தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்
அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது.

கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார்.

இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார். அதற்காகத் தமிழியல் ஆய்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தக் கடமை உணர்வை வழிபாட்டு மனப்பான்மை என்று சொல்வது கட்டுரை ஆசிரியரின் வேளாளச் சார்பு நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்துக்கும் உரியவர்கள் வேளாளர்களே என்ற பம்மாத்து வேலை மறைமலை அடிகள் போன்றவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு க.ப.அறவாணன் போன்றவர்களால் இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இந்தியப் பண்பாட்டு, மரபு பற்றிய ஏளனமான பார்வையும், கிறிஸ்தவத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டுமென்றால் தம்முடைய மரபு குறித்த பெருமித உணர்வை இந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நீக்கிவிட வேண்டுமென்ற நோக்கமுமே அவருடைய செயல்திட்டத்துக்குப் பின்புலமாக அமைந்த அம்சங்களாகும்.

கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது. பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்.

காலின் மெக்கன்ஸி, பிரான்சிஸ் வைட் எல்லிஸின் நெருங்கிய நண்பர் என்பதோடு இவ்விருவரும் ஆய்வுப் பணிகளிலும் தம்முள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். காலின் மெக்கன்ஸியும் எல்லிஸ¤ம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். அவர்களுக்குக் கால்டுவெல்லைப் போல கிறிஸ்தவ மதப்பரப்பல் நோக்கம் இருந்ததில்லை. நல்ல நிர்வாகிகள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்ததால் அவர்கள் இந்த மண்ணின் மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் காலனி ஆதிக்க மனப்பான்மை சிறிதும் இருந்ததில்லை என்பதல்ல எமது வாதம். ஆளப்படுவோரின் வாழ்வியலை அனுதாப உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி அவர்களிடம் இருந்தது என்பதைத்தான் குறிப்பிட விழைகிறோம். கள ஆய்வு அனுபவங்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்தின.

கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.

மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் பற்றிய புராணக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் முதன் முதலில் இடம்பெறுகிறது. புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்து இரும்பு யுக நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமூகம் மாற்றம் அடைந்தபோது, நீரைத் தேக்கி பிரம்மாண்டமான நீர் நிலைகளை உருவாக்கிக் குடிநீர் மற்றும் நீர்ப் பாசன வசதிகளைப் பாண்டிய மன்னர்கள் மேம்படுத்தி அதன்மூலம் மழை பொய்த்த வறட்சிக் காலங்களிலும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வகை செய்தனர் என்ற வரலாற்றினை இது உணர்த்தக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் கரிகால் சோழன் என்றும், அவன் மேகத்தைச் சிறை செய்தது மாவு விற்கும் கிழவியின் வியாபாரத்தைக் காப்பதற்குத்தான் என்றும் தோன்றியிருக்கின்றன. தமிழக வரலாறு பற்றிய கால்டுவெல்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இதுதான்.

பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை. திராவிட இயக்கத்தாரின் தொடக்க கால கோஷங்களுக்கும், ‘தீ பரவட்டும்’ போன்ற இயக்கங்களுக்கும் கால்டுவெல் ஒரு முன்னோடியான உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. இதைத்தான் திராவிட இயக்கத்தின் “அறிவுலக வேர்கள்” என்று வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார் போலும்.

“ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழியாத் தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணியத்திற்குத் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று எழுதுவதில் இப்புலமைக் கருத்தாக்கத்தின் அழகியல் / அரசியல் வெளிப்பாட்டைக் காணலாம்” என வேங்கடாசலபதி குறிப்பிடுவதில் ‘அழகியல்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.

மகாபாரதத்தைத் தமிழில் இயற்றிய வில்லிபுத்தூராரின் மகனும், திருமுனைப்பாடி நாட்டுச் சனியூர் வீரராகவாச்சாரியார் பேரனுமான வரந்தருவார்,

ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்றேனையது
தன்னேரிலாத தமிழ்


- என்று பாடியுள்ள வாழ்த்துப்பாவில் இடம்பெறும் தமிழ்த் தெய்வ வழிபாடு ஆரியத்தோடு ஒட்டியும் உறழ்ந்தும் தன்மயமாக்கியும் வளர்ந்த தமிழின் திறத்தை வியந்ததே தவிர ஆரியம் உலக வழக்கு ஒழிந்த மொழி என ஒப்பிட்டுப் பெருமைப்படவில்லை. வெங்கதிரோனுக்கு நிகரான கோள் எதுவும் இல்லாதது போலத் தமிழுக்கு நிகரான வேறொரு மொழி (சமஸ்கிருதம் உட்பட) உலகில் இல்லை என்று வரந்தருவார் பெருமிதத்தோடு கூறுவது வெளிவேஷம் என்று சொல்லிவிட முடியுமா? தன்னேரில்லாத தமிழைப் போற்றிய வரந்தருவார் போன்றவர்களைக்கூட ஆரியர்கள் என்று பட்டங்கட்டி இருட்டடிப்புச் செய்துவிட்டுத் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்களைத் தமிழர்களின் தந்தையாகப் போற்றியதுதான் திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை. பிராம்மணர் எதிர்ப்பு / வேளாண் தலைமை ஏற்பு / அன்னிய-ஐரோப்பிய ஆதரவு ஆகிய அடிப்படைகளே திராவிட இயக்க அறிவுலக வேர்கள் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரைத் திராவிட இயக்க அறிவுலகப் பிரதிநிதிகளுள் ஒருவராக வேங்கடாசலபதி முன்மொழிவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் போன்ற திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வு முன்னோடிகளிடத்து திராவிட இயக்க அறிவுலக வேர்களைக் காண்பது அரைகுறையான புரிதலின் விளைவாக இருக்க வேண்டும் அல்லது ஆய்வு நேர்மை இன்மையின் வெளிப்பாடாக வே இருக்க வேண்டும். தாமஸ் டிரவுட்மனின் சொற்களிலேயே இதனைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“திராவிடச் சான்றோடு திராவிட இயக்கத் தோற்றத்தை நேரடியாகத் தொடர்புபடுத்துவது இரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளின் தாக்கத்தைப் புறக்கணிப்பதாகும். மேலும், திராவிட இயக்கம், தமிழ்நாட்டோடு நின்றுவிட்டது மட்டுமல்ல, அது பிராமண எதிர்ப்பையும் தன் தோற்றத்துக்கான முக்கியக் காரணமாகக் கொண்டிருந்தது. இவை திராவிடச் சான்றிலிருந்து நேரடியாக முகிழ்த்தவை அல்ல; மேலும், திராவிடச் சான்று குறித்த ஆய்வில் எல்லிஸ¤டன் ஈடுபட்ட சங்கரய்யா, பட்டாபிராம சாஸ்திரி ஆகியோர் தெலுங்கு பிராமணர்களாவர் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.” (பக்கம் 224.)

மொழியியல் கண்ணோட்டத்தில் திராவிட மொழிகள் என்ற அடையாளத்தைக் காணும் முயற்சியின் ஆரம்பகட்டத்தை தாமஸ் டிரவுட்மன் (மொழிபெயர்ப்பாளரின் சொற்களில்) “அடிமுடி காணும் கதையின் மகிழ்ச்சியான பகுதி” (பக்கம் 221) என்கிறார். “அதை (திராவிட மொழிகள் என்ற கருத்தாக்கத்தை) சங்கரய்யா எல்லிஸிடமிருந்து பெற்றாரா, எல்லிஸ் அவரிடமிருந்து பெற்றாரா என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. 1800ஆம் ஆண்டிலேயே - அதாவது எல்லிஸ¤க்கும் சங்கரய்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும் காலத்திற்கு முன்பே - திராவிடக் கருத்தையொத்ததொரு எண்ணத்தை எல்லிஸ் வெளிப்படுத்திவிட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் முடிவாகச் சொல்லக் கூடியது என்னவென்றால் திராவிடக் கருத்து என்பது சென்னையில் வாழ்ந்த பல அறிஞர்களினுடைய சிந்தனைகளின் இணைவின் விளைவு என்பதேயாகும்” (பக். 221-222) என்று டிரவுட்மன் சிறிதும் குழப்பமின்றித் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க அறிவுலக வேர்களுள் ஒருவரான மனோன்மணியம் சுந்தரனார் குறிப்பிடுவது போல, கன்னடமும் களி தெலுங்கும் துளுவும் தமிழிலிருந்து உதித்தவை அல்ல. திராவிட மொழியியல் நிபுணர்கள் திராவிட மொழிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி வகைதொகைப்படுத்தி ஆராய்ந்துள்ள கருத்தின்படி தமிழ் மொழி திராவிட மொழிகளிலேயே மிகவும் செம்மையான மொழியாகும். இந்தோ-ஆரிய மொழிகளில் சமஸ்கிருதம் பெற்றுள்ள இடத்தையொத்த நிலை இதுவாகும். சமஸ்கிருதத்தைவிட முற்பட்டது வேத கால ஆரிய மொழி. வேத கால ஆரிய மொழிக்கு முற்பட்டவை இந்தோ-ஆரியப் பிராகிருத மொழிகள். இது போன்றே, முந்து-தென் திராவிட மொழியிலிருந்து (அம்மொழி காலப்போக்கில் சிதைந்து வழக்கொழிந்துவிட்டது) துளு தனி மொழியாகவும் தமிழ், கன்னடம், மலையாளக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் (proto-Tamil) தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் முந்து-தமிழிலிருந்து கன்னடம் தனி மொழியாகவும், தமிழ்-மலையாள மொழிக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் மொழி தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் இதிலிருந்து மலையாளம் பிரிந்து சென்றுவிட்டதால் முந்து-தமிழ் மொழி தமிழ் மொழியாக நீடித்ததென்றும் மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.

