|
|
![]() |
|
கடந்த 23ஆம் தேதி, புதன் கிழமை, "தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும்", என தமிழக ஆளுனர் உரையில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி 24 அன்று நாளேடுகளில் வெளியான அதே நாளில், சித்திரையில்தான் புத்தாண்டு என்கிற தலைப்பில் திரு. எஸ். ராமச்சந்திரன் எழுதிய கட்டுரை 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டிருந்தது. மொழிப்போர் தியாகிகள் நாளான 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு. கருணாநிதி, "தை முதல் நாள்தான் இனி தமிழர் ஆண்டின் முதல் நாள், இதை சில புலவர்கள் எதிரிக்கின்றனர். நக்கீரன் காலத்தில் 'பெயர் கொண்டான்' என்ற புலவர் இருந்தார். 'ஆரியம் நன்று தமிழ் தீது' என்று உரைத்த அவர் நக்கீரன் தந்த சாபத்தால் உயிரிழந்தார். மற்ற புலவர்கள் வேண்டியதன் பேரில், தமிழின் பெயரால் வெண்பா பாடி, அவரை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தார் நக்கீரன். அதுபோல தற்போதுள்ள, கலிகால பெயர் கொண்டான்களுக்கும் நக்கீரன் வந்து சாபம் கொடுப்பார், அதன்பின் உங்களை மீண்டும் எழுப்ப இயலாது" என்று பேசியுள்ளார். மேற்படி எஸ். ராமச்சந்திரனின் பெயரைக் குறிப்பிடாது, சில புலவர்கள் என சூசகமாகப் பேசியுள்ளார் கருணாநிதி. நக்கீரர் / பெயர் கொண்டான் கதை வருமாறு: கூடல் நகரில் 'குயக் கொண்டான்' - இவரைத்தான் பெயர்கொண்டான் என்று மு.க. குறிப்பிட்டுள்ளார் - என்பவர் தலைமையில் வடமொழிப் பட்டிமண்டபம் ஒன்று நடைபெற்ற போது, இக்குயக் கொண்டானுக்கும் நக்கீரருக்கும் மொழி பற்றி வாக்கு வாதங்கள் ஏற்பட்டபோது, ஆரியம் நன்மையுடைத்து; தமிழ் தீமையுடைத்து என்று குயக்கொண்டான் தமிழை இழித்துக் கூற, கோபம் கொண்ட நக்கீரர், "முரணில் பொதியில் முதற் புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - முரணிய ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்க சுவாகா" என்று சாபம் விடுத்ததும், குயக் கொண்டான் இறந்து பட்டான். பட்டி மண்டபத்தில் இருந்த பிற புலவர்களெல்லாம் குயக் கொண்டானின் குற்றத்தை மன்னித்து அவனை மீள எழுப்புமாறு நக்கீரரிடம் வேண்ட, அவரும் அதற்கிசைந்து, "ஆரியம் நன்று தமிழ் தீதென உரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழே தீர்க்க சுவாகா" என்று பாடியதும் இறந்து பட்ட குயக்கொண்டான், உறங்கி விழித்தவன் போல எழுந்து தன் குற்றத்தை உணர்ந்து தன்னை மன்னிக்கும்படி நக்கீரரிடம் வேண்ட அவரும் அவனை மன்னித்து தமிழின் வன்மையையும், உண்மையையும் அறிவுறுத்தி அவனை வழிப்படுத்தினார். மேற்படி கதையில், நல்லது / தீயது என்பதாக ஒன்றை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு குறித்த விஷயத்தில் நல்லது / தீயது என்கிற வினாவே எழவில்லை. மாறாக சரி / தவறு என்கிற வினாவே எழுகிறது. சரி / தவறு என்பதற்கும் நல்லது / தீயது என்பதற்குமான வேறுபாட்டை எவரும் புரிந்துகொள்ளமுடியும். வரலாற்று விவரம் என வரும்போது நல்லது / தீயது என்கிற வினா எழவில்லை; மாறாக, சரி / தவறு என்கிற வினாவே எழும். ஒரு வாதத்திற்காக, ராமச்சந்திரனின் கருத்துக்கள் தவறு என்றே வைத்துக்கொள்வோம். ஒரு பொறுப்புள்ள முதல் அமைச்சர், ஜனநாயக உணர்வு கொண்ட முதல் அமைசர், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவராக வேஷம் கட்டுகின்ற முதல் அமைச்சர் என்ன சொல்லி இருக்கவேண்டும்? ராமச்சந்திரன் வைத்துள்ள வாதங்கள் இந்த இந்த வகையில் தவறு. தைதான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு இன்னின ஆதாரங்கள் இருக்கின்றன என்று எடுத்துரைக்க வேண்டும். மேலும், அரசின் முடிவு பற்றிய எந்த ஒரு கருத்தையும் திரு. ராமச்சந்திரன் தனது கட்டுரையில் தெரிவிக்கவில்லை என்பதுடன், இது முற்றிலும் ஒரு வரலாற்று ஆய்வு என்பதாக வரம்பிட்டுக்கொண்டு எழுதி இருக்கிறார். ஆனால், இதற்குக் கருணாநிதி என்ன சொல்கிறார்? நக்கீரர் குயக் கொண்டானுக்கு சாபம் கொடுத்தது போல, நக்கீரர்கள் சாபம் கொடுப்பார்கள் என்றும், ஆனால் மீண்டும் நக்கீரர் எழுப்பியது போல எழுப்ப முடியாது என்கிறார். அதாவது இதன் பொருள், உன்னைக் கொன்றுவிடுவார்கள், நீ மீண்டும் உயிர்த்தெழ முடியாது என்று மிரட்டி இருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டில் இருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் உண்மை முகம். pravaahan@sishri.org |