You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
தமிழரைத் தேடி - 5
பிரகஸ்பதி (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
1. மணவினைச் சடங்குகள் வட மரபு - தமிழ் மரபு ஒரு ஒப்பீடு

பண்பாடு கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு வளர்ச்சிய அடையும்போது குடும்பம் கீழான வடிவிலிருந்து மேலான வடிவிற்குப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என பண்பாட்டு மானுடவியலாளர் கூறுவர். குடும்பத்தின் ஒவ்வொரு வடிவத்திலும் மணவினைச் சடங்குகள் மாறுபடுகின்றன. குறிப்பிட்ட சமூகத்தின் மணவினைச் சடங்குகளைக் கொண்டு அச்சமூகத்தின் பண்பாட்டுப் படிநிலைகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

சங்க கால தமிழர் மற்றும் சம காலத்திய வட ஆரியச் சமூகங்களின் மணவினைச் சடங்குகளை ஒப்பீடு செய்து ஆராய்வதன் வாயிலாக இவற்றில் எது மூலப் பண்பாடு என்பதையும் எது திரிந்த பண்பாடு என்பதையும் அடையாளம் காண இங்கு முயற்சிக்கப்படுகிறது.

அ) மறையோர் தேயத்து மணவினை முறைகள் (கரணங்கள்)

கீழ்க்கண்ட எண்வகைக் கரணங்களை (மண முறைகளை) மனு தர்மம் கூறுகிறது.

1. பிரம்ம: வேத வித்தகனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது பிரம்ம விவாகம்.

2. தைவதம் (தெய்வ மணம்): யக்ஞத் தீயின் முன்னிருந்து யாகம் நடத்தி வைக்கும் புரோகிதனுக்கு அலங்காரத்துடன் தனது பெண்ணைக் கொடுப்பது தெய்வ மணம்.

3. ஆரிஷம்: தான் செய்யவேண்டிய யாகாதி தர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ரிஷபம், ஒரு பசு அல்லது இரண்டு ரிஷபம், இரண்டு பசு இவைகளைப் பெற்றுக்கொண்டு கலியாணஞ் செய்து கொடுப்பதை ஆரிஷ விவாகமென்பர்.

4. பிரஜாபத்யம்: பிரம்மச்சாரியை அழைத்துப் பூசித்துப் பெண்ணைத் தரும்போது நீவிர் இருவருமாய் அறங்களைப் புரிந்து வாழ்வீராக என்று வாழ்த்திக் கொடுத்தல் பிரஜாபத்யம்.

5. ஆசுரம்: பெற்றவன் குறிக்கும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி மணப்பது ஆசுரம் எனப்படும்.

6. காந்தருவம்: ஆண்-பெண் இருவரும் தம்மில் மனம் கலந்து தாங்களாகவே கூடிச் சுகித்தல் காந்தருவம்.

7. இராக்ஷசம்: அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்ஷசம்.

8. பைசாசம்: தூக்கத்திலும், குடிபோதையிலும், பித்தங்கொண்டும் இருக்கும் பெண்ணைக் கலப்பது மிகவும் தாழ்ந்த பைசாச மணமாகும்.

மேலே விவரித்த மணமுறைகளில் பிராமணனுக்குப் பிரம்ம முதல் காந்தருவம் வரையான ஆறும், க்ஷத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையான நான்கும், ஏனையோருக்கு ஆசுரம், காந்தருவம், பைசாசம் ஆகிய மூன்றும் ஏற்புடையது. எனினும், இவற்றில் பிராமணனுக்கு பிரம்ம முதல் பிரஜாபத்யம் வரையான நான்கும், க்ஷத்ரியனுக்கு இராக்ஷசமும், மற்ற இரு வருணத்தவர்க்கு ஆசுரமும் சிறந்த மணமுறை என மனு தர்மம் கூறுகிறது.

ஆ) தமிழர் மரபு

தமிழ் மரபு மணமுறைகளைக் கற்பியல், களவியல் என இரண்டாகப் பகுக்கிறது. கற்பு நெறியில் அமைந்த மணவினைகள் (கரணங்கள்) மட்டுமே மேலோர்க்குரியதாகக் கூறப்படுகிறது.

