What we wrote... |
|
ஆனந்த விகடன் 29.11.2006 இதழில் “தமிழ் மண்ணே வணக்கம்” பகுதியில் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனின் கருத்துகள் வெளிவந்துள்ளன. அவருடைய கருத்துகள் குறித்த எமது எதிர்வினையைப் பதிவு செய்ய விரும்புகிறோம். வரலாறு, வரலாற்று அறிவு, வரலாற்றுப் பெருமை என்ற தொடர்கள் பல முறை அவருடைய கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. “தமிழ்க் குடும்பங்களின் கிழவன், கிழவிகளைப் பயன்படாதவர்களாக, பாரமானவர்களாகப் பார்ப்பதற்கும் நமக்கு வரலாற்று அறிவு இல்லாமல் போனதுதான் முக்கியக் காரணம்” என்று ஓர் இடத்திலும், “குஜராத்தில் பூகம்பம் வந்தபோது உயிர்துறந்து, உடைமை துறந்து கூட்டம் கூட்டமாக முகாம்களில் தங்கி இருந்த நிலையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், எங்களுக்கும் ஒரே உலையில் உணவு சமைத்தால் நாங்கள் சாப்பிடமாட்டோம் என பெரிய போராட்டத்தையே நடத்தினர் நம் உயர்சாதிச் சகோதரர்கள்” என்று வேறோர் இடத்திலும் அவர் குறிப்பிடுகிறார். இறுதியாக, “நமது முன்னோர்களின் வரலாற்றை நமது அடுத்த தலைமுறைக்குச் சரியான கோணத்தில் விளக்க வேண்டியது நமது கடைமை அல்லவா” என்ற கேள்வியுடன் அவருடைய கருத்துரை முடிவு பெற்றுள்ளது. இந்த மூன்று கூற்றுகளையும் பொருத்தி இணைத்துப் பார்த்தாலும் ஒரு விஷயம் புலப்படவே இல்லை. அவர் நமது வரலாறு என்று குஜராத் உட்பட அனைத்து இந்தியாவின் வரலாற்றைச் சொல்கிறாரா, தமிழ் மொழி பேசப்படும் தமிழ் மண்ணின் வரலாற்றைச் சொல்கிறாரா அல்லது குஜராத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களும் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்தவர்கள்தாம், குஜராத்தில் உள்ள உயர்சாதியினர் அனைவரும் ஆரியர்கள் என்ற பொருளில் சொல்கிறாரா என்பது எமக்குப் புரியவில்லை. “நான் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவன் இல்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான் மார்பில் நூலணிந்தார்கள் என்பதை நாம் உணர்த்தியிருந்தால் உழவர்கள் சூத்திரர்களாக ஆகியிருக்க மாட்டார்கள்” என்ற வாசகம் அவரது கருத்துரையில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு வாசகத்தில் மட்டும் குறைந்தபட்சம் மூன்று வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்ட முடியும். முதலாவதாக விவசாயம் செய்வது இழிவானது என்றும், விவசாயம் அல்லாத பிற தொழில்கள் செய்வதே உயர்வானது என்றும் ஆதிக்க சாதியினர் கருதினார்களா? அப்படியானால் நெசவாளர்கள் போன்ற தொழிற்சமூகத்தவர் உயர் சாதியினரே என்று ஆதிக்க சாதியினர் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்ல வருகிறாரா? என்னதான் சொல்ல வருகிறார் சிவசுப்பிரமணியன்? வைதிக மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட சமூக அமைப்பில் (யாகச் சடங்குகளை மறுதலித்தாலும் வைதிக ஞான மார்க்க மரபைப் புறக்கணிக்காத சமண சமயத்தவரையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறோம்) உயர் வருணத்தவராகிய