அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format
தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 2)
எஸ். இராமச்சந்திரன்

வேளாண்மை = விருந்தோம்பல்

சூத்திர வர்ணத்தவரே தமிழில் வேளாண் மாந்தர் எனக் குறிப்பிடப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொள்வதில் முதன்மையான ஓர் ஆட்சேபனை எழுப்பப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ் வேதமாகக் கருதிப் போற்றப்படும் திருக்குறளில் வேளாண்மை என்ற சொல் மிகவும் சிறப்பான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறளில் “வேளாண்மை என்னும் செருக்கு” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை என்பது சூத்திர வர்ணத்தவரின் தொழில் சார்ந்த தன்மை என்று பொருள்படுமெனில் திருக்குறள் அதனைப் பெருமிதமிக்க ஒரு பண்பு நலனாகக் குறிப்பிடவேண்டிய அவசியம் யாது? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து விரிவாக ஆராய்வோம்.

திருக்குறள் அறத்துப்பாலில் விருந்தோம்பல், ஒப்புரவு அறிதல் என்ற இரண்டு அதிகாரங்களிலும் பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்திலும் வேளாண்மை என்ற சொல் இடம்பெற்றுள்ளது. விருந்தோம்பல் அதிகாரத்தில்,

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு


- என்ற குறள் இடம்பெற்றுள்ளது. விருந்தினரின் தேவையறிந்து அவற்றை நிறைவுசெய்வதே வேளாண்மை என்ற சொல்லால் இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்புரவு அறிதல் அதிகாரத்தில்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு


என்ற குறள் இடம்பெற்றுள்ளது. பாடுபட்டுப் பொருள் சேர்ப்பதே தகுதி உடையவர்களை உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகத்தான் என்பது இக்குறளின் பொருளாகும். இக்குறளிலும் வேளாண்மை என்பது உபசரித்தல், பேணுதல், தேவைகளை உரிய வகையில் நிறைவுசெய்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ஆள்வினையுடைமை அதிகாரத்தில்,

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு


- என்ற குறளும்,

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மைப் போலக் கெடும்


- என்ற குறளும் இடம்பெற்றுள்ளன. இக்குறள்களில் இடம்பெற்றுள்ள தாளாண்மை என்ற சொல், தகுந்த செயல்திட்டத்தின் அடிப்படையிலான முயற்சியைக் குறிக்கும். தாளாண்மை உடையவன் மட்டுமே “பிறரை உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியவன் நான்” என்ற இறுமாப்பு அடையத் தகுதியுடையவன்; தாளாண்மை இல்லாதவன் பிறரை உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவுசெய்ய முயல்வது நெஞ்சுரமற்ற பேடி வாட்போர் புரிவது போன்றதாகும் என்பனவே இக்குறள்களின் கருத்தாகும்.

மேற்குறித்த நான்கு குறள்களிலுமே வேளாண்மை என்பது பிறரை உபசரித்தல், அவர்களின் தேவையறிந்து அவற்றை நிறைவுசெய்தல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளமையைக் காணலாம். அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரத் தலைப்புகளே இதனை உணர்த்தும். குறிப்பாக, ஒப்புரவறிதல் என்ற அதிகாரத் தலைப்பில் இடம்பெற்றுள்ள ஒப்புரவு என்ற சொல் சமாதான சகவாழ்வு, பிறருடன் இணங்கி நடத்தல், பொதுநலனுக்காகத் தன்முனைப்பைக் குறைத்துக்கொண்டு செயல்படுதல், ஒரு குழுவாகக்கூடி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுதல் போன்ற உயரிய பண்புநலன்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். திருக்குறள் எத்தகைய வாசகர்களை முன்னிறுத்தி எழுதப்பட்டது; எப்படிப்பட்ட பண்பு நலன்களை முன்னிறுத்துகிறது என்பவற்றை ஆராய்ந்தால், வேளாண்மை என்ற சொல் திருக்குறளில் உயர்ந்த பொருளில் பயன்படுத்தப்படுவது குறித்த சிக்கல் எளிதில் தீர்ந்துவிடும்.

