What we wrote... |
|
நம் தாய்நாட்டை இந்தியா என்றும், பாரதம் என்றும் குறிப்பிடுகிறோம். "India that is Bharath" என்றுதான் நமது அரசியல் சாசனமே தொடங்குகிறது. சிந்து நதியைக் குறிப்பிடுவதற்குப் பாரசீகர்கள் வழங்கிய ஹிந்து அல்லது இந்து என்ற உச்சரிப்பு வழக்கிலிருந்தே இந்தியா என்ற பெயர் தோன்றிற்று. இந்தியா என்பதற்குச் சிந்து நதிக்கரை நாடு என்றே பொருள். ஆனால் பாரதம் என்ற பெயர், பரத சக்ரவர்த்தியால் ஆளப்பட்ட நாடு என்ற பொருளில் உருவான பெயர் எனக் கருதப்படுகிறது. இந்தப் பரத சக்கரவர்த்தி, துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவரா, ரிஷப தீர்த்தங்கரருக்கும் யசஸ்வதிக்கும் பிறந்தவரா என்பன போன்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே இக்கருத்துகளிலிருந்து மாறுபட்டு, இந்தியா என்பது சிந்து நதியுடன் தொடர்புடைய பெயராக இருப்பது போன்று, பாரதம் என்ற பெயரும் ஏன் நதியொன்றின் பெயருடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது என்ற ஐயம் ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் பரதப்புழா என்ற நதி ஓடுவது போல, வட இந்தியாவில் பரத அல்லது பாரதி என்ற பெயரால் அழைக்கப்படும் நதியேதும் ஓடுகிறதா என்ற கேள்வி தோன்றிற்று. இக்கேள்விக்கு விடை தேடுவதற்காகப் பழம்புராணக் குறிப்புகளைப் புரட்டிப் பார்த்ததில் கிடைத்த விவரங்களைத் தொகுக்கும்போது அழகான ஒரு சித்திரம் உருவாயிற்று. ரிக்வேதத்தில் இளா, பாரதி, சரஸ்வதி என்ற பெயர்களையுடைய ஆப்ரி தேவதைகள் (நீர்த் தெய்வங்கள்) மூவர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் மூவரும் மூன்று நதிக் கன்னியர்களே என்பதில் ஐயமில்லை. சரஸ்வதி என்பது மிகப் பழமையான ஒரு நதி என்ற கருத்தினை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கங்கை-யமுனையுடன் கலந்த அந்நதி, காலப்போக்கில் ராஜபுதனப் பாலைவன மணலுள் மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வாறெனில் இளா, பாரதி என்ற பிற இரு நதிக் கன்னியரும் கங்கை-யமுனையாகவே இருக்க வேண்டும். தென்னிந்தியக் கோயிற் கோபுரங்கள் பலவற்றில் வாயிற்படியையொட்டிப் பக்கவாட்டில் மகரத்தின் மீதும் முதலையின் மீதும் நின்ற நிலையில் காட்சியளிக்கும் இளம் பெண்களாகக் கங்கையையும் யமுனையையும் சித்திரிக்கும் மரபு உண்டு. இந்நதிகளில் தீர்த்தமாடிவிட்டுக் கோவிலுக்குள் நுழைவது போன்ற பாவனையை அடியவர்கள் மனதில் உருவாக்குவதற்காகவே இவ்வாறு சித்திரித்தனர். கங்கையும் யமுனையும் இந்திய மக்களின் வழிபாட்டு மரபில் ஆழப் பதிந்திருப்பதைக் காணும்போது, ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இளா, பாரதி என்ற ஆப்ரி தேவதைகள் கங்கையும் யமுனையுமாகவே இருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். குறிப்பாகப் பாரதி என்பது, பரத