வேறொரு சித்திரமும் சில திராவிட மொழியியல் அறிஞர்களால் தீட்டப்பட்டுள்ளது. துளுவும் தமிழும் கி.மு. 1000இல் முந்து-தென் திராவிடத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டுமென்றும் அதனையொட்டி முந்து-மத்திய திராவிடத்திலிருந்து தெலுங்கு கிளைத்திருக்க வேண்டுமென்றும் துளுவும் தெலுங்கும் உறவாடிக் கன்னடம் காலப்போக்கில் தனிமொழியாக உருவாகியிருக்க வேண்டுமென்றும் மொழியியல் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (தெ.பொ.மீனாட்சிசுந்தர கிராமணியார்), செக்கஸ்லோவேக்கியத் தமிழறிஞர் கமில் சுவலபில் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறிருக்க, வட இந்தியப் பிராகிருதம் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துதான் தோன்றின என்று கூறுவது எத்தகைய அபத்தமான, மொழிகளின் பரிணாம வளர்ச்சி முறைக்கு நேர்மாறான கண்ணோட்டமாக இருக்குமோ அது போன்றதே மனோன்மணியம் சுந்தரனாரின் கருத்தும் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரையும் கால்டுவெல்லையும் கண்மூடித்தனமாக வழிபடும் திராவிட இயக்கத்தாருக்குத் தற்காலத்து திராவிட மொழியியல் நிபுணர்கள் குறிப்பிடும் கருத்துகள் உவப்பானவையாக இரா. இக்கருத்துகளைப் படிப்பதால் அவர்களுக்கு ஓர் ஒவ்வாமைகூட ஏற்பட்டுவிடக்கூடும். அதற்காக எல்லிஸ் துரைமகனாரின் போற்றத்தக்க தமிழ்ப் பணிகளை வரிசைப்படுத்திக் கூறிவிட்டு போகிற போக்கில் திராவிட மாயைக்கு எதிரான கருத்தியலைப் பழித்து எழுதியுள்ளது வேங்கடாசலபதியின் ஆழ்மன அரிப்புகளை வெளிப்படுத்துகிறதே தவிர வேறொன்றுமல்ல.

வள்ளுவம் பற்றிய அயோத்திதாசப் பண்டிதரின் சில குறிப்புகளை மேற்கோள் காட்டும் வேங்கடாசலபதி, வள்ளுவர் குலத்தவர்கள் இன்றைக்குப் பறையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவாக இருப்பதையும், அவர்களே வானநூல், சோதிடம், மருத்துவம், இசை போன்ற துறைகளில் வல்லுனர்களாக இருப்பதையும், சமயத் தலைவர்கள் என்ற பொருளில் தரங்கம்பாடி ஆவணம் ஒன்றில் அவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அறிவாரா? இப்போது பறையராகக் கருதப்படும் அவர்களிடையே நிலவுகின்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்கும், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியத்திற்குச் சொந்தம் கொண்டாடும் உரிமை படைத்தவர்கள் அவர்கள் என்ற உண்மையை நிலைநாட்டுவதற்கும் ஆயத்தமாக உள்ளாரா? அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தராக மாறுவதற்கு மூல காரணமாக இருந்த பிரம்ம ஞான சபைத் தலைவர் ஹென்றி ஆல்காட் சிங்கள பெளத்தர்கள்பால் கொண்டிருந்த அளவுக்கு இலங்கைச் சைவத் தமிழர்கள்பால் பரிவு கொண்டிருக்கவில்லை. இலங்கைச் சைவத் தமிழர்களிடையே நிலவுகின்ற சாதி வேறுபாடு சிங்கள பெளத்தர்களிடையே இல்லை. வள்ளுவத்தையும், அயோத்திதாசரையும் போற்றுகின்ற வேங்கடாசலபதி போன்றவர்கள் இத்தகைய உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயாரா?