இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்!
ப்ரவாஹன்

(காலச்சுவடு, மார்ச் 2009 இதழில் க. திருநாவுக்கரசு எழுதிய சார்பற்றவரல்ல அறிஞர் அண்ணா கட்டுரைக்கான எதிர்வினை.)

1) திராவிட இயக்கச் சார்பின்றி அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்பதல்ல நமது எதிர்பார்ப்பு; அவரது செயல்களில் திராவிட இயக்கத்திற்கு - அரசியல் வகையில் - ஆதரவானவற்றை மட்டும் உலகுக்குச் சொல்லி மற்ற பக்கத்தை மறைப்பது ஆய்வு நேர்மையல்ல என்பதுதான்.

2) “நாம் நாத்திகர்களுமல்ல, ஆத்திகர்களுமல்ல; பகுத்தறிவுவாதிகள்” என்று ஈழத்தடிகள் சொன்னது பகுத்தறிவு. ஆனால், “பெரியார் தமது பகுத்தறிவு இயக்கத்தை அதன் வளர்ச்சிப் போக்கில் நாத்திகமாக அறிவித்தார்.” - இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை பகுத்தறிவுள்ளோர் புரிந்துகொள்வர்.

3) "திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் கறாராக இருக்கிறது." ஆம், உண்மை; அதுதான் அதன் அடையாளம். ஆனால் இதுதான் பகுத்தறிவு என்று வாதம் செய்கின்றவரைப் போன்ற ‘மனுவாதி' வேறு யாரும் இருக்கமுடியாது. இங்கே மனுவாதி என்பது, மனு தர்மம் பற்றிய திராவிட இயக்கப் பார்வையை மேற்கொண்டு நாம் குறிப்பிடுவதாகும். உண்மையில் மனு, மனு தர்மம் குறித்து பல பரிமாணங்களில் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பது வேறு விஷயம். ஆனால், திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளாததன் காரணம் பார்ப்பனர்கள் ‘ஆரியர்கள்', பார்ப்பனர்கள் பேராசைக்காரர்கள், இரு நாக்குகள் கொண்டவர்கள், தந்திரசாலிகள், தாசர்களின் தலைவர்கள், வஞ்சக வேந்தர்கள், கொடுமைக் குணமுடையவர்கள், கோழைகள், படுமோசக்காரர்கள், சிண்டு முடிபவர்கள், சிரிக்கின்ற நரிகள், ஒட்டு வித்தைக்காரர்கள், அநீதிக்காரர்கள், (திராவிட) இனம் கெடுத்தவர்கள், ஈடில்லாக் கேடர்கள் (ஆதாரம்: அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை') என்பதால்தான். இதில் முக்கியமானது என்னவெனில், அவர்கள் பிறப்பிலேயே அப்படிப்பட்டவர்கள் என்ற ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு'க் கருத்துதான். அதாவது திராவிடர்கள் ஓர் இனம் ஆரியர்கள் வேறு இனம் என்ற ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு'தான்.

பகுத்தறிவாளர்களாகக் கருதப்படும் விஞ்ஞானிகள், மானுடவியலாளர்கள், வரலாற்றாளர்கள் ஆரிய இனம் என்ற ஒன்று, அல்லது திராவிட இனம் என்ற ஒன்று கிடையாது. ஆரிய, திராவிட என்பன மொழி சார்ந்த பெயர்களே தவிர இனங்களல்ல. எல்லோரும் ஒரு மனிதக் குரங்கிலிருந்து தோன்றியவர்கள், அதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக வெவ்வேறு இனங்களாக, அதாவது அழிந்தொழிந்த நியாண்டர்தாலியன், மற்றும் இன்றைக்கு இருக்கின்ற மனிதர்கள் போன்ற இரு வெவ்வேறு இனங்களாக இருந்தால் பிறப்பிலேயே இவ்விரு சாரருக்கும் வேறுபாடு இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தற்கால மனிதர்கள் அனைவரும் ஒரே வழித்தோன்றல்கள் என்பதால் பிறப்பினால் தகுதி வேறுபாடுகள் இல்லை என்றாகிறது. பொதுப் பகுத்தறிவு இப்படி இருக்கையில், ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு,' பார்ப்பனர்கள் பிறப்பிலேயே நயவஞ்சகர்கள், ஏமாற்றுக்காரர்கள் போன்ற சில ‘தகுதிகளைக்' கொண்டிருப்பதாகச் சொல்லி வருகிறது.

மனு தர்மம், பார்ப்பானை உயர்ந்தவன், மேலானவன் என்று கற்பித்தால், திராவிட இயக்கம் அவனைக் கீழானவன், இழிந்தவன், மோசடிக்காரன் என்று கற்பிக்கிறது. அதாவது பிறப்பைக் கொண்டு தகுதியை நிர்ணயிக்கின்ற பணியை மனு செய்ததாகச் சொல்லிக்கொண்டு அதே பணியை திராவிட இயக்கமும் செய்கிறது; அதாவது மனுவுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு அதன் எதிர்மறையாக, அதாவது பார்ப்பான் மாறமாட்டான்; மாறமுடியாது, அவன் இருந்தால் அந்த இயக்கம் உருப்படாது என்ற மாறாநிலைக் கோட்பாட்டை வைத்திருக்கிறது திராவிட இயக்கம். திருநாவுக்கரசின் கருத்தும் இதுதான். இதனால்தான், வி.பி.ராமன் குறித்து, “அவரால் தி.மு.கவுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை; தீமைதான் ஏற்பட்டது, தி.மு.க சோதனையோட்டமாகப் பார்ப்பனரைக் கட்சியில் அனுமதித்தது தோல்வியையே சந்தித்தது. இன்னும் சரியாகச் சொல்வதானால் அறிஞர் அண்ணாவுக்கு இது ஒரு தோல்வி என்று சொல்லுவோம்” என்று சொன்னது மட்டுமின்றி, “அந்தச் சோதனையை அவர் அனுமதித்து இருக்கக்கூடாது என்பதே எமது கருத்து” என்று சொல்லியிருக்கிறார். அதாவது திராவிட இயக்கப் பகுத்தறிவில் பார்ப்பான் சோதனைக்குக்கூடத் தகுதியற்ற இழிபிறவி என்பதே திருநாவுக்கரசின் முடிவு.

4) கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் நாத்திகர்களும்கூட அதன் தமிழ் மொழிச் செழுமைக்காகப் புகழுகின்ற நேரத்தில், நல்ல குடிநீர்க் கிணற்றில், அதனுள் இறங்கி தூர் வாருபவர் அடியில் இருந்த சேற்றைக் கொண்டு வந்து, இதுதான் இந்தக் கிணறு, இதன் தண்ணீரைப் போய்க் குடிக்கிறீர்களே என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படிதான் கம்பரசம். அல்லது, அண்ணாதுரையின் சொற்பொழிவுகளில் இருந்து ஆபாசமான இரு வாக்கியங்களை எடுத்து மேற்கோள்காட்டி அண்ணாதுரையின் பேச்சே இவ்வளவுதான் என்று சொல்வதற்கு ஒப்பானதுதான், 12000 பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு 40 பாடல்களை எடுத்துக்காட்டி ஆபாசக் களஞ்சியம் என்று அதை வர்ணிப்பது. ஆனால் ஒரு திராவிட இயக்கத்தவரிடமிருந்து - திராவிடப் பிறப்பு என்று நான் சொல்லவில்லை என்பதை வலியுறுத்துகிறேன் - வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?

5) ‘ஆரிய மாயை' அச்சு அசலான உண்மை ஆய்வு; அதனால்தான் உலக அளவில் புகழப்படும் வரலாற்றாளர்கள் தங்களின் நுல்களில் உள்ள ஆதார நூற்பட்டியலில் தவறாது அண்ணாவின் ‘ஆரிய மாயை'யைக் குறிக்கின்றனர். எனவேதான் அதனை இன மீட்சிக்கான ‘ஆராய்ச்சி'க் கட்டுரைகள் என்று திருநாவுக்கரசால் புகழமுடிகிறது!

இன மீட்சிக்கான அத்தகைய ‘ஆராய்ச்சி'க் கட்டுரையின் தரத்திற்கு ஒரே ஒரு சான்று:

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே”

- என்ற ஐங்குறு நூறு பாடலை எடுத்துக்காட்டி மலைநாடன் வருகின்ற குதிரையின் தலையில் உள்ள குடுமி ஆடுவதைப் பார்ப்பனக் குடுமி ஆடுவதாகக் கற்பனை செய்து பார்த்து “தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய ஒரு காலம் இருந்தது” என்றும் “ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம் அது” என்றும் எழுதுகிறார்.

சங்கப் பாடல்களிலேயே மிகப் பழைமையாகக் கருதப்படும் புறநானூறு, பதிற்றுப்பத்து காட்டும் சான்றுகளாவன:

“கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்றலைய முடையேன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது” (புறம் 43:11-14)

(சோழன் நலங்கிள்ளிதம்பி மாவளத்தானும் தாமப்பல்கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானைச் சோழன் மகனல்லையென நாணியிருந்தானைத் தாமப்பல்கண்ணனார் பாடியது.)

இப்பாடலில், உனது முன்னோர் எவரும் பார்ப்பார் வருந்தக்கூடிய செயல்களைச் செய்ததில்லை. ஆனால் நீயோ அப்படிச் செய்துவிட்டாய் என்று புலவர் உரைக்க, சோழன் தான் சோழ குலத்தில் பிறக்கவில்லையென நாணியிருந்தான் என்கிறது.

“பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே” (புறம் 6:19-20)

(பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.)

மற்றவர்களுக்கெல்லாம் தலைநிமிர்ந்து பரிசுகள் நல்கும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, நான்மறை முனிவரான அந்தணர்களிடம் பணிந்து நடந்து கொள்வது சித்திரிக்கப்பட்டுள்ளது.

“பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ” (பதிற்றுப்பத்து 64:1-2)

(செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.)

பார்ப்பார் தவிர மற்றவர்களுக்கு நீ பணிய மாட்டாய் என்று கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடுகிறார்.

இவ்வாறாகச் சேர, சோழ, பாண்டியர்கள் பார்ப்பனர்களிடம் பணிந்து நடந்தது சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைத்து, ஐங்குறுநூறு பாடலை மட்டும் சுட்டி, பார்ப்பனர்களை நகைப்புக்குரியோராகத் தமிழர்கள் கருதினர் என்பதாக எழுதியிருப்பதுதான் ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தெரிகிறது திருநாவுக்கரசுக்கு. பொதுவாகச் சிறுவர்களை வேடிக்கையாகப் பேசுவது வழக்கம். அந்த வகையில்தான் ஐங்குறுநூறு பாடலில் பார்ப்பனக் குறுமகனின் குடுமி உவமையாகக் கூறப்பட்டுள்ளதே தவிர பார்ப்பனர்களை இழிவாகவும் நகைப்புக்குரியோராகவும் கருதியல்ல. சிறியவர்களைக்கூட இகழ்வதில்லை மரபு என்பதற்கு “யாதும் ஊரே . . .” என்று தொடங்கும் புறநாநூற்றுப் பாடலின் கடைசி இரு வரிகளைப் பார்க்க. பெரியோரைக் கண்டு வியத்தலும், சிறியோரை இகழ்தலும் இல்லை என்று முடியும்.

மன்னர்களைக் கேலி செய்து பல பழங்கதைகள் உண்டு. அவற்றில் ஒன்றைச் சொல்லி ராஜாக்களை மக்கள் எப்பொழுதுமே நகைப்புக்குரியோராகக் கருதினர் என்று ஒருவர் சொன்னால் அது எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ அப்படித்தான் அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை'. ஆனால் திருநாவுக்கரசின் ‘தகுதி'க்கு அவரின் ஆய்வின் ஆழத்திற்கு ‘ஆரிய மாயை' ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைதான் என்பதில் ஐயமில்லை!

வேதங்களுக்கும் கோயில் வழிபாட்டுக்கும் அதாவது உருவ வழிபாட்டுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்பது ஆய்வாளர்களின் முடிந்த முடிவு. ஆனால் அண்ணாதுரைக்கோ கோயில் என்பது வேதங்களுக்குரியவர்களின் கூடாரமாகத் தெரிகிறது. எனினும் அதே அண்ணாதுரை கேட்பதெல்லாம் “நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி!” (ஆரிய மாயை) வேதங்கள் இந்த உருவற்ற தேவனைத்தான் சொல்கின்றன என்பது திருநாவுக்கரசு அறியாதது. . . “தமிழ்க் கலை ஞானமாகிய சைவ சித்தாந்த சாஸ்திரிகளும், ஆகமங்களும் பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்” (ஆரிய மாயை) என்கிறார் அண்ணாதுரை. சைவ சித்தாந்தம் எப்படி சைவ வேளாளர்களுடையதோ அதுபோலவே திராவிட இயக்கமும் என்பதை வரலாற்றாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்பது திருநாவுக்கரசு அறியாத ஆய்வு. ‘கிருஷ்ண' என்றால் கருப்பு நிறம் என்று பொருள். ஆனால் கிருஷ்ணன் ஆரியக் கடவுளாம்; ராமன் கரு நிறத்தவன் என்பது வால்மீகியும் கம்பனும் சொல்லும் விவரம். அதே ராமன் சூரிய குலத்தவன்; மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களும் சூரிய குலம்தான், அப்படி இருக்க ராமன் ஆரியனாம். எனவே அண்ணாதுரைக்கு அவர்கள் வேண்டாமாம்.