பிராம்மணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தவருக்கும் மார்பில் நூலணியும் உரிமை இருந்தது. தொல்காப்பியம் காட்டுகின்ற சங்ககாலத் தமிழ்ச் சமூக அமைப்பில் உழுதுண்பதையே வாழ்க்கையாகக் கொண்ட வேளாண் மாந்தர் சூத்திரராகக் கருதப்பட்டனர் என்பது உண்மையே. ஆனால், பிற மூன்று வருணத்தவரும் மார்பில் நூல் அணியும் உரிமை பெற்றிருந்தனர். சிவசுப்பிரமணியன் குறிப்பிடும் நம் முன்னோர்களின் வரலாற்றில் தமிழகத்தில் இருந்த இந்த மூன்று வருணத்தவரின் வரலாறும் அடங்குகிறதா, அடங்கவில்லையா? இந்த நான்காவது வருணத்தவராகத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் வேளாளர் என்ற சாதி அமைப்பிற்குள் 12-13ஆம் நூற்றாண்டளவில் சேர்க்கப்பட்ட ‘பார சைவர்கள்’ (இசை வேளாளர்கள்) சிலப்பதிகாரத்தில் “வேதம் ஓதுவதைக் கைவிட்டு வரிப்பாட்டினை நவிலும் கோட்பாட்டை உடைய நூலணி மார்பர்” என்று குறிப்பிடப்படுகின்ற செய்தி சிவசுப்பிரமணியனுக்குத் தெரியுமா? ‘பார சைவ உற்பத்தி’ என்ற ஓலைச்சுவடி திருவாரூரைச் சேர்ந்த அமரர் சுந்தரமூர்த்தி ஓதுவாரிடம் இருந்தது. அந்தச் சுவடியில் பார சைவ குலத்தவர்கள் பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள் என்ற விவரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உழவர்கள் சூத்திர வருணத்தில் சேர்க்கப்பட்டது எப்படி என்பது மிகச் சிக்கலான ஒரு வரலாற்று ஆய்வாகும். “அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி“ என்பது போல “அகப்பட்டவன் பிராம்மணன் அத்தனை பழியையும் அவன் தலையில் தூக்கிப் போடு” - என்பது போலச் செயல்படுவது பொறுப்பு மிக்க ஆய்வாகாது. வெறுப்பு மிக்க ஆய்வாகத்தான் கருதப்படும். உழுதொழில் என்பது பிற உற்பத்தித் தொழில்கள் போன்றே உன்னதமான ஒரு தொழில் என்பதில் ஐயமில்லை. ஆனால் நம் முன்னோர்கள் எல்லோருமே உழுகுடிகள் என்று எண்ணுவதோ, உழுகுடிகள் என்றாலே வேளாளர்தாம் என்பது போன்று சித்திரிப்பதோ தவறு. தமிழக வரலாற்றில் கி.பி. 13ஆம் நுற்றாண்டுக்குப் பின்னர்தான் வேளாளர்களின் பெருமையை உயர்த்திப் பேசுகின்ற மண்டல சதகங்கள் என்கின்ற இலக்கியங்கள் தோன்றின. அக்காலகட்டத்துக்கு முன்பு தமிழ்ச் சமூகத்தில் பிராம்மணர்களுள் ஒரு பிரிவினர் (பிரம்மாதிராஜன் என்ற பட்டம் உடையவர்கள்) உட்பட வேளாளர் அல்லாத பல சமூகத்தவர்கள் தங்களைப் போர்க்குடியினர் என்றே பெருமைபடப் பேசிக்கொண்டிருந்ததை நாம் பல சாசனங்களில் காணமுடியும். இன்றைக்கு தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதப்படுகின்ற கள்ளர், மறவர், அகம்படியர், வன்னியர் போன்ற பல சமூகத்தவர்கள் தாங்கள் போர்க்குடியினர் என்பதைத்தான் பெருமைக்குரிய பாரம்பரியமாகச் சொல்லிக் கொண்டார்களே தவிர தாங்கள் வேளாண் சமூகத்தவர்கள் என்று ஒரு ஆவணத்தில்கூட குறிப்பிட்டுக் கொண்டதில்லை. 