திருக்குறள் ஒரு நீதி நூல்; வேளாண் மாந்தர் எழுச்சிபெற்ற காலகட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் அரசமைப்பினை இலட்சியபூர்வமான ஒன்றாக முன்னிறுத்துகிற நூல். அரசியல் தொடர்பான நீதிகளைக் கூறுகின்ற பொருட்பாலில் முதல் அதிகாரமான இறைமாட்சியில் ஓர் அரசின் ஆறு அங்கங்களைக் குறிப்பிடும்போது கருவூலம் (அல்லது வருவாய்த் துறை) என்ற அங்கத்தைக் ‘களஞ்சியம்’ என்ற பொருளில் ‘கூழ்’ என்ற சொல்லால் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பொருட்பாலில் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் ஒரே ஓரிடத்தில் உலகுபொருள், அதாவது சுங்க வரியால் கிடைக்கின்ற வருமானம் குறிப்பிடப்படுகிறது. வாணிகத்தின் இன்றியமையாமை பொருட்பாலில் வலியுறுத்தப்படவில்லை. அறத்துப்பாலில் நடுவுநிலைமை அதிகாரத்தில்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்


- என்ற ஒரே ஒரு குறளில்தான் வாணிகம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. பொருட்பாலில் ஓர் அரசுக்கு அடிப்படையான கூழ் (களஞ்சியம்) உருவாக்குகின்ற துறையாக உழவு முதன்மைப்படுத்திக் குறிப்பிடப்படுகின்றது. கொற்றக்குடையுடன் உலா வருகின்ற அரசர்களும் உழவர்களின் ஏர்க்கலப்பையின் நிழலில்தான் தங்கள் அரசாட்சியைச் செலுத்த முடியும் என்று பொருள்படுகின்ற,

பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பார்
அலகுடை நீழலவர்


- என்ற குறள் உழவு என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

திருக்குறள் களப்பிரர் ஆட்சியின் தொடக்கக் கட்டத்தில், கி.பி. 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட நூலாகவே இருக்க வாய்ப்புள்ளது. விவசாயப் பொருளாதாரத்தை அடித்தளமாகக்கொண்ட ஓர் அரசமைப்பினை முன்னிறுத்துகின்ற ஒரு நீதிநூலில் வேளாண்மை என்ற கருத்தோட்டத்தின் சிறப்பான கூறுகள் மட்டும் வெளிப்படுத்தப்படுவது இயல்புதானே.

இந்த இடத்தில் மற்றொரு வரலாற்றுத் தரவினைக் கவனத்தில் கொள்வது பொருத்தமாகும். கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் காசுகள் அச்சிட்டுப் புழக்கத்தில் விடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், கேரள மாநில (மேலைக் கடற்கரை) வணிக நகர்களைவிடத் தமிழகத்தின் வணிக முதன்மை கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அதிகரித்தது என்பதற்குச் சான்றாக ரோமானிய வெள்ளி தினார்கள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. வெளிநாட்டு வாணிகத் தொடர்பு பெருகிய அதே வேளையில் உள்நாட்டு அரசு விவசாயப் பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாகவே இருந்தது என்பதற்கு இது முதன்மையான சான்றாகும்.1

யதார்த்தமான, நடைமுறையில் இருந்த வாழ்வியல் நெறிகளை நீதிநூலின் கண்ணோட்டத்தில் இல்லாமல் ஓரளவு அறச்சார்புடன் இலக்கணப்படுத்தும் தொல்காப்பியத்தில் வேளாண்மை என்பது விருந்துபசாரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. களவுக் காலத்தில் தோழி, தலைவி ஆகியோரது கூற்று நிகழ்கின்ற சந்தர்ப்பங்களைப் பட்டியலிடும்போது, “வேளாண் எதிரும் விருந்தின்கண்” தலைவி பேசுகின்ற சந்தர்ப்பம் வாய்க்கும் என்றும், “வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து”த் தோழிக்குப் பேசுகின்ற சந்தர்ப்பம் வாய்க்கும் என்றும் தொல்காப்பியம் களவியல் நூற்பாக்கள் 16, 24 ஆகியவை குறிப்பிடுகின்றன.