வம்சத்து அரசர்கள் எந்த நதிக்கரையில் வாழ்ந்தார்களோ, ‘மகாபாரதம்’ எந்த நதிக்கரையில் நிகழ்ந்ததோ, அந்த யமுனை நதியையே குறித்திருக்க வேண்டும். இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆட்சி புரிந்த அரச குலத்தவர்கள் மகாபாரதப் போரில் பங்கேற்றனர் என்று இதிகாச-புராண நூல்கள் குறிப்பிடுகின்றன. பரதகண்டம் என்ற தொடர் இந்தியாவைக் குறிக்கப் புராண நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. கி.பி 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் காப்பியமான மணிமேகலை (பதிகம்-22) “பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர் தம் குலக் கொடி” எனக் காவிரியாற்றைக் குறிப்பிடுகிறது. இங்குப் பரதம் என்ற சொல் பரத கண்டம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. யமுனை நதி கருத்த நிறமுடையதாகும். எனவே அது யமனின் தங்கையாகவும் காளிந்தி என்ற பெயரிலும் குறிப்பிடப்படுவதுண்டு. அதே வேளையில் யமுனை என்ற பெயர் வேறு சில மொழி வழக்குகளில் ஜமுனா என உச்சரிக்கப்படுவதைக் கேட்கும்போது பாரசீக மொழியில் ஜாமூன் என்ற சொல்லுக்கு நாவல் மரம் என்ற பொருளிருப்பது நினைவுக்கு வருகிறது. வட தமிழ்நாட்டில் 'ஜமுனா மரத்தூர்' என்றே ஓர் ஊர் உண்டு. எனவே, யமுனா (யமுனை) என்ற பெயர் நாவல் மரத்தோடு இந்நதிக்கு உள்ள தொடர்பின் அடிப்படையில் உருவான பெயரே என நாம் புரிந்து கொள்ளலாம். மேருமலையைச் சுற்றியமைந்த ஏழு கண்டங்களுள் ஜம்பு கண்டம் அல்லது ஜம்புத்வீபம் என்பதும் ஒன்றாகும். தன் இரு கரைகளிலும் செழித்து வளர்ந்திருக்கும் நாவல் மரங்களைக் கொண்டு விளங்கும் ஜம்புநதியின் தீரத்தில் அமைந்த நிலப்பகுதி என்பதாலேயே இப்பெயர் உருவாயிற்று. ஜம்பு (நாவல்) பழச்சாறு கலந்து ஓடுவதால் இந்நதி கருத்த நிறத்தைப் பெற்றுவிட்டது எனப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்நதிக்கரையில் ‘ஜாம்பூ நதம்’ என்ற பெயருடைய ஒருவகைப் பொன் கனிமம் கிடைத்ததாகவும் தெரிகிறது. ஜம்பு என்பது பெருநாவல் (Eugenia Jambos) வகையைச் சேர்ந்த மரமாகும். இந்திய நாட்டை “நாவலந்தண்பொழில்” எனத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படை (வரி 465), பரிபாடல் (5:8), சிலப்பதிகாரம் (25-173), மணிமேகலை (22-29) ஆகியவற்றில் இக்குறிப்பு காணப்படுகிறது. மேருமலையும் நாவல் மரமும் இணைபிரியாதவை என்ற குறிப்பும் இலக்கியங்களில் காணப்படுகிறது. மந்தர மலையின் நடுவில் வேதிகை (திண்ணை) சூழ்ந்த புனிதமான நாவல் மரம் இருப்பதாகச் சூளாமணி என்ற காப்பியநூல் (5-151) குறிப்பிடுகிறது. மணமக்களை, “மேரு மலையும் நாவலும் போல் வாழ்க” என வாழ்த்துவது மரபு எனப் பெருங்கதை என்ற காப்பியத்தால் (2:3: 91:93) தெரிய வருகிறது. (“நன்னிலை யுலகினுள் நாவல் போலவும் பொன்னணி நெடுவரை போலவும் பொழில் வயின் மன்னுக”.) இத்தகைய