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல்: பொருள்: கற்பியல் 140)

தமிழ் மரபுப் படி வேளாளர்க்குரிய மணமுறையில் இருபாலரின் பெற்றோர்களின் சம்மதம் தேவைப்படுவதை மேற்கண்ட தொல்காப்பியச் சூத்திரம் தெளிவாக்குகிறது. மறையோர் தேயத்து மணமுறைகளில் காந்தருவம் தவிர்த்த பிற ஏழும் கைக்கிளை, பெருந்திணைப் பாற்பட்டவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

“முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல்: கற்பியல் 102)

“பின்னர் நான்கும் பெருந்திணைப் பெறுமே” (தொல்: கற்பியல் 103)

இச்சூத்திரங்களுக்கு உரைகூறும் இளம்பூரணர், ‘எண் வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய ஆசுரம் முதல் மூன்றும் (ஆசுரம், இராக்ஷசம், பைசாசம்) கைக்கிளைப் பாற்படும் என்றும் பிரமம் முதலிய நான்கும் (பிரமம், தைவதம், ஆரிஷம், பிரஜாபத்யம்) பெருந்திணைப் பாற்படும்' என்கிறார். நச்சினார்க்கினியரும் இதை உறுதி செய்கிறார். ஒரு தலைக் காமத்தை கைக்கிளையாகவும் பொருந்தாக் காமத்தைப் பெருந்திணையாகவும் தமிழ் மரபு இலக்கணப்படுத்தியுள்ளது.

காந்தருவம் ஒன்றே கைக்கிளை, பெருந்திணைப் பாற்படாத வடஇந்திய மணமுறையாகும். இம்மணமுறையில் தலைவனும் தலைவியும் ஒத்த மனத்தினராகக் கரணத்திற்கு முன் புணர்வர். இதனைத் தமிழ் மரபு களவிற் புணர்ச்சி எனக் கூறும்.

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், காதற் பரத்தையர் களவிற்குரியர் எனக் குறிப்பிடுகிறது. அதாவது வடமரபு கூறும் காந்தருவத்தை களவு எனக் கூறி அதனைப் பரத்தையருக்கே உரியதாக வரையறுத்துள்ளது.

மேலும்,

“களவின் வழிவந்த கற்பும் பொற்பமை
களவின் வழிவராக் கற்புமென் றாங்கு
முற்படக் கிளர்ந்த கற்பிரு வகைத்தே”


எனக் களவின் வழிவந்த கற்பு உண்டெனவும் அகப்பொருள் விளக்கம் கூறுகிறது. களவின் வழிவந்த கற்புப் புணர்ச்சி எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதற்கு இந்நூல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மையான”


களவுப் புணர்ச்சிக்குப் பின், தலைமகன், தலைமகளை தன் ஊருக்கு அழைத்துச் சென்று பெற்றோர் சம்மதத்துடன் மண வாழ்க்கையை மேற்கொள்வது களவின் வழிவந்த கற்பு மணமாகும்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கும் வள்ளிக்கும் நடந்த திருமணம் களவின் வழிவந்த கற்புப் புணர்ச்சிக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். சோழ அரசனுக்கும் நாக கன்னியான பீலிவளைக்கும் இடையிலான களவுப் புணர்ச்சி கரணத்தில் முடியாததனால் களவாகவே நின்றுவிடுகிறது. இவர்களுக்குப் பிறந்த மகன் திரையன் என்று அழைக்கப்படாமல் இளந்திரையன் என்றே அழைக்கப்படுகிறான். பெரும்பாணாற்றுப்படை, இளந்திரையனை ‘முந்நீர் வண்ணன் பிறங்கடை' என்று குறிப்பிடுகிறது.

முந்நீர் வண்ணனாகியச் சோழனின் பிறங்கடை மரபில் இளந்திரையன் உதித்துள்ளான் என்பது இதன் பொருளாகும். தமிழ் மரபுப் படி கரணத்தில் முடியாத காந்தருவம், பெருந்திணையாகவே கருதப்படும். இதன் மூலம் மறையோர் தேயத்து மன்றல் (மணங்கள்) எட்டுமே தமிழ் மரபுப்படி கீழோருக்குரிய கைக்கிளைப் பெருந்திணையின் பாற்படுவதை அறியலாம்.

தமிழ் மரபைக் கீழானதாக வரையறுப்பதன் மூலம் வட இந்திய மரபு கீழானதாகிவிடாது. இதற்கு நேர்மாறாக வட இந்திய மரபு தமிழ் மரபைச் சித்தரிக்கலாம். எனினும் இவற்றில் வளர்ந்த உடைமைச் சமூகத்திற்கானக் கரணங்கள் எவை என்பதையும் ஆராயவேண்டும்.

தமிழ் மரபு அங்கீகரித்துள்ள கற்பு நெறியில் அமைந்த மேலோருக்குரிய மணமுறையில் இரு பாலரின் பெற்றோரின் இசைவும் வேண்டப்படுகிறது. இம்மணமுறை நன்கு பக்குவப்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கே உரியது. பண்டைக் காலத்தில் வலுவான அரசர்கள் தனக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களிடமும் நட்பு அரசர்களிடமும் மகற்கொடை பெற்று அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது வழக்கம். சுமேரியாவில் தோன்றிய இம்மரபு உலகம் முழுவதும் பரவியிருந்தது. மகற்கொடை மறுத்த (தலைவனின்) அரசனின் மகளைக் கவர்ந்து சென்று மனைவியாக்கிக் கொள்வது ராக்க்ஷசம் என்றும், அரச வருணத்தினருக்கு இம்மணமுறையே சிறந்ததென்றும் வட இந்திய தர்மங்கள் கூறுகின்றன. வடஇந்திய புராணங்களிலும் வரலாற்றுக் காலத்திலும் பல மன்னர்கள் வேற்று அரசனின் மகளைக் கவர்ந்து சென்று மணம் முடித்ததைக் காணமுடிகிறது. உலகின் பெரும்பாலான (அனேகமாக அனைத்து) அரச குலத்தினரும் இத்தகைய ராக்க்ஷச மணத்தை அங்கீகரிக்கவே செய்கின்றனர். உண்மையில், பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூகத்திற்கு இம்மணமுறை பொருந்தாத ஒன்றாகும்.

நன்கு பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூகத்தில் பெண் குடும்பத்தின் உடமையாகிறாள். தன்னை, பெற்றோரின் (குடும்பத்தின்) உடமையாக நினைத்து வாழும் மகளை கவர்ந்து சென்று மனைவியாக்கிக் கொள்ளும் ராக்க்ஷச மணம் குடும்ப உறவுகளில் அராஜகத்தைத் தோற்றுவித்து விடுகின்றது. இம்மணமுறையை ஆதரிக்கும் வட இந்திய மற்றும் ஐரோப்பிய அரச குலத்தவரிடையே, அரசன் ராணிகளை நம்புவதில்லை.

ராணிகள் அடிக்கடியும் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு விடுகின்றனர். ராணிகளிடம், அரசன் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்த சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது.

"அரசிகளாலோ அல்லது அரசிகளின் அறையில் நிகழும் நிகழ்வுகளாலோ, அரசர்கள் கொல்லப்பட்டதற்கு உதாரணங்கள் உண்டு. பத்ரசேனன் என்கிற மன்னன் அரசியின் அறையில் மறைந்திருந்த தனது சொந்த சகோதரனால் சொல்லப்பட்டான். அதே போல் க்ருஷா என்பவன் அரசியின் படுக்கைக்கடியில் மறைந்திருந்த தனது மகனால் கொல்லப்பட்டான். சில அரசிகள் விஷம் கலந்த உணவுகள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களால் அரசனைக் கொல்வார்கள். எனவே அரசன் எப்போதும் கவனமாயிருந்து இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதான பணிப்பெண் மூலம் அரசியின் அறையில் எவ்வித அபாயமும் இல்லை என்று அறிந்த பிறகே அரசன் அங்கு செல்லலாம். தலையை மழித்தத் துறவிகள், கண்கட்டி வித்தைக்காரர்கள், மந்திரவாதிகள் அல்லது வெளியிலிருந்து வரும் பெண்களை அரசி சந்திப்பதைத் தடுக்கலாம்....... அரசியின் சேவகர்களை 80 வயதுக்கு மேற்பட்ட ஆணோ, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணோ சோதனை செய்யலாம்".

இவ்வாறு தன் மனைவிகளிடமே அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை வடஇந்திய அரச குலத்தவருக்கு இருந்துள்ளது. ஐரோப்பிய வரலாற்றிலும் கூட அரசனைக் கொன்ற ராணிகளையும், மகன்களால் கொல்லப்பட்ட அரசர்களையும், ராணிகளையும் பிள்ளைகளையும் கொன்ற அரசர்களையும் அதிகமாகவே காணலாம்.