களவுக் காலத்தில் காதலன் காதலியின் வீட்டில் விருந்தினனாகத் தங்கிச் செல்வதுண்டு. அப்போது தலைவியுடன் களவுப் புணர்ச்சி மேற்கொள்வதும் உண்டு. இதுவே, வேளாண் எதிரும் விருந்தாகும். வேளாண் பெருநெறி என்பதும் இத்தகைய விருந்து உபசாரமே ஆகும். இந்த இலக்கணத்திற்கு உரிய சங்க இலக்கிய எடுத்துக்காட்டுகள் என “நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்” எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலும் (பா. 300) “பன்னாள் எவ்வம் தீர” எனத் தொடங்கும் அகப்பாடலும் (பா. 340) உரையாசிரியர் நச்சினார்க்கினியரால் மேற்கோள் காட்டப்படுகின்றன.2 விருந்துபசாரம் என்பது தொல்காப்பியத்தில் களவு மணம் தொடர்பான வேளாண் நெறியாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. இது “வேளாண் பெருநெறி” என்று குறிப்பிடப்படுவதன் காரணம் ஆராயத்தக்கது.

பாணர், பொருநர் போன்றோருடைய இசைக்கலை, ஆடற்கலை மரபுகள் நாட்டுப்புறக் கலை வடிவங்கள் ஆகும். இவற்றைப் பொதுவியல் என்ற பிரிவில் வகைப்படுத்துவது மரபு. ஆனால், வேளாண் வாயிலோரின் கலை மரபு என்பது ‘வேத்தியல்’ என்று வகைப்படுத்தப்படுகிற, வேந்தர்களின் அரசவை சார்ந்த அரங்கக்கலை மரபாகும். இத்தகைய ஆடல் பாடல் கலை வடிவங்களால் தலைமகனை மகிழ்வித்து விருந்துபசாரம் செய்து கூடுவதே வேளாண் பெருநெறி எனத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு நாம் பொருள்கொள்வதற்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன. “தாவில் நல்லிசை” எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவில் (புறத்திணையியல்: 36) ஆற்றுப்படை என்ற துறையைக் குறிப்பிடும்போது தலைவனிடம் ஆற்றுப்படுத்துவோராகக் கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் குறிப்பிடப்படுகின்றனர். இதற்கு விளக்கம் கூறுகின்ற நச்சினார்க்கினியர், “கூத்தர் எனப்படுவோருக்குச் சாதி வரையறை இல்லை” என்றும், “பாரசவரும், வேளாளரும் பிறரும் அவ்வாடல் தொழிலுக்கு உரியோர்” என்றும் விளக்குகிறார்.3 இத்தகைய வேளாளக் கூத்தர்களே பரிசில் நாடி வருவோரைத் தலைமகனிடம் ஆற்றுப்படுத்தும் வேளாண் வாயிலோர் ஆவர். இவர்களுள் பலர் பழங்குடி நிலையினரான கிணைப் பொருநர், பறையடித்தும் யாழிசைத்தும் பாடும் பாணர் ஆகியோராக இருந்து அரசு அதிகார வர்க்கத்தின் அங்கமாக மாறியிருக்க வேண்டும். எனவேதான், ‘வேளாண் பெருநெறி’ என்று இத்தகைய செவ்வியல் நெறி குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திவாகர நிகண்டு ‘வேளாளர் அறுதொழில்’ பட்டியலில் குயிலுவம் என்பதையும் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சொல் ‘குஷீலவ’ என்ற வடிவில் அர்த்தசாஸ்திரத்தில் (அதிகரணம் 1, அத்தியாயம் 3) பயன்படுத்தப்படுகிறது. திவாகரம் குறிப்பிடுகின்ற அறு தொழில்களாவன: உழவு, பசுக்காத்தல், வாணிகம், இரு பிறப்பாளர்க்கு ஏவல் செய்தல், காருகம், குயிலுவம் ஆகியன ஆகும். இவற்றை சூத்திரர்க்குரிய ஆறு தொழில்களாக அர்த்தசாஸ்திரம் வகைப்படுத்துகிறது. இருபிறப்பாளர் என்பது பிராம்மணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தவரையும் குறிப்பதாகவே அர்த்தசாஸ்திரம் பொருள்படுத்தியுள்ளது. காருகம் என்பது ‘காருக கர்ம’ என்ற வடிவிலும், குயிலுவம் என்பது ’குஷீலவ கர்ம’ என்ற வடிவிலும் இடம்பெற்றுள்ளன.4 காருகம் என்பது நெசவுத் தொழிலைக் குறிக்கும் என்ற பொருள் விளக்கம் சிலப்பதிகாரக் குறிப்பிலிருந்து (5:16-17) கிடைக்கிறது. குஷீலவ என்ற சொல் பாணன் (bard), பாடகன், நடனக்காரன், நடிகன், செய்தி கொண்டு செல்லுவோன் (வாயிலோன்) ஆகியோரைக் குறிக்கும் என்று சமஸ்கிருத அகராதி பொருள் கூறுகிறது.5 ’குயிலுவம்’ என்பது குஷீலவரின் தொழிலையே குறிக்கும் என்பது வெளிப்படை.