வருணனைகளின் மூலமாக, பாரதி என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்ரி தேவதை, பரத வம்சத்தவரின் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்த யமுனை நதியே என்ற பொருள் விளக்கத்தை நாம் எட்ட முடிகிறது. அதே வேளையில் பாரதி என்பது சரஸ்வதியைக் குறிப்பதாகவே அறிஞர்களாலும் அடியார்களாலும் கருதப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பாரதி என்பது பரதநாட்டியத்தின் தெய்வம் என்ற பொருளில் "பாரதியாடிய வியன் பாண்டரங்கம்" என்ற தொடர் சிலப்பதிகாரத்தில் (6:39-45) இடம் பெற்றுள்ளது. இதற்குப் பொருள் கூறிய உரையாசிரியர்கள் “பாரதி என்பவள் பைரவி, அவள் ஆடிய பாண்டரங்கம் என்பது சுடுகாடு'' எனப் பொருள் கூறியுள்ளனர். ஆடலின் தெய்வமாகவும் இசையின் தெய்வமாகவும் காளியையே கவிகாளிதாசன் தனது சியாமளா தண்டகத்தில் போற்றித் துதிக்கிறான். சைவ சமய-பக்தியியக்க எழுச்சியை யொட்டிக் காளியை அதிரவீசியாடி வென்று ஆடவல்லான் என்ற பட்டத்தைச் சிவபெருமான் பெற்ற பிறகு காளியைக் கலைமகளாகக் கருதித் துதிக்கும் வழிபாட்டு மரபின் ஆற்றல் குறைந்துவிட்டது. உக்ரக்காளி சைவக்காளியாக உருமாறி விட்டதால் சாக்த மரபில் நிலவி வந்த மிருகபலி போன்ற வழக்கங்கள் செல்வாக்கிழந்தன. அதன் விளைவாகப் பாரதியின் அம்சங்கள் பலவற்றைச் சரஸ்வதி சுவீகரிக்க நேர்ந்தது. பாரதி என்பது காளியே; காளி என்பது காளிந்தி அல்லது யமுனை நதியையே குறித்தது. அதாவது யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பரத குலத்தவரின் தெய்வமாகவே காளியின் தோற்றம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்து காரண காரியத் தொடர்புடையதாக இருப்பினும் நாவல் மரத்துக்கும் பாரதி வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு விடை கண்டறிய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நாவல் பழத்தினைக் கிளிகள் மிகவும் விரும்பியுண்ணும். இதனால் நாவல் மரத்துக்கு ‘சுகப்ரிய:’ (கிளிக்கு விருப்பமானது) என்ற பட்டப் பெயர் உண்டு. கவி காளிதாசன் தனது சியாமளா தண்டகத்தில் காளியை ‘சுகப்ரியா’ என அழைக்கிறான். காளியை, “மாணிக்க வீணாம் உபலாலயந்தீம் மதாலஸா மஞ்சுள வாக்விலாஸாம்” என்று வருணித்தே தனது சியாமளா தண்டகத்தைக் காளிதாசன் தொடங்குகிறான். எனவே இசைக்கலை, நடனக்கலைக்கு மட்டுமின்றி, வாக்குக்கும் - நா வல்லமைக்கும் - காளியே தெய்வம் எனத் தெரிகிறது. நாவல் மரம், நாவல்லமையின் அடையாளமாகக் கருதப்பட்டது. சொற்போர் - வாதப்போர் - நடைபெறும் இடங்களில் நாவல் மரக்கிளையை நட்டு வைத்து, "நாவலோ நாவல்" எனக் கூவுவது வழக்கமாக இருந்ததென யாப்பருங்கல விருத்தி மேற்கோட் பாடல் ஒன்றால் தெரியவருகிறது. பேசத் தெரிந்த பறவையான கிளி, நாவற்பழங்களை விரும்பியுண்பதால்தான் பேச்சுத்திறன் பெற்றதெனக் கருதியதன் விளைவாகவும் நம் முன்னோர் இவ்வாறு