அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format
தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 7)
எஸ். இராமச்சந்திரன்

வண்ணக மறைவல கண்ணுளாளர்

இசையும் கூத்துமாகிய குயிலுவ வினை, வேளாளர் அறுதொழில்களுள் ஒன்றென நிகண்டுகள் குறிப்பிடுவது பற்றி முன்னரே விவாதித்தோம். சங்க இலக்கியங்களில் பாணரும் பொருநரும் விறலியருமே இசைஞராகவும், கூத்தராகவும் குறிப்பிடப்படுகின்றனர். பறை, துடி, கடம் (குடம்) ஆகிய இசைக்கருவிகளின் பெயர்த் தொடர்பில் தோன்றிய பறையர், துடியர், கடம்பர் ஆகிய குடியினரின் பெயர்கள் புறநானூற்றில் (335:7-8) குறிப்பிடப்படுகின்றனர். பாணர், பாடினி ஆகிய பெயர்கள் பண், பாட்டு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு தோன்றியவை. இப்பூர்வ குடிகளுள் பறையர் மட்டுமே தமிழகத்தில் காட்சிக்குப் புலனாகும் சாதியினராக உள்ளனர். துடியரின் கருவியாகிய துடி கர்நாடகத்தில் வழக்கிலுள்ளது. பாணர் குடியினரும் கடம்பரின் வழித்தோன்றல்களான கடபர் என்ற இசைக் கலைஞர் குடியினரும், ஒரிஸா மாநிலத்தில் வாழ்கின்றனர்.1

சங்க காலப் பாணர் பறையர் முதலிய குடிகள் பொருளாதார நிலையில் உயர்வாக இல்லாவிடினும் திணைக்குடிகள் போன்று சுதந்திரமான அந்தஸ்துடையோர் என்ற வகையில் வைசிய வர்ணத்தவராகவே கருதப்பட்டிருக்க வேண்டும்.2 மேற்குறித்த புறநானூற்றுப் பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள, குடிப்பெயர்களாகிய துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற ஆண்பாற் பெயர்கள் ஆண் தலைமையிலான குடும்பம் என்ற அமைப்பைப் பின்பற்றிய குடிகளாகவே அவை இருந்தன என்பதை உணர்த்துகின்றன.3 துடியர்கள், தலைமக்களின் அல்லது போர்க்குடியினரின் சுப அசுப நிகழ்வுகளுக்குப் பறை கொட்டும் புலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் என்பதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்பது உண்மையே. “துடி யெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (புறம் 287:1-2) என்றும், “பூக்கோள் இன்றென அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” (புறம் 289:9-10) என்றும் அமைந்த பாடல் வரிகள் இதற்குச் சான்றாகும். புலையர் சாதியினர் கழிவு அகற்றுதல், தலைமக்களின் துணிகளை வெளுத்தல் (புறம். 311:2) போன்ற பணிகளைப் புரிந்தனர் எனத் தெரிகிறது. இத்தகைய பணிகளுடன், சாப்பறை கொட்டுதல், பிணத்தைக் குளிப்பாட்டுதல், பிண்டம் வைத்தல் முதலிய மரணச் சடங்குகள் செய்தல் (புறம். 360:19-20) துடியர்களின் பணியாக இருந்தமையாலும், ஆவிகளுடன் தொடர்பு கொள்வோர் என்ற அடிப்படையில் அச்சத்திற்குரியோராகக் கருதப்பட்டமையாலும்4 இவர்கள் இழிசினராகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால், பாணர், பறையர் ஆகியோர் இழிசினராகக் கருதப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை.

பாணர்களுள் பெரும்பாணர் பட்டம்பெற்ற இசைஞர்கள் வேளாண் வாயிலோராக ஆனதன் விளைவாகச் சுதந்திரமான வைசிய வர்ண அந்தஸ்திலிருந்து தாழ்ந்து சூத்திர வர்ணத்தவர் ஆயினர்.5 ஆயினும், வேளம் என்ற நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட உயர்குடிப் பெண்டிருடனும் அவர்கள் வர்க்கத்தாருடனும் கொண்ட உறவு, பல்வேறு நாகரிக நடைமுறைகளைக் கற்றுக்கொண்டதன் மூலம், உருவாகிக்கொண்ட தோரணைகள், இவ்வனைத்துக்கும் மேலாக வேளாண் வாயிலோராக இருப்பதன்மூலம் கிட்டுகிற பொருளாதார நலன்கள் ஆகியன சூத்திர வர்ண அந்தஸ்தினை ஏற்றுக்கொள்வதற்குரிய மனச் சமாதானத்தை இவர்களுக்கு அளித்திருக்கும் எனலாம். இதன் பின்னர், வணிக வர்க்கமும் வைசிய வர்ணமும் ஒன்றென்ற நிலை உருவாகத் தொடங்கியதன் உடன் நிகழ்ச்சியாகவும் வணிக வர்க்கத்தவருடன் ஒத்திசைந்து தம் பொருளாதார நலன்களை வேளாளர்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு உறுதிப்படும் காலகட்டம் உருவாகியபோது துல்லியமான வேளாளர் சாதி அமைப்பு தோன்றிவிட்டதால் பூர்வ குடி நிலையிலேயே நின்றுவிட்ட தமிழகப் பாணர்கள், உழுகுடிகளான பறையர் சாதியினருடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு கருங்கை வினைஞர்கள் என்ற ஒட்டுமொத்த வடிவில் பரிணமித்தனர் என ஒருவாறு வரையறை செய்யலாம். சங்க காலத்தின் ஒரு கட்டத்திலேயே புலையர் சாதியினராகக் கருதப்பட்ட துடியர்கள் (கடம்பரும் இவர்களுடன் இணைந்திருக்கலாம்) இழிசினர்களாகத் தொடர்ந்து நீடித்துவந்தனர் என முடிவு செய்யலாம். இத்தகைய பரிணாமம் நிகழும்போதே மள்ளர் சமூகத்தவர் பிறிதொரு வகை விவசாயக் குடியினராக - வெட்சிப் போர் மரபினரையும் காராளர்களையும் சார்ந்த ஆற்றுக்கால் ஆளர்களாகவும் (காலாடி) பண்ணை உழவர்களான கருங்கை வினைஞர்களாகவும் உருவாயினர் எனத் தோன்றுகிறது.

மருத நிலக் கிணைப்பொருநர்கள், “வாட்டாற் றெழினியியாதன் கிணையேம்” (புறம். 396:13-14); “இலங்கைக் கிழவோன் வில்லியாதன் கிணையேம்” (புறம்: 379:6-7)6 என்பன போன்று தலைமக்களுக்குரிய பணிமக்களாகச் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றனர். மதுரை நக்கீரர் பாடிய ஒரு புறப்பாடலில் (395:20-21) “பிடவூர்க் கிழார் மகன் பெருஞ்சாத்தனின் கிளையினராக (குலத்தின் உட்பிரிவு) பொருநர் அல்லது பாணர் குறிப்பிடப்படுகின்றனர். (“நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம்.”) ‘கிணையேம்’ என்பது ‘கிளையேம்’ என்று தவறாகப் பிரதியெடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆயினும், தலைமக்களின் கிளையினராகப் பணிமக்கள் (கிணைப் பொருநர்கள்) சொல்லிக்கொள்வதும் உறவு கொண்டாடுவதும் இயல்பே என்பதால் பிடவூர்க்கிழார் மகன் பெருஞ்சாத்தனின் கிளையினராக - அதாவது, வேளத்துப் பிள்ளைகளாக இப்பாணர் அல்லது பொருநரைக் கருதுவது தவறாகாது.

