம் - நிறம் சார்ந்த மேலாண்மை?ன இம்மாற்றத்தின் பின்னணி அரண்மனைச் சூழ்ச்சி (அகம்படியர் எழுச்சி) எனலாம்.

சமகாலத்தில் மேற்காசியாவின் அனடோலியா வழியே ஆரியரின் குடியேற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. இவர்களும் தொடக்கத்தில் அப்பகுதிகளில் இருந்த கருப்பர்/கருப்புத் தலையர்களின் சார்புக் குடிகளாக வாழ்ந்து பின்னர் அவ்வரசுகளைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த இயக்கப் போக்கில் கி.மு. 1400-1300 வாக்கில் ஹிட்டைட், மிட்டானி, காசைட், பிரிஜியா போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய அரசுகள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறுதான் திராவிட-சித்திய மொழிகள் பேசிய மக்கள் நிறைந்த மேற்காசியப் பகுதி செமிட்டிக், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பேசுகின்ற பகுதியாக மாறியது. எனினும் பண்டைய நாகரீகத்தின் முக்கியப் பகுதியாகிய ஈரானில் பல்வேறு பண்பாட்டு நிலைகளில் வாழ்ந்து வந்த கருப்பர்/கருப்புத் தலையர்களை ஒருங்கிணைத்து கி.மு. 3000 இல் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஏலமைட் அரசு மட்டும் செமிட்டிக் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழி மக்களால் பாதிக்கப்படாமல் கி.மு. 1200 வரை தொல் திராவிட மொழியையே பயன்படுத்தி வந்துள்ளது.

கி.மு. 10000 இல் தொடங்கி சுமேரியப் பெருவெள்ள அழிவுக்கு முன்னரும் பின்னரும் ஏற்பட்ட பல நெருக்கடிகளைக் கடந்து வளர்ந்திருந்த ஏலமைட் சமூகம் போர் முறையில் மிக உயர்ந்த நெறிகளை வகுத்துக் கொண்டிருந்தது. இச்சூழலில் மக்கள் வாழத் தகுதியற்ற சிரியப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பண்படாத செமிட்டிக் இன பாலை நிலக் கூட்டங்களை ஒருங்கிணைத்து கி.மு. 1600 வாக்கில் அசிரிய அரசு தோற்றம் கொண்டது.

பண்டைய மேற்காசிய மரபில் போரில் தோற்ற அரசனை கப்பம் செலுத்துகிற குறுநில மன்னனாக்கினர். இன்னும் பல போர் நெறிகளையும் கடைப்பிடித்தனர். ஆனால் அத்தகைய போர் நெறியைப் பழகாமல் பண்படாதிருந்த அசிரியர்கள், போரில் தோற்றவர்களை ஒட்டு மொத்தமாகத் துரத்தவோ அல்லது அடிமைகளாக்கவோ செய்தனர். இத்தகைய அசிரியர்களின் அரசு கி.மு. 1200 இல் வலுவான எழுச்சி பெற்றது. இதன் விளைவாக பண்பட்ட போர்க்குடி அரசுகளுக்குப் பெரும் நெருக்கடி தோன்றியிருந்தது. ஏற்கெனவே பல்வேறு பூர்வ குடிகளை ஒருங்கிணைத்து அமைந்திருந்த ஏலமைட் அரசு பெரிதும் பாதிக்கப்பட்டது. மேற்காசிய அரசியலில் கி.மு. 1200 முதல் கி.மு. 900 வரை ஏலமைட் அரசு குறித்த குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என வரலாற்றாசிரியர்கள் வியந்து கூறுகின்றனர்.

ஒரே அரசியல் அமைப்புக்குள் பல்வேறு பண்பாட்டு மட்டத்தில் இருந்த குடிகளை ஒருங்கிணைத்து ஏற்கெனவே அனுபவப்பட்டிருந்த ஏலமைட் அரச குலம் இப்புதிய நெருக்கடிச் சூழலில் அசிரியர்களின் தாக்குதலுக்கு எதிராக மற்ற பண்பட்ட போர்க்குடிகளை ஒருங்கிணைத்திருப்பர் எனக் கருதலாம். இந்த ஒருங்கிணைப்பில் இந்தோ ஐரோப்பிய மொழி பேசிய போர்க்குடிகளின் அரசுகள் சிலவும், செமிட்டிக் மொழி பேசிய பண்டைய பொனீசிய வணிகர்களில் சில பிரிவினரும், ஏலமைட் அரச குலமும் இணைந்திருக்க வேண்டும். ளசெமிட்டிக் மொழிக்கும் தமிழுக்குமான உறவுகளின் அடையாளம், சம்ஸ்கிருதத்துக்கும் செமிட்டிக் மொழிக்குமான உறவுகளின் அடையாளத்தைவிட வலுவானது என்று கால்டுவெல் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. வர்ணங்களின் பெயர்களைக் குறிக்கின்ற சம்ஸ்கிருதச் சொற்களான ப்ராமண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர என்ற சொற்களுக்கான வேர்ச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலோ அல்லது வேறெந்த இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலோ இல்லை.

இம்மூன்று வெவ்வேறு மொழிகள் பேசிய அரசுகளுக்குள்ளும் சுதந்திரக் குடிகள் பலவகை தொழில்களை மேற்கொண்டு, மாறுபட்ட பண்பாடுகளைக் கொண்ட குடிகளாக வாழ்ந்து வந்தனர். பொது எதிரியான அசிரியர்களை எதிர் கொள்ள வேண்டிய இப்புதிய சூழலில் சுதந்திரக் குடிகளுக்கு இடையில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில் இவர்களை ஒரே வகுப்பினராக மாற்றியமைக்கும் பணியை ஏலமைட்டுகள் மேற்கொண்டிருக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே மேற்காசிய அரசர்களும்/அந்தணர்களும் முறையே தங்களுக்குள் மொழி/நாடு கடந்து மணவுறவு கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். எனவே புதிய ஏற்பாட்டில் அந்தணர்களை ஒரு வகுப்பினராகவும், அரசர்களை மற்றோர் வகுப்பாகவும் சுதந்திரக் குடிகள் அனைவரையும் இன்னுமொரு வகுப்பாகவும் மாற்றுவதில் இடர்பாடு எதுவுமில்லை. இந்த ஒருங்கிணைப்பு ஏற்பாட்டுக்குப் பின்னரும் மேற்காசியச் சூழலில் அறப்போர் முறைகளை கைக்கொள்ள முடியாத இக்குடிகள் கி.மு. 1000 இல் இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் நோக்கிக் குடிப்பெயர்ந்தனர். இவ்வாறு குடிப்பெயர்ந்த போர்க்குடிகளே தமிழக இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்டப் பண்பாட்டினரும், வட இந்திய வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டினரும் ஆவர். ஏலமைட் அரசுப் பகுதிக்குள் ஆட்சியதிகாரத்தை இழந்த அரச குடிகள் ஏற்படுத்திய வர்ணப் பகுப்பின் எச்சமாகவே, ஈரானில் கி.மு. 700 இல் தோன்றிய ஜெண்ட் அவெஸ்தவில் சமூகம் மூன்று பிரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மற்றோர் அம்சம், பார்ப்பாருக்கு, ஜெண்ட் அவெஸ்த குறிப்பிடும் ‘அத்ரவன்’ என்ற சொல் தமிழில் ‘அந்தணர்’ என்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பாரசீகக் கிளை மொழியான பாசண்ட மொழியில் ‘அத்ரணன்’.