இவ்வாறு ஆடல் பாடல் மூலம் மகிழ்வித்தல், விருந்துபசாரம் செய்தல் போன்றவற்றினை விருந்துபசாரத் தொழில் (hospitality industry) என்றே தற்காலத்தில் பெயரிட்டுள்ளனர். வேற்று நாட்டுத் தூதுவர்களை மகிழ்வித்தல், அந்நாடுகளை நட்பு நாடாக ஆக்கிக்கொள்ளுதல் ஆகிய நோக்கங்கள் கொண்ட இத்தகைய விருந்துபசாரத் துறைப் பணியாளர்கள் அல்லது அரசவை வரவேற்பாளர்களே வேளாண் வாயிலோர் எனலாம். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் வேளாளர் குல நாயன்மார் ஒருவர் பெயரே ’வாயிலார் நாயனார்’ என்பதாகும்.

இது இவருடைய குடிப்பெயர் எனப் பெரியபுராணம் (கறைக்கண்டன் சருக்கம், பா. 30-31) குறிப்பிடுகிறது.

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
வாயிலாரென நீடிய மாக்குடித்
தூய மாமரபின் முதல் தோன்றியே
நாயனார் திருத் தொண்டின் நயப்புறு
மேயகாதல் விருப்பின் விளங்குவார்


வேளாளக் கூத்தர்கள் முதலிய அரசவைப் பணியாளர்களை வாயிலார் குடியினர் எனக் குறிப்பிடப்படுவது வழக்கமானதன் விளைவாக வாயிலோன் என்ற சொல்லே தமிழ்க் கூத்தனைக் குறிக்கும் எனக் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு குறிப்பிட நேர்ந்தது. வாயில் என்ற சொல் தலைமக்களுடைய அகத்திணை சார்ந்த செயல்பாடுகள் குறித்துத் தூது செல்வோர் என்ற பொருளிலிருந்து வளர்ச்சியுற்று அரசமைப்புச் சார்ந்த தூதர்கள் என்ற பொருளையும் பெற்றுவிட்டமை இதனால் தெரிகிறது. கி.பி. 6-7ஆம் நூற்றாண்டுகள் அளவில் எழுதப்பட்ட பெருங்கதையில் (1:37:88-89) அரசவையில் நிகழும் கூத்து ‘வாயிற்கூத்து’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘வாசல் கேள்வி’ என்றாலே அரச ஆணையைக் கேட்டு எழுதுகின்ற அரசவை அலுவலரைக் குறிக்கின்ற ஒரு தொடராகக் கி.பி. 10ஆம் நூற்றாண்டைய கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. 6