சங்க காலப் பாணர் - கூத்தர் வரலாற்றில் இது முதன்மையான அம்சமாகும். அதனால்தான் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைவ வைணவ பக்தி இயக்கம் தோன்றிய பின்னர், அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்குத் தமிழிசையும் தமிழ்க்கூத்தும் ஆற்றிய பங்கினை வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவாக உணர்ந்துகொள்கிற அளவிற்குத் தமிழிசை, தமிழ்கூத்து ஆகியவற்றின் உட்கூறுகளை அவர்கள் புரிந்துகொள்ள இயலாத வண்ணம், குழப்பம் நேர்கிறது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருப்பாணாழ்வாரும் முறையே சைவ, வைணவ அடியார்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பினும் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண்ணமைக்கும் முயற்சி தொடங்கியபோது தமிழகத்தில் பாணர் மரபே இல்லை என்று கூறுமளவுக்கு ஒரு வெற்றிடம் உருவாகியிருந்தது. பூர்விகத் தமிழிசைக் கலைஞர் - தமிழ்க் கூத்தர் சாதியினருள் பெரும் பகுதியினர் நிலப்பிரபுத்துவப் பண்ணைக் கைவினைஞர் சாதிகளுள் கலந்துவிட்டனர் என்றும் சங்க காலத்திலேயே பெரும் பாணர்களாகவும், அரங்கக் கூத்தர்களாகவும் உருவாகிவிட்ட இசைஞர் - கூத்தர்கள், பாணர் - பறையர் பழங்குடி நிலையிலிருந்து விலகி, வேளாளர் சாதிக் குழுக்களுள் ஒன்றில் இணைந்துவிட்டனர் என்றும் நாம் அனுமானிக்கலாம்.

சங்க காலக் கூத்த மரபினரின் பரிணாம வளர்ச்சி குறித்த சில செய்திகள் மலைபடுகடாத்தையும், சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டு ஆராயும்போது தெரியவருகின்றன. மலைபடுகடாம் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து (திருவண்ணாமலை அருகேயுள்ள செங்கம்) நன்னன்செய் நன்னன்மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியதாகும். இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு. இம்மாற்றுப் பெயருக்குக் காரணமாக இருப்பது, நன்னன்சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தப்படுபவனை முன்னிலைப்படுத்தி விளிக்குமிடத்தில் (வரி 50இல்) “கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ” என்ற விளி இடம்பெற்றிருப்பதே “பேரணிகலன்களை அரசரிடமிருந்து பரிசாகப் பெறும் கூத்தருடைய சுற்றத்துக்குத் தலைவனே” என்பது இதன் பொருளாகும். கண்ணுளர் என்ற சொல்லுக்குக் கூத்தர் என்பதே பொருளாகும்.

சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் புகார் நகரின் இரு பகுதிகளாகிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் தனித்தனியாக வர்ணிக்கப்படுகின்றன. மருவூர்ப்பாக்கம் என்பது கடற்கரையிலும், பட்டினப்பாக்கம் என்பது மருவூர்ப்பாக்கத்தைத் தொட்டடுத்து உள்நாட்டிலும் இருந்தன. மருவூர்ப்பாக்கத்தில் எளிய பொதுமக்களும் பட்டினப்பாக்கத்தில் அரசமைப்பைச் சார்ந்தோரும் வாழ்ந்தனர். பட்டினப்பாக்கத்தில்தான் வீழ்குடி உழவர்கள் வாழ்ந்தனர். இவ்வீழ்குடி உழவர்களுடன் இணைந்து வாழ்ந்த அரசமைப்புச் சார்பாளர்களின் இருக்கை பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது.

சூதர் மாகதர் வேதாளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில் தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவேழம்ப ரொடு வகை தெரியிருக்கை

(சிலம்பு. 5:48-54)

“நலம்பெறு கண்ணுளர்” எனப்படுவோர் சாந்திக்கூத்தர் என அரும்பத உரைகாரர் விளக்கமளிக்கிறார்.7 அடியார்க்கு நல்லாரோ சாந்திக்கூத்தர் என்று பொருள்கூறி அரிதாரம் புனைந்து ஆடுகின்ற அரங்கக்கூத்தர்கள் என விளக்கமளிக்கின்றார்.8 அதாவது, வேத்தியல் மரபுப்படி வேடம் புனைந்தாடும் அரங்கக்கூத்தரே நலம்பெறு கண்ணுளர் எனப்பட்டனர் என்பது அடியார்க்குநல்லார் கருத்தாகும். நலம் பெறுதல் என்பது அலங்கரிக்கப்பெறுதல் (ஒப்பனை செய்யப்படுதல்) என்பதோடு, தலைமக்களால் ஆதரிக்கப்பெறுதலையும் அதன்மூலம் பெருமை பெறுதலையும் குறிக்கும். சிலப்பதிகாரத்தில் இதே இந்திர விழவூரெடுத்த காதையில் இந்திர விழாவின்போது இசை நிகழ்ச்சிகள் நடந்தமை பற்றி விவரிக்கப்படுகின்ற இடத்தில்,

கண்ணுளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணர்

(சிலம்பு. 5:184-6)

எனக் கூத்தரும் இசைஞரும் பட்டியலிடப்படுகின்றனர். இவ்வருணனையில் இடம்பெறும் கண்ணுளாளர் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் “மதங்கர்; ஆவார் பெரும்பாணர்; குழலரும் என்ப” எனப் பொருள் கூறுகிறார்.9 கண்ணுளர், கண்ணுளாளர் எனப்பட்டோர் பொதுவியற் கூத்தர் அல்லர்; அரசமைப்புகளின் ஆதரவு பெற்ற உயர் வர்க்கப் பெரும்பாணர்கள் - அரங்கக் கூத்தர்களே என்பது இதனால் விளங்கும்.

கண்ணுள் என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு கூத்து என்று பொருள்கூறும். இச்சொல் பொருத்துதல், கட்டுதல், இசைவித்தல் எனப் பொருள்படுகிற கண்ணுதல் என்ற கருத்தின் அடிப்படையில் தோன்றியதாகும்.10 தமிழ் இலக்கணப் பிரிவுகளுள் செய்யுள் இலக்கணம் யாப்பு எனப்படும். கட்டுதல் என்ற பொருளுடைய யாத்தல் என்ற சொல்லிலிருந்தே யாப்பு தோன்றிற்று. இன்றும் பேச்சு வழக்கிலுள்ள பாட்டுக்கட்டுதல், கூத்துக்கட்டுதல் என்ற வழக்குகளை ஒப்பிட்டால் கண்ணுளர் எனக் கூத்தர்கள் வழங்கப்பட்டதன் பொருள் புலனாகும். “பல்வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து” என்றே சிலம்பதிகாரம் அரங்கேற்று காதை வரி 12இல் ஒரு குறிப்புள்ளது. இதற்கு, “பலவகைப்பட்ட புறநடங்களையும் … பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்தப் புணர்த்தி” என்று அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் பொருள் கூறுகின்றன.11

பாட்டுக்கும் கூத்துக்கும் வண்ணம் என்பது அடிப்படையானது. வண்ணம் என்ற சொல்லுக்குக் கட்டுதல், திரட்டுதல், உருவாக்குதல் என்ற அடிப்படையிலமைந்த வனம், வன்னம் ஆகிய சொற்களே மூலமானவை எனத் தெரிகிறது. வனப்பு என்ற சொல்லுக்குப் “பல உறுப்புகளும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு” என்றே இலக்கண உரையாசிரியர்கள் பொருள்கூறுவர். ஒழுங்குபட்ட ஓசை அல்லது இசைந்து இயங்குகின்ற ஓசை இசை என்றும், ஒலிகள் இயைந்து இயங்குகின்ற கருவி இயம் என்றும் வழங்கப்படுவது போல, ஏழிசை ஒலிகள் உரிய விதத்தில் திரண்டு அமைவதே வண்ணம் ஆகும். தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியலின் முதல் நூற்பா வரி 9இல் “மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகை” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. இவ்வியலின் நூற்பா 204-205 முதலியன பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம் முதலிய இருபது வகைப்பட்ட வண்ணங்களைக் குறிப்பிடுகின்றன. வண்ணம் என்பது பாவின் கண் நிகழும் ஓசை விகற்பம் என்று தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

வல்வில் ஓரியை வன்பரணர் பாடிய புறப் பாடலில் (152:13) “பாடுவல் விரலியோர் வண்ணம்” என்ற வரி இடம்பெற்றுள்ளது.

சீவகசிந்தாமணி (பா. 1696), கனகமாலை வீணை இசைத்ததைக் குறிப்பிடும்போது,

வள்ளிதழ்க் கோதை தானே இட்டதோர் வண்ணம் தன்னைக்
கொள்ளத்தான் முரலறுற்றுக் கோலமை வீணை கொண்டாள்


எனக் குறிப்பிடுகிறது. தானே இட்டதோர் வண்ணம் என்பதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் “தானே புணர்த்ததொரு புணர்ப்பு விசேடம்” என்று எழுதுகிறார்.12

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட பெரியபுராணத்தில் (இலைமலிந்த சருக்கம், பா. 408) ஆனாய நாயனார் புல்லாங்குழல் இசைத்தமை பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:

எண்ணிய நூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ண இசை வகையெல்லாம் மாதுரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதற் கதியில்
பண்ணனமய எழும் ஓசை எம்மருங்கும் பரப்பினார்


இன்றைய நிலையில் வர்ணம் (வண்ணம்), ராகம் ஆகிய சொற்கள் கர்நாடக சங்கீதத்தில் சற்றே வேறுபடுத்திப் பொருள் கொள்ளப்பட்டாலும், சங்க காலத்தில் வண்ணம் என்பதே பண்ணுக்கு அடிப்படையாகக் கருதப்பட்டது. இக்கருத்தின் அடிப்படையில் வண்ணம் என்ற சொல்லுக்கு ராகம் என்றே 18ஆம் நூற்றாண்டில் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) தொகுக்கப்பட்ட சதுரகராதியும், அதனை அடிப்படையாகக்கொண்டு 19ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஜெ.பி. ராட்லரின் அகராதியும் பொருள்கூறுகின்றன.13

தொல்காப்பியம் செய்யுளியல் முதற் நூற்பாவில் 4ஆம் அடியில் பா குறிப்பிடப்படுகிறது. பாவகைகளுள் கலிப்பாவும் ஒன்று. கலிப்பாவில் வண்ணகம் எனப்படும் பாவகையினை வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்று குறிப்பிடுவது மரபு. இப்பாவகை தரவு, தாழிசை, வாரம் (தரவோடு ஒத்த சுரிதகம்), எண் என்ற உறுப்புகளை உடையதெனத் தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா 135 கூறுகிறது. இவ்வாறு வண்ணம், வண்ணகம் என்ற சொற்கள் குறிப்பிட்ட பண் நீர்மையுடன் கட்டப்பட்ட இசையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் (வரி 93-94) “வலிவும் மெலிவும் சமனுமெல்லாம் பொலியக் கோத்த புலமையோன்” என்ற வரி இடம்பெறுகிறது. “இப்படியால் வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படா நின்ற தான நிலையினையுடைய இசைக் கூறுபாடுகளுக்கெல்லாம் நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின குன்றாமலும் புணர்க்க வல்லனாய் அப்புணர்ப்பிற்கு அமைந்த எழுத்துகளால் இசை செய்யவல்ல யாழாசிரியன்” என மேற்குறித்த வரிகளுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.14 வண்ணகம், புணர்த்தல் ஆகிய சொற்கள் இசையுடனும் கூத்துடனும் தொடர்புடைய தொழில்நுட்பச் சொற்கள் என்ற உண்மையினை இவற்றால் தெளிவாக உணரலாம்.

தமிழ் பிராமி கல்வெட்டுகளுள் இசைத் தொடர்புடைய கல்வெட்டு ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளது. இக்கல்வெட்டு அரச்சலூரின் வடபுறமுள்ள நாகமலையில் கற்படுக்கைகள் கொண்ட ஆண்டிப்பாறை என்னும் பாறையில் கற்படுக்கைகளுக்கு இடையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் வாசகம் “எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்” என ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வாசகத்தை ஒட்டி “த தை தா தை, த” என்றும், “கை, த, தை, த, கை” என்றும் தொடங்கும் அட்டவணை வடிவங்கள் இரண்டு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. கூத்துக்கும் பாட்டுக்குமுரிய இவ்வெழுத்துகளைக் கோத்து அல்லது புணர்த்து அட்டவணையாக அமைத்தவன் தேவன் சாத்தன் என்பவன் என்றும், அவன் கொங்கு வேளாளர் குலப் பிரிவான வண்ணக்க கோத்திரத்தவன் ஆவான் என்றும் ஐராவதம் மகாதேவன் பொருள் கூறுகிறார்.15

மலை வண்ணக்கன் என்ற தொடர் மலைநாட்டு வண்ணக்கன் அதாவது கொங்கு நாட்டுக்கு மேற்கே உள்ள சேர நாட்டைச் சேர்ந்த வண்ணக்க கோத்திரத்தவன் என்று பொருள்படுமென ஐ. மகாதேவன் கூறுகிறார்.

இக்கல்வெட்டு 1962ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டபோதே இசை, கூத்து ஆகியவற்றுடன் தொடர்புடைய கல்வெட்டு என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொண்டனர். தொடக்கத்தில், “ஏழுதானம் பண்வித்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டது. “ஏழு தானம் பண்வித்தான்” என்பதற்கு “ஏழு ஸ்வரஸ்தானங்களை உருவாக்கினான்” என்றும், “மணிய வண்ணக்கன்” என்பதற்கு “ஊர் மணியக்காரன்; வர்ணம் பாடுவதில் தேர்ந்தவன்” என்றும் காலஞ்சென்ற தொல்லியல் அறிஞர் தி.நா. இராமச்சந்திரன் அவர்கள் பொருள்கொண்டார். தி.நா. இராமச்சந்திரனின் மாணவரும், கலை வரலாற்று அறிஞருமான இரா. நாகசாமி “ஏழுதானம் பண்வித்தான்” என்ற வாசிப்பினை மாற்றி “எழுத்துப் புணருத்தான்” என்று வாசித்தார். இதனையே சிறு மாற்றத்துடன் ஐ. மகாதேவன் ஏற்றுக்கொள்கிறார். புணர்த்தல் என்ற தொழில்நுட்பச் சொல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பதனை மேற்குறித்த அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயினும், ஐ. மகாதேவன் வண்ணக்கன் என்ற சொல்லினை, தி.நா. இராமச்சந்திரன் பொருள் கொண்டதுபோல் இசை குறித்த முதன்மையான தொழில்நுட்பச் சொல் வடிவங்களாகிய வண்ணம், வண்ணகம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தாமல் நாணயப் பரிசோதகன்,16 மேலாளன் என்பன போன்ற பொருள்கோடல்களை விவாதித்துவிட்டுக் கொங்கு மண்டல சதகத்தில் குறிப்பிடப்படும் வண்ணக்க கோத்திர வேளாளர் பிரிவினன் என்று மட்டும் பொருள்கூறி விட்டுவிடுகிறார். “த தை தா” எனத் தொடங்கும் அட்டவணையில் குறிப்பிடப்படும் பண் சிலப்பதிகார (17:13) உரையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சதுரப்பாலைப் பண்ணினைக் குறிக்கக்கூடும் என்று (இசையறிஞர் எஸ். இராமநாதன் அவர்களின் கருத்துகளின் அடிப்படையில்) நுட்பமாக விளக்கம் அளிக்கும் ஐ. மகாதேவன், வண்ணம், வண்ணகம் என்ற சொற்கள் இசை தொடர்பான தொழில்நுட்பச் சொற்கள் என்பதை ஏனோ குறிப்பிடவில்லை. வண்ணக்க கோத்திர வேளாளர் பிரிவினர் இன்றும் அரச்சலூரில் வாழ்கின்றனர் எனத் தெரிகிறது. எனவே, அக்குலப் பிரிவினரின் மூதாதை ஒருவரே இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார் என்பதைச் சரியான ஊகமாகவே கொள்ளலாம். ஆயினும், இது இசை தொடர்பான ஒரு சொல்லாட்சி என்பதே முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியதாகும்.

வண்ணம் என்ற சொல்லுக்கே “புணர்த்த புணர்ப்பு” என்று சீவகசிந்தாமணி உரையில் விளக்கம் அளிக்கப்படுவதைக் கண்டோம். மணிய வண்ணக்கன், மலய் வண்ணக்கன் என்றெல்லாம் வாசிக்கப்பட்ட வாசகத்தினை “மறெய் வண்ணக்கன்” என்று வாசிப்பது பொருத்தமாகும். “மறை வண்ணக்கன்” என்பதே “மறெய் வண்ணக்கன்” என்று பொறிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. யாழ் நூல் என்பது நரம்பிசைக் கருவி தொடர்பான வேதம் என்றே தொல்காப்பியத்தில்17 குறிப்பிடப்படுவதால் மறை வண்ணக்கன் என்பதை வண்ணக்க மறை வல்லான், அதாவது “இசை நூல் வல்லவன்” என்று பொருள்கொள்வது பொருத்தமாக இருக்கும். ‘மறை’ அல்லது ‘மறைய்’ என்பது ‘மறெய்’ என்று எழுதப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பிராமிக் கல்வெட்டுகளில் ‘லை’ என்பது ‘¦¦Ä’ என்று எழுதப்படுவது வழக்கம். எனினும் ஒற்றைக் கொம்புடன் ‘லெ’ என்றே எழுதப்படும் இடங்களும் உண்டு. கேரள மாநிலம் எடக்கல் கல்வெட்டில் “வெங்கோ மலை” என்பது “வெங்கோ மலெ” என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டாகும்.18 கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகளில் பிரதியெடுக்கப்பட்ட ஸ்கந்தசிஷ்ய பல்லவனின் இராயக்கோட்டைச் செப்பேட்டில் வரி 26இல் ‘லை’ என்பது ஒற்றைக்கொம்புடன் ‘லெ’ என்று எழுதப்பட்டுள்ளது.19 பரமேஸ்வர பல்லவனின் கூரம் செப்பேட்டில் வரிகள் 59, 61, 67, 72, 80 ஆகியவற்றில் ‘கை’ என்பது ‘கெயி’ என்றும் ‘ளை’ என்பது ‘ளெ’ என்றும் ‘லை’ என்பது ‘லெ’ என்றும் எழுதப்பட்டுள்ளன.20 எனவே, அரச்சலூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டில் ‘மறை’ அல்லது ‘மறைய்’ என்பது ‘மறெய்’ என்று பொறிக்கப்பட்டிருப்பதாகக் கொள்வது ஏற்புடையதே. “மறை வண்ணக்கன்” என்பது இசைக் கல்விக்குரிய எழுத்து வரிசையை உருவாக்குபவன் என்றும் பொருள்படக்கூடும். ஏனெனில், வண்ணக்கிரமம், வண்ணமாலை என்ற தொடர்கள் அகரவரிசை எழுத்துகளைக் குறிக்கும்.21 இந்த அடிப்படையில் இசை கூத்து ஆகியவற்றுக்குரிய ஒலிக்குறிப்பு எழுத்துகளைப் புணர்த்தவர் மறைவண்ணக்கன் அல்லது வண்ணக மறை வல்லானாகிய தேவன் சாத்தன் என்றும் பொருள் கொள்ளலாம். வண்ணம் என்ற சொல் வடிவம் (எழுத்து வடிவம், முத்திரை வடிவம்) என்று பொருள் விரிவடைந்து, நாணயத்தின் வடிவம், தரம், உண்மைத் தன்மை ஆகியவற்றைப் பரிசோதிப்பவனும் வண்ணக்கன் எனப் பெயர் பெற்றிருக்கலாம். எவ்வாறாயினும், வண்ணக்கன் என்ற சொல்லின் சுயமான பொருள் ஒலிகளை இணைத்து இசையை உருவாக்குபவன் என்பதே எனலாம்.

இப்போது முதன்மையான ஒரு கேள்வி எழுகிறது. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள இடம் ஒரு சமணப் பள்ளிக்குரிய கற்படுக்கைகளுடன் கூடியதாகும். ‘இப்பள்ளி’யில் இசை கற்பிக்கப்பட்டதா, அவ்வாறு கற்பிக்கப்பட்டதென்றால் அது சமணப் பள்ளியா, பௌத்தப் பள்ளியா என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இவ்வூரின் பெயரான அரச்சலூர் என்பது அறச்சாலையூர் என்பதன் திரிபாகக் கருதப்படுகிறது.22 அறம் அல்லது தர்மத்தை முன்னிலைப்படுத்திய பௌத்த அறவோர் பள்ளி இங்கு இருந்ததா, அவ்வாறாயின் சேர நாட்டில் உயிர்ப்புடன் இருந்த பௌத்த மரபுகளுடன் இப்பள்ளிக்குத் தொடர்புண்டா; சேரர்களின் முதன்மைத் தலைநகரமான கருவூர் இப்பகுதியில் இருப்பதாலும், கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை அவ்வூர் ஓர் அரசிருக்கைக்குரிய பெருநகராக இருந்ததாலும் அத்தகைய அரசமைப்பின் ஆதரவில் பெரும்பாணராகவும், அரங்கக்கூத்தராகவும் உருவான வேளத்துப் பிள்ளைகள் வம்சத்தவரால் இந்த இசைப்பள்ளி இப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டதா என்பன போன்ற கேள்விகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும். கொங்கு நாட்டின் பல பகுதிகளிலும், கர்நாடகத்திலும் பரவலாகச் செல்வாக்குடன் திகழ்ந்த சமண சமயத் தொடர்பிலேயே இப்பள்ளி இயங்கியதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.23 கருவூர்க்கு அருகிலுள்ள புகளூர்க் கல்வெட்டில் சேர மன்னன் வம்சத்தவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களுக்குக் கற்படுக்கை அமைத்துக்கொடுத்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.24 கி.பி. 3ஆம் நூற்றாண்டிலும் புகளூரில் சமண சமயத்திற்கு ஆதரவு நீடித்து வந்தது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரம் உள்ளது.25 எனவே, அரச்சலூர்ப் பள்ளியின் தோற்றம், இயக்கம் ஆகியவற்றையும் அம்மரபின் தொடர்ச்சியாகவே கொள்ளலாம். ஆனால், அரச்சலூர்க் கல்வெட்டு சேர மன்னர் ஆணைப்படியோ, ஆதரவின் அடிப்படையிலோ பொறிக்கப்பட்டதன்று. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சேரர் ஆட்சி அகற்றப்பட்டுக் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டுவிட்ட பின்னர் இப்பள்ளி உருவாகியிருக்க வேண்டும். இப்பள்ளியின் முழு அதிகாரம் படைத்த மேலாளராக மறை வண்ணக்கன் தேவன் சாத்தனே இருந்துள்ளார் எனலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டு இலக்கியமான சிலப்பதிகாரத்தில் (26:106-115) கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும் சேரன் செங்குட்டுவன் முன்னிலையில் இளவேனிற் பருவக் காதல் நுகர்ச்சி குறித்துப் பாடி ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. கருநாடக இசை - கூத்து மரபு பற்றிய முதல் குறிப்பு இதுவே ஆகும். கருநடக் களப்பிரர் ஆட்சியின் விளைவாக - அல்லது அடையாளமாக - கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அரச்சலூரில் இசை - கூத்துப் பள்ளி உருவாயிற்று எனக் கொள்ளலாம்.

கருநாடக இசை - கூத்து மரபுக்கும் களப்பிரர் ஆட்சிக்கும் முதன்மையான தொடர்பு இருந்ததாக நாம் கருதுவதற்கான காரணம், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட, களப்பிர அரசரும், சைவ நாயன்மார்களுள் ஒருவருமான கூற்றுவ நாயனார் பற்றிய வரலாற்றுச் செய்தியே ஆகும். கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் ஆத்தி மாலை புனைந்த வேற்கூற்றன் (ஆர்புனைவேற் கூற்றன்) என்று கூற்றுவ நாயனார் குறிப்பிடப்படுகிறார். ஆத்தி மாலை சோழ அரச குலத்துக்கு உரியதாகும். அப்படியானால் கூற்றுவர் சோழர் குலத்தைச் சேர்ந்தவராகத்தானே இருக்கவேண்டும்? ஆனால், நம்பியாண்டார் நம்பி (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் “கோதை நெடுவேல் களப்பாளனாகிய கூற்றுவனே” என்று குறிப்பிடுவதால் கூற்றுவ நாயனார் களப்பிர அரசரே என்று தெரிகிறது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன? சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் கூற்றுவ நாயனார் வரலாற்றைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

களந்தையர் கோனாகிய கூற்றுவ நாயனார் உலகை வென்று ஆட்சி நடத்துகையில் தாம் சூடுவதற்கு மணிமுடி இல்லை என்பதால் வருத்தமுற்றுச் சோழர் முடிசூடும் தலமாக இருந்த தில்லை ஆடவல்லார் ஆலயத்தின் அந்தணர் மூவாயிரவரிடம் தம்மைச் சோழ நாட்டின் அரசராக முடிசூட்டுமாறு கேட்கிறார். மூவாயிரவரோ சோழர்க்கு மட்டுமே தாம் முடிசூட்ட இயலும் என்று கூறிவிட்டுச் சேர நாட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். கூற்றுவர் முடிசூடாமலேயே நாட்டை ஆள்கிறார். பெரியபுராணம் குறிப்பிடும் இத்தொன்மக் கதையின்மூலம் கூற்றுவ நாயனார் சோழ அரச குலத்தவரின் வேளத்துப் பிள்ளை என்றும், அதனால்தான் அவர் சோழ நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் அவரைச் சோழராக அங்கீகரிக்கத் தில்லை மூவாயிரவர் மறுத்தனர் என்றும் உணரலாம். கூற்றுவ நாயனாரோ அவரது முன்னோராகிய முதற் களப்பிர அரசரோ சோழ அரச குலத்தவன் ஒருவனுக்குக் கர்நாடகக் கூத்தியர் வசம் பிறந்தவராக இருக்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமான ஒரு நிகழ்வு மணிமேகலையில் (22:30-39) குறிப்பிடப்பட்டுள்ளது. பரசுராமனின் தென்னகப் படையெடுப்பின்போது காந்தன் என்ற சோழ குலச் சத்திரியன் சோழ நாட்டை ஆள்கிறான். பரசுராமன் சத்திரிய வர்ணத்தவரை வேரறுப்பதற்காகவே படையெடுத்து வருகிறான் என்பதைச் சம்பாபதி மூலமாக அறிந்த காந்தன், தனது காதற்கணிகை மகனான ககந்தனை அரியணையில் அமர்த்திவிட்டுத் தலைமறைவாகிவிடுகிறான். சோழ நாட்டை ஆட்சி செய்பவன் ஒரு சத்திரியன் அல்லன் என அறிந்த பரசுராமன் திரும்பிச் சென்றுவிடுகிறான். அவன் திரும்பிச்சென்ற பிறகு காந்தன் மீண்டும் அரியணையில் அமர்கிறான். பரசுராமன் காலத்தில் நிகழ்ந்ததாக மணிமேகலை குறிப்பிடும் இந்நிகழ்வினை ஒத்ததே சத்திரியர் அல்லாத கூற்றுவ நாயனார் (அல்லது களப்பிர அரசருள் முதல்வர்) சோழ அரியணையில் அமர்ந்த நிகழ்வும் ஆகும்.

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழக இசைக்கூத்து மரபு பல்வேறு வகைக் கலப்புகளைப் பெற்றது. சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதையில் (வரி. 38-39) “வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதி” என்ற ஒரு குறிப்பு உள்ளது. கண்ணகியுடன் மதுரையை நோக்கிச் செல்கின்ற கோவலன் ஓர் இரவில் இந்தப் புரிநூல் மார்பர் உறைபதியில்தான் தங்குகிறான். இங்கு அந்தரி கோலம் பாடும் பாணரும் இருந்தனர். (மேற்படி காதை, வரி. 104-105.) இங்குதான் மாதவியிடம் வாயிலோனான இருந்த கோசிகமாணி என்ற பிராம்மணன் கோவலனைச் சந்திக்கிறான். இப்புரிநூல் மார்பரை அம்பணவர் என்று அரும்பத உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.26 இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் வண்ணக மறைவல்லோராகிய வேளாளர் குலப்பிரிவினராகக் கொள்வதே பொருத்தமானது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டளவில் தமிழகக் கல்வெட்டுகள் சிலவற்றில் சப்தமாதர் (தாய்மார் எழுவர்) கோயில்களில் பூசைப் பணிபுரிகின்ற பாரசைவர் அல்லது பாரசவர் என்ற பிரிவினர் குறிப்பிடப்படுகின்றனர். பாரசைவர் என்போர் வட இந்தியச் சிற்றரசர் மரபினர் ஆவர். இவர்கள் பனை மரத்தைச் சின்னமாகக்கொண்ட பலதேவன் வழிபாட்டு மரபினர் என்றும், பாரசிவ நாகர் என்று வழங்கப்பட்டனர் என்றும் தெரியவருகின்றன.27 நாகசுரம் என்பது இவர்களது இசைக் கருவியாகும். இக்குலத்தைச் சேர்ந்த குபீர் நாகா என்ற பெண்மணி குப்த அரச வம்சத்துடன் மணவுறவு கொண்டவள் ஆவாள். கி.பி. 4-5ஆம் நூற்றாண்டுகளில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் குப்தப் பேரரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே நிலவிய பரிவர்த்தனைகள், பரஸ்பரத் தாக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்தால் பாரசைவர் தொடர்பான முழுமையான சித்திரம் உருவாக வாய்ப்புண்டு. விஷ்ணுகோபன் என்ற குப்த மன்னன் காஞ்சியின்மீது படையெடுத்து வந்தான் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. குப்தர்களின் தொடர்பால் பாசுபத சைவ வழிபாட்டு மரபுகள் தமிழகத்தில் புகுந்ததைப் போன்றே, பாரசவ நாகர்களின் இசை - கூத்து அடிப்படையிலான சப்தமாதர் வழிபாட்டு மரபுகளும் தமிழகத்தில் ஊடுருவியிருக்கலாம். இவர்களே, இன்றைய உவச்சர் (இசை வேளாளர்) பிரிவினரின் முன்னோர் ஆவர்.28

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்தது வேளாளர் எழுச்சி என்பதையும், அது கர்நாடக இசை மரபு, கூத்து மரபு முதலான பன்னாட்டு இசைக்கூத்து மரபுகளை ஈர்த்துத் தன்மயமாக்கி வளர்ந்த ஒன்று என்பதனையும் நாம் இதன்மூலம் உய்த்துணரலாம். அரச்சலூர்க் கல்வெட்டில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், அக்கல்வெட்டு எழுத்துகள் பல்லவ மன்னன் சிவஸ்கந்த வர்மனின் ஹிரகடஹள்ளி செப்பேட்டு எழுத்துகளின் சாயலைப் (ஆணித்தலை வடிவத்தைப்) பெற்றிருப்பதாகும். ஹிரகடஹள்ளி, ஆந்திர - கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் வட பகுதியான தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டுவிட்ட நிலையில், பல்லவர் ஆட்சியில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களின் தாக்கம் கொங்கு நாட்டில் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்பது உண்மையே ஆயினும், கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் சமூகவியல் மாற்றங்கள் வரலாற்றுப் போக்குகள் ஆகியவற்றின் தாக்கமே முதன்மையாகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பாக, குப்தர்களின் ஆட்சி தொடக்கிவைத்த சமூகவியல், வரலாற்றுப் போக்குகளின் தாக்கத்தால் வட கர்நாடகப் பகுதிகளில் எழுச்சி பெறத் தொடங்கிய வணிகர் குழுக்களின் ஆதிக்கத்தின் கீழும், அக்குழுக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் இயங்கிய தச்சர், கொல்லர் (கல்வெட்டு, செப்பேடு எழுத்துப் பொறிப்போர்) ஆகியோரின் தமிழகத் தொடர்புப் பின்னணியில் இக்கல்வெட்டு ஆராயப்படுவது பொருத்தமாகும்.

இக்கல்வெட்டின் சமகாலத்தைச் சேர்ந்த இதே கொங்குப் பகுதியில் அமைந்துள்ள அம்மன்கோயில்பட்டியில் பொறிக்கப்பட்டுள்ள சுனைக் கல்வெட்டு (”பரம்பன் கோகூர்கிழார் மகன் வியக்கன் கோபன் கணதேவன்”) குறித்துச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அக்கல்வெட்டின் எழுத்துகளில் ஆணித்தலை அமைப்பு காணப்படாவிட்டாலும் க, ர போன்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ள விதம் ஹிரஹடஹள்ளி செப்பேட்டு எழுத்துகளின் சாயலில் உள்ளது.29 இக்கல்வெட்டு குறித்து இப்போதைய நிலையில் ஊகங்களின் அடிப்படையிலன்றி தரவுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு வரமுடியவில்லை. ஆயினும், இக்கல்வெட்டில் இடம்பெறும் பரம்பன் கோகூர்கிழார் என்ற தொடரினை பரம்பன் கோவூர் என்ற ஊரின் கிழார் என்றோ, பரம்பர் குடியைச் சேர்ந்த கோவூர்கிழார் என்றும் இருவிதமாகப் பொருள்கொள்ள முடிகிறது. பரம்பன் என்ற சொல் பறம்பன் என்ற சொல்லின் வேறு வடிவமாகக் கொண்டால் பாணர், பறையர் ஆகிய சங்க காலப் பூர்வகுடிகளோடு ஒத்த ஒரு பழங்குடியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இடைக்காலக் கல்வெட்டுகளிலும்30 உரையாசிரியர்கள் குறிப்பிலும்31 பறம்பர் என்ற சொல் தோல்வினைஞர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டளவில் வரலாற்றுத் தொடக்க காலத்தில் யாகச் சடங்கின்போது கொல்லப்படும் விலங்கின் தோலினை உரித்துப் பதப்படுத்துதல், முரசு உருவாக்குதல், முனிவர்கள் அமர்வதற்குரிய மான் தோல் ஆசனம் உருவாக்குதல், பூணூலில் கரு மானின் தோல் (கிருஷ்ணாசினம்) சேர்த்தல் ஆகிய பணிகளைச் செய்ததாலும், பழங்குடி மக்களிடையே விலங்குத் தோலே முதன்மையான உடையாகவும்,32 கவசமாகவும், கேடயமாகவும் இருந்தமையாலும் வரலாற்றுத் தொடக்கக் கட்டங்களில் சர்மகாரர் (தோல் வினைஞர்) உயர் சாதியினராகவே கருதப்பட்டனர் எனச் சில வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர். இத்தகைய தோல் வினைஞராக மட்டுமின்றித் தோற்கருவிகளை இசைப்போராகவும் பறம்பர்கள் இருந்துள்ளனர். அபிதானமணிமாலை என்ற பிற்கால நிகண்டு நூல் (பா. 352) பறம்பர், குயிலுவர் ஆகியவற்றை ஒரே சாதியினரைக் குறிக்கும் சொற்களாகவே குறிப்பிட்டுள்ளது.33

தில்லை மூவாயிரவர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில்கூட, “பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டு எரியோம்பும் சிறப்பர்”களாகவே இருந்தனர் என்பது சம்பந்தர் தேவாரத்தால் (1:1:2) தெரியவருகிறது. பறப்பை என்பது யாகத்தில் விலங்கைப் பலிகொடுக்கின்ற மேடையைக் குறிக்கும். பறப்பை என்ற சொல்லே பறம்பர்களுடன் தொடர்புடைய சொல்லாக இருக்கலாம். அவ்வாறு இருப்பின், தில்லை ஆடவல்லான் வழிபாட்டை யாக மரபினரான (பூர்வ மீமாம்சகரான) தில்லை மூவாயிரவர்கள் ஏற்றபோது பறம்பர்களும் தம்முடையை இசையறிவின் அடிப்படையில் இந்த வழிபாட்டு மரபில் இணைந்திருக்க வாய்ப்புண்டு. பறம்பர் குலத்தவரின் வரலாறு விரிவாகவும், ஆழமாகவும் ஆராயப்பட்டால்தான் இத்தகைய சிக்கல்களுக்குத் தெளிவு ஏற்படும்.

சங்க காலப் புலவராகிய கோவூர்கிழாரின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனே அம்மன்கோயில்பட்டிக் கல்வெட்டில் குறிப்பிடப்படுவதாகப் பொருள்கொள்ளவும் வாய்ப்புண்டு. இக்கல்வெட்டு அமைந்துள்ள சேலம் ஓமலூர்ப் பகுதியையடுத்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தின்னஹள்ளி வட்டங்கள் பல்லவ மன்னர்கள் காலத்தில் கோவூர் நாடு என்றெ வழங்கப்பட்டன. எனவே, இப்பகுதியைச் சேர்ந்த கோவூர் நாட்டின் கிழாராகச் சங்கப்புலவர் கோவூர்கிழாரைக் கருதுவதற்கு வாய்ப்புண்டு.34 அவ்வாறு கொண்டால், கோவூர்கிழாரைப் பறம்பர் குடியினராகக் கருத இயலும். கோவூர்கிழார் இசை வல்லுநர் என்பது அவரால் இயற்றப்பட்ட புறநானூற்றுப் பாடல்களிலிருந்து தெரிய வருகின்றதென உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.35

மேற்குறித்த பறம்பன் கோகூர்கிழார் மகன் பற்றிய ஆய்வினை இத்தகைய ஊகங்களின் அடிப்படையிலேயே நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வாறு இருப்பினும், இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பறம்பன் கோகூர்கிழார் மகன் எழுத்தறிவுமிக்க, அரசியல் ஆதரவுள்ள க்ல்லெழுத்துப் பொறிப்பாளர்களை வைத்து ஆவணப் பதிவு செய்கின்ற ஒரு நிலையில் இருந்த தலைமகன் எனத் தெரியவருவதால் அவன் பழங்குடி நிலையிலேயே இருந்த ஒருவன் என நாம் கருதுவதற்கு வாய்ப்பில்லை. சமகால ஆட்சியாளர்களான களப்பிரர் என்ற வேளத்துப் பிள்ளைகள் ஆட்சி அமைவதற்கு உதவிய கிழார்கள் வம்சத்தவனாகவோ அத்தகையோர் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுடன் ஒத்திசைந்து வைசியர் - வேளாளர் கூட்டணி வலிமை பொருந்திய ஒன்றாக உருவாவதற்கு உதவியவனாகவோ இவனை நாம் கருதலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மைசூர் தலைக்காட்டுப் பகுதியில் கங்கை நதியின் குலத்தவர், அதாவது வேளாள வர்ணத்தவர் என்றே தம்மை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய கங்கர் குலத்தவரின் எழுச்சி என்பது இத்தகைய வண்ணக்கர்கள், கர்நாடகக் கூத்தர்கள், கிழார்கள் போன்றவர்களின் சமூகச் செல்வாக்கையே அடித்தளமாகக்கொண்டு தோன்றி எழுச்சிபெற்ற ஒன்றாகும்.

களப்பிரர் ஆட்சி முடிவடைந்த பின்னர், பாண்டிய மன்னர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவர்களிடத்துத் தலைமைச் செயலர் போன்ற அதிகாரம் படைத்த ஆணத்தியாக (ஆணையைச் செயல்படுத்துபவர்) இசையறிவு மிக்க, மருத்துவ குலத்தவர் இருந்துள்ளனர். கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜடில பராந்தக நெடுஞ்சடையனின் ஸ்ரீவரமங்கலம் செப்பேட்டில்36 (வரி. 75-81) ஆணத்தியாகக் குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய ... வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இத்தகையோர் பாண்டிய அரச குலத்தவர் போன்றே இசையறிவு மிக்கவர்களாக இருந்தனர். இவர்கள் மகாமாத்திர பிராம்மணர்களாகவும், சவர்ண பிராம்மணர்களாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். எனவே, இத்தகையோரைச் சிலப்பதிகார மாதவியிடத்து வாயிலோனாக இருந்த கோசிகமாணியை ஒத்தவர்கள் என்றோ, தலைமக்களின் வேளத்துப் பிள்ளைகளாவோ கருத இயலவில்லை. இசையறிவு - நடனத்திறமை பெறுதல் என்பதையும், குயிலுவவினை என்பதையும் வேறுபடுத்திப் பார்த்தால்தான் வெளித்தோற்றத்துக்கு முரண்பாடாகத் தெரியும் இத்தகைய சமூக வரலாற்றுப் போக்குகளுக்கான உட்பொருள் தெரியவரும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

1. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த சோமனதுடி என்ற கன்னடத் திரைப்படம் துடி என்ற பழங்குடி இசைக்கருவியுடன் தொடர்புடையதாகும். ஒரிஸா மாநிலப் பாணர் குறித்தும், கடபர் குறித்தும் சென்னை அருங்காட்சியக மானிடவியல் துறைக் காப்பாட்சியர் திரு. மகேஸ்வரன் ஆய்வு செய்துள்ளார்.

2. திணை என்ற சொல் உயர்ந்த பொருளிலேயே சங்க இலக்கியங்களில் ஆளப்பெற்றுள்ளது. அக்கால ஒழுக்கக் கோட்பாடுகளின்படின் நானிலத் திணைக்குடிகளும் அடிமைகளுக்குரிய ஒழுக்கக் கோட்பாட்டினைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. குடி, குடும்பம் என்ற அமைப்பைப் பின்பற்றியவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இக்குடிகளுள் பெருங்குடி, சிறுகுடி என்ற பிரிவுகள் இருந்தன. சிறுகுடி என்பது நெகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உடையதாகும்.

3. இப்பாடல் வரிகள், இந்நான்கு ஆண்பாற் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, இந்நான்கல்லது குடியும் இலவே என அஃறிணையில் முடிகின்றன. இதனைப் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் விவாதித்துள்ளனர். “துடியன்குடி, பாணன்குடி, பறையன்குடி, கடம்பன்குடி” - இந்நான்கல்லது குடியும் இல்லை” என்று பொருள்படும்படி வாசிக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்.

4. முருகு மெய்ப்பட்ட புலைத்தி (புறம். 258:5) என்ற குறிப்பு இந்த ஊகத்துக்கு வழிவகுக்கிறது. எண்வகை மணங்களுள் பைசாச மணம் என்பது இத்தகைய ஆவி வசப்பட்ட வெறியாட்டாளருடன் கொள்ளும் (மண)உறவாகலாம். கேரல மாநிலத்தில் மண்ணாப்பேடி, புலைப்பேடி (மகளிர் வண்ணார், புலையர் சாதியினரால் தீண்டப்பட்டால் அவர்களுடன் சென்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம்) பற்றிய குறிப்புகள் 17ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கின்றன. துடியர்களின் வரலாறு இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் ஆராயப்பட வேண்டும்.