சங்க காலம் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எனக் கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.500-300 முதல் கி.பி.300 என வரையறை செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் தமிழ் மொழி செழுமை மிக்கதாயும் சமூகப் பிரிவினைகளைக் காட்டுவதாயும் இருக்கிறது; இதன் இலக்கணமான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் என்ற வர்ணப் பிரிவுகளும் அவற்றின் உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. காடழித்து நாடாக்கும் பணி நடைபெற்று மருத நில விவசாயம் தோன்றி செழித்துள்ளதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அக்கால தமிழக அரசியல் நிலைமைகள் கி.பி. 5-14 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அம்சங்கள் பலவற்றுடனும் விளங்கியுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத திணைப் பாகுபாடு என்ற சங்க கால சமூகத்தின் தனித்தன்மையையும் நாம் காண்கிறோம். சாதி முறையைக் கூட இந்தியாவைத் தவிர ஆப்பிரிக்காவிலும் கீழை நாடுகள் எனப்படுகின்ற ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் நாம் காணமுடியும். (காண்க: பக்தவச்சல பாரதியின் பண்பாட்டு மானுடவியல்.) எனவே, நமக்கு எழுகின்ற கேள்வி இதுதான்: சங்க இலக்கியங்கள் காட்டுகின்ற தமிழகத்தில் மட்டும் நாம் ஏன் திணைப் பாகுபாட்டைப் பார்க்கமுடிகிறது? இதற்கும் சாதிகளுக்கும் நேரடித் தொடர்புகள் ஏதும் இருக்க முடியுமா என்பது ஆய்வுக்குரியதெனினும் அதைவிடவும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற சாதிகளின் பெயர்களும் அவற்றின் உயர்வு தாழ்வும்தான். தமிழ் மொழியின் தோற்றத்தையும் சங்க இலக்கியங்களில் உள்ள திணைப் பாகுபாட்டையும் வர்ணத்தையும் சாதிப் பிரிவினைகளையும் இரும்புப் பயன்பாட்டு பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்டப் பண்பாட்டு மக்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது மேற்படி வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்கும்.

சாதி அமைப்பு முறைக்கும் கருப்பு நிற மக்களுக்குமான தொடர்பை உறுதி செய்கின்ற ஒரு சான்றை நாம் காண்போம். வரலாற்றின் தந்தை எனப்படும் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹீரோடோட்டஸ் (கி.மு.454) கிரேக்க நாகரீகத்திற்கு ஒப்பானதாக இந்திய மற்றும் எத்தியோப்பிய நாகரீகத்தைக் கூறியிருக்கிறார். வரலாற்றறிஞர் சக்கரவர்த்தி, இந்திய-எத்தியோப்பியப் பண்பாடுகளை ஒப்பாய்வு செய்த அறிஞர் ஜோன்ஸ் என்பாரை மேற்கோள்காட்டி, “எத்தியோப்பியாவும் இந்துஸ்தானமும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரே இனத்தினரால் காலனியாக்கப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார். இந்தியாவைப் போலவே எத்தியோப்பியாவிலும் பிறப்பினடிப்படையில் அமைந்த சாதிகள் இருக்கின்றன. கார்ல் மார்க்ஸ், வேலைப் பிரிவினை குறித்து விளக்கிச் செல்லுகிற போக்கில், “துண்டு துண்டான பணிகளை ஒரு மனிதனின் வாழ்க்கைத் தொழிலாக மாற்றுவது தொடக்க கட்ட சமுதாயங்களில் காணப்படும் தன்மையை ஒத்தது. அதாவது, தொழில்களை பாரம்பரிய முறையிலாக்குவது அவற்றை சாதிகளாகக் கல்போல் இறுகச் செய்துவிடும் அல்லது குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகள் சாதிகளின் தன்மைக்குப் பொருந்தாத ஒரு தன்மையை தனிமனிதனிடத்தில் கொண்டுவருமாயின் தொழிற்குழுக்களாக உறைந்திடச் செய்துவிடும். தாவரங்களுக்குள்ளும் விலங்கினங்களுக்குள்ளும் உட்பிரிவுகளையும் இனங்களையும் வேறுபடுத்துவதை ஒழுங்கு செய்கின்ற அதே இயற்கை விதிகளின் செயற்பாட்டிலிருந்தே மனிதர்களுக்கிடையில் சாதிகளும் தொழிற்குழுக்களும் தோன்றுகின்றன. ஒரேயொரு வேறுபாடு என்னவெனில், வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தை அடைந்துவிடும்போது, சாதிகளின் பாரம்பரியமும் தொழிற்குழுக்களின் ஒதுங்கிய தனித்தன்மையும் சமூகத்தின் சட்டமாக விதிக்கப்பட்டு விடுகிறது” என சாதிகளின் இயற்கையான தோற்றம் குறித்துக் கூறுவதுடன் இதற்கான அடிக்குறிப்பில் எகிப்து நாட்டின் சாதி முறை பற்றி, “கலைகளும் கூட ... எகிப்தில் ஒரு குறிப்பிட்ட அளவு துல்லியத்தன்மையை அடைந்துவிட்டன. அந்நாட்டில் மட்டுமே மற்ற வகுப்பினரின் விவகாரங்களில் கைவினைஞர்கள் எவ்வகையிலும் தலையிடமுடியாது. தவிரவும் அவர்களின் குலத்தில் சட்டப்படி பரம்பரையாக உள்ள அந்தத் தொழிலையே கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். மற்ற நாடுகளில் தொழிலாளர்கள் பல தொழில்களுக்கிடையிலும் தங்களின் கவனத்தைச் செலுத்துகின்றனர். அவர்கள் ஒரு நேரத்தில் விவசாயத்திலும் மற்றோர் நேரத்தில் வணிகத்திலும் இன்னும் மற்ற சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களில் ஆழ்ந்து விடுகின்றனர். சுதந்திர நாடுகளில் அவர்கள் அடிக்கடியும் தொழிற்கூட்டங்களில் மாறிமாறிச் சேர்ந்து கொள்கின்றனர்... மாறாக, எகிப்தில் ஒரு கைவினைஞர் அரச நிர்வாகத்தில் தலையிடுவாராயின் அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவாராயின் அவர் கடுமையாக தண்டிக்கப்பட்டார். இவ்வாறாக அவர்கள் தங்களின் தொழிலை மேற்கொள்வதைத் தடுப்பதற்கு ஏதுமில்லை .... மேலும், அவர்கள் தங்களின் முன்னோர்களிடமிருந்து எண்ணற்ற சட்டங்களை மரபுரிமையாகப் பெற்றிருப்பதனால் அவர்கள் அவற்றை மீறாமல் தங்களுக்கு சாதகமானதாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர்” (Diodorus Siculus; Bibl. Hist. I. 1.C., 74.) [from K. Marx. Das Capital. vol I.] என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

ஹீரோடோட்டஸ் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் குறிப்பிடுகிற எத்தியோப்பியா மற்றும் கார்ல் மார்க்ஸ் உதாரணம் காட்டியுள்ள எகிப்து ஆகிய ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் ஆரியர்கள் தலை கூடக் காட்டியதில்லை. எத்தியோப்பிய மற்றும் எகிப்திய மக்கள் வெட்டாய்ட் இனவியல் கூறுகளைக் கொண்டவர்கள். இந்தியாவில் பாண்டியர் தொடர்பான ஆதிச்சநல்லூர் கல்லறைத் தாழிகளில் கிடைத்துள்ள எலும்புகளின் மிச்சங்களை ஆய்வு செய்த தொல்லியல் துறை அறிஞர்கள் அவற்றில் கணிசமான விழுக்காடு வெட்டாய்ட் இனக்கூறுகளுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர். ஆப்பரிக்காவிலும் இந்தியாவின் ஆதிச்சநல்லூரிலும் வெட்டாய்ட் இனக்கூறுகள் இருப்பதுடன் இவ்விரு இடங்களிலும் சாதி முறையும் உள்ளது எதைக் காட்டுகிறது? மேலும், இந்தியா/தமிழகத்தில் இருப்பதைப் போலவே, ஆப்பிரிக்க நாடுகளிலும் கூட புவியைக் கடவுளாகக் கருதுவோரிடத்தில் மருமக்கள் வழியே நடப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி இன்னும் பல அறிஞர்களும் ஆரியர் அல்லாத மக்களுக்கும் சாதிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளனர். உலகில் ஆரியர் பரவிய இடங்கள் அனைத்திலும் சாதி முறை தோன்றவில்லை. ஆரியர் பரவாத கருப்பு மக்கள் மட்டுமே வாழுகின்ற பகுதிகளிலும் சாதிகள் உள்ளது.

கருப்பு நிற மக்களுக்கும் இரும்புப் பயன்பாட்டு பெருங்கற் படைப் பண்பாடுக்கும் கருப்பு-சிகப்பு மட்பாண்டப் பண்பாட்டினருக்குமான தொடர்பை நாம் ஏற்கெனவே கண்டோம். கி.மு. 1000 இல் பெருங்கற்படை - கருப்பு-சிகப்பு மட்பாண்டப் பண்பாட்டினரின் இந்தியக் குடியேற்றத்தை உறுதி செய்கின்ற விதத்தில் மேற்காசிய அரசியலில் கி.மு. 1200 முதல் கி.மு. 900 வரை கருப்பு நிறத்தவரின் ஏலமைட் அரசு பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என வரலாற்றாசிரியர்கள் வியந்து கூறுவதும் உள்ளது. வேந்தர்களும் வேளிரும் அருவாளரும் வட புறத்திலிருந்து வந்ததை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. இந்த அடிப்படையைக் கொண்டு நாம் மேலே செல்வோம்.

சாதி அமைப்பு முறை பற்றி நிலவிவருகின்ற தவறான பல கருத்துகளில் முக்கியமானது அது தேங்கிய ஒரு அமைப்புமுறை என்பதுதான். இக் கருத்து உண்மையெனில் நாம் விடையளிக்க வேண்டிய வினா இதுதான்: 2000 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித இயங்குதலுமின்றி, தீவிர முரண்பாடுகளும் மோதல்களும் வளராமல் ஒரு சமூக அமைப்பு இருக்க முடியுமா? இது விஞ்ஞானத்தை மீறுவதாக இல்லையா? எந்த ஒரு மூடிய அமைப்பும் அதன் உள்ளேயே குழப்பங்கள் விளைந்து அந்த அமைப்பு தகர்ந்திடும் என்ற விதி இந்தச் சமூக நிகழ்வுக்குப் பொருந்தாதா?

இந்த இடத்தில் சாதிச் சமூகம் இயக்கமற்ற தேங்கிய சமூகம் என்ற பொதுக்கருத்துக்கு மாறாக நடைமுறையிலிருந்த சாதிகளின் இயங்குதல் குறித்த உதாரணங்களை போகிற போக்கில் பார்ப்போம். அதற்கும் முன்பாக ரோமிலா தாப்பர் இது குறித்துக் கூறுவதைக் காண்போம். “தர்ம சாத்திரங்கள் போன்ற ஓரளவு மதச்சார்பற்ற இலக்கியங்களும் கூட பார்ப்பன ஆசிரியர்களையும் உரையாசிரியர்களையும் கொண்டுள்ளன. எனவே, அவை அவற்றின் வரலாற்றுரீதியான செயல்படு தன்மையைக் கருத்தில் கொள்ளாமல், அதிகாரத்திலிருப்போருக்கு சாதகமாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பொதுவாக, கடந்த காலம் குறித்த பார்ப்பனீய விளக்கத்தைப் பின்பற்றியுள்ளன. உதாரணமாக, இந்த ஆதாரங்களில் விவரிக்கப்பட்டுள்ள சாதி அமைப்புமுறை, இறுகிய சமூகப்படிநிலையாக முற்பட்ட காலத்திலிருந்தே திணிக்கப்பட்டு அதற்குப் பின்னர் நூற்றாண்டுகளுக்குப் பெரும்பாலும் இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது போலத் தெரிவதாக உள்ளது. இருப்பினும், சாதி செயல்பாட்டின் யதார்த்த நிலை இந்திய சமூகத்தில் நிறைய வேறுபாடுகளை அனுமதித்துள்ளது. இயற்கையாகவே சட்ட நூல்களின் ஆசிரியர்கள் அவற்றை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை”. ரோமிலா தாப்பர் வடஇந்திய சமூகத்தை இலக்கணமாகக் கொண்டு கூறியுள்ள போதிலும் தமிழகத்திற்கும் இது பொருந்தக்கூடியதுதான். தமிழச் சமூகத்தில் இருந்த சாதி அமைப்பு முறையிலும் அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சங்க கால நெய்தல் நில வலையர்கள், சோழர் காலத்தில் மீன்பிடித் தொழிலிலிருந்து விடுபட்டு குறுநில ஆட்சிக்குடியாகி முத்தரையர் என்றாயினர். காலப்போக்கில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு பின்னர் விவசாயக் குடியாகிவிட்டனர். இதுபோலவே கள்ளர், எயினர், வேடர் போன்ற சங்க கால பாலை நிலக்குடி (புறச்சாதி)கள் முதற்கட்டத்தில் தூசிப் படையாக, அதாவது ஆநிரை கவர்தல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு மறவர் ஆயினர். இவ்வாறு பழக்கப்படுத்தப்பட்ட மறவர்களில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அரண்மணைப் பணியாளர்களாக அதாவது அகம்படியர்களாக வைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களை ‘அகம்படியர்’ என்றும் ‘அகப்பரிவாரம்’ என்றும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஒட்டக்கூத்தரின் தக்கயாக்கபரணிக்கு சம காலத்திலேயே எழுதப்பட்ட சிறந்த உரை ‘அகம்படியர்’ என்பதற்கு ‘கோயிற்களிற் அணுக்கப் பணி செய்யும் பணி மக்கள்’ என்கிறது.ன இந்த அகம்படிகள் குதிரைப் படை வீரர்களாக இருந்ததால் ‘சேர்வை’ (சேர்வைராயன் மலை) எனப்பட்டனர். இந்த சேர்வை என்ற சொல் ‘சேவகன்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் திரிபாகும். இதற்கு இணையான தமிழ்ச் சொல்லான ‘பணி’ மற்றும் ‘சேர்வை’ ஆகிய இரண்டுமே கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொல்லான ‘சேவகன்’ என்பதே இங்லிஷில் குதிரை வீரனைக் குறிக்கின்ற இஹஸ்ஹப்ண்ங்ழ் என்ற சொல்லுக்கும் குதிரைப் படையயைக் குறிப்பிடுகிற Cavalier என்ற சொல்லுக்கும் அந்தப் படையில் இருப்போருக்குக் கிடைக்கின்ற ஆக உயர்ந்த பட்டமான Cavalry என்பதற்கும் அடிப்படை. இந்த குதிரை வீரர்கள் சேனாதிபதி பட்டம் பெறத் தகுதியுடையோராவர். அகம்படிகளிடத்தில் அரசன் மகட்கொடை பெற்று அம்மகட்குப் பிறந்த பிள்ளைக்கு மருத நில ஊரை மானியமாகக் கொடுத்தான். இவர்களே ‘பிள்ளை’ என்று அழைக்கப்பெற்று ஊராட்சியையும் கொண்டிருந்தனர். ளஇன்றைய உயர்குடி வேளாளர்கள்ன இதைக் குறிக்கின்ற விதமாகவே “கள்ளர் மறவர் கனத்ததோ ரகம்படி, மெள்ள மெள்ள வெள்ளாளரானாரே” என்றொரு சொல்வழக்கு சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சாணார் என்றொரு சாதியை நாம் இன்றைக்குப் பார்க்கிறோம். 200 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சாதியினரைப் பார்த்தாலே தீட்டு என்ற நிலை பழைய திருநெல்வேலி மாவட்டம தவிர்த்த பிற பகுதிகளில் இருந்தது. ஆனால் இதே சாதியினர் தாங்களே சூரிய-சந்திர குல க்ஷத்ரியர்கள் என்று கோரி வருகின்றனர். இதற்கு, கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், சங்க இலக்கியங்கள், கதைப்பாடல்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்ட Gazetteer, Manual போன்றவற்றை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். சங்க இலக்கியத்தில் ‘சான்றோர்’ என்று குறிக்கப்பட்டுள்ளதுதான் சாணார் என்றாகிவிட்டது என்று தெளிவாக நிறுவி தாங்களே ஆட்சிக் குடியினர் (க்ஷத்ரியர்) என்று கோருகின்றனர். மற்ற பல சாதிகளும் கூட க்ஷத்ரிய அந்தஸ்து கோருகின்ற போதிலும் சூரிய-சந்திர குல க்ஷத்ரியர்களாக வேறெவரும் கோருவதில்லை என்பது முக்கியத்துவமுடையது. மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் கூட சங்க இலக்கியத்தில் வருகின்ற ‘சான்றோன்’ என்ற சொல் போர்வீரனையே குறிக்கும் என்று நிறுவியுள்ளார். ‘சான்றோர்’ என்பது ஒரு சமூகப் பிரிவையே குறிக்கும் என வரலாற்றறிஞர் சதாசிவ பண்டாரத்தார் விளக்கியுள்ளார்.

