இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
தீபாவளியான தீபத்‌ திருநாள்‌
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்.)
மரபு

“தீபாவளி குறித்துத்‌ தமிழகத்தில்‌ பல்வேறு கருத்துகள்‌ உள்ளன. வரலாற்று ரீதியாக, பார்க்கும்போது, இதுதான்‌ சரியானது!” என எதையும்‌ அறுதியிட்டுக்‌ கூறிவிட முடியாது. இருந்தாலும்‌ இந்தப்‌ பண்டிகை‌ குறித்து ஏராளமான இருப்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்‌.

இந்தியப் பண்டிகைகளை சமயம் மற்றும் வட்டாரம் சார்ந்தவை என இரு வகைப்படுத்தலாம். சுடலை மாடன், அம்மன் கோவில் விழாக்கள் வட்டாரம் சார்ந்தவை. ஓணம், திருக்கார்த்திகை போன்றவை மதம் மற்றும் பிரதேசம் சார்ந்தவையாக உள்ளன.

குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்‌ முருகன்‌. ’பெரும்பொழுது’ என்பது அதற்குரிய பருவம்‌. அதாவது... ஐப்பசி, கார்த்திகை. குறிஞ்சி நிலப்‌ பகுதியான மலைப்‌ பிரதேசத்தில்‌ கார்த்திகை மாத முழுநிலவு (பவுர்ணமி) நாளில்‌, விளக்குகளை வரிசையாக ஏற்றி, நெருப்பு வடிவ முருகனை வழிபடுவதுதான்‌ கார்த்திகைத்‌ தீபத்‌ திருவிழா.

ஒளி மாலை

’அகநானூறு’ 11-ம்‌ பாடல்‌ ”கலிகொள்‌ ஆயம்‌ மலிபு தொகுபு எடுத்த அஞ்சுடர்‌ நெடும்‌ கொடி” எனக்‌ கூறுகிறது. அதுபோல்‌, 185-வது பாடல்‌, “அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்‌, திருவிழா விளக்கம்‌” என்று குறிப்பிடுகிறது. 141-வது பாடலில்‌, “மழைகால்‌ நீங்கிய மாக விசும்பின்‌ குறுமுயல்‌ மறுநிறம்‌ கிளர... மதி நிறைந்து அறுமீன்‌ சேரும்‌ அகல்‌ இருள்‌ நடுநாள்”' என்ற குறிப்பும்‌ காணப்படுகிறது.

மலைப்‌ பகுதியில்‌ மாலை போல தொடர்ச்சியாக விளக்குகள்‌ ஏற்றி வைத்து, கார்த்திகை தீபத்‌ திருவிழாக்‌ கொண்டாடுவது மரபு. தீபாவளி (தீப ஆவளி) என்றாலும்‌, தீபங்களின்‌ வரிசை அல்லது விளக்குகளின்‌ ஒளி மாலை என்பதுதான்‌ பொருள்‌.

துறவிகளின்‌ ஆண்டுத்‌ தொடக்கம்‌

பழங்காலத்தில்‌ முனிவர்கள்‌ ஒரே இடத்தில்‌ 3 நாட்களுக்கு மேல்‌ நிலையாகத்‌ தங்கமாட்டார்கள்‌. ஆனால்‌, மழைக்‌ காலத்தில்‌ மட்டும்‌ மடாலயங்களில்‌ 4 மாதங்கள்‌தங்கிக்கொள்வார்கள்‌. இதை 'சாதுர்‌ மாஸ்ய விரதம்‌' என்பார்கள்‌.

மழைக்கால முடிவின்‌ அடையாளமாக கார்த்திகை மாதத்தின்‌ கடைசி நாள்‌ இரவில்‌ ஒளித்‌ தீபங்கள்‌ ஏற்றி துறவிகள்‌ விரதத்தை முடித்துக்கொள்வார்கள்‌. மறுநாள்‌... மடாலயத்தின்‌ அடியார்கள்‌ மற்றும்‌ துறவியர்களுக்கும்‌, யாத்திரை புறப்படுகிற மடாலயத்தின்‌ பரிவாரத்தாருக்கும்‌ மக்கள்‌ தேவையான பழங்கள்‌, உணவுப்‌ பொருள்கள்‌ போன்றவற்றை வழங்கி அனுப்பி வைப்பார்கள்‌.