5. தமிழினி, ஜூலை-ஆகஸ்டு 2010, பக். 27 (இக்கட்டுரைத் தொடரின் அத்தியாயம் 5)இல் “இவ்வாறு பாணர்கள் வேளத்துப் பிள்ளைகள் ஆவதென்பது சுதந்திரமான - வைஸ்ய - வர்ண அந்தஸ்தைக் கைவிட்டு - சூத்திர அந்தஸ்தை அடைவது” என்றிருக்க வேண்டிய வாசகத்தில் “கைவிட்டுச் சூத்திர அந்தஸ்தை” என்பது விடுபட்டுள்ளது.

6. குமரி மாவட்டம் திருவாட்டாற்றை ஆண்டவன் எழினியாதன். வில்லியாதன், கிடங்கில் எனப்பட்ட திண்டிவனத்திற்கு அருகிலுள்ள நன்மாவிலங்கை அரசன்; ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் முன்னோன்

7. பக். 139, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 2008.

8. “தாம் கொண்ட கோலத்தானும் கூத்தானும் நலம்பெறும் சாந்திக் கூத்தர். என்னை? .... மூசிய சுன்னம் முகத்தெழுதி ஈசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாடத் தகும் என்பதால் அறிக. மதங்கரென்பாரும் உளர்” - பக். 157, மேற்சுட்டிய நூல்.

9. பக். 168, மேற்படி நூல்.

10. கண்டு, கட்டி (நூல்கண்டு, கற்கண்டு, கருப்பங்கட்டி) என்பன கண்ணுதல் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடைய சொற்களாகும். கண்ணுள் வினைஞர் என ஓவியர்களையும் சிற்பிகளையும் சிலப்பதிகாரம் (16:106) சுட்டுகிறது. இப்பெயரும் கட்டுதல் புனைதல் எனப் பொருள்படும் கண்ணுதல் அல்லது கண்ணுள்வினை என்ற செயல்பாட்டின் அடிப்படையில் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. (கண்ணால் காண்பதைப் புறத்தே சிற்ப - ஓவியக் கலை வடிவமாக உருவாக்குபவர் என்று பொதுவாகக் கொள்ளப்படும் பொருளைவிட இது பொருத்தமாக உள்ளது.)

11. பக். 58, 82, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும். புணர்த்தல் என்பது கட்டுதல் என்றே பொருள்படும்.

12. பக். 859, சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1969.

13. ஜே.பி. ராட்லர், Dictionary Tamil English, Vol. 4, p. 149, 1841. மறுபதிப்பு: ஐ.ஐ.டிஎஸ்., சென்னை-113, 2000.

14. பக். 69, 113, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்.

15. p. 144, Early Tamil Epigraphy, I. Mahadevan, CreA, Chennai, 2003.

16. மணி[ய்] வண்ணக்கன் என்பது மணிகளின் தரத்தைப் பரிசோதிப்பவனைக் குறிக்கும் என்று பொருள்விளக்கம் கூறி, கொங்கு நாட்டுக் கொடுமணலில் உயர்வகை மணிகள் கிடைத்த வரலாற்றுடன் தொடர்புபடுத்தியும் சில ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.

17. “அளபிறந்தி சைத்தலும் ஒத்திசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.” - தொல். எழுத்து. 33. வைதிக மரபில் சாம வேதமே இசைக்கு அடிப்படை என்ற கருத்து உண்டு.

18. Plate 52 - Edakal - B2, Inscription No. 119, Early Tamil Epigraphy.

19. பக். 49, பல்லவர் செப்பேடுகள் முப்பது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1999.

20. பக். 52-53, மேற்படி நூல்.

21. pp. 3483-4, Tamil Lexicon, Madras University, 1982.

22. பக். 76-79, கொங்கு நாடும் சமணமும், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, 2005.

23. சமண சமயம் இசை முதலிய கலைகளை ஊக்குவிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருப்பினும் சமண சமய இலக்கியங்களான சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆகியவற்றில் இசை - கூத்து ஆகியன குறித்த பல செய்திகள் உள்ளன. புலவர் செ. இராசு இக்கல்வெட்டினைச் சமண சமயத் தொடர்புடையதாகவே கருதுகிறார். “கொங்கு நாடும் சமணமும்”, மேற்சுட்டிய நூல்.

24. p. 405-413, Early Tamil Epigraphy.

25. p. 414-421, Early Tamil Epigraphy.

26. பக். 331, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும்.

27. History of India, K.P. Jaiswal, மேற்கோள்: பக். 73, வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சுவீரா ஜெய்ஸ்வால், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1991. ‘பரமசிவ நாகர்’ என்று இது தமிழில் தவறாக ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது.

28. இசை வேளாளருள் திருவாரூர்க் கொண்டி மரபினர் மிக உயர்ந்தோராகக் கருதப்படுவர். ஆடல் வல்ல கொண்டி (போர்க்காலங்களில் கொள்ளையடித்துக் கொண்டுவரப்படும்) மகளிர் பற்றிப் பட்டினப்பாலையிலும் (246-249), மதுரைக்காஞ்சியிலும் (583-585) குறிப்புகள் உள்ளன.

29. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தொடக்க காலப் பல்லவர்களால் பின்பற்றப்பட்ட தென்பிராமி எழுத்துகளின் தாக்கம் இது என ஐ. மகாதேவன் கருத்துத் தெரிவித்துள்ளார். p. 184-6, Early Tamil Epigraphy.

30. கொல்லனும் வண்ணானும் ஈழவனும் பறம்பனும் பறையனும் ஒரோ குடியிருப்பது, கி.பி. 1000ஆவது கல்வெட்டு, Epigraphia Indica, XXXIII, No. 33.

31. சிலம்பு. 5:32இல், “தோலின் துன்னர்” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடியார்க்கு நல்லார் “பறம்பர் முதலாயினோர்” எனப் பொருள் கூறுகிறார்.31.

32. துணி, அறுவை ஆகிய சொற்கள் துண்டிக்கப்பட்ட, அறுக்கப்பட்ட விலங்குத் தோலே தொடக்ககால வேட்டை நிலைச் சமூக அமைப்பில் ஆடையாகப் பயன்படுத்தப்பட்டமையை உணர்த்தும்.

33. திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை. (பதிப்பு: சு. பாலசாரநாதன், உ.வே.சா. நூலகம், சென்னை-90, 1988.) குயிலுதல் என்ற சொல்லும் தைத்தல், யாத்தல் என்ற பொருளுடையதே. குஷீலவ என்ற வடசொல் இதன் திரிபாகலாம்.

34. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் (ஓய்வு) திரு. ச. கிருஷ்ணமூர்த்தி இக்கருத்தினைத் தெரிவித்தார்.

35. புறநானூறு மூலமும் பழைய உரையும், பாடினோர் வரலாறு, உ.வே.சா. நூலகம், 1971.

36. பக். 61, பாண்டியர் செப்பேடுகள் பத்து.

(நன்றி: தமிழினி, அக்டோபர் 2010.)


SISHRI Home