மேலும் சங்க காலத்தில் நிலவிய சான்றோர் ஆட்சிக்குப் பின்னர் எற்பட்ட களப்பிரர் ஆட்சி ளஇந்த ஆட்சி வேளாளரின் ஆட்சி என்றொரு வலுவான கருத்து உண்டு என்பதுடன் 17 ஆம் நூற்றாண்டு அரித்துவாரமங்கலம் செப்பேட்டில் வேளாளர்கள் தங்களின் முன்னோர் என களப்பிரர்களைக் குறிப்பிட்டுக்கொண்டுள்ளனர்.ன பற்றி அக்காலத்தில் இயற்றப்பட்ட நீதிநெறி நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு,

“உறைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவிவெற்ப - அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்ப”


-என்கிறது. இதில் சான்றோர் ஆட்சி அகன்று நிரை அல்லாதோர், அதாவது தகுதியற்றோர் ஆட்சி செய்வதாயும் இது சுரைக்குடுவை நீரில் அமிழ்ந்து அம்மிக்கல் மிதப்பதற்கு ஒப்பானது என்கிறது. இதே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டதெனக் கருதப்படும் நாலடியார்,

“உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டு
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - கடைத்தலைக்
கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ்
மேலாய் நிற்கும் உலகு”


- என்கிறது. அதாவது நிலவுடைமையாளர்களான செல்வர்களும் சான்றோர்களும் தம்நிலையில் வீழ்ச்சியடைந்து புடைப்பெண்டிர் வாரிசுகளும் கீழோர்களும் பெருகிவிட்டதைக் குறிப்பிட்டு இது உலகம் தலைகீழாகிவிட்டதற்கு ஒப்பாகும் என்கிறது. இதை உறுதி செய்கின்ற விதத்தில் வேள்விக்குடி செப்பேடு, “அளவரிய ஆதிராசரை அகல நீக்கி அகலிடத்தை களப்பிர னெனுங் கலியரசன் கைக்கொண்ட தனை இறக்கியபின் படுகடன் முளைத்த பருதி போற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு” என்று குறிப்பிடுகிறது. (காண்க: பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) இவ்வாறாக ஆட்சிக் குடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சான்றோர் என்பதற்கு கற்றறிந்தோர் என்ற பொருள் பின்னாளில் வேளாள அறிஞர்களால்தான் கொடுக்கப்பட்டது. இதுவும்கூட சான்றோர்கள் கற்றறிந்தோராக, அதாவது ஆள்வதற்குரிய கல்விகளைக் கற்றறிந்தோராக இருந்ததிலிருந்து வந்திருக்கலாம். பண்டைய சான்றோர்களின் அரசாட்சியில் இருந்த ‘நாடாள்வார்’ என்ற பதவிதான் ‘நாடார்’ என்பதாக இன்றைக்கு நிலவிவருகிறது என்றும் வேறு பல ஆதாரங்களுடன் சான்றோர் சமூக வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். ஆட்சிக் குடியாக, க்ஷத்ரிய வர்ணத்தவராக இருந்தவர்கள் பார்த்தாலே தீட்டு என்ற நிலைக்கு ஆளானது பற்றிய விவரங்களை விரிவாக ஆய்வு செய்துள்ளனர். வரலாற்றறிஞர்கள் பலரும் இவர்களின் வாதங்களை மறுத்து, தங்களின் வாதத்தை நிலை நிறுத்த முடியாத நிலையை வரலாற்றுக் கருத்தரங்குகளிலும் தொல்பொருள் ஆய்வாளர்கள் சங்க அரங்குகளிலும் கல்வெட்டியல் கழக அரங்குகளிலும் பழங்காசுகள் குறித்த அரங்குகளிலும் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

அதுபோலவே இன்றைக்கு தாழ்த்தப்பட்ட சமூகமாக உள்ள பறையர்கள் தங்களை “பார்ப்பானுக்கும் முந்திய பறையோன் கேட்பாரற்றுக் கீழ்ச்சாதி ஆனானே” என்று சொல்லிக் கொள்ளும் நிலையை நாம் பார்க்கிறோம். இதற்கு வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் இருப்பதை கல்வெட்டியல் கழக மாநாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சமர்ப்பித்த கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

வேளாளர்கள் இன்றைக்கு உயர் நிலையில் இருப்பதைக் காண்கிறோம். ஆனால்,ள வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரமும் மெய்யுபசாரமும் என்று நிகண்டுகள் பொருள் தருகின்றன. அதாவது நிலப்பிரபுக்களுக்கு மெய்யுபசாரம் உட்பட அனைத்துப் பணிகளும் செய்வோர்தான் வேளாளர்கள் என்பதாக இருந்த நிலையிலிருந்து ஒரு கட்டத்தில் பெரு நிலவுடைமைச் சாதியாக மாற்றம் பெற்றுள்ளதை நாம் காண்கிறோம்.

இவ்வாறு மேலிருந்த சாதிகள் கீழே போயின, கீழேயிருந்த சாதிகள் மேலே போயின என்ற நிலையிலும் அவரவரின் பண்பாட்டு வளர்ச்சி நிலையை அவரவரிடம் உள்ள வழக்குகளும் பழக்க வழக்கங்களும் காட்டுகின்றன. உதாரணமாக மணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் வெள்ளைச் சேலை கட்டுகின்ற வழக்கம் இன்றைக்கு சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பறையரில் பெரும் பிரிவினரிடம் உள்ளது. ஆனால் சமூகத்தின் மேல் அடுக்குகளில் உள்ள வெள்ளாளர்களில் பல பிரிவினரிடம் இந்த வழக்கம் இல்லை. பொட்டுக்கட்டும் வழக்கம் (கோயிலுக்கு பெண்களை நேர்ந்துவிடுவது) அடித்தட்டில் உள்ள பறையர்களிடம் இல்லை. மேல் தட்டில் உள்ள வெள்ளாளர்களிடம் உள்ளது ளகாண்க: கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்ன. மணப்பெண்ணை இடதுபுறமாக வைத்து தாலிகட்டும் பழக்கம் அடித்தட்டில் உள்ள பறையர்களிடம் உள்ளது. ஆனால் தாய்வழியிலேயே நின்று விட்ட பண்பாட்டைக் கொண்ட வேறு பல மேல் தட்டு சாதிகளிடம் வலது புறமாக வைத்துத் தாலி கட்டும் பழக்கமே உள்ளது. இன்றைக்கும் பல பெரிய சைவக் கோயில்களில் பறையருக்கு ஆண்டுதோறும் ஏதோவொரு நாளில் சிறப்பான மரியாதை அளிக்கின்ற வழக்கம் உள்ளது. இது ஏற்கெனவே இருந்த உயர் நிலையை அங்கீகரித்து செய்யப்படுகின்ற ஒரு சடங்காக மாறிவிட்டது. இவ்வாறாக நாம் பலவற்றைக் காணலாம். இத்தகைய பண்பாட்டு வேறுபாடுகள், பண்பாட்டு ரீதியில் வளர்ச்சியடைந்து மேல்தட்டில் இருந்த பிரிவுகள் தங்களின் சமூக உயர்நிலையை இழந்துவிட்ட போதிலும் பண்பாட்டு வளர்ச்சியில் பின்னுக்குச் சென்றுவிடவில்லை என்பதையும், பண்பாட்டு ரீதியில் கீழ் நிலையில் இருந்த சில பிரிவுகள் சமூகத்தில் உயர்நிலைக்கு வந்துவிட்ட போதிலும் பண்பாட்டு வளர்ச்சியில் மேல்நோக்கி வளர்ந்திடவில்லை என்பதையுமே சுட்டிக்காட்டுகின்றன. இதற்கொரு சிறந்த உதாரணமாக எகிப்தின் பாரோ மன்னர்களைக் குறிப்பிடலாம். வீரயுகப் பண்பாட்டு மட்டத்திலிருந்த சமூகத்திற்கு அரசனாக வந்துவிட்ட பின்னரும் பாரோ மன்னர்களிடத்தில் சகோதர சகோதரியரிடையில் மணம் புரிகின்ற இரத்த உறவு மண முறையே இருந்தது.

இவ்வாறாக சாதிய அமைப்பு முழுûயான இயங்குதலுடனே இருந்துவந்தது. அதே நேரத்தில் சாதிகளின் இத்தகைய இயங்குதல் போக்கு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் கட்டத்தில் முற்றாக நின்று போயிற்று. இதன் விளைவாகவே இயங்குதலற்ற, முற்றிலும் நெகிழ்வற்ற ஒரு அமைப்பாக சாதி அமைப்புமுறை அதன் குழப்பக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை இன்றைக்கு நாம் காண்கிறோம். சாதிய மோதல்கள் என நாம் பார்க்கின்ற விசயங்கள் இதன் விளைவுதான். ஆனால் இந்த இயங்குதல் போக்கு முடிவுக்கு வரத் தொடங்கியது மிக நெடுங்காலத்திற்கு முன்னரே என நாம் ஊகிப்பதற்கு ஆதரவாக வலங்கை-இடங்கை என்று சாதிகள் பிரிக்கப்பட்டமை உள்ளது. ளஇந்த வலங்கை-இடங்கை பிரிவினையைக் கூட பல்வேறு சாதிகளாகப் பிரிந்திருந்த மக்களை இரண்டே பிரிவுகளுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாகக் காணலாம்.ன எனவே தற்கால நிலைமைகளைக் கணக்கில் கொண்டு பாராமல் அன்றைய நிலைமைகளை வைத்தே சாதிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

வர்ணங்கள் அப்படியே சாதி ஆனதாக நாம் கருதுவோமாயின் அது மிகவும் பிழையானதாகும். பார்ப்பனர் என்ற வர்ணம் இன்றைக்கு ஒற்றைச் சாதியாக இல்லை. அதுபோலவே க்ஷத்ரியர்களும் ஒரே சாதியாக இல்லை. வைசியர்களிலும் பல்வேறு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். சூத்திரர்களில் சொல்லவே தேவையில்லை என்ற அளவுக்குப் பிரிவுகள் உண்டு. இவற்றில் உள்ள ஒவ்வொரு பிரிவும் தமக்குள்ளேயே மணவுறவைக் கொண்டுள்ளனவேயன்றி தம்மை ஒரே வர்ணமாக/சாதியாகக் கருதி மணவுறவு கொள்வதில்லை. வர்ணம்தான் சாதியாயிற்று என்று கருதுவோமாயின் நான்கே சாதிகள்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் நான்கு சாதிகளை மட்டும் பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் நாம் காண்கின்ற சாதிகளுக்கு அனுலோமம் பிரதிலோமம் என்ற கருத்தாக்கத்தை வைத்து விளக்கமளிக்கின்ற ஒரு அபத்தமான கோட்பாடு நிலவிவருகிறது. இது உண்மைக்கு மாறானது. இன்னும் சொல்லப்போனால் சாதிய முறையை பார்ப்பனர்கள்தான் தோற்றுவித்தனர் என்பதாகத் தோன்றச் செய்யும் பொருட்டே இந்த அனுலோமம் பிரதிலோமம் கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது. நிஷாத என்ற பழங்குடியினர் குறித்து ஆய்வு செய்த விவேகானந்த ஜா, பல தர்ம சாஸ்திரங்களில் உள்ள விளக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, “நிஷாதர்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த விளக்கம் முற்றிலும் சட்ட அடிப்படையில் செய்யப்பட்ட புனைவே. இது சட்டத்தினால் அனுமதிக்கப்படுகின்ற வர்ண அமைப்பு முறைக்குள் அவர்களைக் கொண்டு வரும் முயற்சியே” என்கிறார். வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட அனுலோமம் பிரதிலோமம்தான் சாதிகளின் பெருக்கத்திற்குக் காரணம் என்றிருக்குமாயின் இன்றைக்கும் ஏதாவது இரு சாதிகளின் கலப்பில் அனுலோமம் அல்லது பிரதிலோமத்தின்படி புதிய சாதிகள் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் யதார்தத்தில் புதிய சாதிகள் எதுவும் தோன்றவில்லை. இது ஏன்? இந்த அனுலோமம்-பிரதிலோமம் செயலாக்கத்தில் இருந்ததில்லை என்று வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் குறிப்பிட்டுள்ளதை அ.மா. பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