தமிழக வேந்தர் குடியினருக்கோ இத்தகைய சிக்கல்கள் ஒருபோதும் தோன்றியதில்லை. வேந்தர்கள் மகற்கொடை மறுத்த தலைவர்களின் ஊரை அழித்து, அவர் மகளிரைக் கைப்பற்றி, ‘கொண்டி மகளிராக்கி' விடுவரேயன்றி, மணம் புரிவதில்லை. இக்கொண்டி மகளிர் மூலம் ஏவல் மரபினராகிய வேளாளரின் கீழ்ப் பிரிவு தோன்றிவிடுகின்றது. இம்மரபு, பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கான சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு போரிட்டு, கைக்கொண்ட மகளிரைப் பட்டத்து ராணியாக்கி சிக்கல்களுக்கு உள்ளாவது பண்படாத சமூகங்களிலேயே நிகழும். ஐரோப்பிய அரசர்களும் இவ்வாறு கைக்கொள்ளப்பட்ட மகளிரைப் பட்டத்து ராணியாக்கும் மரபைக் கொண்டிருந்தனர். அங்கும் அரசனுக்கு எதிராக ராணிகள் நடத்திய சூழ்ச்சிகளுக்குப் பெரும் பட்டியலே உள்ளது. கொண்டி மகளிரை வெள்ளாட்டிகளாக்கும் (ஏவல் மரபினராக்கும்) மரபை தமிழ் வேந்தர் குடியினர் மிக உறுதியாகக் கடைப்பிடித்தனர். நிலபிரபுத்துவச் சமூக அமைப்பின் நீண்ட நெடிய வரலாற்றில் ஆரம்பக்கட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலமே இத்தகைய சிறப்பான மரபுகள் தமிழ் வேந்தர் குடியினரால் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை உய்த்துணர வேண்டும்.

மேலே விவாதித்தவற்றிலிருந்து வட இந்தியச் சமூகம் மணவினைச் சடங்குகளை எட்டு வகையாக வகைப்படுத்தியிருந்தாலும், உள்ளடக்கத்தில் அதிகம் வளர்ச்சியடையாத எளிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்ததை அறியமுடிகிறது. தமிழ் வேந்தர்குடியினரோ, மகற்கொடைக்குரிய மரபினர் கொடுப்பக் கொள்வதே சிறந்தது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். இன்றைய சூழலில் இக்கொள்கை மிகவும் எளிமையான, இயல்பான ஒன்றாகத் தெரியலாம். ஆனால் மிகவும் பண்பட்டவைகளாகக் கருதப்படும் பண்டைய வடஇந்திய மற்றும் ஐரோப்பிய சமூகங்களால் இம்மரபை எளிதில் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

2. தமிழர் மரபில் கற்பு நெறி

கற்பில் சிறந்த மகளிரை தமிழர், பத்தினிப்பெண்டிர் எனக் கூறுவர். பத்தினிப்பெண்டிரின் பண்புகளை தமிழ் இலக்கியங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

“அச்சமும், நாணும், மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”
(தொல்: பொருள்: 86)

என தொல்காப்பியர், அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றையும் பெண்களின் அணிகலன்களாகக் கூறுகின்றார்.

“உயிரினும் சிறந்தன்று நாணே, நாணிணும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்த தன்றெனத்
தொல்லோர் கிளவிப்புள்ளிய நெஞ்சமொடு”
(தொல்: பொருள்: 111)

நாணுதல், பெண்களுக்கு உயிரைவிடச் சிறந்தது எனக் கூறும் தொல்காப்பியர், அதனினும் சிறந்தது கற்பு எனக்கூறுகிறார். ஐரோப்பியப் பண்பாடுகள் அனைத்தும் திரிந்த பண்பாடுகளே. கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதற்காக அச்சமூகங்கள் பெண்களுக்கு அல்குல்பூட்டு போடுவது போன்ற கடுமையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தன. இத்தகைய வழக்கத்தை திருக்குறள் தெளிவாக நிராகரிக்கிறது.

“சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்
நிறைகாக்கும் காப்பே தலை”
(குறள்: 57)

மகளிரை சிறைவைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. அவர் தாமே கற்பு நெறியில் நின்று தம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தது என்பது இதன் பொருளாகும். தமிழ்ப் பெண்களுக்கு கற்பு நெறியில் ஒழுகுவதற்கு ஐரோப்பியரைப் போன்று சிறைவைப்பு தேவைப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி”
(மணிமேகலை: காதை 18: வரி 100-102)

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை. இத்தகைய மகளிர்க்குக் கணவனே உயிர் போன்றவன் என குறுந்தொகை கூறும்.

“வினையே ஆடவர்க் குயிரே
மனையுறை மகளிர்க்கு அவரே உயிர்”
(குறுந்தொகை -135)

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொள்ளும் பத்தினிப் பெண்டிர் பெய்யென கூறினால் மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை”
(குறள்: 5)

மணிமேகலையும், மழை பெய்விக்கும் கற்புடைப் பெண்டிர் பற்றி குறிப்பிடுகின்றது.

“வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையன்”
(மணிமேகலை: காதை16: வரி 77-78)

கற்புடைய பெண்டிர் பற்றிய சிறப்புகளைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றிக்கூறும் அளவிற்கு பிற பண்டைய இலக்கியங்களில் காணமுடிவதில்லை. பண்டைய அரேபியர், பெண்களைச் சிறை வைத்து, முக்காடிட்டு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் கற்புநெறியில் ஒழுகச் செய்வர். 1400 ஆண்டுகளுக்கு முந்திய அரேபிய பெண்களின் நிலை பற்றி கவிஞர் பாப்ரியா கூறுவது கவனத்துக்குரியது.

‘தந்தையின் மறுதார மனைவி அவன் இறந்தபின் மகனுக்கு உரியவள். மகன் விருப்பமிருந்தால் அவளை மணம் செய்யலாம். அல்லது தனது விருப்பப்படி வேறு யாரையோ அவள் மணம் புரிய வற்புறுத்தலாம்' என்கிறார்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கணவன் இறந்த பின் பத்தினிப் பெண்டிர் செய்யும் செயல்களை மணிமேகலை பின்வருமாறு விவரிக்கின்றது.

“காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊது உலைக் குருவின் உயர்த்து அகத்து அடங்காது
இன் னுயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்,
நளிஎரி புகார் ஆயின், அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்”
(மணிமேகலை: காதை 2: வரி 42 - 48)

இதன் பொருள், பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இறந்துவிடுவர்; சொல்லன் உலையிலே நெருப்பை மூட்ட ஊதுகின்ற துருத்தியைப் போல அனல் கக்கும் பெருமூச்சு விடுவர்; உயிர், உடம்பினுள் அடங்கி நிற்காது; அந்த முதல் மூச்சிலேயே தமது உயிரைத் துறப்பர்.

கணவர் இறந்ததைக் கேட்டவுடன் இவ்வாறு உயிர் விடாதவர்கள் தீ மூட்டுவர்; அந்தத் தீ நன்றாக எரியும் போது குளிர்ந்த பொய்கையில் குளிப்பதற்குப் புதுவதுபோல் அத்தீயிலே புகுந்து உயிர் விடுவர்.

இப்படித் தீக்குளித்து உயிர் துறக்காதவர்கள் கைம்மை நோன்பு கைக்கொள்ளுவார்கள்; இறந்தபின் கணவன் அடைந்திருக்கும் உலகிலே சென்று அவனுடன் உறையக் கருதியே அந்த நோன்பை மேற்கொண்டு உயிர் வாழ்வார்கள்.

பண்டைய தமிழ்ச் சமூகம், பத்தினிப் பெண்டிரை இவ்வாறு மூன்று தகுதி நிலைகளாகப் பிரித்துக் காட்டுகிறது. முதல் தகுதி நிலைக்கு உதாரணமாக, தவறு செய்யாத கோவலனுக்குத் தவறுதலாகத் தண்டனைக் கொடுத்ததை உணர்ந்து, தன் கணவன் உயிர் விட்டதை அறிந்த அந்நொடியிலேயே பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவியின் உயிரும் பிரிந்து விடுவதைக் கூறலாம்.

பூதப்பாண்டியன் இறந்தபின் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வதை புறநாநூறு 246 ஆம் பாடல் விளக்குகின்றது. ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனுடைய உரிமை மகளிர் தீப்பாய்ந்து மாண்டதை புறநாநூறு 240, 241 ஆகிய பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவை இரண்டாம் நிலை பத்தினிப் பெண்டிருக்கான வரலாற்று சான்றுகளாகும்.

தலைவன் இறந்தபின் அவனுடைய மனைவியர் கூந்தல் கொய்து (மொட்டையிட்டு) கைம்மை நோன்பு மேற்கொண்டதை புறநாநூறு 25வது பாடல் கூறுகின்றது.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கற்புநெறி என்பது கருத்தியல் தளத்தில், மக்களின் மனதிலேயே மிக ஆழப் பதிந்திருந்ததை நாம் அறியமுடிகிறது. மாறாக, சிறை வைத்து கற்பு நெறியைக் காக்க முயன்ற அரேபியரிடம், ஆணின் தனி உடமையை நிச்சயித்துக் கொள்வதற்கான பொருளியல் தளத்தில் வைத்தே கற்பு நெறி எண்ணப்பட்டது. கருத்தியல் தளத்திற்குள் அது செல்லாததால் கணவன் இறந்தபின் மறுமணம் அனுமதிக்கப்பட்டது. தென் ஈரான், தென் அரேபியா ஆகிய பகுதிகள் சங்ககால வேந்தர் குடியினரின் பூர்வீக பூமியாகும். பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருந்த அரேபியர், அப்பகுதியில் பூர்விகமாக வாழ்ந்து வந்த தொல் தமிழரின் மூலச் சிறப்புமிக்கப் பண்பாட்டினைத் தமதாக்கிக் கொண்டபொழுது கற்பு நெறியைத் திரிந்த வடிவில் மேற்கொள்ளத் தொடங்கினர். அரேபியப் பெண்களின் முக்காடிடும் வழக்கம், பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத்தான் காணாமலும் வாழ்ந்ந்த தமிழ்ச் சமூகப் பத்தினிப் பெண்டிர் பின்பற்றிய மூல மரபின் திரிந்த வடிவமாகும்.

சங்க இலக்கியங்களில் மடலூர்தல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் தன் காதலை வெளிப்படுத்த தலைவன் தலைவியினது உருவத்தைக் கிழியில் எழுதிப் பிடித்துக் கொண்டு, ஓரம் செதுக்காத பனை மடலால் (கருக்கு மட்டை) குதிரை வடிவம் செய்து, அதில் ஏறி, எருக்க மாலை முதலியவற்றை அணிந்து, ஊரார் பழி கூறும்படி தெருவில் செல்வது கூறப்படும். தலைவனின் இச்செயல், “புணரா இரக்கமாகிய கைக்கிளைக்கும், தேறுத லொழிந்த காமத்து மிகுதிறன் ஆகிய பெருந்திணைக்கும்” உரித்ததாயிற்று என்கிறது தொல்காப்பியம் (தொல் : பொருள் : 54). எனவே பொதுவாக, தலை மக்களுக்கு இது உகந்த செயல் அல்ல. மடலூர்தல் நாணங்கெட்ட செயலாகையால் பெண் பாலார்க்கு அனுமதி இல்லை என்பதை தொல்காப்பியம் தெளிவுபடுத்துகின்றது.

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான”.


இக்கருத்தை வலியுறுத்துகின்ற வள்ளுவர்

“கடலென்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்”
(குறள்: 1137)

என்பதுடன் ஆண்கள் மடலேறுவதையே கூட நாணம் துறந்த செயலாகவே சித்திரிக்கின்றார்.

“நாணொடு நல்லான்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல்”
(குறள்: 1133)

“காமக் கரும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை”
(குறள்: 1134)

மடலூர்வது, ஆடவர்க்கேகூட நாணங்கெட்ட செயலாகத் தமிழ் மரபு போதிக்கிறது. மடலூர்தலை ஒத்த ஒரு வசியச் சடங்கு வட நெறியிலும் இருப்பதை பேரா. வையாபுரி பிள்ளை (இலக்கிய உதயம்-நான்காம் தொகுதி) விளக்குகிறார்.

ஒருவன், ஒரு பெண்ணினுடைய காதலைப் பெற வேண்டும் என்று இச்சித்தால், அவள் உருவத்தைக் களிமண்ணினால் செய்து, சணல் நாரினால் அமைத்த நாணோடு கூடிய வில்லைத் தாங்கி, அதன் அம்பின் நுணியில் முள்ளைச் செருகி, ஆந்தையின் சிறகை அம்புச் சிறகு ஆக்கி, கருங்காலினால் அம்பின் தண்டினை அமைத்துக் கொள்வான். உருவத்தின் இருதய ஸ்தானத்தை இவ்வம்பினால் குத்திக் குத்திக் குத்தித் துளையொன்று உண்டு பண்ணுவான். அது காதல் கடவுளாகிய காமனுடைய அம்பினால், தனது காதலியின் இதயத்தைத் துளைப்பதான பாவனையாகும். இங்ஙனம் துளைத்துக் கொண்டு அதர்வவேதத்தின் மூன்றாம் மண்டலம், 25வது சூக்தத்தை ஒதுவான்.

மேற்சொன்ன வசியச் சடங்கினை பெண்பாலரும் மேற்கொண்டுள்ளதை அதர்வ வேதத்தில் காணமுடிகின்றது. இச்சடங்கினை கையாளும் தலைவி, தலைவன் உருவத்தை கிழியில் எழுதி, அதன் இதயத்தின் மீது கொழுந்து விட்டெரியும் அம்பு நுணியை எறிந்து அதர்வ வேதம், ஆறாம் மண்டலம், 130, 138 வது சூக்தங்களை ஒதுவாள் என்று கூறப்படுகின்றது.

பெண்பாலருக்கும் அனுமதிக்கப்பட்ட இவ்வசிய நெறியையே வடநெறியிலமைந்த மடலூர்தலாகப் பெரிய திருமடல் குறிப்பிடுவதாக பேரா. வையுரிப்பிள்ளை கருதுவது ஏற்புடையதே.

