இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
கள ஆய்வு: மூன்றாம் குலோத்துங்கன் காலத்து பிரம்மசாத்தன் சிற்பம்
கோ. தில்லை கோவிந்தராஜன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
நாகை மாவட்டம் திருமணஞ்சேரிக்குக் கிழக்காக ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் பூலோகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தொன்மைமிக்க இக்கோயிலின் சிற்பங்களை அம்மாப்பேட்டை பி. கருணாநிதி, பாபநாசம் கலாநிதிமூர்த்தி, வெண்ணுகுடி ஆசிரியர் து. பழனிச்சாமி ஆகியோரும், நானும் ஆய்வு செய்தோம்.

இக்கோயில் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதனை இக்கோயிலில் காணப்படும் ஆறு கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆறாம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 1183-84) கல்வெட்டில், விருதராஜ பயங்கர வளநாட்டு இராஜராஜமங்கலத்து விக்கிரம சோழீஸ்வரமுடையார் என்று இவ்வூர் இறைவனுக்குப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவ்விறைவர் ‘பூலோகநாதர்’ என வழங்கப்படுகிறார்.

திருமணஞ்சேரியில் திருமணம் முடித்த இறைவர் பூலோகவாசிகளுக்கு உமா சகிதராகக் காட்சி தருவதாக இத்தலம் அமைந்துள்ளது. திருமணம் முடிந்து வரவேற்பு நடத்துவதுபோல் விளங்குவதால் இத்தலம் திருமங்கலம் எனப் பெயர் பெற்றதாக இப்பகுதி மக்களிடையே கதை வழங்குகிறது. உமா - மகேஸ்வரர் இருவரும் விடையின் (காளையின்) முன்னர் நின்றவாறு காட்சி தருகின்றனர்.

இத்தலத்தில் உள்ள, முருகனின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. இது முருகனின் பதினொரு திருவுருவங்களில் ஒன்றாகச் சிற்ப ஆகம நூல்களில் குறிப்பிடப்படும் பிரம்மசாத்தன் வடிவம் ஆகும். முருகன் மயில்மீது சுகாசனத்தில் அமர்ந்த நிலையிலும், வல முன்கை அபயஹஸ்தத்தில் வைத்தும், வலதப் பின்கையில் அக்கமாலை (உருத்திராக்கம்) ஏந்தியும், இடது முன்கையில் ஓலைச்சுவடி தாங்கியும், இடப் பின்கையில் வஜ்ராயுதம் தாங்கியும் காட்சி தருகிறார். முருகனின் தலையைக் கரண்ட மகுடமும், கழுத்தினை ஆரமும் அலங்கரிக்கின்றன.

இச்சிற்பத்தினை மாமல்லபுரத்தில் தர்மராஜரதம் என வழங்கப்படும் திரிமூர்த்தி குகையிலுள்ள பிரம்மசாத்தன் சிற்பத்துடன் ஒப்பிடலாம். தமிழகத்தில் பல்லவர் காலத்திலிருந்து முருகனைப் பிரம்மசாத்தனாக வழிபடுகிற மரபு தொடர்ந்துவந்துள்ளது என அறிய முடிகிறது.

திருமங்கலத்திலுள்ள பிரம்மசாத்தன் சிற்பம் பிற்காலச் சோழர் காலத்தைச் (கி.பி. 12-13ஆம் நூற்றாண்டைச்) சேர்ந்ததாகக் கணிக்க முடிகிறது. இக்கோயிலிலுள்ள பிற சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை கருவறை விமான கிரீவத்தின்கீழ் கொடுங்கைக் கீழே சிற்றுருவமாக வடிக்கப்பட்டுள்ள ஒரு சிற்பத் தொகுதியினைக் குறிப்பிடலாம். இச்சிற்பம், ஓர் அரசன் விக்ரமசோழீஸ்வரரை வழிபாடு செய்யும் காட்சியாகும். இவ்வரசன் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்.

இச்சிற்றுருவத்தைத் தவிர நுழைவாயிலில் உள்ள இரண்டு தூண்களில் இசைக் கருவிகளை இசைப்பவர்களின் சிற்றுருவச் சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. கருவறையின் அதிஷ்டானக் கண்டப் பகுதியில் பூவடிவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் பட்டுப் புடைவைகளில் புட்டா எனப்படும் அலங்கார வேலைப்பாடுகளில் இவை போன்ற பூ வடிவங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இக்கோயிலில் நின்ற கோலத்தில் காணப்படும் அக்னி தேவனின் சிற்பமும் குறிப்பிடத்தக்கதே. இரு கரங்களே கொண்ட அக்னிதேவன் வலக்கையில் சிருக் எனப்படும் ஹோமக் கரண்டியும், இடக்கையில் தாமரை மலரும் ஏந்திய நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

thillai@sishri.org


SISHRI Home