அடுத்து, அகமணமுறையே சாதிக்குக் காரணம் என்பது விசயத்தைத் தலைகீழாக வைத்துப் பார்ப்பதாகும். உலகம் முழுவதிலும் இனக்குழுக்களுக்குள் அகமணமுறையே நிலவிவந்தது. இனக்குழு என்பது பல புறமணக் குலங்களைக் கொண்டது. இத்தகைய இனக்குழுக்களின் உறுப்பினர்கள் இனவியல் ஒற்றுமையைக் கொண்டிருப்பர். இனக்குழுவை வரையறுத்துக் கூறுவது பயனுடையது. இனக்குழு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமையைக் கொண்ட, அத்தலைவனே அக்குழுவின் தலைமைப் பூசாரியாகவும் இருக்கின்ற, குழுவின் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் தாங்களே நிறைவு செய்து கொள்ளக்கூடிய, பல புறமணக் குலங்களைக் கொண்ட ஒரு கூட்டமைவு எனலாம். ஆனால் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களையோ பிற சாதியினரையோ நாம் அவ்வாறு காணமுடியாது. இனக்குழுக்கள் புறமணமுறையை அதாவது வேறு இனக்குழுவின் உறுப்பினர்களுடன் மணவுறவு கொண்டிருந்தால் அது இனக்குழுவாக நீடிக்க முடியாது. அடுத்த கட்டத்திற்கு வளர்ந்துவிடும். அப்படி வளர்ந்துவிட்ட நிலையில் இருந்த இந்தியப் பார்ப்பனர்கள் திடீரென்று தம்மைச் சுருக்கிக்கொண்டு தமக்குள்ளேயே எல்லா மணவுறவுகளையும் வைத்துக்கொண்டனர் எனில் அது காலச் சக்கரத்தைப் பின்னோக்கி சுழற்றுவதற்கு ஒப்பானது. மேலும், அதற்கான அவசியமும் சூழலும் என்ன? அவர்கள் அவ்வாறே செய்துகொண்டதாக வைத்துக் கொண்டால், மற்றவர்களும் அவர்களின் நடைமுறையைக் கைக்கொள்ளத் தலைப்பட்டது ஏன் என்பவை விளக்கப்படவில்லை. ‘போலச் செய்தல்’ என்பது தமக்குச் சாதகமானது என்றால் மட்டுமே அத்தகைய முறை கடைப்பிடிக்கப்படும். ஆனால் தமது விருப்பங்களுக்கு எதிரான ஒன்றை போலச் செய்தலின் மூலம் ஒருவர் பின்பற்றுவாரா என்பது கேள்விக்குரியது.

அப்படியானால் சாதிகளைத் தோற்றுவித்ததில் பார்ப்பனர்களின் பங்கே இல்லையா என்றொரு வினா எழுப்பலாம். சாதி என்பது டாக்டர். அம்பேத்கர் அவர்கள் சொன்னதைப் போல ஒரு அமைப்பு முறை. இந்த அமைப்பு முறை செயற்கையாக உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகத் தோன்றியதா? என்பதற்கும் அப்பால், இப்போது நாம் காண்கின்ற அளவில் பார்ப்பனர்களின் பங்கு குறித்துக் காண்போம்.

அரசாட்சிச் சமூகத்தில் எந்த ஒரு நிகழ்முறையாயினும் அரசனுக்கே முதலிடம்; பார்ப்பன முதன்மை பெயரளவுக்குத்தான். “தெய்வீக வழிபாட்டுடன் தொடர்புடைய, மதச் சடங்குகளைச் செய்கின்ற மற்றும் மத நூல்களைக் கற்பது குறித்த தங்களின் உரிமைகளை பார்ப்பனர்கள் விடாப்பிடியாகக் காத்துக்கொண்டனர். எப்படியிருப்பினும், நடைமுறையில் உண்மையான அதிகாரம் என்பது போர்வீரர்களான க்ஷத்ரியர்களிடமே இருந்தது” என்று இந்திய வரலாறு எழுதிய ருஷ்ய அறிஞர்கள் கூறுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க பார்ப்பன முதன்மையை வலியுறுத்துவோமாயின் பொருளாதாரம் அல்லது சொத்துடைமைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்ற அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மறுப்போராகிவிடுகிறோம். மேலும், அரசாட்சிக் காலத்தில் சமூக நிறுவனங்களை/சமூகத்தைப் பராமரிப்பதில் பலாத்காரத்தின் பங்கு ஏதுமில்லை என்று மறுத்துவிட முடியாது. தர்ம சாத்திரங்கள் அல்லது சமூகச் சட்டங்களை உருவாக்குவதில் பார்ப்பனர்களுக்குப் பங்குண்டு என்றாலும் அரசன் அல்லது ஆட்சிக் குடியினரின் ஏற்பின்றி அது நிலைபெற இயலாது.

இதுபற்றி, “பிராமணர்களே சாதியைப் படைத்தனர் என்னும் கோட்பாடும் அர்த்தமற்றதே; மனுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. பிராமணர்கள் பல வகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம் குற்றமிழைத்தவர்கள்தான் என நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதி முறையைப் பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல. அதற்குரிய துணிவோ, ஆற்றலோ அவர்களுக்குக் கிடையாது; சாதிமுறை பரவுவதற்குப் பிராமணர்கள் தங்களின் நயமான தத்துவங்களின் மூலம் துணை புரிந்திருக்கலாம். ஆனால் தங்கள் வரையறைக்கு அப்பால் தங்களுடைய திட்டத்தை உந்தித் தள்ளி நிச்சயமாக அவர்கள் புகுத்தியிருக்க முடியாது” என்கிறார் அம்பேத்கர். அதாவது க்ஷத்ரிய வர்ணத்தவரே இதைத் தீர்மானிக்கிறார்களே அன்றி பார்ப்பனர்கள் அல்ல என்பதுதான். இதைத்தான்,

“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்”


- என்கிறது குறள். இதன் பொருளை விளங்கிக் கொள்ள பெருமுயற்சி எதுவும் தேவையில்லை. திருக்குறளும் பல அறிஞர்களும் கூறியுள்ள இவ்வுண்மையை இருட்டடிப்பு செய்கின்ற அளவிற்கு இவர்கள் நினைத்துக் கொள்ளுகின்ற க்ஷத்ரியப் பெருமிதமும் பார்ப்பனர்களின் இடத்திற்குப் போட்டியிடுகின்ற மனப்பாங்கும் கண்களை மறைத்துள்ளது. அப்படியாயின் பார்ப்பனர்களின் பங்குதான் என்ன?

விஞ்ஞான அடிப்படையில் விசயங்களைப் பார்க்க வேண்டும் என்று அ.மா. முன்வைக்கின்ற கோட்பாட்டின்படி பார்ப்போமாயின், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் தங்களுக்குக் கீழ் என்றும் சொல்லி தங்களை அகமண முறைக்குள் சுருக்கிக் கொண்டுவிட்டால் சட்டமியற்றி ஆட்சி செய்துவருகின்ற அதிகாரத்தில் இருக்கிற ஆயுதந்தரித்த ஆட்சியாளர்கள் உட்பட ஒட்டு மொத்த சமூகமும் அதை ஏற்றுக் கொண்டுவிடுமா? இவ்வாறு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பிரிவினை எவ்வளவு காலத்திற்கு ஒரு சமூகத்தில் நீடிக்க முடியும்?