அரசு சார்ந்த விருந்துபசாரத் துறை அலுவலர்களாகத் தம் நிலையை உயர்த்திக்கொண்ட வேளாண் வருணத்தவர் அரச (சத்திரிய) வருண அந்தஸ்தை மட்டும் தாங்கள் பெறவில்லையே தவிர, அரசவையில் ஆளும் வர்க்கத்தவர்க்குரிய பெருமிதத்துடன் நடந்துகொள்பவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் ஆடை கீறிச் சிலந்தி காட்டியோர் என்று தம் குல மூதாதை ஒருவரின் பெருமிதமான நடத்தையைக் குறிப்பிடுகின்றனர். இது குறித்த கதையாவது: வேளாளர் குல மூதாதை ஒருவர் தொடைப் பகுதியில் நரம்புச் சிலந்தி நோய் வந்து அவதிப்பட்டார். அந்த நிலையிலேயே ஒருநாள் அவர் அரசவையில் அமைச்சர், சேவகர் போன்ற பரிவாரத்தாருடன் இருக்கும்போது, அரசவைக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் இவர் நரம்புச் சிலந்தி நோயால் அவதிப்படுவதைக் கேள்விப்பட்டு அதனைத் தாம் குணப்படுத்துவதாகக் கூறி நரம்புச் சிலந்திப் புண்ணைப் பரிசோதிக்க விரும்பினார். அரசவையில் பலர் முன்னால் ஆடையைத் தூக்கித் தொடையைக் காட்டுவது கண்ணியக் குறைவானது என்று கருதிய வேளாளர் குல மூதாதை தாம் அணிந்திருப்பது விலை உயர்ந்த ஆடை என்பதையும் பொருட்படுத்தாமல் தொடைப் பகுதியில் அதனைக் கிழித்து மருத்துவரிடம் தம் நரம்புச் சிலந்தியைக் காட்டினார். இதனை ஆறுநாட்டு வேளாளர்களின் தாமிரப் பட்டய நகல் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

அரசனென்னு மவ்வண்ணம் தவிர விரவிய சிலந்தி தான் பட வேண்டி ஆடை கீறி அச்சபை மகிழ நாடிய துடையில் காட்டிய நண்போர்.7

இத்தகைய பரிணாம வளர்ச்சி என்பது அரசியல் மாற்றத்தினால் விளைந்த சமூகவியல் மாற்றமே என்பதை நாம் எளிதில் உணரலாம். அதே வேளையில், வேளாண்மை என்பது ஆடல் பாடலுடன் நிகழ்த்தப்படும் விருந்து உபசாரமாகவே தொடங்கிற்று என்பதை உணர்த்துகின்ற எச்சங்களாகச் சில சொல் வழக்குகள் இன்றும் நீடித்து வருகின்றன. மேளம் என்ற சொல் இசைக் கருவிகளின் தொகுதி, இசைக் கருவிகளை இயக்குதல் போன்ற பொருள்களில் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருவது இதனை உணர்த்தும். மேளம், வேளம் – இரண்டு சொற்களும் ஒரே கருத்தோட்டத்தின் அடிப்படையில் தோன்றியவையாகவே இருப்பதால்தான் இவை இரண்டு நிறுவனங்களின் பிற்கால வளர்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவையாய் அமைந்தபோதிலும், இவற்றிற்கு இடையிலான பொருள், தொடர்பு ஓர் எச்சமாக நீடித்து நிற்கிறது.

விருந்துபசாரம் என்பது அறம் சார்ந்த ஒன்றாக, குறிப்பாக இல்லறம் சார்ந்த ஒன்றாகக் கையாளப்படும்போது விருந்தினரை உபசரிக்கின்ற இல்லறத்தார்க்குரிய பஞ்சமகா யக்ஞங்களில் ஒன்றாக மாறுவதைத் திருக்குறளில் காணமுடிகிறது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தா ஓம்பல் தலை


தொல்காப்பியம் கற்பியலில் (நூற்பா 11) “வல்லிதின் விருந்து புறந்தருதல்” என்ற துறை குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் (16:72-73) இல்லறத்தார்க்குரிய கடமைகளுள் ஒன்றாகக் கண்ணகி குறிப்பிடுகின்ற “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்” என்பது இத்தகைய இல்லற தர்மங்களுள் ஒன்றே. ஆனால், திருக்குறள் பொருட்பாலில் குறிப்பிடப்படுகின்ற வரைவின் மகளிர், சூது ஆகிய அதிகாரங்கள் சங்க கால வாழ்வியலில் அனுமதிக்கப்பட்ட, வேளாண் பெருநெறி சார்ந்த விருந்தோம்பல் நெறிமுறைகளே என்பதையும் நீதிநெறி சார்ந்த ஓர் அரசு இத்தகைய துறைகளின் மூலம் வருவாய் ஈட்டக்கூடாது என்ற கருத்து இவ்வதிகாரங்களில் திருவள்ளுவரால் வலியுறுத்தப்படுவதையும் நாம் உணரலாம். சூது என்பது வேளாண் பெருநெறி சார்ந்ததே என்பதற்குச் சூதில் கிடைத்த பொருளைக் கொண்டு சிவபெருமானுக்குத் திருப்பணி புரிந்த திருவேற்காடு மூர்க்க நாயனார் என்ற வேளாளரைப் பற்றிய பெரியபுராணக் குறிப்பே (வம்பறா வரிவண்டுச் சருக்கம் 1720-1731) சான்றாகும். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திரிகடுகம் (பா. 42) வேளாண் குடிக்கு எது அழகு என்ற நீதியை வரையறுத்துக் கூறுகையில் சூதாடுவதால் கிடைக்கிற பொருளை விரும்பாதிருத்தல் (கழகத்தால் வந்த பொருள் காமுறாமை) எனக் குறிப்பிடுகிறது. இதில், திருக்குறள் சுட்டுகின்ற நீதியின் தொனி அமைந்திருப்பதைக் காணலாம்.

யதார்த்தத்தில் வேளாண்மை என்பதன் முதன்மையான தன்மைகளுள் ஒன்றாகக் குயிலுவம் (இசைக்கருவிகளை இசைத்தல்) என்பதைத் திவாகர நிகண்டு குறிப்பிடுவது போலவே, பாரதி தீப நிகண்டு என்ற பிற்கால நிகண்டு மெய்யுபசாரம் என்பதையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய மெய்யுபசாரங்களுள் தலைமக்களின் (அல்லது விருந்தினரின்) உடலில் நறுமணத் தைலங்களைப் பூசி உடலைப் பிடித்துவிட்டு (மசாஜ் செய்து) நீராட்டுதலும் ஒன்றாகும். இத்தகைய நீராட்டுவித்தல் நிகழ்கின்ற விடுதிகளை ‘மன்னரின் காதலிமார் வேளம்’ என்றே கம்பர் குறிப்பிட்டதாகத் தமிழ் நாவலர் சரிதை குறிப்பிடுகிறது.8 ’மஞ்சனத்தார் வேளம்’ என்ற பெயரிலேயே மேற்குறிப்பிட்ட மசாஜ் தொழில் நிறுவனம் சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.9

சங்க காலத் தலைமக்களது அக வாழ்க்கையில் வாயிலோராக செயல்பட்டவர்களுள் வருண அந்தஸ்தில் உயர்ந்தவராகக் கருதப்பட்ட பார்ப்பன வாயிலோர் முதல் பாணர், பாங்கர் என்று பலவகைப்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களுள் பார்ப்பன வாயிலோர் “பேணுதகு சிறப்பின் பார்ப்பான்” என்று தொல்காப்பியத்திலும் (பொருளதிகாரம், செய்யுளியல், 182) “வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன்” என்று கலித்தொகையிலும் (பா. 72:17-18) குறிப்பிடப்படுகின்றனர். இத்தகைய பார்ப்பன வாயிலோர்களுள் பலர் பாணர் குலத்தவருடன் மிக நெருங்கிய உறவு கொண்டு வாழ்ந்தமையைச் சிலப்பதிகாரம் புறஞ்சேரி இறுத்த காதை (வரி. 56-105) குறிப்பிடுகிறது. இத்தகைய பார்ப்பன வாயிலோர், பாணர் குல வாயிலோருக்கிடையே நிலவிய மண உறவுகளின் விளைவாகவே வள்ளுவர் குலம் என்ற கணியர் குலம் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. இவ்வாறு உருவான ஆசான் வர்க்கம் சங்க காலத்தில் பிராம்மண வர்ணம் சார்ந்த பிரிவாகவே அங்கீகரிக்கப்பட்டுப் பின்னர் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் வேளாள வர்ணத்தவர்க்குக் குல குருக்கள் போன்று செயல்பட்டமையால்தான் பிற்கால வேளாளர் மெய்க்கீர்த்திகளில் தம்முடைய பூர்விக குல குருக்களுடன் தமக்கு இருந்த உறவினை மறைமுகமாக அங்கீகரிக்கும் வகையில் பாணன் பிணம் சுமந்தோர், பறையனோடு சோறுண்டோர் என்று வேளாளர்கள் பறைசாற்றினர் போலும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] கேரள மாநிலத் தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் தியாக. சத்தியமூர்த்தி அவர்கள் ரோமானியக் காசுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். அவருடனான உரையாடலில் கிட்டிய தகவல்.

