What we wrote... |
|
தென்னிந்திய நாணயவியல் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் கருத்தரங்குகளில் வாசிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் Studies in South Indian Coins என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகின்றன. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 27ஆம் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. அக்கருத்தரங்கில், நாணயவியல் கழகத் தலைவர் பேராசிரியர் ப. சண்முகம் அவர்கள் நிகழ்த்திய ஆய்வுரை முதற் கட்டுரையாக அமைந்துள்ளது. நந்தர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய சந்திர குப்த மெளரியனின் வீர சாகச வரலாற்றை விவரிக்கும் சமஸ்கிருத நாடகமான முத்ரா ராக்ஷஸத்திலும், பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் அரச முத்திரைகள் பற்றிய இலக்கியக் குறிப்புகள் உண்மையானவையே என்பதற்கு, கருவூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கண்டறியப்பட்டுள்ள தமிழ் பிராமி முத்திரை மோதிரங்கள் மற்றும் இலங்கை அனுராதபுரத்தில் கண்டறியப்பட்ட மகேச முத்திரை முதலிய கண்டுபிடிப்புகள் சான்றுகளாகத் திகழ்வதைப் பேராசிரியர் சண்முகம் விவரித்துள்ளார். தொல்லெழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் தமது கட்டுரையில், வட இந்தியாவிலுள்ள மதுராவில் நிகழ்ந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட ஒரு முத்திரையில், "அய்யாதனன் என்பவனுடைய (முத்திரை)" எனப் பொருள்படும் "அயதனஸ" என்ற சிங்கள பிராமி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து விளக்குகிறார். "அய்யா" என்ற சொல் இலங்கையைப் பொருத்தவரை இளவரசரைக் குறிக்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த முத்திரை இலங்கையைச் சேர்ந்த, பெளத்த சமயம் சார்ந்த இளவரசன் ஒருவனின் முத்திரையாக இருக்கலாம் எனப் பொருள் கொள்கிறார். "ஐயர்" என்ற சொல் தொல்காப்பியத்தில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ("பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப") நாம் ஊகிப்பதற்கு இத்தகைய பொருள் விளக்கங்கள் துணை செய்கின்றன. "ஐயன் ஆரிதன்" என்ற சேரர் குல இளவல் (புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர்) பெயரையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள புதிய கண்டுபிடிப்புகள் பல. கி.பி. 9ஆம் நூற்றாண்டைய கன்னட எழுத்துகளில் "நுளம்ப நாராயண" எனப் பொறிக்கப்பட்ட காசுகள் பெல்லாரிப் பகுதியில் கண்டறியப்பட்டு, வெங்கடேஷ், கிரிஜாபதி ஆகியோரால் ஆராயப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று பீனா சரஸன் அம்மையார், ரவி வர்ம குலசேகரனின் (கி.பி. 1312இல் மதுரைப் பாண்டியனாகவே தன்னை அறிவித்துக்கொண்ட வீரகேரளனின்) தகப்பனாரான ஜெயசிம்ஹனால் வெளியிடப்பட்ட நாகரி எழுத்துப் பொறித்த காசுகளை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். வேணாட்டு (திருவிதாங்கூர்) அரச வம்ச வரலாற்றுடன் மட்டுமின்றி ஐவர் ராசாக்கள் எனப்படும் பஞ்சபாண்டியர் வரலாற்றுடனும் தொடர்புடைய முக்கியமான கண்டுபிடிப்பு இதுவாகும். புதுக்கோட்டை சமஸ்தான (தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையின் நிர்வாகத்திலுள்ள) அருங்காட்சியகச் சேகரிப்பில் கடந்த 100 ஆண்டுகளாக இருந்துவரும் ரோமானியப் பொற்காசுகளில் கிளாடியஸ், நீரோ ஆகிய மன்னர்களால் வெளியிடப்பட்ட இரண்டு காசுகளை ஆய்வாளர் சுரேஷ் கண்டறிந்து அறிஞருலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திலும், தமிழகத் தொல்லியல் துறையின் அகழ்வைப்பகங்களிலும் முறையாக ஆய்வு செய்து பட்டியலிடப்படாமல் இவை போன்ற எத்தனையோ காசுகள் உள்ளன. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இது போன்ற கட்டுரைகள் தூண்டுகோலாக அமையுமென நம்பலாம். நாணயங்கள் மட்டுமின்றி, அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்கள் பற்றிய உலோகவியல் ஆய்வுகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தியாக. சத்தியமூர்த்தி, ப. சசிசேகரன், ப. ரகுநாதராஜ் ஆகியோரால் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை சில ஆய்வு முடிவுகளை வரிசைப்படுத்திக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, சிந்து சமவெளி நாகரிக அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட செம்புப் பொருள்களில் செம்புக் கனிமத்துடன் பாஷாணங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாஷாணங்கள், ஓர் உலோகத்தை வேறோர் உலோகத்துடன் கலப்பதற்குரிய வினையூக்கியாகச் செயல்படுபவையாகும். சிந்துவெளி அகழ்விடங்களுக்குப் பிறகு தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரில் மட்டுமே இத்தகைய உலோகவியல் செயல்பாட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது எனக் கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொல்லியல் - சமூக வரலாற்றியல் ஆய்வுக்குப் பயன்படும் முக்கியமான ஒரு தரவாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்துள்ள அச்சு நூல்களில் பாஷாணங்கள் பற்றிய பல விவரங்கள் உள்ளன. (சான்றாக 1830இல் வெளிவந்த J.P. ராட்லரின் தமிழ்-ஆங்கில அகராதி.) இவை போன்ற பழங்குறிப்புகளைச் சேகரித்து ஆராய்ந்தால் பண்டைத் தமிழர்களின் உலோகவியல் அறிவு பற்றிய புதிய செய்திகள் வெளிவரும். ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், வாசிப்புகள், நாணயவியல் கலைச் சொற்கள் பற்றிய பொருள் விளக்கங்கள் முதலியவற்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவை உரிய வகையில் சுட்டிக் காட்டப்படுவது தேவையே. அந்த விதத்தில் "வஞ்சிகோ" எனப் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள சேரர் காசு பற்றிய கட்டுரையில், அடிக்குறிப்பாக, பி.வி. பரப்பிரம்ம சாஸ்திரி, ஐ. மகாதேவன், தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மாறுபட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது போன்று, நாணயங்கள் உருவாக்கப்படும் "கம்பட்டம்" பற்றி, "கம்மத் தொழில் நடைபெறும் இடம்" அல்லது "கம்மியர் தொழிற்கூடம்" எனப் பொருள்படுத்தப்படும் கட்டுரையில், "கண்வட்டம்" அல்லது "அக்ஷ சாலை" (அக்க சாலை) பற்றித் தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்துள்ள கருத்தினை அடிக்குறிப்பாக வெளியிட்டிருக்கலாம். இதனோடு தொடர்புடைய "கண்மட்டம்" என்ற வழக்கும் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. தென்னிந்திய நாணயவியல் குறித்த ஆய்வுகள், இந்திய வரலாற்றாய்வுக்கு மிகுந்த அளவில் பங்களிப்பு நிகழ்த்தக்கூடியவை ஆகும். பழமையான இந்திய நாணயங்களில் இருமொழி நாணயம் என்று ஒரு காசினைக் குறிப்பிட வேண்டுமெனில், கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டுகளில் பிராகிருதத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சாதவாகன மன்னர்களின் காசுகளைத்தான் குறிப்பிட முடியும். அதுமட்டுமின்றி, இந்தியா என்ற பெயருக்கே அடிப்படையாக அமைந்துள்ள சிந்து (Indus) நதி பாய்கிற சமவெளியை மையமாகக் கொண்டு மகாராஷ்டிரம் வரை தழைத்திருந்த ஹரப்பன் நாகரிகத்தில் வழங்கிய எழுத்து வடிவங்கள் இன்று வரை புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளன. அங்கு வழங்கிய மொழி முந்து திராவிட மொழியாக இருக்கலாம் என்று ஒரு வலிமையான கருத்து உள்ளது. தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வரலாற்றாய்வில் தென்னிந்திய நாணயவியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல் ஆய்வுகள் மிகவும் முதன்மையான இடம் பெறக்கூடியவை ஆகும். எனவே, இத்தகைய ஆய்வுகள் போற்றத்தக்கவை. (Studies in South Indian Coins - Volume XVII Editor: D. Raja Reddy, Srinivasan, Newera Publications, Post Box No. 5780, Adayar, Chennai - 600020, Pages: 128, விலை: குறிப்பிடப்படவில்லை.) |
What they published... |
|
Studies in South Indian Coins (Volume XVII) Editor: D. Raja Reddy, Srinivasan, Newera Publications, Post Box No. 5780, Adayar, Chennai - 600020 (Pages: 128, விலை: குறிப்பிடப்படவில்லை) தென்னிந்திய நாணயவியல் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் கருத்தரங்குகளில் வாசிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் Studies in South Indian Coins என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகின்றன. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 27ஆம் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. அக்கருத்தரங்கில், நாணயவியல் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சண்முகம் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள புதிய கண்டுபிடிப்புகள் பல. கி.பி. 9ஆம் நூற்றாண்டைய கன்னட எழுத்துகளில் "நுளம்ப நாராயண" எனப் பொறிக்கப்பட்ட காசுகள் பெல்லாரிப் பகுதியில் கண்டறியப்பட்டு, வெங்கடேஷ், கிரிஜாபதி ஆகியோரால் ஆராயப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் மட்டுமின்றி, அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்கள் பற்றிய உலோகவியல் ஆய்வுகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தியாக. சத்தியமூர்த்தி, ப. சசிசேகரன், ப. ரகுநாதராஜ் ஆகியோரால் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை சில ஆய்வு முடிவுகளை வரிசைப்படுத்திக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, சிந்து சமவெளி நாகரிக அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட செம்புப் பொருள்களில் செம்புக் கனிமத்துடன் பாஷாணங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், வாசிப்புகள், நாணயவியல் கலைச் சொற்கள் பற்றிய பொருள் விளக்கங்கள் முதலியவற்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவை உரிய வகையில் சுட்டிக் காட்டப்படுவது தேவையே. அந்த விதத்தில் "வஞ்சிகோ" எனப் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள சேரர் காசு பற்றிய கட்டுரையில், அடிக்குறிப்பாக, பி.வி. பரப்பிரம்ம சாஸ்திரி, ஐ. மகாதேவன், தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மாறுபட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்னிந்திய நாணயவியல் குறித்த ஆய்வுகள், இந்திய வரலாற்றாய்வுக்கு மிகுந்த அளவில் பங்களிப்பு நிகழ்த்தக்கூடியவை ஆகும். (Courtesy: தினமலர், 17/06/2007, பக்கம் 15.) |