இந்தியாவில் சாதிகள் என்ற தனது ஆய்வுரையில், “நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதெல்லாம் சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே நெடுங்காலமாகச் சாதி நிலவி வருகிறது. ஆனால் அவர் சாதிமுறை நல்லதெனக்கூறி அதற்குத் தத்துவமளித்து நிலைநிறுத்திய பணியைச் செய்திருக்கிறார். இன்றுள்ள நிலையில் காணப்படும் இந்து சமுதாயத்தை மனு உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது; தன்காலப் பழக்கத்திலிருந்த சாதி வழக்கங்களை விதிகளாகத் தொகுத்தமைத்துச் சாதி தருமத்தைப் போதித்ததோடு மனுவின் பணி முடிந்தது. மிகப்பெரிய அளவில் பரவி வளர்ந்துள்ள சாதி முறையைத் தனிமனிதனின் சக்தியாலோ, தந்திரத்தாலோ அல்லது ஒரு வர்க்கத்தாலோ சாதித்திருக்க முடியாது” என்கிறார் அம்பேத்கர்.

தங்களின் ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் சதாஸôரம் என்ற பெயரிலும் வர்ண-சாதி அமைப்புக்கு தத்துவ நியாயங்கள் வழங்கி சமூகத்திலான தங்களின் மேல் நிலையைக் கொண்டு, விசயங்களை வரலாற்றின் போக்கில் வளரவிடாமல் அவற்றை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக ஆக்கியதே பார்ப்பனர்களின் பங்கு எனலாம். இது மிகக் கொடிய குற்றமே. இந்து மதத்தில் மட்டுமின்றி கிறித்தவ, இஸ்லாமிய அடிப்படை நூல்களான பைபிளிலும் குரானிலும் மாற்றப்பட முடியாத விதிகள் இருக்கின்ற அதே நேரத்தில் கிறித்தவ மதத்தில் அவ்வப்போது போப்பின் தலைமையில் விஞ்ஞான விசயங்களை -வேறு வழியின்றிதான் என்றாலும்- அங்கீகரித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை காணப்படுகிறது. ஆனால், இந்து மதம் என்பது ஒரு ஒற்றை அடிப்படையைக் கொண்ட மதமாகவும் ஒற்றைப் பிரமாண நூலையும் ஒற்றை மத பீடத்தையும் கொண்டிராததால் இதில் சீர்திருத்தம் என்பதற்கு இடமின்றியே இருக்கிறது. இதைத் தெளிவாக விளக்கிக் கூறியதுதான் டாக்டர். அம்பேத்கர்-ன் முக்கியப் பங்களிப்பு எனலாம்.

ஆரிய இனப் படையெடுப்பு குறித்த கருத்துக்களை தெற்கே உருவான திராவிட இயக்கம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்காகப் பயன்படுத்திக்கொண்டது. திராவிடம் என்ற பொதுப் பெயரின் கீழ் அனைத்து சாதிகளையும் திரட்டிய வேளாளர்கள், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை பெருமளவு குறைத்துத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கே தாங்கள்தான் காரணம் என்று பிராமணர்கள் ஒரு மாயையைத் தோற்றுவிக்க நினைப்பது போலவே தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்குத் தாங்களே காரணமானவர்கள் என்பது போன்ற மாயையைத் தோற்றுவிக்க வேளாளர்கள் முயற்சித்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி தமிழிலக்கியங்கள் காட்டுகின்ற தங்களின் கீழான சமூக நிலையை மறைத்துக் கொள்ளும்பொருட்டு, தங்களின் மேலான நிலையை வலியுறுத்துவதற்காக பிற சாதிகளை கீழோராகச் சித்தரித்த அதே நேரத்தில், தமிழகத்தில் அரச (க்ஷத்ரிய) வர்ணத்தவரே கிடையாது என்றும் ஒரு பொய்யைப் பரப்பி வந்துள்ளனர். ளபாண்டிய மன்னர்கள் க்ஷத்ரியர் அல்லவெனில் க்ஷத்ரியப் பெண்களான திரௌபதி மற்றும் சாகுந்தலையை மணம் புரிய நிகழ்ந்த சுயம்வரங்களில் பாண்டியர்கள் கலந்துகொண்டதாக உள்ள குறிப்புகள் கூறுவது என்ன?

தமிழ்ச் சமூகத்தில் இருந்த வர்ணப் பிரிவுகளை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பியம் தெளிவாகக் கூறுகிறது. புறநானூறு (183), “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்” என்கிறது. இந்நான்கு பிரிவினரின் கடமைகளையும் உரிமைகளையும் தொல்காப்பியம் தெளிவாக வரையறுத்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலையும் 10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகரம், பிங்கலம் போன்ற நிகண்டுகளும் இந்நான்கு பிரிவினரின் உரிமைகளையும் கடமைகளையும் குறித்துள்ளது. மேலும் சங்க இலக்கியங்கள் உயர்ந்த சமூகமாகக் காட்டுகிற பல பிரிவினரை வேளாள வரலாற்றாசிரியர்கள் எங்ஙனம் சித்தரித்துள்ளனர் எனக் காண்போம்.

தொல்காப்பியர் கூறும் வர்ண அமைப்பு பற்றி தன் போக்கில் விளக்குகின்ற வே. கனகசபைப் பிள்ளை தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற நூலில் தொல்காப்பியத்தைக் குறிப்பிட்டு, “இதுதான் தமிழர்களை தங்கள் சாதி அமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்” என்கிறார்.

வேளாளர் நாகரீகம் என்ற நூலில் மறைமலையடிகள் என்ற வேதாசலம், “தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரீகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்” என்பார். அப்பதிணென் வகுப்பினர், கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன. இச் சாதிகளை பலபட்டடைச் சாதிகள் என்றும் கூறுகிறார். இது இவர்களின் சாதிவெறியை அல்லவா காட்டுகிறது. ஏனெனில் இவர் குறிப்பிடுகின்ற சாதிகள் சங்க இலக்கியத்தில் உயர்ந்தவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. “துடியன், பாணன், பறையன், கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே” என்கிறது புறநானூறு. பறையர்களில் ஒரு பிரிவாக உள்ள அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். (“பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” -தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் ‘வேட்கோவர்’ என்று குறிப்பிடுகிறது. வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல. அந்தணப் பிரிவில் இருந்தனர். விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொள்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு. அதுதான் புகழ்பெற்ற ‘சித்தூர் ஜில்லா அதாலத்’ எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளமையும் கவனத்திற்குரியது. இந்த இடத்தில் மரபாக இருந்து வருகின்ற சில சமூக மோதல்களை நாம் கவனத்தில் கொள்வது ஆர்வத்திற்குரியது. அதாவது தமிழ்ச் சமூகத்தில் கம்மாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் மட்டுமின்றி, பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்கும் இடையில் தாங்களே உண்மையான அந்தணர்கள் என்கிற சண்டை தொடர்ந்து இருந்துவந்துள்ளது. அதுபோலவே பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் இடையிலும் சண்டை இருந்துவந்துள்ளது. இவற்றையும் விட குறிப்பிடத் தகுந்தது என்னவெனில் வேறெந்த சாதிகளும் தாங்கள் பார்ப்பனர்கள் என்று கோருவதில்லை என்பதுதான். நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். ளஇன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் ‘பட்டர்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.ன அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், “அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு” என்கிறார்.