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மேற்குறித்த சமூகத்தவர்கள் வேளாளர்களின் தத்துவார்த்தத் தலைமையை ஏற்றுக் கொண்டதால் தாங்களும் சூத்திரர்களே என்றோ, வேளாளர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முனைந்தனர். “கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன் மெள்ள மெள்ள வெள்ளாளன் ஆனானே” என்ற பழமொழியும் இந்தப் பின்னணியில் தோன்றியதுதான். 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகும்கூட அண்மைக்காலம் வரை தாங்கள் வேளாளருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்றும், சூத்திர வருணத்தவர் அல்லர் என்றும் சான்றோர் சாதியினர் (நாடார்) தமிழ்நாட்டில் இடைவிடாமல் குரல் கொடுத்து வந்துள்ளனர். தாங்கள் ஆளப் பிறந்தவர்கள், பூமாதேவி எங்களுக்கு உரிமையானவள், கிரீடம் அணிய வேண்டிய எங்கள் தலையின் மீது கூடையில் பூமாதேவியை வைத்துச் சுமக்க மாட்டோம் என்றும், செங்கோல் ஏந்த வேண்டிய கையில் மண்வெட்டி பிடித்து வெட்டி வேலை செய்ய மாட்டோம் என்றும் பொருள்பட “கொத்தெடுத்து மண் வெட்டோம் கூடையில் மண் சுமவோம்” என்று சான்றோர் சமூகத்தவர் சொல்லி வந்ததாக ‘வலங்கை மாலை’ என்ற வில்லுப்பாட்டு நூல் தெரிவிக்கிறது. இது போன்ற செய்திகளைச் சொல்வதால் உழுதொழிலை இழிவுபடுத்துவதாகப் பொருள் கொண்டு விடவேண்டாம். ஒவ்வொரு கால கட்ட மக்களின் மதிப்பீடுகளை உணர்த்துவதற்காகவும், இந்திய வரலாற்றில் நடந்த பிழைகளுக்கெல்லாம் பிராம்மணர்களின் சூழ்ச்சியே காரணம் என்று சொல்வது தற்கால அரசியல் சூழலுக்கு உகந்த வகையில் செய்யப்படுகின்ற விஷ(ம)ப் பிரச்சாரமே தவிர உண்மையான ஆய்வு ஆகாது என்பதை உணர்த்துவதற்காகவும்தான் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறோம். நம்முடைய இந்திய அரசேகூட “ஜெய் ஜவான் ஜெய் கிஸான்” என்ற கோஷத்தைத்தான் முன்னிறுத்தியது என்பதை மறந்துவிட வேண்டாம். ஒரு வேளை இந்தியப் பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகை வீணானது என்று கருதுகின்ற மனப்போக்கு உடையவர்களாக இருப்பவர்கள் ஜெய் ஜவான் என்பதை எடுத்துவிட்டு ஜெய் கிஸான் என்று மட்டும் கோஷமிட்டால் போதும் என்று நினைக்கக்கூடும். அப்படி நினைப்பது அவர்களது உரிமை. அதை நாங்கள் குறை சொல்ல மாட்டோம். ஆனால், கிஸான் வரலாறு மட்டுமே நமது முன்னோர் வரலாறு என்று சித்திரிக்க முயல்வது அடாவடித்தனம் அல்லது அரைவேக்காட்டுத்தனம். ஒருவேளை, போர்வீரர்களை ‘வில்லேர் உழவர்’ எனத் திருவள்ளுவர் குறிப்பிடுவதை அடியொற்றி போர்வீரர் பரம்பரையினரின் வரலாற்றையும் உழவர் வரலாற்றிலேயே உள்ளடக்கிப் பார்ப்பதற்கு சிவசுப்பிரமணியன் முயல்கிறாரோ என்னவோ? அடுத்ததாக, இந்து முஸ்லிம் வேறுபாடுகள் குறித்து சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகின்ற வரலாற்று விளக்கத்திலும் மிகப் பெரிய முரண்பாடு உள்ளது. “இன்று நடக்கிற இந்து முஸ்லிம் மதக் கலவரங்களுக்கும், மெக்காலே கல்வி முறையில் பயின்ற வரலாற்றுப் பாடத்துக்கும் நிறைய தொடர்பிருக்கிறது” என்றும், “பிரித்தாளும் சூழ்ச்சியே நமக்கு மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் பாடமாக்கப்பட்டது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதே மெக்காலே கல்வித்திட்டத்தின் மூலம்தான் ஆரியர் - திராவிடர் என்று வரலாற்றைப் பிரித்துப் பார்க்கின்ற சூழ்ச்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த விஷயத்தைப் பொருத்தவரை மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வித் திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றுப் பாடம் சரியானதே என்பது சிவசுப்பிரமணியனின் வாதம் போலும். அதனால்தான் அவர் திராவிடர்களைத் தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தூண்டியது ஆரியச் சூழ்ச்சியே என்று பொருள்படும்படியும் எழுதியுள்ளார். “இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? மெக்காலேயின் ஐரோப்பியர் இனமும் ஆரிய இனமும் ஒன்றுதானே? அதைத்தானே நான் சொல்லவந்தேன்” என்று அவர் கூறுவாரேயானால் அதைப்போல நகைப்புக்கு இடமான ஒரு வரலாற்றாய்வு இல்லை என்பதுதான் எமது எதிர்வினையாக இருக்கும். ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களுக்கு இடையிலும் பல்வேறு நாட்டு இன அல்லது தேசியப் பிரச்சினைகள் உண்டு. இங்கிலாந்து, அயர்லாந்து தேசிய இனத்தவரிடையே நீண்ட காலமாகப் பனிப்போர் உண்டு. இது போன்ற பல உதாரணங்களை எங்களாலும் அடுக்க முடியும். “அரசன் கண்ட கெட்ட கனவுக்குப் பரிகாரமாக நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாகத் தருகிற இடத்துக்கு மங்கலம், அகரம் என்ற அடைமொழியுடன் பெயர் தந்தனர்” என்று குறிப்பிடுகின்ற சிவசுப்பிரமணியன், நான்கு வேதங்களைக் கற்றவர்கள் அதாவது பிராம்மணர்கள் விரும்பிய பூமி என்பது ஏற்கெனவே பிராம்மணர் அல்லாதவர்கள் (சிவசுப்பிரமணியனின் வார்த்தைகளில் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவர்கள்) வாழ்ந்து வந்த பூமி என்று பொருள்படுத்துகிறார். அதாவது விவசாய சாதியைச் சேர்ந்தவர்களின் மண்ணும் பெண்ணும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுப் பிராம்மணர்களுக்கு அரசர்களால் தானமாகத் தரப்பட்டன என்று வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என அவர் விரும்புகிறார். இத்தகைய தவறான கருத்து எப்போது எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆரியர்கள் தங்களால் வென்றடக்கப்பட்ட பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த பெண்டிரை தங்களது தாசிகளாக்கிக் கொண்டார்கள் என்றும், அத்தகைய தாசிகள் வயிற்றில் தங்கள் வம்சத்தை விதைத்தார்கள் என்றும், அந்த வம்சத்தவர்களே தஸ்யுக்கள் என்று வேதங்களில் குறிப்பிடப்படும் சூத்திர வருணத்தவர்கள் என்றும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இது இந்தப் பிழையான ஆய்வுப் பயணத்தின் தொடக்கம். இதன் அடுத்த கட்டம் 1920-30 ஆண்டளவில் அரங்கேறிற்று. கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற வரலாற்று ஆய்வாளர்கள் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், கே.ஏ. நீலகண்ட சாஸ்த்திரி போன்றோர் “குடி நீக்கிக் காணியாக்கி குடி நீக்கி தேவதானமாக்கி” போன்ற கல்வெட்டு வாசகங்களுக்கு ஓர் ஊரைச் சிலருக்கு உரிய காணி நிலமாகவோ கோயிலுக்குரிய உடைமையாகவோ மாற்றும்பொழுது, அந்த ஊரில் வாழ்ந்த குடிகளை ஊரை விட்டு நீக்கிப் புதிய மனிதர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ அவ்வூரை உடைமையாக்கினர் என்று பொருள்கொண்டு அதற்குத்தகத் தம் கருத்துகளைப் பதிவு செய்தனர். இந்தப் பொருள் விளக்கத்துடன் அண்மைக் காலக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கருத்து வேறுபடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வரி வருவாய் நிர்வாக அமைப்பின் கீழ் இருக்கின்ற நிலங்களை அந்நிலங்களின் உழுகுடிகளுடன் சேர்த்து வேறொரு வகை வரி வருவாய் நிர்வாக அமைப்பின் கீழ் (ரயத்வாரியிலிருந்து ஜமீந்தாரிக்கு என்பது போல) மாற்றுவது குடி நீக்காமல் காணியாக்குவது என்று பொருள்படும். இதனை வடமொழிக் கல்வெட்டுகள் “ஸப்ரஜா தேவஸ்தான” என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறன்றி நிலங்களை மட்டும் புதிய அமைப்புக்கு மாற்றிவிட்டு குடிகள் புதிய அமைப்பின் கீழ் நீடிக்க விரும்பினால் அவர்களை நீடிக்க அனுமதிப்பதும் நீடிக்க விரும்பாவிட்டால் மாற்று ஏற்பாடுகளுக்கு நிர்வாகத்தினை அணுகவேண்டும் என்ற ஒப்பந்தத்துடனும் நிலத்தைக் காணியாக்குவது குடி நீக்கிக் காணியாக்குதல் எனக் குறிப்பிடப்பட்டது. இவ்வாறு புதிய காணியாளர்களாக உருவாக்கப்பட்ட நிறுவங்களின் பட்டியலில் கோயில்கள், சமணப் பள்ளிகள், அகர பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள் மட்டுமே அடங்கும் என எண்ணுவது தவறு. ராஜகுலவர் காணி, தலைவாய்ச் சான்றார் வெட்டிப்பேறு, கணிமுற்றூட்டு போன்ற பலவகை நிலங்களும் இத்தகையவையே. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எஸ்டேட்’ என்பவற்றின் பூர்வ வடிவங்களே இவை. விஜயநகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பூர்விக ஆட்சியாளர்கள் நிலத்தின்பால் கொண்டிருந்த உரிமையை நீக்கி அல்லது மாற்றி வேறோர் அமைப்புக்கு வழங்கிய நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய நடவடிக்கைகளைக் குறிப்பிடும் சாசனங்களில் “பண்டுடையாரையும் பழம்பேரையும் தவிர்த்து” என்ற வாசகம் இடம்பெறுவது வழக்கம். தமிழ்ச் சமூக அமைப்பில் வேளாளர்கள் நிலத்தின்பால் பரவலாக ஆதிக்கம் பெற்றது இக்காலகட்டத்திலேயே ஆகும். அப்படியென்றால் பண்டுடையாரும் பழம்பேரும் யார்? அவர்களே பூர்வீக அரசகுடிகள் என்பதே தமிழக வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடமாகும். சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் குடிநீங்கலாக நிலத்தினைக் காணியாக்குதல், குடிகளையும் உள்ளடக்கிக் காணியாக்குதல் என்ற பொருண்மையை உள்குடி, புறக்குடி என்ற இருவகைக் குடியானவர்களோடு ஒப்பிடலாம். பரம்பரையாக நிலத்தின்பால் ‘குடியானவர்’ என்ற உரிமை உள்ளவர்கள் உள்குடி ஆவர். குறிப்பிட்ட பருவத்துக்கு என்று ஒப்பந்த அடிப்படையில் குடியானவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள் புறக்குடி ஆவர். இத்தகைய ஓர் அமைப்பே