“மன்னும் வழிமுறையே நிற்றும் நாம், மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாம் தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்.”
(பெரிய திருமடல்: 38-40)

தன்னை, பெண்ணாகப் பாவித்துக் கொண்ட திருமங்கையாழ்வார், திருமால் மேல் தனக்குள்ள காதலை வெளிப்படுத்த மடலேறவும் தாம் தயாராக உள்ளதாகவும், தமிழ் மரபில் பெண் மடலூர்வது இல்லையென்பதால், வடநெறிப்படி ஒழுக இப்பாடலின் மூலம் அனுமதி வேண்டுகிறார். வட ஆரியச் சமூகத்தில் தலைமக்களில் பெண்பாலரும்கூட நாணுதல் குறைபாடுடையவராக விளங்கினர் போலும்.

சங்ககால வாழ்வியலில், அடியோரும், வினைவலரும் நாணுதல் குறைபாடுடையோராதலால் அகத்திணைக்குரியோர் அல்ல என்றும், அகப்புறத்திணைகளாகிய கைக்கிளை, பெருந்திணைக்குரியோர் என்பார் இளம்பூரணர். வட ஆரியச் சமூகத்துக்குரியதான மணவினைச் சடங்குகள் எட்டும் கைக்கிளைப் பெருந்திணை பாற்படுவது ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.

அச்சமும், நாணும், மடனும் பெண்களுக்குரிய செவ்வியல் பண்புகளாக நன்கு பண்பட்ட நிலபிரபுத்துவ சமூக அமைப்பிலேயே காணமுடியும். இப்பண்புகளில் சங்ககால தமிழ்ப் பெண்டிர் சிறப்புடன் விளங்கியதை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. வட ஆரிய சமூகத்திலோ என்றுமே இப்பண்புகள் சிறப்பாக வளர்ந்ததில்லை. அவர்கள் தொடர்பான புராணங்களில் கூட இப்பண்புக் குறைபாட்டினைக் காணமுடிகிறது.

மகாபாரதக் கதையில், சந்தனு மகாராஜா மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணை மணக்கின்றார். மச்சகந்தி திருமணத்திற்கு முன்பே பராசரர் என்ற முனிவருடன் களவில் கூடி வியாசரைப் பெற்றெடுக்கிறாள். சந்தனுவின் பேரன்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும் கூட தங்கள் தந்தைக்குப் பிறக்கவில்லை. பாட்டியாகிய மச்சகந்தியின் மகன் வியாசருக்கும், தங்கள் தாய்க்குமான ஒரு சடங்குப் புணர்ச்சியின் மூலம் பிறக்கின்றனர். பாண்டு புத்திரர்கள் கூட உண்மையில் குந்தி புத்திரர்களேயன்றி பாண்டு புத்திரர் அல்ல. திருமணத்திற்கு முன் களவுப் புணர்ச்சி மூலம் கர்ணனை குந்தி பெற்றெடுக்கிறாள். திருமணத்திற்குப் பின்பும், கணவன் அல்லாத பிறருடன் கூடி பஞ்ச பாண்டவர்களையும் பெற்றெடுக்கின்றாள். திருமணத்திற்கு பின் பிற ஆடவருடன் கூடுவதைத் தமிழ் நெறியில் களவுப் புணர்ச்சியாகக் கூட கூற முடியாது. வடமொழிச் சொல்லான சோரம் போகுதல் என்று இதனைக் குறிப்பிடலாம். தமிழ் நெறியோ, காந்தருவத்தையே களவாகக் கூறுகின்றது. வடநெறியில் காந்தருவம் சிறப்பான மணவினை முறையாகும். திருமணத்திற்குப் பின் பிற ஆடவருடன் கூடுவதைத்தான் களவு (சோரம்) என வடவர் கொள்கின்றனர். இவ்வகையில் வட ஆரியர் சமூகம் கற்பு நெறியில் தமிழரை விட குறைபாடு உள்ள சமூகமாகவே காட்சியளிக்கின்றது.

கடவுளர்களிடம் குந்தி சோரம் போனதைக் குறை கூறமுடியாது எனக் கூறவும் வழியில்லை. ஏனென்றால், தமிழ்ச் சமூகம், கணவனைத் தவிர பிற தெய்வங்களைப் பத்தினிப் பெண்டிர் தொழுவது கூட இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. எவ்வாறாகினும், இதிகாசங்கள் கூறும் மரபுகளைக் கொண்டு வடவர் பண்பாட்டை சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது என்று சிலர் கூறமுற்படலாம். சங்க காலத்தின் சம காலத்தில் பாடப்பட்ட அகப்பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்று பிராகிருத மொழியில் ‘கதா சப்த சதி' என்ற பெயரில் உள்ளது. அதில் உள்ள பாடல்கள் தமிழ் அகப்பாடல் மரபை ஓரளவு ஒத்துள்ளதைக் காணலாம். தலைமக்கள், பிறன்மனை நோக்குதல் போன்ற நாணுதல் குறைபாடான செயல்களில் ஈடுபட்டுள்ளமை குறித்த விவரிப்புகள் அப்பாடல்களில் நிறைந்துள்ளதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து வடவர் சமூகம், எக்காலக் கட்டத்திலும் சங்க கால தமிழ்ச் சமூகத்தைப் போன்ற முதிர்ச்சியடைந்த நிலவுடைமைச் சமூகத்தின் பண்புகளைக் கொண்டிருந்ததில்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