சிவன் என்பதற்கு சிவப்பு நிறத்தவன் என்று பொருள்; ஆனால், பிராமணர்கள் நிராகரித்துவிட்ட சைவ சித்தாந்த சாஸ்திரிகள் வேண்டுமாம் அண்ணாதுரைக்கு. ஒருவேளை அண்ணாதுரையின் திராவிடர்கள் சிவந்த நிறத்தவர்களோ? ஆகமங்கள் அனைத்தும் ‘ஆரியர்களின்' மொழியான சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன என்பது அண்ணாதுரையும் அவரது சீடர் திருநாவுக்கரசும் அறியாத உண்மை; அதனால்தான் பிராமணர்கள் ஆகமங்களை வேண்டாம் என்று சொல்வதாக அண்ணாதுரையால் எழுத முடிகிறது. இவை அண்ணாதுரையின் ‘ஆராய்ச்சிக் கட்டுரை'யின் தரத்துக்கு மற்றோர் சான்று.

இத்தகைய ‘ஆரிய மாயையை' ஆராய்ச்சிக் கட்டுரையாகச் சொல்லும் திருநாவுக்கரசின் ஆய்வின் ஆழத்தை அவரது எழுத்துக்களையும், அவரையும் முழுமையாக அறிந்தவர்கள் ‘புரிந்துகொள்ளவே' செய்வார்கள்.

இத்தகையவர்களின் பொட்டில் அடித்தாற்போன்று திராவிடக் கருத்தியலின் தந்தையான ராபர்ட் கால்டுவெல் சொல்லி இருப்பதைப் பாருங்கள்

“. . . but the fact that the Pandyas, Cholas, and other Dravidian races were represented at the same time as having been originally, not rakshasas or monkeys, but Kshatriyas, equally with the Solar and Lunar princes of Aryan India, proves conclusively that they at least were considered almost as civilized and as occupying almost as respectable a position as the orthodox Aryans themselves.”

ஆரியர்களின் குடுமியைக் கேலி செய்து மக்கள் பேசியதாகச் சொல்கின்ற அண்ணாதுரையின் ஆரிய மாயையை ‘ஆராய்ச்சிக் கட்டுரை' என்று புகழ்கின்ற திருநாவுக்கரசு, திராவிடத்தின் தந்தையான ராபர்ட் கால்டுவெல் கொடுத்துள்ள கீழ்க்கண்ட குறிப்பைப் படித்ததில்லை போலும்.

“The usage referred to is equally characteristic of the Dravidians. Up to the present day the custom of wearing the hair long, and twisted into a knot at the back of the head, is characteristic of all the more primitive castes in the southern provinces of the Tamil country, and of some of the castes that occupy a more respectable position in the society. In ancient times this mode of wearing the hair was in use amongst all Dravidian soldiers; and sculptured representations prove that a still earlier period it was the general Dravidian custom.”

உண்மை இப்படி இருக்க ”வாழ்நிலையிலிருந்துதான் சிந்தனை உண்டாகிறதே ஒழிய சிந்தனையிலிருந்து வாழ்நிலை உண்டாவதில்லை” என்று சொல்லிக் கொண்டே, சிந்தனையிலிருந்து வாழ்நிலையை உருவாக்கிக் காட்டும் ரசவாதத்தைத் திருநாவுக்கரசு போன்ற திராவிட இயக்கத்தவர்களாலேயே செய்யமுடியும்.

(நன்றி: காலச்சுவடு, ஏப்ரல் 2009.)

pravaahan@sishri.org


SISHRI Home