What we wrote...
சான்றோர் குலப் பண்டிதரும் சாம்பசிவம் பிள்ளையும்: சில கேள்விகள்
அ. கணேசன்

“மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்” என்ற தலைப்பில் சாம்பசிவம் பிள்ளை பற்றிய ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் கட்டுரை (காலச்சுவடு ஜனவரி 2007) வெளிவந்துள்ளது. தஞ்சை வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை என அவர் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மண்ணையார்’ (மன்னையார்) என்பது தஞ்சாவூர்ப் பகுதிக் கள்ளர் சமூகத்தவருள் ஒரு பிரிவினரின் குடும்பப் பெயராகும். சாம்பசிவம் பிள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர் என்ற தகவல் கட்டுரையாசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழறிஞரும் சென்னை நகரப் போலிஸ் துணை ஆணையாளருமான பவானந்தம் பிள்ளையின் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார் எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பசிவம் அவர்களுக்கு பிள்ளை பட்டம் அகம்படியர் அல்லது வேளாளர் குலத்தவருடனான மண உறவால் வந்திருக்கலாம். அல்லது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமூகச் சூழலுக்குத்தக புனைந்துகொண்ட பட்டமாக இருக்கலாம்.

இவர் 1931ஆம் ஆண்டில் மருத்துவக் கலைச்சொல் அகராதியை வெளியிட்டுள்ளார் என்றும், சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட The Research Institute of Siddhar’s Science, Madras என்ற பெயரளவிலான நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகராதியின் இரண்டு தொகுதிகள்1938இல் ரூபாய் 12,000க்கும் அதிகமான செலவில் வெளிவந்துள்ளன. 1949இல் சென்னை மாநில அரசு 5,000 ரூபாய் உதவித் தொகையும் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீடும் வழங்கிற்று என்ற விவரமும் கட்டுரையாசிரியால் தரப்பட்டுள்ளது. மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில் 1953இல் சாம்பசிவம் பிள்ளை காலமானார். 1966இல் மறைமலை அடிகள் நூல் நிலைய நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அகராதியின் கையெழுத்துப் படிவங்களையும், அச்சிட்ட படிவங்களையும் எடுத்து வந்ததாகவும் அவை 1972இல் அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதி வைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறிப்பிட்டுள்ளதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கட்டுரை ஆசிரியர் கண்ணுற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன:

சற்றேறக்குறைய சாம்பசிவம் பிள்ளையின் சமகாலத்தில் (1859-1919) தஞ்சையில் வாழ்ந்தவரும், கர்ணாமிர்த சாகரம் என்ற பெயரில் இசைநூல் எழுதி வெளியிட்டவருமான ஆபிரகாம் பண்டிதர் என்ற சான்றோர் குலத்தவர் (நாடார்) சிறந்த மருத்துவராகவும் இருந்துள்ளார். பண்டிதர் என்ற பட்டப்பெயர் கூட அவருடைய குலப் பட்டப்பெயர் அல்ல. தமிழ்ப் பண்டிதர் என்பதையும், மருத்துவ நிபுணர் என்பதையும் குறிப்பதற்குச் சூட்டப்பட்ட பட்டமாகும். அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறைப் பிரிவுகளான எலும்பு முறிவுச் சிகிச்சை, வாதக் கோளாறுக்கான சிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவற்றில் சான்றோர் குலத்தவர் தன்னிகர் அற்றவர்களாக - குறிப்பாகத் தென் மாவட்டங்களில் - இருப்பது தமிழகம் அறிந்த செய்தியே. ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். இவருடைய பரம்பரையே சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையாகும். மேலும், இவர் 1879ஆம் ஆண்டில் சுருளி மலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளிமலையில் கருணாநந்த ரிஷி என்பவரிடம் உபதேசம் பெற்று பல்வேறு சிகிச்சை முறைகளிலும் கைதேர்ந்தவராய் ஆனார். தஞ்சைக்குத் திரும்பி லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்தார். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார்.

1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றன. அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி இங்கு வருகை புரிந்து இவரைப் பாராட்டியுள்ளார். 1909ஆம் ஆண்டு ராவ் சாஹிப் பட்டம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆபிரகாம் பண்டிதரின் நுண்மாண் நுழைபுலம் சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவ அகராதித் தொகுப்புப் பணிக்குப் பின்புலமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.

பண்டிதர் 1879ஆம் ஆண்டுக்கு முன்னரே திண்டுக்கல்லில் சடையாண்டி பட்டர் என்பவரிடம் இசை கற்றார். கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்ற இசை மேதைகளுடன் விவாதிக்குமளவுக்கும், அடிப்படையான கேள்விகளை எழுப்புமளவுக்கும் இசை ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். இராமநாதபுரம் சேதுபதியைப் புரவலராகக் கொண்ட இசைச்சங்கம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தார். 1916ஆம் ஆண்டில் பரோடாவில் இசை குறித்த மாநாடு நடப்பதற்குப் பண்டிதர்தான் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அம்மாநாட்டில் பண்டிதர் ஆய்வுக்கட்டுரை வாசித்ததோடு, பண்டிதரின் மகள் மரகதவல்லி அம்மாள் ஸ்வரங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். பண்டிதரின் பேரன் தனபாண்டியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ, அது போன்றே சித்த மருத்துவக் கலைச் சொல் உருவாக்கத்திலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிக்கப்பட்டிருக்கலாம்.

சாம்பசிவம் மன்னையார் பிள்ளை என்ற பட்டம் போட்டுக்கொண்டதே கூட வேளாளருடைய ஆதிக்கம் நிலவிய 19-20ஆம் நூற்றாண்டு சமூகச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் எனத் தோன்றுகிறது. தமிழக வேளாளர் சமூகத்தவர் தமிழின அடையாளம் அனைத்தையும் தங்களுக்கும், தங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களும் மட்டுமே உரியனவாகக் காட்டிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆபிரகாம் பண்டிதர் போன்ற சான்றோர் சமூகத்தவரின் பணியையும் பங்களிப்பையும் அங்கீகரிப்பது இவர்களுக்கு என்றைக்குமே உவப்பானதாக இருந்ததில்லை. இது தீவிரமான ஆய்வுக்குரிய ஒரு விஷயம் ஆகும்.

What they published...
எதிர்வினை

(Courtesy: Kalachchuvadu April 2007)