What we wrote... |
|
மகாகவி பாரதியின் தோழர் மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன் செல்வராஜ் மிராந்தா அவர்களுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் இன்றும் செல்வாக்குடன் நிலவிவருகிற புத்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு பெற்றிருந்த முதன்மை குறித்து விவாதிக்க நேர்ந்தது. சிங்கள பெளத்தர்களில் பரதவர், கரையார் போன்ற கடற்புரத்து மக்களும் மரக்கல வணிகர்களும் கடலில் திசையறிதற்கு உதவிய நட்சத்திரக் கூட்டங்களைத் தாரா தேவி என்று அழைத்து வழிபட்டு வந்தனர். வருணன் என்ற கடல் தெய்வத்தின் வானுலக வடிவமான - பாற்கடல் தெய்வமான - அவலோகிதேஸ்வர போதிசத்வரின் இணை (ஜோடி)யாகவும், மணிகளாலான மேகலையாகவும் நட்சத்திரக் கூட்டங்கள் உருவகிக்கப்பட்டன. பெளத்த சமயக் காப்பியமான மணிமேகலை குறிப்பிடும் மணிமேகலா தெய்வம், நட்சத்திரத் தொகுதியான, தாராதேவி அல்லது தாரகை அன்னை எனப்பட்ட விண்மீன் கூட்டமே. ஜைன (சமண) சமயக் காப்பியமான சீவகசிந்தாமணி, சிந்தாமணி என்ற இந்நூல் மணிமேகலையை ஒத்தது என்று பொருள்படும் வண்ணம், “முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து வாய்முரன்று முழங்கியீன்ற மெய்ந்நீர்த் திருமுத்து இருபத்தேழ் கோத்து மிழ்ந்து திருவில் வீசும் செந்நீர்த்திரள் வடம் போல் சிந்தாமணி” (சீவக சிந்தாமணி, பா. 3143) - எனக் குறிப்பிடுகிறது. “இருபத்தேழு முத்துகளால் ஆன திரள் வடம்” என்ற வருணனை, “இருபத்தேழு நட்சத்திரத் தொகுதியாலான மணிமேகலை” என்பதையொத்த ஓர் உருவகமாகும். இவ்வாறு தாராதேவி வழிபாடு கடலோடிகளால் சிறப்பாகப் போற்றப்பட்டு வந்துள்ள வரலாற்றினைக் கவிஞர் - ஆய்வாளர் செல்வராஜ் மிராந்தா அவர்களிடம் சுட்டிக்காட்டி, பாண்டி மண்டலக் கடற்கரைப் பரதவர்களிடம் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (அவர்கள் கத்தோலிக்கத் திருமறையை ஏற்கும் முன்னர்) தாராதேவி வழிபாடு நிலவியதற்கான தடயங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். அப்போது அவர், மதுரை மீனாட்சியம்மை விண்மீன் தெய்வமே என்ற வரலாற்றினைத் தாம் முன்னரே சில கட்டுரைகளில் பதிவு செய்திருப்பதாகவும், மேரி மாதா என்ற தெய்வப் பெயரே ஹீப்ரு மொழியில் நட்சத்திரம் என்று பொருள்படும் ‘மிரியம்’ என்ற பெயருடனும் லத்தின் மொழியில் கடல் என்று பொருள்படும் ‘மாரிஸ்’ என்ற பெயருடனும் தொடர்புடையதே என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, “Stella Maris Ora Pro Nobis” என்ற மறைமொழியினை “சமுத்திரத்தின் நட்சத்திரமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்” என்றுதான் முன்னர் மொழிபெயர்த்து எழுதி வந்தனர் என்றும் தெரிவித்தார். பாபிலோனியர்களால் வென்று அடிமையாக்கப்பட்ட யூதர்களும் “சமுத்திரத்தின் நட்சத்திர” அன்னையை வழிபட்டு வந்துள்ளனர் என்ற வரலாற்றுக் குறிப்பினைத் தெரிவித்துத் தாரா, தாரகா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கும் ஸ்டார் என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் மூலமான இஷ்டார் என்ற தெய்வப் பெயர் எஸ்தர் என்ற வடிவில் தற்போதும் வழங்கிவருவதை நினைவூட்டினார். Stella என்ற பெயர் Constellation (நட்சத்திரக் கூட்டம்) என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். 27 நட்சத்திரங்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றும் ஒரு தொகுதியாகக் காணப்படும் 27 நட்சத்திரத் தொகுதியையே குறிக்கும். இந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும்கூட, Stella Maris என்பதை ‘விடிவெள்ளி’ எனத் தற்காலத்தில் குறிப்பிட்டு வருகின்றனர் என்றும், ஏசுநாதர் என்ற ஞானபானுவின் உதயத்தை முன்னறிவிக்கின்ற அறிகுறியாகக் கொள்ளப்பட்டு இவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்றும் செல்வராஜ் மிராந்தா அவர்கள் குறிப்பிட்டார். ஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடுவதும் இறை வடிவத்தைப் புதுப்புது வகையில் புனைந்து காண்பதும் சமய வழிபாட்டு நெறிகள் அனைத்திலும் நிலவுகிற ஒரு மரபுதான். மேலும் வெள்ளி என்ற கிரகம் இந்தியச் சமய மரபில் சுக்ரன் என்ற அசுர குருவாகக் குறிப்பிடப்பட்டாலும், மேலைச் சிந்தனை மரபில் ‘வீனஸ்’ என்ற ஆதி தாய்த் தெய்வமாகவும் அழகுத் தேவதையாகவும் சித்திரிக்கப்படுவதால் மேரி மாதாவை விடிவெள்ளியாகக் காண்பது பொருத்தமுடையதே. இருப்பினும், நாள் மீன்கள் வேறு; கோள் மீன்கள் வேறு. நாள் மீன்கள் எனப்படும் நட்சத்திரங்கள் 27 என்றும், கோள் மீன்கள் எனப்படும் கிரகங்கள் 9 என்றும் குறிப்பிடுவது வழக்கம். முத்துக்குளித்துறையின் முதன்மையான தெய்வமாகிய பனிமய மாதா, பார் முதிர் பனிக்கடல் தெய்வத்தின் இணை - ஜோடியான சமுத்திர நட்சத்திரம் - Stella Maris - என்பதே இத்தெய்வத்தின் பல பரிமாணங்களுள் முதன்மையான பரிமாணமாகும். பருவக் காற்றுகளை, உரிய பருவங்களில் உருவாக்கிப் பூமியை வளப்படுத்துகிற கடல் தெய்வத்தை, தன்னை அண்டுபவர்களுக்கு முத்தையும், பவழத்தையும் வாரி வழங்கிய கடல் தெய்வத்தை, “படுகடற் பயந்த ஆர்கலி உவகைய”ரான பரதவர்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வந்தனர். கடலில் திசையறிய உதவும் விண்மீன் கூட்டத்தையும் கடல் தெய்வத்தின் மனைவியாகக் கருதி வழிபட்டு வந்தனர். எனவே, கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருமறையில் இணைந்தபோது “சமுத்திரத்தின் நட்சத்திர” அன்னை அவர்களை அரவணைத்து அருள் வழங்கிய நிகழ்வு மிகவும் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. அதே பழைய அன்னை; அதே அருள் வெள்ளம். ஆனால் அன்றைய நிலையில் அது ஒரு புதிய அலை (New Wave). நான் புரிந்து கொண்ட உண்மை இது. |
Published with few Typos (பனிமயம், ஜூபிலி மலர் 2007, பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி) |