சோழர், பாண்டியர் கல்வெட்டுகளில் குடி நீங்கலாக உள்ள காணி என்றும், குடி நீங்காக் காணி என்றும் குறிப்பிடப்பட்டன. நுட்பமாகப் பொருள்படுத்த வேண்டிய சில விஷயங்களைத் தொடக்க கால ஆய்வாளர்கள் சிலர் அவசரப்பட்டு இவ்வாறு தவறாகப் பொருள்கொண்டதற்கு என்ன பின்னணி இருக்கலாம் என்று ஆராய்ந்தால், அந்த ஆய்வாளர்கள் எல்லோருமே பிரிட்டிஷ் கல்வி முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாத மனநிலை உடையவர்கள் என்பதுதான். இந்தியா உட்பட கீழைத்தேசங்கள் அனைத்துமே ஜனநாயக மரபு என்றால் என்ன என்றே அறியாதவை, எதேச்சாதிகாரத் தன்மையும் தான்தோன்றித்தனமும் கொண்ட அரசர்களால் காலம் காலமாக ஆளப்பட்டு வந்தவை என்ற சித்திரத்தை ஆங்கிலேயக் கல்வியாளர்கள் நம் ஆழ்மனதில் விதைத்து விட்டார்கள். ஆங்கிலேயர்கள். கீழைத்தேசங்களின் வரலாற்றில் நிலவிய அரசியல் அமைப்பாகவும், மன்னர்களின் தன்மையாகவும் தாம் கருதிய இத்தகைய மனநிலையை Oriental Despotism என்ற தொடரால் குறித்தனர். மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களே தாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுவீகரித்து அணிந்து கொண்ட விலங்குகளிலிருந்து விடுபடமுடியாமல் இருந்திருக்கிறார்கள். எனவே அவர்களுடைய அத்தகைய பிழை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது அன்று. ஆனால் சிவசுப்பிரமணியன் அந்த விலங்குகளையே அணிகலன் என்று சொல்லி வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் பூட்டி விட முனைவது வன்மையான கண்டனத்துக்குரிய ஏமாற்று வேலையாகும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரலாற்றினை ஆய்வு செய்த அறிஞர்கள் சொன்ன செய்திகளின் அடிப்படையில் பூர்வ குடிமக்கள் வாழ்ந்த ஊர்கள் பல பிராம்மணர்களுக்குரிய சதுர்வேதி மங்கலங்களாக மாற்றப்பட்டன, அப்பூர்வகுடி மக்களே அந்நிலங்களில் உழைக்கின்ற அடிமை உழவர்களாக மாறிப் போயினர் என்றும் சொல்கின்ற கருத்து இத்தகைய ஒரு மோசடிக் கருத்தே ஆகும். அப்படி என்றால் அன்று நிலவிய உண்மையான நிலைதான் என்ன? தமிழகத்தைப் பொருத்தவரை ‘மங்கலம்’ என்ற பின்னொட்டுடன் முடிகின்ற ஊர்கள் களப்பிரர் காலத்தை அடுத்து பல்லவர் காலத்தில் (கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகள்) தோன்றியிருக்கலாம். கண்ணகியை மங்கல மடந்தை என்று குறிப்பிடுகின்ற சிலப்பதிகார வழக்கும், மங்கலம் என்பது மனைமாட்சி என்று குறிப்பிடுகின்ற குறள் நெறியும், மங்கலம் என்ற வழக்குக்கு ஆதர்ச மனைவி அல்லது இல்லத்தரசியின் தன்மை, அதாவது உத்தமமான பத்தினித் தன்மை என்ற பொருளை வழங்கின. இந்த அடிப்படையில்தான் தாலியைத் திருமாங்கல்யம் என்று குறிப்பிடும் வழக்கு உருவாயிற்று. (திருக்குறளும், சிலப்பதிகாரமும் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருத்து எளிதில் புறக்கணிக்கத்தக்கதன்று.) எனவே, முறையான குடும்ப உறவுடனும், நிலத்தின்பால் கொண்ட வாரிசு உரிமையுடனும், மனைமாட்சியுடன் வாழ்கின்ற குடிகளைக் கொண்ட குடியிருப்புகள் மங்கலம் என்ற அடைமொழியுடன் வழங்கத்தொடங்கி