இவை இங்ஙனமிருக்க வேளாளர்களை நான்காம் பிரிவினராக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்கிறது தொல்காப்பியம். இதன்பொருள், மணவினைச் சடங்குகள் இன்றி இருந்த நான்காம் வர்ணத்தவரான வேளாளர்களுக்கு மணவினைச் சடங்குகள் பின்னர் ஏற்படுத்தப்பட்டன என்பதாகும். ளமனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு திருமணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். மேலும், கேரள நாயர்களும் தமிழக வெள்ளாளர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாக மானுட இனவியலாளர் கருதுகின்றனர். கேரள நாயர் பெண்களின் மண முறை அனைவரும் நன்கு அறிந்ததே.ன இவ்வாறு வேளாளர்களுக்கு மணவினைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டு இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டதால் அவர்களும் குடி என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவ்வாறு குடி என்கிற நிலைக்கு மிகவும் பிற்காலத்தில் வந்ததாலேயே விவசாயத்தில் ஈடுபட்ட வந்த வேளாளர்களை அடியொற்றியே உழுதுண்ணும் விவசாயிகளை ‘குடியானவன்’ என்று சொல்லுகின்ற வழக்கு நிலைபெற்றது போலும். பறையர் போன்ற சாதிகள் ஏற்கெனவே ஆண் வழியில் அமைந்த குடிகளாக இருந்த நிலையை சங்க இலக்கியம் காட்டுகிறது. மேலும் வேளாளர்களின் நிலையை விவரிக்கிற விதத்தில் வேளாளர்கள் மாடுகளை ஏரில் பூட்டலாமேயன்றி வண்டியில் பூட்டக்கூடாது என்று பரிபாடல் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

வேளாளர்கள் காராளர்களாகி நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குலத்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், “நீடு சூத்திர நற்கு லஞ்செய் தவத்தினால்” (இளையான்குடி நா.பு-1) எனவும் “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல” (வாயிலார் நா.பு.-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார். வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, ‘சதுர்த்தர்’ என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், ‘இருபிறப்பாளர்க் கேவல் செயல்’ என்கிறது. வேளாளர் பத்துவகைத் தொழிலில் ‘ஆணைவழி நிற்றல்’ என்றுரைக்கிறது. அடுத்து வந்த பிங்கலந்தை நிகண்டு, வேளாளர் பத்துவகைத் தொழிலில் ‘ஆணை வழி நிற்றன்’ என்கிறது. மிகவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட வீரமாமுனிவரின் சதுரகராதி, சூத்திரர் தொழில், ‘மூவர்க்கேவல் செயல்’ என்கிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை வேளாண் வாகையில் ‘மூவர்க்கு ஏவல்’ வேளாளரின் கடமையென்கிறது. தொல்காப்பியம் ‘வேளாண் பெருநெறி’ என்று குறிப்பிடுவதன் பொருள் விருந்தோம்பல். இதில், உபகாரம் மட்டுமின்றி உடல் ரீதியான மெய்யுபசாரமும் அடங்கும் என்பதை பாரதி தீபம் நிகண்டு குறிப்பிடுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் நெல்சன் என்ற ஆங்கிலேயர் தொகுத்த Madura Manual-இல் கார்காத்த வேளாளர் வீட்டுப் பெண்கள் தங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு மெய்யுபசாரம் செய்வதைப் பதிவு செய்துள்ளார்.

இத்தகைய தங்களின் நிலையை மறைத்து, தாங்களே தமிழக அரச குலத்தவர் என்பது போன்ற மாயையை வெள்ளாள வரலாற்றாசிரியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் கிடையாது, பார்ப்பனர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரரே என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் வேந்தர்களுக்கு மகட்கொடை கொடுத்ததைக் குறிப்பிடுவர். வேளாளர்களிடம் பெற்ற மகட்கொடை என்பது முறையான மணவுறவு அல்ல. மகட்கொடையாக வந்த வேளாளப் பெண் பட்டத்து ராணி ஆகிடமுடியாது என்பதும் வேளாளர் பெண் கொடுக்கவேண்டுமே தவிர அரச குடியிலிருந்து பெண் எடுக்கமுடியாது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விசயங்களாகும். இவ்வாறாக, தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருந்ததை நாம் இலக்கிய மற்றும் பிற ஆதாரங்களின் வாயிலாக அறிகிறோம். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க தமிழ்ப் பேரா. ஜார்ஜ். எல். ஹார்ட், “இந்தோ-ஆரியப் படைப்புகள் தங்களின் முக்கியமான பொருள்களையும் மரபுகளையும் தென் நாட்டாரியல் வழக்குகளிலிருந்து பெற்றுக்கொண்டதை (தமிழிலிருந்து நேரடியாக அல்ல) என்னால் மெய்ப்பிக்க முடிந்தது” என்று குறிப்பிடுகிற அளவுக்கு தமிழிலக்கியங்களில் கூறப்படும் மரபுகள் நடைமுறையில் இருந்துள்ளன. நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போல தமிழகத்தில் சட்டமாக எழுதிவைக்கப்படாத போதிலும் மரபாகப் பின்பற்றப்பட்டுவந்துள்ளவை, வட இந்தியாவில் தர்ம சாஸ்திரம் என எழுதிவைக்கப்பட்டுள்ள பிறகும் அதிகமும் மீறப்பட்டுள்ளன.

இதில் நான்காவது பிரிவினராக இருந்த வேளாளர்கள் திராவிட இயக்கம் என்ற பெயரில் தங்களை முன்னிறுத்திக்கொண்டு என்றைக்குமே எவருக்கும் தொண்டூழியம் புரிந்திராத தமிழ்ச் சாதிகளின் நலன்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். இந்நிலையில் செத்துப்போன வெள்ளாளர்-பார்ப்பனர் சண்டைக்கு மீண்டும் உயிர்கொடுப்பதைவிட களத்தை மாற்றி தலித் மக்களின் மேம்பாட்டுக்காக சாதிப் படிநிலையில் தற்போது மேலேஉள்ள பார்ப்பனரையும் ஆதிக்கத்தில் உள்ள பிற சாதிகளையும் சேர்த்து எதிர்த்துப் போராடுவது பயனுடையதாக இருக்கும். மாறாக, மீண்டும் பார்ப்பன-வேளாள மோதலை ஊதிப்பெருக்குவது தாழ்த்தப்பட்ட மக்களை களத்திலிருந்து வெளியே தள்ளி வைப்பதாகவே இருக்கும். திராவிட மாயையில் சிக்கி இருந்த மற்றைத் தமிழ்க் குடிகளுக்கு திராவிட இயக்கத்தினால் கிடைத்த பயன்கள் வெகுகுறைவே. இதுதான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கென தனி இயக்கம் காண வித்திட்டது என்றால் அது மிகையல்ல.

(இக்கட்டுரை 2005ஆம் ஆண்டின் இறுதியில் எழுதப்பட்டது. இக்கட்டுரையின் ஆதாரமான விசயங்களுக்கும் தகவல்களுக்கும் ஆய்வாளர் த.தங்கவேல், தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், சமூகவியல் ஆய்வாளர் திரு. எஸ்.டி. நெல்லை நெடுமாறன் ஆகியோரின் கட்டுரைகளே மூலாதாரங்களாகும். அவர்களின் பேருழைப்பின்றி இது சாத்தியமில்லை. அவர்களுக்கு நன்றி.)

pravaahan@sishri.org

Anichcha (அநிச்ச) did not Publish...

SISHRI Home