நாவல் மரத்தினை நாவல்லமையுடன் தொடர்புபடுத்தியிருக்கக்கூடும். இந்திய நாட்டின் குறிப்பிடத்தக்க அன்னைத் தெய்வங்கள் சிலரின் கைமீதோ, தோள்மீதோ கிளி அமர்ந்திருப்பதாகச் சித்திரிக்கப்படுவதுண்டு. மதுரை நகரிலிருந்த சிந்தாதேவியைச் “செழுங்கலை நியமத்து நாமிசைப் பாவை” என்று மணிமேகலை (14:17-18) குறிப்பிடுகிறது. மதுரை மீனாட்சியம்மனுடன் கிளி சித்திரிக்கப்படுவது இந்தப் பின்னணியில் பார்க்கையில் பொருத்தமுடையதாகிறது. சிருங்ககிரி சாரதா அன்னையின் சிற்பத்தில் கிளி சித்திரிக்கப்படுவது பாரதி மரபுடன் நிலவி வந்த பழந்தொடர்புகளை அடையாளங்காட்டும். சாகைச்சம்பு மரத்தின் நிழலில் வீற்றிருந்த சம்பாபதியைக் காவிரிப்பூம்பட்டினத்தின் தெய்வமாகவும் சோழர்களின் குல தெய்வமாகவும் மணிமேகலை குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழராட்சியைக் கி.பி. 848இல் நிறுவிய விஜயாலய சோழன், தஞ்சையில் நிசும்பசூதனி என்ற பெயருடன் திகழ்ந்த தங்களது குல தெய்வமாகிய காளிக்குக் கோயில் எழுப்பினான். இது பாரதி மரபின் தொடர்ச்சியை உணர்த்தும். சோழர்கள் முடிசூடும் திருத்தலமாகத் திகழ்ந்த தில்லையிலும் மிகப் பழமையான தில்லைக்காளி கோயில் உள்ளது. தில்லைச் சிற்றம்பலத்தை நடராசர் தமது நடன சபையாக ஆக்கிக்கொண்ட பின்னர் தில்லைக்காளி, எல்லைக்குக் குடிபெயர்ந்துவிட்டாள் என நம்பப்படுகிறது. ஆடல்-பாடல், மந்திர-தந்திரம் முதலிய கலைகளுக்குரிய ஆதிதெய்வமாகவும், அதர்வண பத்ரகாளியென்றும் அழைத்துப் போற்றப்பட்ட இத்தெய்வம், ஆடற்கலையைக் கற்பித்த ஆசானாகப் பரதமுனிவரும், ஆடல்வல்லானாகச் சிவனும் உருவெடுத்த பின்னர் தனது வீறு அடங்கி அமைதியாக அமர்ந்துவிட்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்ட பின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் தலைமைத் தெய்வமாகிய பாரதி தன் தனித்தன்மைகளை முற்றிலும் இழக்க நேர்ந்தது. துவார சமுத்திரத்து ஹொய்சளர்களாலும், அவர்களுடைய வழித்தோன்றல்களாகக் கருதப்படும் விஜயநகர-ஹம்பி அரசர்களாலும், தூய்மையான அறிவொளியின் அடையாளமாகக் கருதப்பட்ட வித்யாதேவி - சரஸ்வதி முதன்மைப்படுத்தப்பட்டாள். ஆயகலைகள் அறுபத்து நான்குக்கும் தெய்வமாக, வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும். சாரதாதேவி வளர்ந்து வியாபித்தாள். எஞ்சியிருந்த பாரதியின் அம்சங்களும் சாரதாதேவி வடிவில் ஐக்கியமாகிவிட்டன. ஜம்புத்வீபம், சம்பாபதி போன்ற பெயர்கள் பொதுமக்களின் நினைவிலிருந்து பெருமளவு விலகிப்போய்விட்டன. பாரதமாதா என்ற பெயர் மட்டும் “வந்தேமாதரம்” போன்ற கவிதை இயற்றிய கவிஞர்களின் தேசபக்திக்கும் வரலாற்று ஆய்வாளர்களின் தேடுதலுக்கும் உரிய கருப்பொருளாக இன்றுவரை நீடித்து வருகிறது. |
Published with few Typos. ("அம்மன் தரிசனம்" - தீபாவளி மலர் 2007) |