இருக்கலாம். குடும்பம் என்ற அமைப்பும், நிலையான சொத்துரிமையும் வேரூன்றாத, வேட்டையையும், மேய்ச்சலையும் பிரதானமான வாழ்வியலாகக் கொண்ட மக்களின் வாழ்விடங்கள் பாடிகள் என்று அழைக்கப்பட்டன என்பதற்குச் சங்க இலக்கியங்களிலேயே சான்றுகள் உள்ளன. இத்தகைய பாடிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற வகையில் புதிய நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விளை நிலங்களைக் கொண்ட ஊர்களாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகளையும், பழைய பாடிகளில் வாழ்ந்த வேட்டை-மேய்ச்சல் வாழ்க்கை நிலை மக்களையே குடியும் குடித்தனமுமாக வாழும் மக்களாக மாற்றிக் குடியமர்த்திய ஊரையும் மங்கலம் என்ற அடைமொழியுடன் பல்லவ அரசர்கள் குறிப்பிடத் தொடங்கியிருக்க வேண்டும். பட்டத்தாள் மங்கலம், மகேந்திர மங்கலம், பரமேஸ்வர மங்கலம், சங்கர மங்கலம் (சங்கர மங்கை), விசய மங்கலம் (விசய மங்கை) போன்ற பல மங்கலங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன. “கொள்ளிடக்கரை கோவந்தபுத்தூரில் வெள்விடைக்கு அருள் செய் விசய மங்கை” என்ற தேவாரப்பாடலில் திருப்புறம்பயத்துக்கு எதிரில் கொள்ளிடத்தின் மறுகரையில் அமைந்துள்ள கோவிந்தபுத்தூர் விசய மங்கலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மங்கலங்கள் எல்லாமே சதுர்வேதி மங்கலங்கள் அல்ல. அவ்வாறு நாம் பொருள் கொள்வதாக இருந்தால் பிராம்மணர் அல்லாத எந்தத் தமிழருமே மங்கலமான மனைமாட்சியுடன் வாழ்க்கை நடத்தியவர்கள் அல்லர் என்ற அபத்தமான முடிவுக்குதான் வரவேண்டியிருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் அங்கமங்கலம் என்ற ஓர் ஊர் உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் அவ்வூர் “அங்கை மங்கலமான வீரபாண்டியன் மடிகை மாநகரம்” என அழைக்கப்பட்டுளது. இவ்வூர் அங்கைப்போர் என அழைக்கப்படும் களரிப் பயிற்றும் வர்மக் கலையும் இணைந்த போர் முறையில் தேர்ச்சி பெற்ற சான்றோர் சாதிப் போர்வீரர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஓர் ஊராகும். மளிகைச் சரக்குகளையெல்லாம் சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பக்கூடிய ஒரு பண்டகசாலை இவ்வூரில் இருந்ததால்தான் இவ்வூர் மடிகை மாநகரம் எனக் குறிப்பிடப்பட்டது. இவ்வூர் பிராம்மணர்களின் குடியிருப்பு அன்று. மங்கலமான மனைமாட்சியுடன் கூடிய சான்றோர் சமூகத்தவரின் வாழ்விடமாகும். நம் முன்னோர்களின் வரலாற்றில் எண்ணிப் பெருமைப்படத்தக்க செய்திகளும் உண்டு, பின்பற்றாமல் தவிர்க்க வேண்டிய தவறுகளும் இழிவுகளும் உண்டு. வரலாறு பற்றிய ஆய்வில் இத்தகைய நடுநிலைப் பார்வையே தேவை. விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவர்கள் தவறுகளே செய்யாதவர்கள் அல்லர். தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கின்ற சிவசுப்பிரமணியனுக்குப் பின்வரும் வரலாற்றுக் குறிப்பு தெரியாமல்கூட இருக்கலாம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் கிராமத்தில் உள்ள சங்கரலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் இருக்கும் கி.