முனைவர் கைலாசபதி, சங்க இலக்கியப் பாடல்களை கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் தொடர்புபடுத்துவார். கிரேக்க வீரயுகப் பாடல்கள், உயர்குடி வீரர்கள் பிறன் மனைவி மீது கள்ளக் காதல் கொள்வதை விவரிப்பதை சிறப்பான அகப்பாடல் மரபாகக் கொண்டுள்ளன. அச்சமூகத்தின் உண்டாட்டுகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மது அருந்திக் கூத்தாடுவர். தமிழ்ச் சமூகத்தில் சங்ககால உண்டாட்டுகளில் பெண்பாலர் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியருடைய பொதுப்பண்பே, பெண்கள் சுதந்திரமாக இருப்பதுதான்; எனவே இப்பண்பைக் கொண்டு அவர்களின் பண்பாட்டை கீழானதாக மதிப்பிட முடியாது என்று சிலர் வாதம் செய்யலாம். அவ்வாறாயின் மனித சமூகத்தின் பண்பாட்டு மானிடவியல் கோட்பாடுகள் ஐரோப்பியருக்குப் பொருந்தாது எனக் கொள்ளலாமா? வளர்ந்த அரசியல் பண்பாட்டு நிலையிலும், நாணுதல் குறைபாடுள்ள ஐரோப்பியரை, ஹோமோ சேபியன்களுக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு இனம் என வரையறை செய்தால்தான் இவ்வாறு இரு அளவு கோல்களைப் பயன்படுத்த முடியும். மனிதகுலம் முழுவதுமே ஹோமோ சேபியன் என்ற ஒரே இனம்தாம் என்பது தெளிவாக நிரூபணமான ஒன்று. எனவே, பண்பாட்டு வளர்ச்சியைப் பொருத்தமட்டில் தமிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஒரே அளவுகோலைத்தான் பயன்படுத்தவேண்டும்.

அச்சம், நாணம், மடம் இம்மூன்றும் ஒரு சமூகத்தின் பெண்களிடம் அமையும் பொழுது, கற்பு நெறி கருத்தியல் தளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. ரிக்வேத ஆரியர் உட்பட்ட ஐரோப்பிய இனக்குழுக்கள் தொல் தமிழர் வாழ்ந்த மேற்காசியப் பகுதிகளுக்குள் குடியேறி அப்பூர்வ குடிமக்களின் வளர்ந்த பண்பாடுகளை தமதாக்கிக் கொண்டனர். இந்த இயக்கப்போக்கில் அங்கு திரிந்த பண்பாடுகள் தோன்றி விட்டன. கிரேக்கரும் இவ்வாறு திரிந்த பாட்டினர்தான். கடுமையான சட்டங்கள் இயற்றி, கெடுபிடிகளை மேற்கொண்ட போதிலும் அச்சமூகத்தினரிடையே கற்பு நெறி கருத்தியல் தளத்திற்குச் செல்லவில்லை. அதன் வெளிப்பாடாகவே அச்சமூகங்களின் இலக்கியங்களில் நாணுதல் குறைபாடுள்ள தலைமக்களைக் காணமுடிகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க நம் ஆய்வாளர்கள், மூலச்சிறப்பு மிக்க தமிழ் இலக்கிய, இலக்கண, அரசியல் மரபுகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கு ரிக்வேத ஆரியர், கிரேக்கர் போன்றோரின் இலக்கியங்களைத் துணைக் கொள்கின்றனர். இச்செயல், திரிந்த பாலைக் கொண்டு பாலின் தன்மையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு ஒப்பானது. திரிந்த பாலில், தூய பாலின் பண்புகள் சிலவற்றை அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணலாம். அதுபோலவே தமிழ் இலக்கிய, இலக்கண மற்றும் அறக் கோட்பாடுகளில் சிலவற்றை கிரேக்க, ரிக்வேத ஆரியர் இலக்கியங்களில் காணமுடிகிறது.

brahaspathy@sishri.org
(c) Author. To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form.