இதை, ”அறுமீன்‌ பயந்தஅறம்செய்‌ தங்கள்‌ செல்‌ சுடர்‌ நெடுங்கொடி” எனச்‌ சங்ககால ’நற்றிணை'ப்‌ பாடல்‌ (202) உறுதிப்படுத்துகிறது. “சுடர்‌ நெடுங்கொடி' என்றால்‌, ’தீபங்களின்‌ வரிசை' என்று பொருள்படும்‌. பவுர்ணமியில்‌ மாதம்‌ முடிவதை 'பூர்ணிமாந்த’ என்பர்‌. அமாவாசையில்‌ மாதம்‌ முடிவது ’அமாந்த முறை’.

இதனையொட்டி மார்கழி முதல்‌ நாளை 'ஆக்ரஹாயனம்‌’... அதாவது, ஆண்டின்‌ தொடக்கம்‌ என்பார்கள்‌. கார்த்திகை மாதக்‌ கடைசி என்பது முழுநிலா நாளா அல்லது அமாவாசையா? என்ற கேள்வி எழுந்தது.

தானம்‌

சில துறவிகளின்‌ மடாலயப்‌ பிரிவினர்‌ மட்டும்‌ அமாவாசையை இறுதி நாளாகக்‌ கணித்து, அதைப்‌ பின்பற்றத்‌ தொடங்கினார்கள்‌. கார்த்திகை மாதத்து அமாவாசை அன்றும்‌, இப்பிரிவினர்‌ தீபத்‌ திருவிழா கொண்டாடத்‌ தொடங்கினர்‌.

’ஆக்ரஹாயனம்‌ அல்லது ஆக்ரயனம்‌' என்ற சடங்கு பற்றி கங்க-பல்லவ மன்னர்களின்‌ செப்பேடுகளில்‌ குறிப்புகள்‌ உள்ளன. பெங்களூர் பகுதியில்‌ உள்ள ஹொசக்கோட்டைச் செப்பேட்டில்‌, கார்த்திகை மாத பவுர்ணமியில்‌ சமணப்‌ பள்ளிக்கு நிலம்‌ தானமாக வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகையில்‌ கங்க வம்சத்து மாதவ மகாஅதிராஜர்‌ என்பவர்‌ ’ஆக்ரயனச்‌ சடங்கு' செய்தவர்‌ என்ற தகவல்‌ காணப்படுகிறது.

கார்த்திகை தீபத்‌ திருநாள்‌ அன்று ’அறம்‌ செய்தல்‌' எனப்படும்‌ பிறருக்கு 'தானம்‌' வழங்குதல்‌ சங்ககாலத்‌ தமிழகத்தில்‌ வழக்கில்‌ இருந்துள்ளது என்பதற்கு “அறம்‌ செய்‌ திங்கள்‌” என்ற 'நற்றிணை’ப்‌ பாடல்‌ பாடல்‌ வரி சான்றாகிறது.

’சீர்வரிசை' வழங்குவது... இடைக்காலத்‌ தமிழில்‌ ’பச்சைப்‌ புகுதல்‌' எனப்பட்டது. ’சீவகசிந்தாமணி' உரையில்‌ நச்சினார்க்கினியர்‌ இதைக் குறிப்பிடுகிறார்‌. கார்த்திகை மாத முடிவில்‌ மடாலயத்‌ துறவியருக்கும்‌, பரிவாரத்தாருக்கும்‌ ’சீர்வரிசை' கொடுத்து அனுப்புவது ’கார்த்திகைப்‌ பச்சை' என சோழர்‌ காலக் கல்வெட்டு கூறுகிறது.

வேறுபாடு

வட இந்தியாவில்‌ 'தீபாவளி' என்று சொல்லப்படுவது ’கார்த்திகம்‌' என்ற மாதத்தின்‌ அமாவாசை நாளாகும்‌. வட இந்திய - தென்னிந்தியப் பஞ்சாங்கங்களின் இடையில் சுமார்‌ 25 நாட்கள்‌ வித்தியாசம்‌ வரும்‌. இதன்‌ காரணமாகத்தான்‌ வட இந்தியாவில்‌ ’கார்த்திகம்‌' எனக்‌ கூறும்‌ மாதத்தை நாம்‌ 'ஐப்பசி' என்று கணித்துள்ளோம்‌.

இந்தப்‌ பஞ்சாங்கக்‌ கணிப்பு வேறுபாட்டால்தான்‌ ’தீபாவளி’ என்பது ஐப்பசி மாத அமாவாசை அன்றும்‌, ’கார்த்திகை தீபம்‌' என்பது கார்த்திகை மாத பவுர்ணமி நாளிலும்‌ தனித்‌ தனியாகக் கொண்டாடப்படும்‌ வழக்கம்‌ காலப்போக்கில்‌ தமிழ்நாட்டில்‌ வந்தது.

தஞ்சை மராட்டியர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ வட இந்தியப் பண்டிகை மரபுகள்‌ தமிழ்நாட்டின்‌ மரபுகளோடு கலந்ததன்‌ விளைவாக ’கார்த்திகம்‌' மாத அமாவாசை இரவில்‌ தீபங்களை ஏற்றியும்‌, பட்டாசுகள்‌ வெடித்தும் ஒளித்‌ திருவிழாவாக கொண்டாடும்‌ வழக்கம்‌ தமிழர்களிடையே அறிமுகமாயிற்று.

மராத்திய மாநிலத்தில்‌ தீபாவளிக்கு அடுத்த நாளில்‌, ’பாவ்பீஜ்‌' என்ற பெயரில்‌ தங்கைமார்களுக்கு மூத்த சகோதரர்கள்‌ பரிசுப்‌ பொருட்கள்‌ வழங்குவது மரபு.

சிவ வழிபாடு

சங்ககாலத்‌ தமிழகத்தில்‌ கார்த்திகை மாத முழுநிலா நாளில்‌ இரவில்‌ கொண்டாடப்பட்ட, கார்த்திகைத்‌ தீபத்திருவிழா, 'குறிஞ்சித்‌ திணை’யின்‌ போர்த்‌ தெய்வமான முருகனுக்குரியது. அதுவே, நாம்‌ கொண்டாடும்‌ தீபாவளியின்‌ வடிவம்‌.

இதைத்‌ “தொல்‌ கார்த்திகை நாள்‌ விளக்கீடு" என்று சொல்லலாம்‌. கி.பி. 7-ம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த திருஞானசம்பந்தர்‌ பாடிய 'தேவாரம்‌' திருமயிலைப்‌ பதிகத்தில்‌ கார்த்திகை தீபத்‌ திருவிழாவை இவ்வாறே கூறுகிறார்‌. இந்தத்‌ திருவிழா மயிலாப்பூர்‌ சிவன்‌ கோவிலில்‌ நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

எனவே, கி.பி. 7-ம்‌ நூற்றாண்டில்‌ கார்த்திகேயனாகிய முருகனின்‌ வழிபாட்டுக்‌ கூறுகள் ‌ சிவ வழிபாட்டில்‌ கலந்துவிட்டன எனத் தெரிகிறது. திருவண்ணாமலையில்‌ சிவ வழிபாடு தொடர்பான திருவிழாவாகவே கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

முருகன்‌, நெருப்புத்‌ தன்மையுடைய போர்க்‌ கடவுள்‌ ஆவான்‌. சிவ பெருமானும்‌ அடி... முடி காண இயலாத அனல்‌ பிழம்பு என்பதாலும், முருகனின்‌ தந்தையாக கற்பிக்கப்பட்டுவிட்டதாலும், இந்த மாற்றம்‌ மனதார மக்களால்‌ முழுமையாக ஏற்றுக்‌ கொள்ளப்பட்டுவிட்டது.

நரகாசுரன்‌ என்ற குலமுன்னோர்‌ (பித்ரு) நினைவு நாளாகப் பின்பற்றி இப்போது தீபாவளி கொண்டாடுகிறோம்‌. இதனால்தான், முன்னோருக்கு உரியதாகக்‌ கருதப்படும்‌ எள்ளில்‌ உருவான நல்லெண்ணெய்‌ தேய்த்து நீராடுகிறோம்‌. ‌

அமாவாசை என்பது முன்னோர்‌ நினைவாக திதி கொடுப்பதற்குரிய நாளாகும்‌. பவுர்ணமி என்பது தேவ மார்க்கத்துக்கும்‌, அமாவாசை என்பது பித்ரு மார்க்கத்துக்கும்‌ மிகவும்‌ முக்கியமானது. எனவே, இந்தப்‌ பண்டிகை முன்னோருக்குரியது என உணரப்பட்டது.

பலராமன்

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாள், அமாவாசைக்கு ஏழு நாட்கள் முன்னால் வரும். இதைக்‌ கேரள மாநிலத்தில்‌ ’வைக்கத்து அஷ்டமி’ என்ற பெயரில்‌ மக்கள்‌ கொண்டாடுவது வழக்கம்.

நாகர்கோவிலில்‌ உள்ள புகழ்பெற்ற நாகராஜா கோவிலின்‌ சார்பில்‌ அனந்தன்‌ கோவில்காடு என்ற காட்டுப்‌ பகுதியில்‌ இந்த விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாக தெய்வமான பலராமனை ’நாஞ்‌சில்‌ பனைக்‌ கொடியோன்‌' எனச்‌ சங்ககாலப்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. ’மகா சுக்கிலன்‌' என்ற பெயரும்‌ அவனுக்கு உண்டு.

வெள்ளை நிறத்தவன்‌ என்று இதற்கு அர்த்தம்‌. பெருமைமிக்க ஸ்ரீரங்கம்‌ ரங்கநாதர்‌ கோவிலில்‌ 'சொக்கப்பனை' கொளுத்தும்‌ விழா கார்த்திகை முழுநிலா நாளில்‌ நடைபெறும்‌. இது பலராமன்‌ தொடர்பான விழா என்பதால்தான்‌ வைணவத்‌ திருத்தலத்தில்‌ நடக்கிறது.

சொர்க்கத்தில்‌ ஆட்சி

திருமாலின்‌ ஓர்‌ அவதாரம்‌ பலராமன்‌ என்பது அனைவரும்‌ அறிந்ததுதான்‌! திருமால்‌ வழிபாட்டில்‌ கார்த்திகை மாத முடிவையொட்டி ’பிரபோதனி ஏகாதசி' என்ற நிகழ்வு உண்டு. மழைக்‌ கடவுளான இந்திரன்‌, மழைக்‌ காலமாகிய நான்கு மாதங்களில்‌ மட்டும்‌ சொர்க்கத்தில்‌ ஆட்சி புரிகிறான்‌.

அந்தப்‌ பருவத்தில்‌ திருமால்‌ நித்திரை சென்றுவிடுவார்‌ என்று புராணங்கள்‌ கூறுகின்றன. மழைக்கால முடிவையொட்டி, 'பிரபோதனி ஏகாதசி’ அன்று விழித்துக்‌ கொள்வார்‌ என்றும்‌, திருக்கோவில்களில்‌ 'சொர்க்க வாசல்‌' திறந்து அதன்‌ அதிபதியாக மீண்டும் திருமால்‌ பதவி ஏற்பார்‌ என்றும்‌ தெரிவிக்கின்றன.

கார்த்திகை மாத பவுர்ணமிக்கு நான்கு நாட்கள்‌ முன்னர்‌ 'பிரபோதினி ஏகாதசி வரும்‌. பஞ்சாங்கக்‌ கணக்கீட்டு வேறுபாடுகளால்‌ இந்த ஏகாதசி, மார்கழி மாதத்துக்கு மாற்றப்பட்டு ‘வைகுந்த (வைகுண்ட) ஏகாதசி' எனத்‌ தற்போது வழங்கப்படுகிறது. மழைக்காலம்‌ முடிவதன்‌ அடையாளமாகக் கொண்டாடப்படும்‌ கார்த்திகைத்‌ தீபத்‌ திருநாளே இந்நிகழ்வுகளுக்கு எல்லாம்‌ அடிப்படையாக அமைந்திருப்பது மகிழத்தக்கது.

(நன்றி: வாராந்தரி ராணி - 23-10-2016)

sr@sishri.org

SISHRI Home