பி. 1668ஆம் ஆண்டுக் கல்வெட்டின்பால் அவரது கவனத்தை ஈர்க்கின்றோம். தளவாய் முதலியார் வம்சத்தைச் சேர்ந்த மார்த்தாண்ட முதலியார் என்பவரின் மனைவி ஆவடை அம்மையார் என்பவர் பறையர் சமூகத்தைச் சேர்ந்த அங்கையல்கண்ணி, அவள் மகன் இராமனான், மகள் புதியவள் ஆகியோரைத் தாம் ஏற்படுத்திய மடத்தில் அடிமைகளாகக் கொடுத்திருக்கிறார். விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவர்கள் உழுகுடிகளான பறையர்களை விற்கவும், ஒற்றி வைப்பதற்கும் உரிய அடிமைகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எந்த நூலணியும் சாதி இதில் தலையிட்டுச் சூழ்ச்சி செய்து பறையர்களை அடிமைகளாக மாற்றியிருக்கிறது என்பதையும், அடிமைப்படுத்தியவர்கள் நம் முன்னோரா அல்லது அடிமைப்படுத்தப்பட்டவர்கள் நம் முன்னோரா என்பதையும் சிவசுப்பிரமணியன் தெளிவுபடுத்துதல் நலம். தமிழ் மொழி வரலாறு குறித்து ஆய்வதற்குச் சரியான பாதை அமைத்துக்கொடுத்தவர் என்று நியாயமாகப் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு உரியவரான பிஷப் ராபர்ட் கால்டுவெல் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயத்தின் மதப்பரப்பல் நோக்கத்திற்கு உகந்த வகையிலும், தாம் சார்ந்திருந்த லண்டன் மிஷனின் அரசியல் சார்பு நிலைக்கு ஏற்ற வகையிலும் பல தவறான கருத்துகளை விதைத்துள்ளார். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸி கி.பி. 1803-06ஆம் ஆண்டுகளில் எழுதச் செய்து சேகரித்த பாளையப்பட்டுகளின் வம்சாவளிக் குறிப்புகள் அனைத்தும் பொய்யைவிட மோசமான கட்டுக்கதைகள் என்றே கால்டுவெல் குறிப்பிடுகிறார். பாளையப்பட்டுகளின் வம்சாவளிக் குறிப்புகள் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. கால்டுவெல் குறிப்பிடுவதைப் போல் அவை நம்பத்தகாத கட்டுக்கதைகள் அல்ல. கால்டுவெல் கண்ணோட்டத்தில் இந்தியர்களின் பாரம்பரியமே இழிவானதுதான். அப்படி இருக்கும்போது பாளையப்பட்டு வம்சாவளி மட்டும் எப்படி நம்பத்தகுந்ததாக இருக்கமுடியும் என்பது அவரது பார்வை. கால்டுவெல்லின் கருத்துகளோடு சிவசுப்பிரமணியன் முழுமையாக உடன்படுகிறாரா அல்லது ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஆங்கிலேய அரசின் கண்ணோட்டத்தையே கால்டுவெல் பிரதிபலித்தார் என்ற எங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறாரா என அறிய விழைகிறோம். நம் முன்னோர்கள் காலங்காலமாக பிறருடைய சூழ்ச்சிக்கு அடிமையாகின்ற மூடர்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற பாடத்தைத் திரும்பத் திரும்பப் போதிப்பதன் மூலம் நம் வருங்காலத் தலைமுறையினரை அறிவாளிகளாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும் உருவாக்கிவிட முடியாது. நம் கடந்தகாலச் சாதனைகளையும், வேதனைகளையும் நடுநிலையோடு பார்க்கக் கற்றுக்கொண்டால்தான் நம் எதிர்காலச் சந்ததியினரை நேர்மையானவர்களாகவும், நாணயமானவர்களாகவும் உருவாக்க முடியும். |
They did not publish... |