[2] தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பகுதி 2, பக். 48, 108. பதிப்பாசிரியன்மார்: தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல், தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17, 2003.

குறிஞ்சி, நெயதல் திணைப் பாடல்கள் சிலவற்றில் களவுப் புணர்ச்சியோடு தொடர்புடைய இத்தகைய விருந்தயர்தல் மரபு பதிவுபெற்றுள்ளதைத் திரு. ராஜ் கௌதமன் பதிவுசெய்துள்ளார். பார்க்க: ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், பக். 70-73, தமிழினி, சென்னை-14, 2009.

[3] தொல்காப்பியம், பொருள்., நச்சினார்க்கினியம், பகுதி 1, பக். 415.

[4] கௌடலீயம் பொருணூல், தமிழ் மொழிபெயர்ப்பு, முதற்பகுதி, பக். 27, அண்ணமலைப் பல்கலைக்கழகம், 1979. காருகம் என்பது சிற்பத் தொழிலைக் குறிக்கும் என்றும், தமிழக வேளாளர்கள் அர்த்தசாஸ்திரத்தில் சூத்திரர் என்று குறிப்பிடப்படும் வர்ணத்தவர் ஆகார் என்றும் அர்த்தசாஸ்திரத்தின் இப்பகுதியை மொழிபெயர்த்த பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் இது குறித்துத் தெரிவித்துள்ள விளக்கம் தவறானதாகும். அர்த்தசாஸ்திரத்தின் இப்பகுதியில் சூத்திரர் அறுதொழில்களாகக் குறிப்பிடப்படுவன திவாகர நிகண்டுக் குறிப்புடன் துல்லியமாகப் பொருந்துவதை எனக்குச் சுட்டிக்காட்டியவர் ஆய்வாளர் ப்ரவாஹன் ஆவார்.

[5] p. 156, The Students Sanskrit English Dictionary, V.S. Apte, Motilal Banarsidass, 1967.

[6] South Indian Inscriptions, Vol XIX, No. 169.

[7] ஆறு நாட்டு வேளாளர்கள் தாமிரப் பட்டய நகல், குமாரி லீலா, கல்வெட்டு காலாண்டிதழ், இதழ் 16, நள ஆண்டு தைத் திங்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை.

[8] கூளம் பிடித்தெள்ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்குக்
காளம் பிடித்திடிற் சின்னம்படும் மன்னர் காதலிமார்
வேளம் பிடித்தகண் வெள்ளம் பிடிக்க வெம்பேய்க் கிளம்பேய்
தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே


- என்ற பாடல் தமிழ் நாவலர் சரிதையில் குறிப்பிடப்படுகிறது. தாதன் எனும் வணிகனைத் தமக்கு விருது பிடிக்கும்படி கூறி கம்பர் இக்கவிதையைப் பாடியதாகக் குறிப்பிடப்படுள்ளது.

[9] South Indian Inscriptions, Vol. XIX, No. 193.

(நன்றி: தமிழினி, ஏப்ரல் 2010.)


SISHRI Home